தமிழர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்: தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

தமிழர் விடுதலைப் போரின் ஆதார பூமியாக இறுதிவரை விளங்கிய வன்னிப் பெருநிலப்பரப்பில் வாழ்ந்த ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான மக்களின் வாழ்வும் வளமும் திட்டமிட்டு துடைத்து அழிக்கப்பட்டுள்ளது. வன்னியில் சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். மனிதநேய சட்டங்களுக்கு முரணாக இவர்களில் பல நூற்றுக்கணக்கானவர்கள் போதிய மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டதால் செத்து மடிந்தனர். பல நூறுபேர் மனநிலை பாதிப்புக்கு உள்ளாக்கப்படனர்.

விசாரணை என்ற பெயரில் பல்லாயிரம் பேர் கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் உள்ளது. போர் முடிந்து ஒருவருடம் நிறைவு பெறும் நிலையிலும் கூட 73000 மேற்பட்ட மக்கள் வவுனியா நலன்புரி நிலையம் என்னும் பெயரில் இயங்கும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டள்ளனர். அகதி முகாம் அவலங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது.

ஒடுக்கு முறைக்கு எதிராக ஈழத்தமிழ் மக்கள் நடாத்திய எதிர்ப்பியக்கம் சிங்கள தேசியவாத அரசினால் அழிக்கப்பட்ட – பெரும் துயரம்தோய்ந்த – வரலாற்றின் குறியீடாக மே-18 அமைகின்றது. அறுபது வருடங்களுக்கு மேலாக நீண்ட தமிழ் – சிங்கள தேசிய இனச்சிக்கல் தணிக்கப்படாது வெறுமையான இராணுவ ஒடுக்குமுறையை மையப்படுத்தி சிறீலங்கா அரசு நடத்திய இன ஓழிப்பு முகம் கொண்ட போரும், அதற்கு சர்வதேசரீதியாக வழங்கப்பட்ட ஆதரவும் இந்த மே-18ன் மற்றைய துன்பியல் முகமாக அமைகின்றது.

சர்வதேச போர்ச்சட்டங்களினால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகள், வெள்ளைப் பொஸ்பரஸ் குண்டுகள், எரிகுண்டுகள், கனரக ஆயுதங்கள், பல நூறு கிலோ நிறை கொண்;ட விமானக் குண்டுகள் வீசப்பட்டு தமிழர் தாயகமெங்கும்; பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் இனஒழிப்பு நடவடிக்கையின் பெரும் சாட்சியமாக முள்ளிவாய்க்கால் எனும் எங்கள் கிராமம் விளங்குகின்றது.

மீளக் குடியமர அனுமதிக்கப்பட்டவர்களில் பல்லாயிரக் கணக்கானோருக்கு போதிய அடிப்படை வசதிகள் வழங்கப்படாது துன்புறுகின்றனர். பொது மக்கள் வாழ்விடங்களில் பல்லாயிரக் கணக்கான சிங்கள – படையினர்; பாதுகாப்பு என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்வுக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது. உடையார்கட்டில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை தமிழ் மக்களால் விடப்பட்டுச் சென்ற அவர்களது அசையும் அசையாச் சொத்துக்களில் பெரும்பகுதி தீவின் தென்பகுதிகளுக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் நம்புகின்றனர்.

போரின் போதும், போரிற்கு பிற்பாடும் போர்க்கைதிகளாகவும், அரசியல் கைதிகளாகவும் கைதுசெய்யப்பட்ட பல்லாயிரம் தமிழ் இளையவர்களின் விபரங்கள் அச்சம்தரும் வகையில் மறைக்கப்படுகின்றது.

கடந்த ஓராண்டு காலமாக குடாநாட்டிலும் ஏனைய இடங்களிலும் இடம் பெற்றுவரும் ஆட்கடத்தல் சம்பவங்களும் கப்பம் கோரும் சம்பவங்களும் தமிழர் தாயகத்தினை தினசரி அச்சுறுத்தி வருகின்றது.

இன்று பேச்சுச் சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. தமது கையில் இருக்கும் அரச அதிகாரத்தை பாவித்து எதேச்சாதிகாரமாக தமிழர்களின் தாயக பூமியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுகின்றன, தமிழர் கிராமங்களுக்கு சிங்களத்தில் பெயர்கள் சூட்டப்படுகின்றன.

போருக்குப் பிந்திய அபிவிருத்தி என்கின்ற வெற்றுக்கோசத்துடன் சர்வதேசரீதியாக பெரும் நிதி ஆதாரங்களை சிறீலங்கா அரசு திரட்டுகின்றது. ஆனால் தமிழர் தாயகமான வடக்குகிழக்கில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலான ஆக்க பூர்வமான திட்டங்கள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர் தாயகத்தின் வளங்களை சூறையாடப்படுவதற்கும், சுரண்டப்படுவதற்குமான திட்டங்களை முன்னெடுப்பதிலேயே முனைப்பாக உள்ளது. அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ்த் தேசத்தை சிங்கள தேசமாக மாற்றுவதிலேயே அரசாங்கம் கண்ணும் கருத்துமாக உள்ளதனை அவதானிக்க கூடியதாக உள்ளது.

