சார்ள்ஸ் டார்வினும் ஈழமுரசும்

சார்ள்ஸ் டார்வினை மனித இனத்தினால் இலகுவில் மறந்துவிடமுடியாது. கற்பனைகளிலும், புனைவுகளிலும் மூழ்கிக்கிடந்த உலகத்தை தட்டியெழுப்பி, ‘குரங்குகளின் பரம்பரையில் வந்தவர்கள்தான் நாங்கள்' என்று துணிவோடு சொன்ன முதல் மனிதன்.

மனிதன் இறைவனால் படைக்கப்பட்டதாக மதவாதிகள் மக்களிடம் நம்பிக்கையை வளர்த்து வைத்திருந்த காலத்தில், அந்த மக்களிடம் போய் - அவ்வாறு இல்லை, உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியின் மாற்றத்தினால் குரங்கில் இருந்துதான் மனிதன் தோன்றினான் என்று ஆராய்ந்து அறிந்து சொன்னவர் சார்ள்ஸ் டார்வின்.

டார்வின் உண்மை பலரைச் சுட்டது. மதவாதிகளை அது அதிகம் சுட்டது. இந்த உண்மையை அவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். டார்வினுக்கு எதிராக அவர்கள் பொங்கி எழுந்தார்கள். ‘முட்டாள் மனிதனைக் கொல்ல வேண்டும்' என்று துடியாகத் துடித்தார்கள். மதங்களில் பொய்யான கட்டுக்கதைகளில் மக்களை மூழ்கடித்துவைத்திருந்தவர்களுக்கு சார்ள்ஸ் டார்வின்தான் முதல் எதிரி அல்ல. ஏற்கனவே, இவ்வாறான மூடத்தனங்களுக்கு எதிராக தன் அறிவாற்றலைப் பயன்படுத்திய தத்துவஞானி சோக்கிரட்டீசைக் குற்றவாளியாக்கி மரண தண்டனைகூட நிறைவேற்றியிருந்தார்கள்.

இப்போதுநீண்ட இடைவெளிக்குப் பிறகு, சார்ள்ஸ் டார்வின் வடிவில் மதவாதிகளுக்கு வந்தது இன்னொரு புதிய நெருக்கடி. ஆனால், சோக்கிரட்டீசை அழித்ததுபொன்று டார்வினை அழிக்கமுடியவில்லை. ஏனெனில் டார்வினின் உண்மைகள் வெறும் வாய் வார்த்தைகள்ய அல்ல. எல்லாவற்றையும் நுணுக்கமாக அலசி ஆராய்ந்து ஆதாரங்களோடு அவற்றை அவர் வெளியிட்டிருந்தார்.

ஆனாலும், இந்த உண்மைகளைப் பொய்யாக்குவதற்கு மதவாதிகள் கடுமையாக முயன்றனர். இறுதிவரை அவர்களால் அது முடியவில்லை. மக்களில் பலர் டார்வினின் கண்டுபிடிப்புகளில் இருந்த உண்மையை ஏற்றுக்கொண்டனர். அவரை மனதாரப் பாராட்டினார்கள். இதனால், டார்வின் மீது மதவாதிகளுக்கு கடும் சீற்றம் உருவானது.

மதவாதிகள் அவரைக் கடுமையாக விமர்சித்தனர். ஆய்வுகளை மேற்கொள்ள முடியாதபடி அவருக்கு நெருக்கடிகளை விளைவித்தனர். வீதிகளில் அவர் நடமாடமுடியாத அளவிற்கு முட்டாள்தனமான கேள்விகளால் அவரைக் குடைந்தெடுத்தனர். இவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது தனது வேலையல்ல என்று கூறிவிட்டு, தனது ஆய்வுகளில் அவர் தொடர்ந்து மூழ்கிக்கிடந்தார்.

மேலும், பல உயிரினங்களின் தோற்றத்தின் உண்மைகளைக் கண்டறிந்து இந்த உலகிற்கு வெளியிட்டார். சார்ள்ஸ் டார்வின் அன்றிருந்த நிலையில்தான் இன்று ஈழமுரசின் நிலையும் இருக்கின்றது. ஈழமுரசு வெளியிட்டுவரும் உண்மைகளால்‘ சுடப்பட்டவர்கள்' அதனைப் பொய்யாக்க கடுமையாக முயன்றுவருகின்றனர். இணையத் தளங்கள், இணைய வலைகள் என கிடைத்த ஊடகங்களில் எல்லாம் தங்கள் பொய்களையும், புரட்டுக்களையும் எழுதித் தள்ளுகின்றார்கள்.

ஈழமுரசின் செயற்பாடுகளையும், யதார்த்தநிலையையும் உணர்ந்திருந்த மக்கள் அவர்களின் குற்றுச்சாட்டுக்களை நம்பமறுத்து வருவதை ஈழமுரசுக்கான மக்களின் ஆதரவுகளில் இருந்து அறியமுடிகின்றது. அதனால், இப்போது ஈழமுரசினை முடக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள்.

ஈழமுரசின் பொருளாதாரத்தை முடக்குவதனூடாக அதனைச்செயலிழக்க வைக்கும் நடவடிக்கையில் அவர்கள் இறங்கியிருக்கின்றார்கள். ஈழமுரசுக்கு விளம்பரங்களை வழங்கும் வர்த்தகர்களை, ஈழமுரசின் வளர்ச்சியில் அர்ப்பணிப்போடு செயற்படும் நண்பர்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்படுகின்றார்கள்.

விளம்பரதாரர்கள் மத்தியில் பொய்யான தகவல்களை பரப்பிக்கொண்டிருக்கின்றார்கள். ‘மாட்டை இளைக்க வைத்துவிட்டால் கொம்பும் இளைத்துவிடும்' என்று கற்பிதம் கொண்டிருக்கின்றார்கள். ஒருபொய்யை பலமுறை சொல்லிவிடுவதால் அது உண்மையாகிவிடப்பபோவதில்லை.

இன்றைய பொய்களை நாளைய வரலாறுகள் மாற்றும். மாற்றங்கள் பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்தேதீரும். அப்போது மீட்பர்கள் யார், துரோகிகள் யார் என்பதை மக்களே அறிந்துகொள்வார்கள். அதுவரையும், அதனைத் தாண்டியும் ஈழமுரசின் பயணம் தொடரும்.

- ஆசிரிய தலைப்பு

நன்றி: ஈழமுரசு

Comments