அமெரிக்காவுக்கு ஒரு இஸ்ரேல் சீனாவுக்கு சிறீலங்கா


சிறீலங்கா அரசியலில் தற்போது பிராந்திய ஆதிக்கப்போட்டிகள் மிகவும் காத்திரமான தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளன.

சிறீலங்காவின் அரசியல், பொருளாதாரம் மற்றும் படைத்துறை நடைவடிக்கைகளில் சீனா அதிக ஆதிக்கம் செலுத்தி வருவதை கட்டுப்படுத்தும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. சீனாவுக்கு நிகராக சிறீலங்காவுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பில் (The Comprehensive Economic Partnership Agreement (CEPA)) கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது.

இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகளை உருவாக்கும் பொருட்டு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபாமா ராவ் இந்த வருடத்தில் இரு தடவைகள் சிறீலங்கா வந்து சென்றுள்ளார்.

பாதுகாப்பு ஒப்பந்தங்கள், வர்த்த நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளில் சீனாவுக்கு நிறைவேற்று அதிகாரங்களை சிறீலங்கா வழங்கிவருவதாக இந்தியா கருதுகின்றது. சிறீலங்காவுக்குள் நுளைந்துள்ள பல ஆயிரம் சீனா தொழிலாளர்கள், சிறிலங்கா படையினரின் படைத்தளங்கள் மற்றும் ஆயுத உற்பத்தித் துறை ஆகியவற்றில் சீனா மேற்கொண்டு வரும் பங்களிப்புக்கள், 2.5 பில்லியன் டொலர்கள் முதலீடுகள் என்பன அதனை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் தான் சிறீலங்காவில் தனக்கு நிறைவேற்று அதிகாரம் கொண்ட வர்த்தக உடன்பாடு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்து வருகின்றது. இந்த நிறைவேற்று அதிகாரங்களின் மூலம் இந்திய வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் நிறுவன முகாமையாளர்கள் ஆகியோரின் நுளைவு அனுமதிகள் தளர்த்தப்படும். இந்த உடன்பாட்டை எதிர்த்து கடந்த வாரம் சிறிலங்காவின் தலைநகரில் தென்னிலங்கை வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இந்தியாவின் இந்த வர்த்தக உடன்பாடு மூலம் சிறிலங்கா வர்த்தகர்களுக்கு அதிக பாதிப்புக்கள் ஏற்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணமாக இந்த உடன்பாட்டின் மூலம் சிறீலங்கா 32 பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை பெறும்போது, இந்தியா 114 பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியும் என தென்னிலங்கை வர்த்தகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

எனினும் சீனாவின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள தென்னிலங்கை வர்த்தகர்கள் இந்தியாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை ஏன் எதிர்க்கின்றனர் என்பதில் அதிக அரசியல் பொதிந்துள்ளதாக அவதானிகள் கருதுகின்றனர். ஏனெனில் மேற்குலகம் சிறிலங்காவுக்கு வழங்கி வந்த உதவிகள் மற்றும் அபிவிருத்தி நடைவடிக்கைகளுக்கும் சீனா மேற்கொண்டுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உண்டு.

அதாவது மேற்குலகம் அபிவிருத்திக்கான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகளையே வழங்கி வந்தது. அந்த நடவடிக்கைகளில் சிறிலங்கா தொழிலாளர்களும், நிறுவனங்களுமே ஈடுபடுத்தப்பட்டு வந்தன. ஆனால் சீனாவின் நடவடிக்கைகள் அவ்வாறானது அல்ல அவர்கள் தமது நிறுவனங்களையும், தொழிலாளர்களையுமே அபிவிருத்தி நடவடிக்கைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் தென்னிலங்கை மக்களின் வேலைவாய்ப்புக்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடியவையே. இந்த நிலையில் இந்தியாவுடன் மேற்கொள்ளப்படவுள்ள ஒப்பந்தத்தை தாம் கைவிடப்போவதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு தெரிவித்துள்ள அதே சமயம், இந்த ஒப்பந்தம் இந்த வருடத்தின் இறுதியில் தான் மேற்கொள்ளப்படும் என சிறீலங்காவின் ஊடகத்துறை அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அதுவரையிலும் அந்த ஒப்பந்தத்தில் உள்ள பல விடயங்கள் தொடர்பில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். ஆனால் எதிர்வரும் வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள சிறீலங்கா அதிபருடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் இந்தியா ஆர்வமாக உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

சிறீலங்காவை பொறுத்தவரையில் பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் ஆகிய துறைகளில் சீனாவுடன் அதிக ஒத்துழைப்புக்களை மேற்கொண்டுள்ள நிலையில் அதற்குள் இந்தியாவும் நுளைந்து கொள்வதை அது விரும்பவில்லை. எனவே எவ்வாறாயினும் இந்தியாவை ஓரங்கட்டவே முயற்சி செய்யும். சீனாவை பொறுத்தவரையில் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறீலங்காவை விட்டுக்கொடுக்கப் போவதில்லை.