எமது மக்களின் சேமிப்புக்களை திரட்டி சிங்கள தேசத்திற்கான முதலீடுகளாக மாற்றுவதற்காக படையெடுத்துவரும் வங்கிகளின் எண்ணிக்கையையே எமது பிரதேசத்தின் அபிவிருத்தியாக வெளியுலகுக்கு காட்டப்படுகின்றது. இப்போலியான நடவடிக்கைகளை உலகுக்கு காட்டி சிங்கள தேசத்தின் பொருளாதார நெருக்கடிகளை தீர்ப்பதற்குத் தேவையான நிதியை வெளிநாடுகளின் இருந்து திரட்டுவதிலேயே அரசாங்கம் தீவிரமாக உள்ளது.

மகாவலிப் பிரதேசக் குடும்பங்களில் மூன்றாம் தலைமுறையினருக்கு வவுனியாவில் காணி வழங்கிக் குடியேற்றுவதில் அவசரமும் அக்கறையும் காட்டப்படுகின்றது. ஆனால் வன்னி மண்ணில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மக்களை வேரோடு பிடுங்கி எறிந்த அரசு அவர்களை மீளக் குடியமர்த்துவதில் உரிய அக்கறையை காட்டவில்லை. அரச நிறுவனங்களில் பணியாற்றும் அதிகாரிகள் அரச இயந்திரம் இடும் உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டியவர்களாக உள்ளனர்.

மே18ற்குப் பிற்பட்ட காலத்தில் சிறீலங்கா அரசானது தமிழர் தேசத்திற்கு எதிராக மேற்கொண்டுவரும் அரசியல், இராணுவ, பொருளாதார ஒடுக்குமுறைகளையே இன்றைய அவல நிலவரம் சுட்டிக்காட்டுகின்றது.

கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக தமிழர் தேசத்தின் அடையாளத்தினையும், இருப்பினையும் பலவீனப்படுத்தி அழிப்பதை சிறீலங்கா அரசு பெரும் வியூகமாக செயற்படுத்திவந்தது. இதன் விளைவாக 70களின் பிற்பகுதியில் தோன்றிய தமிழர்களின் ஆயுதம் தரித்த விடுதலை இயக்கம் சிறீலங்காவின் இனவழிப்பு வியூகத்திற்கு பெரும் தடையாகவும், சவாலாகவும் இயங்கியது. எனினும், கடந்த வருடம் மே-18ல் தமிழர் ஆயுத எதிர்ப்பியக்கம் அழிக்கப்பட்டமையானது சிறீலங்காவின் இனவழிப்பு வியூகம் மீள வீச்சுடன் செயற்பட முனைகின்றது.

தமிழர் தாயகம் என்ற அடையாளத்தினை அழிப்பதன் மூலம், தமிழர் தேசியம் பற்றிய பிரஞ்ஞையை அச்சுறுத்தி நிராகரிப்பதன் மூலம் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தினை நிரந்தரமாகவே ஒடுக்கிவிடலாம் என்று சிறீலங்கா அரசு நம்புகின்றது. தமிழர் தேசம் என்ற உறுதியான – நீண்டகாலப் பாதுகாப்புக்கு வழிசமைக்கின்ற – அரசியல் நிலைப்பாட்டினை நிராகரித்து வெறுமையான அதிகாரப்பரவல் ஊடாகவே இனச்சிக்கலை தீர்ப்போம் என்று சிங்களதரப்பு கூறுவதும் இந்தப் பின்னணியிலேயேயாகும்.

ஆயினும் வரலாறு அவ்வாறு நகர்வதில்லை.

மே-18ல் சிறீலங்கா பெற்ற போர்வெற்றி தமிழர்களின் உரிமைப்போராட்டம் கொண்டிருந்த தார்மீக, அரசியல் நியாயங்களை தோற்கடிக்கவில்லை. அவை மேலும் பலப்படும் போக்கே இன்று நிலவுகின்றது. ஆயுதப்போர் அழிக்கப்பட்டாலும் அந்தப் போரின் மையமான உரிமைக்கான அரசியல் தொடர்ந்தும் இயங்குவதை தாயகத்திலும், புலத்திலும் எங்களால் அவதானிக்க முடிகின்றது. தமிழர்களின் தேசம் எனும் நிலைப்பாடு அங்கீகரிக்கப்படுவதே இனச்சிக்கல் தணிப்புக்கான முதன்மையான முன்னெடுப்பாக அமைய முடியும்.

சர்வதேச சமூகம் இந்தப் பின்னணியில் இலங்கைத்தீவின் நிலவரங்களை அவதானிக்க வேண்டும் என தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணி கோருகின்றது.

மே-18 ஓராண்டு நினைவுநிகழ்வுகளில் அனைத்து தமிழ்பேசும் மக்களுடனும் கைகோர்க்கும் தமிழ்தேசியத்திற்கான மக்கள் முன்னணி,

* தமிழ்மக்களிற்கு எதிராக இடம் பெற்ற இனப்படுகொலை தொடர்பாகவும், போர்க் குற்றம் தொடர்பாகவும் பக்கச் சார்பற்ற சர்வதேச விசாரணைகள், நடாத்தப்பட்டு தமிழர்களுக்கு நீதி வழங்கப்படல் வேண்டும்.
* சிறீலங்காவின் சிறைக்கூடங்களில் வாடும் அனைத்து தமிழ் அரசியல் – போர்க்கைதிகளும் விடுவிக்கப்படல் வேண்டும்.
* தமிழர்கள் தனித்துவமான இறைமை கொண்ட தேசம் என்பது அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் இனச்சிக்கலுக்கான தீர்வு அமைய வேண்டும்.

என்றும் கோருகின்றது.

நன்றி
தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி

Comments