தேசவிரோதக் குழுக்களுடன் அரசியல் கூட்டணி அமைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார்! பின்னணியில் இந்தியா???

சிறீலங்கா அரசுடன் இணைந்து துணைப்படைக் குழுக்களாக இயங்கி வரும் புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் வரதர் அணி போன்ற தேசவிரோதக் கும்பல்களுடன் அரசியல் கூட்டணி அமைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டு வருவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான கூட்டணியை அமைப்பதற்கான அழைப்பை குறிப்பிட்ட தேசவிரோதக் குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அனுப்பி வைத்திருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.

இதன் பின்னணியில் இந்திய மத்திய அரசு இருப்பதாகக் கூறப்படுவதோடு, இந்தியாவின் அறிவுறுத்தலுக்கு அமையவே இவ்வாறான கூட்டணிக்கான அழைப்பு ஈ.பி.டி.பி தேசவிரோதக் குழுவினருக்கு விடுக்கப்படவில்லை என்றும் தெரிய வருகின்றது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து ஈ.பி.டி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ஏனைய தேசவிரோதக் குழுக்களும் எதிரணிகளாக செயற்படுவதையே இந்தியா விரும்புவதாகவும், இந்தியாவின் தாளத்திற்கு தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொம்மை அமைப்பாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாறி வருவதாகவும் அரசியல் அவதானிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதன் ஓர் அங்கமாக, இந்தியாவின் அறிவுறுத்தலுக்கு அமைய தமது அரசியல் தீர்வுத் திட்ட யோசனையை இம்மாதம் 7ஆம் நாளுக்கு முன்னர் மகிந்த ராஜபக்சவிடம் கையளிப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, தமிழீழ தாயகக் கோட்பாட்டிற்கு விரோதமாக விளங்கும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்ப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் தலைமையிலான தமிழ்த் தேசியத்திற்கான மக்கள் முன்னணி முடிவு செய்திருப்பதாக அதிகாரபற்றற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

Comments