வளர்ந்து வரும் தனது பொருளாதாரத்தை தக்கவைப்பதில் சீனா மிகவும் தீவிரமாக உள்ளது. சீனாவின் பொருளாதாரம் அதிகளவில் தொழில்துறைகளை சார்ந்துள்ளது. வளர்ந்து வரும் அதன் தொழில்துறையானது எதிர்வரும் 2030 ஆம் ஆண்டில் 13.1 மில்லியன் பரல் எரிபொருட்களை நாள் ஒன்றிற்கு உள்வாங்கும் நிலையை அடையும் எனவும், 2006 ஆம் ஆணடில் அது 3.5 மில்லியன் பரல்களையே உள்வாங்கி வந்ததாகவும் அனைத்துலக எரிசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது தனது எரிபொருட் தேவைகளில் அரைப்பங்கினை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்துவரும் சீனா, அதிகரிக்கும் எண்ணை தேவைகளுக்கு ஆபிரிக்க நாடுகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் 62 விகித எண்ணை படிமங்களை கொண்டுள்ள போதும், ஆபிரிக்க கண்டத்தில் 9 விகித எண்ணை படிமங்கள் தான் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன.

ஆனால் அங்கு மிக அதிக எண்ணைப்படிமங்கள் உள்ளதாக கருதப்படுவதால் அதனை கையகப்படுத்த சீனா கடும் முயற்சிகளை றேம்கொண்டு வருகின்றது. ஆபிரிக்க நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்துவரும் சீனா அந்த நாடுகளின் 10 பில்லியன் டொலர் கடனையும் தள்ளுபடி செய்திருந்தது. கடந்த வாரமும் ஆபிரிக்காவுக்கு ஏறத்தாள 800 மில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளது. சீனா கையகப்படுத்தும் இந்த மூலப்பொருட்களை பாதுகாப்பாக கொண்டுவருவதற்கு தான் சீனாவுக்கு சிறீலங்கா தேவைப்படுகின்றது.

போரிலும் சரி, பொருளாதாரத்திலும் சரி விநியோகங்களும், அதன் பாதுகாப்பும் முக்கியமானது. எனவே தான் சிறீலங்காவில் உள்ள தனது ஆளுமைகளை சீனா ஒருபோதும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை என்ற கருத்துக்களை அவதானிகள் முன்வைத்து வருகின்றனர். ஆனால் சீனாவின் நடவடிக்கைகளின் மத்தியில் இந்தியாவும் புகுந்து கொள்வதை சீனாவும் விரும்பப்போவதில்லை, சிறிலங்காவும் விரும்பப்பேவதில்லை.

சீனாவை அதிகம் விரும்புவதற்கு சிறிலங்காவுக்கு பல காரணங்கள் உண்டு. சீனா ஒரு பௌத்த நாடு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அது நிரந்தர உறுப்புரிமையை கொண்டுள்ளது, பாதுகாப்புச் சபையில் ரஸ்யாவின் வீட்டோ அதிகாரத்தை தனக்கு சார்பாக திருப்பும் வல்லமையும் சீனாவுக்கு உண்டு. மேலும் படைபலம், பொருளாதார பலம் ஆகியவற்றில் அது இந்தியாவை விட பல மடங்கு மேல் நிலையில் உள்ளது. இந்த நிலையில் தான் சீனாவை சிறிலங்கா அதிகம் விரும்புகின்றது.

அமெரிக்காவிற்கு ஒரு இஸ்ரேலைப்போல, சீனாவுக்கு சிறீலங்கா என தென்னலங்கை ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. காசா பகுதியில் உள்ள பலஸ்த்தீன மக்களின் நிலையை தமிழ் மக்கள் அடைந்துள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை தனது பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் எனில் ஆசிய பிராந்திய நாடுகளை தனது ஒரே பொருளாதார குடையின் கீழ் கொண்டுவரவேண்டும் என்ற கொள்கையை கொண்டுள்ளது.

அவ்வாறான பொருளாதார ஒத்துழைப்புக்களின் ஊடாகவே வளர்ந்துவரும் தனது பொருளாதாரத்திற்கு தேவையான வழங்கல்களை உறுதிப்படுத்த முடியும் என இந்தியா நம்புகின்றது. ஆனால் இந்தியாவின் இந்த திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்புக்கள் சிறிலங்காவிடம் இருந்து கிடைக்குமா என்பது சந்தேகமே. கொழும்பு இந்த திட்டத்திற்கு ஆதரவாக செயற்படாத சமயத்தில் இந்தியாவின் அடுத்த தெரிவாக ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளே முன்நிறுத்தப்படும்.

-வேல்ஸ் இல் இருந்து அருஷ்-

நன்றி: வீரகேசரி வாரஏடு

Comments