தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியஸ்தர் உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று சிங்களப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட அதனை அப்படியே தமிழாக்கம் செய்து சில இணையத்தளங்கள் பொறுப்பற்றரீதியில் நடந்துகொள்கிறது. வட கிழக்குச் செய்திகள் தற்போது குன்றிவரும் நிலையில் செய்திகளை தேடி அலையும் சில இணையங்கள், தேவையற்ற செய்திகளை , மற்றும் மக்களைக் குழப்பும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றது.
இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விடுத்த அறிக்கை பின் வருமாறு :
தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாலாம் மாடிக்கு கொண்டுசென்று அடைத்து வைப்பதற்கான அரசின் சதித்திட்ட நிகழ்ச்சி நிரலின் ஒன்றாகவே கூட்டமைப்பின் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியஸ்தர் உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று சிங்கள பத்திரிகைகளில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
இத்தகைய திட்டமிட்ட பிரசாரங்களை நம்பி தமிழ் ஊடகங்கள் அச்செய்தியைப் பிரசுரிப்பதன் மூலம் தமிழ்ச் சமூகத்தை அச்சத்தில் மூழ்கடித்து விடக்கூடாது என்றும் அவர் கோரினார். கூட்டமைப்பின் தலைவராக நாடுகடந்த தமிழீழ அரசின் முக்கியஸ்தர் வி.உருத்திர குமார் நியமிக்கப்படவுள்ளார் என்று தெரிவித்து லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டது. இச் செய்தியை ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணையத்தளச் செய்திச் சேவை ஒன்றும் பிரசுரித்தது.
அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குக் கிழக்கு மாகாண மக்களின் பிரதி நிதிகளாக கூட்டமைப்பினர் உள்ளனர். எனவே எமது தலைவராக இருப்பவர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்பவராக இருக் கவேண்டும் என்பதே விடயமாகும். நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் முடிச்சுப்போட்டு செய்தி பிரசுரித்திருப்பது மலடி மகன் முயற் கொம்பில் ஏறி ஆகாயத்தாமரையைப் பிடுங்கினான் என்பது போன்ற அப்பட்டமான பொய்யே ஆகும்.
நாடுகடந்த அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பாகங்களிலும் கடந்த வாரம் முதல் ஏராளமான தமிழர்கள் படையினரால் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்படி ஒருசெய்தி வெளியாகியிருக்கின்றமை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும், கூட்மைப்பு உறுப்பினர்களையும் கைது செய்கின்ற நடவடிக்கையின் சூழ்ச்சியாகவே இது அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.
Comments