தேர்தல்களின் மறுமுகம்

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் கூர்ப்பை மழுங்கடித்து தமிழீழ மக்களின் தேசிய எழுச்சியை நிரந்தரமாக சிதறடிப்பதற்கான நிகழ்ச்சித்திட்டமொன்று மிகவும் கனக்கச்சிதமான முறையில் சிங்கள - இந்திய அரசுகளால் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழீழ தாயகத்திலும், புகலிட தேசங்களிலும் கடந்த ஓராண்டு காலப்பகுதியில் நிகழ்ந்தேறும் நிகழ்வுகள் இதனை நிதர்சனப்படுத்தும் வகையில் அமைவதை நாம் மறுக்கவோ அன்றி மறைக்கவோ முடியாது.

கடந்த ஆண்டின் முற்பகுதியில் வன்னி மண் மீதான தமிழின அழித்தொழிப்பு யுத்தத்தை சிங்கள அரசு தீவிரப்படுத்திய பொழுது மேற்குலக தேசங்கள் தோறும் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே ஏற்பட்ட கொந்தளிப்பு என்பது ஏப்ரல் 6ஆம் நாளுடன் கொதிநிலையை எய்தி, இலண்டன் முதல் கன்பரா உள்ளடங்கலாக ரொறன்ரோ வரை அறவழிக் கிளர்ச்சியாக விசுவரூபம் எடுத்திருந்தது.

ஆண்டுதோறும் ஒரு தடவை அல்லது ஓரிரு தடவைகள் மட்டும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், கவனயீர்ப்பு நிகழ்வுகள் என தமது அறப்போராட்டப் பணியை மட்டுப்படுத்திக் கொண்ட புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள், கடந்த ஆண்டு மட்டும் வரலாற்றில் முதல் தடவையாக இரவு பகலாக வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.

வீதிகளை இடைமறித்தும், பட்டினிப் போர் தொடுத்தும் ஏறத்தாள ஒன்றரை மாதங்களாக மேற்குலக தேசங்கள் தோறும் புகலிடத் தமிழீழ மக்களின் போராட்டம் முழுவீச்சுடன் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் மே 18ஆம் நாளன்று சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்புப் பிடிக்குள் முள்ளிவாய்க்கால் வீழ்ச்சி கண்டபோது சரிவுநிலைக்கு இட்டுச்செல்லப்பட்ட புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் அறப்போர், கடந்த ஓராண்டு காலப்பகுதியில் சனநாயகக் கட்டமைப்புக்களுக்குள்ளும், தேர்தல் திருவிழாக்களுக்குள்ளும் முடக்கம்கண்டு வருகின்றது.

கடந்த ஓராண்டு காலப்பகுதிக்குள் தமிழீழ தாயகத்திலும் சரி, புகலிட தேசங்களிலும் சரி ஏழு வகையான தேர்தல்களுக்கு தமிழீழ மக்கள் முகம்கொடுத்துள்ளார்கள். பலவீனமான அரசியல் கட்டமைப்புக்களை கொண்ட தேசங்களே வழமையாக அதிக அளவில் தேர்தல்களை எதிர்கொள்வதுண்டு. தமிழீழ மக்களைப் பொறுத்தவரை, முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைவலிமை பின்னடைவுக்கு ஆளாகியைத் தொடர்ந்து இதே நிலைக்குள் தமிழீழ தேசமும் இட்டுச்செல்லப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தைத் தொடர்ந்து உடனடியாகவே தமிழீழ தேசம் இரண்டு தேர்தல்களை எதிர்நோக்கியிருந்தது:

ஒன்று ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தல் (புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் நேரடியாகப் பங்கேற்றது),

இரண்டாவது யாழ் - வவுனியா நகர சபைகளுக்கான உள்@ராட்சி மன்றத் தேர்தல்.

அதனைத் தொடர்ந்து சிறீலங்கா அதிபர் தேர்தல், வட்டுக்கோட்டைத் தீர்மானம் மீதான பொதுக்கருத்து வாக்கெடுப்பு, சிறீலங்கா நாடாளுமன்றப் பொதுத் தேர்தல், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தல், இறுதியாக பிரித்தானிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் (புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களுடன் தொடர்புடையது).

இவ்வாறாக ஓராண்டு இடைவெளிக்குள் ஏழு தேர்தல்களுக்கு முகம்கொடுத்திருக்கும் தமிழீழ தேசம் இன்னும் ஓரிரு மாதங்களில் மேலும் இரண்டு தேர்தல்களை எதிர்கொள்வதற்கு தயாராகி வருகின்றது:

ஒன்று வடக்கு மாகாண சபைத் தேர்தல், மற்றையது உள்@ராட்சி மன்றத் தேர்தல். சனநாயக நீரோட்டத்தில் பங்கேற்பதன் ஊடாகத் தமது அரசியல் உரிமைகளுக்கு நியாயபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையால் உந்தப்பட்டு இன்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட தேர்தல்களுக்கு தமிழீழ தேசம் முகம்கொடுக்கின்ற பொழுதும், இவற்றில் உள்ள எதிர்மறையான பண்பியல்புகளையும், விளைவுகளையும் நாம் மறுதலிக்கவும் முடியாது: மறந்துவிடவும் கூடாது!

ஆரியர்களின் வருகையும், ஆதிக்கமும் ஏற்பட்ட காலத்தில் இருந்து தமிழ் மக்களின் ஒற்றுமை என்பது சமூகப் பிரிவினைகள் ஊடாகவே சிதைக்கப்பட்டு வந்துள்ளது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதவழி தழுவிய எதிர்ப்பியக்கமாக தோற்றம்பெற்ற காலத்தில் இருந்து இற்றைவரைக்கும் இதே யுக்தியையே தமிழீழ தேசத்தின் மீது சிங்கள - இந்திய அரசுகள் பிரயோகித்து வருகின்றன.

1980களில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களிடையே நிகழ்ந்தேறிய ஆயுத மோதல்கள், அதன் பின்னர் சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகளாகவும், ஒட்டுக்குழுக்களாகவும் சில விடுதலை இயக்கங்கள் மாறியமை, 2004ஆம் ஆண்டில் தேசத்துரோகத்தின் உச்சகட்டமாக கருணா கிளப்பிய பிரதேசவாதம் போன்றவை இவற்றுக்குச் சான்றுபகர்கின்றன.

இதில் குறிப்பிடத்தக்க விடயமாக முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்குப் பின்னர் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் ஒற்றுமையை நேரடியாகக் குறிவைத்துக் களமிறங்கியிருக்கும் சிங்கள - இந்திய அரசுகள், மாறிமாறி நிகழ்ந்தேறும் தேர்தல்கள் ஊடாக புகலிட தேசங்களில் தமிழீழ மக்களிடையே சமூகப் பிரிவினைகளை கனக்கச்சிதமாக அரங்கேற்றி வருகின்றன.

கடந்த ஓராண்டு காலப்பகுதியில் நிகழ்ந்தேறியிருக்கும் ஏழு தேர்தல்களிலும் மூன்று துருவங்களாக புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் பிளவுபட்டு நிற்பதை நாம் அவதானிக்க முடியும். தேர்தல்கள் தொடர்பாக புகலிட சமூகம் கருத்தியல் ரீதியில் இருகூறுகளாகப் பிளவுபட்டுநிற்க, இவற்றில் இருந்து ஒதுங்கிநின்று வேடிக்கை பார்க்கும் மூன்றாம் தரப்பினராக ஏனைய மக்கள் நிற்பது கண்கூடு.

இது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தான விடயம். மே 18வரை ஒன்றுபட்டு, ஒருமித்த குரலில் அணிதிரண்டு மேற்குலக தேசங்கள் தோறும் அறப்போர் புரிந்த புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள், இன்று சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகளாக விளங்கும் ‘மதியுரைக் குழுக்கள்', ‘நாடுவாரிக் குழுக்கள்' போன்றவற்றின் சதிவலைகளில் சிக்குண்டு போகும் அபாயத்திற்கு முகம்கொடுத்து நிற்கின்றனர்.

புகலிட தேசங்கள் தோறும் நடந்தேறிய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான வாக்கெடுப்புக்கள், புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களைப் பொறுத்தவரையில் மிகவும் முக்கியமானவை. இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதே தமது வேணவா என்ற மெய்யுண்மையை உலகிற்குப் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வெளிப்படுத்திய வாக்கெடுப்புக்கள் இவை.

இவற்றின் கனதியை நாம் புரிந்து கொள்வதற்கு கேணல் ஹரிகரன் போன்ற இந்திய ஏகாதிபத்தியத்தின் ஆய்வாளர்களும், பன்னாட்டு நெருக்கடிக் குழு என்ற மேற்குலகப் புத்திஜீவிகள் அமைப்பும் வெளியிட்ட காட்டமான - கசப்பான ஆய்வறிக்கைகள் போதுமானவை. ஆனால் இவற்றுக்கு அப்பால் நிகழ்ந்தேறிய ஏனைய ஒவ்வொரு தேர்தல்களையும் நாம் உற்றுநோக்கும் பொழுது ஒரு கசப்பான உண்மை எம்மை உறுத்துகின்றது.

அதாவது, புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் சக்தியும், ஆற்றலும் கடந்த ஓராண்டுக்குள் தேர்தல் திருவிழாக்களுக்குள் முடக்கப்பட்டுள்ளது. தமிழீழ மண்ணையும், மக்களையும் குருதிக்கடலில் மூழ்கடித்த சிங்கள அரசையும், அதன் படைகளையும் உலக அரங்கில் போர்க்குற்றவாளிகளாக நிறுத்த வேண்டிய நாம், கடந்த ஓராண்டுக்குள் எமது சக்தியையும், ஆற்றலையும் தேர்தல்களுடன் மட்டுப்படுத்திவிட்டோம். சூரியத்தேவனின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை வீறுகொண்டெழ வைக்க வேண்டிய நாம் வாக்குவேட்டைகளுடன் எம்மை முடக்கிவிட்டோம்.

இவற்றுக்கெல்லாம் சிகரம்வைப்பது போன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற போர்வையில் கடந்த ஓராண்டாக எம் எல்லோரையும் மாயமான் ஒன்றை நோக்கி ‘மதியுரைக் குழுக்களும்', ‘நாடுவாரிக் குழுக்களும்' நகர்த்திச் சென்றுள்ளன. இதில் உச்சக்கட்டமாக பிரித்தானியாவில் நடைபெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கான தேர்தலில் ‘தமிழரின் தாகம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்' என்ற வாசகத்துடன் செல்பேசிக் குறுஞ்செய்திகளை சில வேட்பாளர்கள் பரிவர்த்தனை செய்திருந்திருந்தமை, இந்த மாயமான் எதுவரை தமிழீழ தேசிய எழுச்சியை மழுங்கடிக்கும் என்ற கேள்வியை மக்களிடையே எழுப்பத் தவறவில்லை.

இறுதி நேரத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் எடுத்த சில முடிவுகளால் இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது சரியான கைகளில் கிட்டியுள்ள பொழுதும், இதனை சகித்துக் கொள்ள முடியாத சிங்கள - இந்திய அரசுகளின் கைக்கூலிகளாக விளங்கும் ‘மதியுரைக் குழுக்களும்', ‘நாடுவாரிக் குழுக்களும்' தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நேரடியாகக் குறிவைத்து காழ்ப்புணர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளன.

இதில் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற தேசங்களின் ஒரு சில தொகுதிகளில் வாக்குமோசடி நடந்தேறியதாகக் கூறி மறுதேர்தலுக்கான அறிவிப்புக்களை ‘மதியுரைக் குழுக்களின்' தேர்தல் ஆணையங்கள் விடுத்துள்ளன. பலவீனமான சனநாயகப் பொறிமுறைகளைக் கொண்ட சிறீலங்கா, இந்தியா, பாகிஸ்தான் போன்ற தென்னாசிய நாடுகளில் வாக்குமோசடிகள் நிகழ்வது வழமையானதே.

ஆனால் வலுவான சனநாயகப் பொறிமுறைகளைக் கொண்ட மேற்குலக தேசங்களில் இவ்வாறான வாக்குமோசடிகள் நிகழ்தேறியதாகக் கூறுவது நகைப்புக்கிடமானது. அதிலும் சுயாதீனமாக தேர்தலை நிகழ்த்துவதாகக் கூறி வாக்குச்சாவடிகளையும், தேர்தல் அதிகாரிகளையும், பணியாளர்களையும் தாமே நியமித்து, அவற்றைத் தமது முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தவர்களே வாக்குமோசடி நிகழ்ந்ததாக அறிவிப்புக்களை வெளியிடுவது பலத்த சந்தேகங்களை மக்களிடையே தோற்றுவித்துள்ளது.

அதாவது இந்திய - சிங்கள அரசுகளின் கைக்கூலிகளாக விளங்கும் ‘மதியுரைக் குழுக்களின்' வேட்பாளர்களை வெற்றியீட்ட வைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இவ்வாறான வாக்குமோசடி நாடகங்களையும், மறுதேர்தலுக்கான ஏற்பாடுகளையும் ‘மதியுரைக் குழுக்களும்', ‘நாடுவாரிக் குழுக்களும்' அரங்கேற்றுகின்றனவா? என்ற ஐயமே இன்று மக்களிடையே மேலோங்கிக் காணப்படுகின்றது.

இதிலும் பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற தேசங்களில் ‘மதியுரைக் குழுக்களும்', தேர்தல் ஆணையத்தினர் எனக்கூறிக் கொள்வோரும் திரைமறைவில் மேற்கொள்ளும் சில நடவடிக்கைகள் இவ்வாறான சந்தேகத்தை மேலும் வலுவடைய வைக்கின்றன. குறிப்பாக தேர்தல் முடிவுகள் இடைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானியாவின் தென்மேற்கு இலண்டன் தேர்தல் தொகுதியில் தமது வேட்பாளருக்கு ஒரு தொகுதியையாவது தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தினரும், ‘நாடுவாரிக் குழுவினரும்' நிபந்தனை விதித்திருப்பதாக அரசல்புரசலாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.

இதில் நாம் ஒரு விடயத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்பது தற்கால சூழலில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்கான ஒரு அனைத்துலக பரப்புரைத்தளம் மட்டுமே. கடந்த இருபது ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிழல் அரசுக்கு இது ஒருபோது ஈடாக அமையப் போவதில்லை. இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழ தனியரசை நிறுவுவதற்கான பல கருவிகளில் ஒன்று மட்டுமே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

இதனை நகர்த்திச் செல்வதற்கு தகுதிவாய்ந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களை புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் தெரிவுசெய்துள்ளமை இதில் ஓர் ஆரோக்கியமான விடயம். இன்று சிங்கள அரசுக்கு எதிரான இராசரீக - பொருண்மிய வியூகங்களை மேற்குலக வல்லரசுகள் கட்டம் கட்டமாக வகுத்து செயற்படுத்தி வருகின்றன. இவற்றில் ஓர் அங்கமாகவே தமது தேசங்களில் சனநாயக வழியில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் செயற்படுவதற்கு மேற்குலக அரசுகள் இடமளிக்கின்றன.

இருந்தபோதும் இதனைத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்திற்குக் கிடைத்த இராசதந்திர அங்கீகாரமாக நாம் கருதிவிட முடியாது. மாறாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை பன்னாட்டு அரங்கில் அரசியல் ரீதியில் நகர்த்திச் செல்வதற்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாக மட்டுமே நாம் கருதி எமது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

அண்மைய மாதங்களில் புகலிட தேசங்களில் தமிழீழ மக்களை இலக்கு வைத்து மீண்டும் பயங்கரவாதச் சட்டங்கள் ஏவிவிடப்படுவதும், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் புலனாய்வு நிறுவனங்களால் கொழும்புக்கு கடத்திச் செல்லப்படுவதும், மேற்குலகினதும், உலக வல்லரசுகளினதும் எதிர்கால நிகழ்ச்சித் திட்டத்திற்கு கட்டியம்கூறி நிற்பதை நாம் இலகுவில் மறந்துவிட முடியாது!

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைவிதி என்பது தமிழீழ தாயகத்தில் இருந்தே தீர்மானிக்கப்பட வேண்டியது: புகலிட தேசங்களில் இருந்து அல்ல. அங்கு எந்தவடிவத்தில் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் வீறுகொண்டாலும் அதற்கு உறுதுணையாகவே எமது செயற்பாடுகள் அமைய முடியுமே தவிர, அதற்கு முன்னோடியாக அல்ல!

அந்த வகையில் தமிழீழ தாயகத்தை நோக்கியதாகவே எமது செயற்பாடுகள் அமைய வேண்டுமே தவிர, தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தைத் திசைதிருப்பும் தேர்தல் திருவிழாக்களாக அல்ல!

எனவே, கடந்த ஓராண்டு காலப்பகுதியில் தேர்தல்களில் விரயப்படுத்தப்பட்ட புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களின் சக்தியும், ஆற்றலும் இனியாவது ஆக்கபூர்வமான வழிகளை நோக்கித் திருப்பப்பட வேண்டும். இதுவே எமது விடுதலையை நாம் வென்றெடுப்பதற்கான முதற்படியாக அமையும்.

- சேரமான்

நன்றி: ஈழமுரசு (07.05.2010)

Comments