நீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் தேசிய நல்லிணக்கம்

வன்னிப் போரில் நிகழ்ந்தேறிய போர்க்குற்றங்கள் தொடர்பான பன்னாட்டு சுயாதீன ஆய்வுக்கான அழைப்புக்கள் அண்மைக் காலங்களில் பன்னாட்டு மட்டத்தில் வீரியம்பெற்று வருகின்றன. தனது முழுப்படை வலிமையையும் வன்னிப் பெருநிலம் மீது ஏவிவிட்டு, ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களை சிங்களம் கொன்றுகுவித்த பொழுது கண்மூடி அமைதிகாத்த உலக சமூகம், வன்னிப் போர் முடிவுக்கு வந்த மறுகணமே திடீரென திருப்பள்ளியெழுச்சி கொண்டு, போர்க்குற்றங்கள் தொடர்பான தனது கரிசனைகளையும், தமிழ் - சிங்கள சமூகங்களுக்கு இடையிலான தேசிய நல்லிணக்கத்திற்கான அறிவுரைகளையும் விதந்துரைத்து வருகின்றது.

வெளித்தோற்றத்திற்கு ஏதோ தமிழீழ மக்களுக்கு உலக சமூகம் நீதிவழங்கப் போவது போன்ற தோற்றப்பாடு நிலவினாலும்கூட, தேசிய நல்லிணக்கம் என்ற புதைகுழிக்குள் நீதிக்குக் குழிபறிக்கும் வகையில் செயற்படுவதற்கு உலக சமூகம் முற்படுகின்றதா? என்ற கேள்வியும் தமிழீழ மக்களிடையே இயல்பாகவே எழுகின்றது.

அண்மைக் காலங்களில் மேற்குலக - சிங்கள உறவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை நுணுகி ஆராய்வதன் ஊடாக இக்கேள்விக்கு விடைகாண்பதற்கு இக்கட்டுரை முற்படுகின்றது. வன்னிப் போரில் தமிழீழ மக்களுக்கு சிங்களம் இழைத்த கொடூரங்கள் ஒவ்வொரு தமிழர்களின் இதயங்களிலும் ஆறாத வடுக்களாகப் பதிந்துபோயுள்ளன.

சிங்களத்தின் இக்கொடூரச் செயல்கள் தமிழீழ மக்களை மட்டுமன்றி, உலகத் தமிழர்களையும், ஏன் மாந்தநேயம் கொண்ட ஒவ்வொரு மனிதர்களையும் உலுக்கியெடுத்த நிகழ்வுகளாகவே விளங்குகின்றன. ஈழத்தீவை விட்டு ஆங்கிலேய ஏகாதிபத்திய ஆட்சி அகன்ற பின்னர் தமிழீழ மக்களுக்கு எதிரான இனவழித்தொழிப்பு நடவடிக்கைகளை பல்வேறு பரிமாணங்களில் சிங்களம் முன்னெடுத்து வந்த பொழுதும், இவற்றின் உச்சகட்டமாக வன்னிப் போரில் நிகழ்ந்தேறிய கொடூரங்கள் விளங்குகின்றன.

பொதுவாக யுத்தத்தில் இனவழித்தொழிப்புக்கு ஆளாகும் பெரும்பாலான இனங்கள், தம்மைத் துடைத்தழிக்க முற்பட்டோரை நீதியின் முன்னிறுத்தித் தண்டிப்பதன் ஊடாகவும், தமது எதிர்காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் ஏற்பாடுகளை மேற்கொள்வதன் வாயிலாகவுமே தமது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வது வழமை.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் ஹிட்லரின் நாசிகளால் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகிய யூதர்கள், போருக்குப் பின்னர் எஞ்சியிருந்த நாசிகளை பன்னாட்டு நடுவர் மன்றத்தில் குற்றவாளிகளாக முன்னிறுத்தித் தண்டித்தும், மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற யூதத் தனியரசை நிறுவியும் தமது இருப்பை உறுதிசெய்து கொண்டதை இதற்கான நவீனயுக உதாரணமாக நாம் கொள்ள முடியும்.

இந்த வகையில், வரலாற்றின் படிப்பினைகளை வழிகாட்டிகளாக நாம் கொள்ளும் பொழுது, இருபத்தோராம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகிய ஈழத்தமிழர்களாகிய நாம், யூதர்களைப் போன்று சிங்கள அரசையும், அதன் ஆயுதப் படைகளையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தித் தண்டிப்பதற்கும், ஐக்கிய நாடுகளின் சாசனத்திற்கு இசைவாகத் தன்னாட்சியுரிமையின் அடிப்படையில், எமது வரலாற்றுத் தாயகத்தில், எமது தேசிய அடையாளத்தைப் பேணும் வகையில் இறையாண்மை பொருந்திய சுதந்திரத் தமிழீழத் தனியரசை நிறுவுவதற்கான முழுத் தகமைகளையும் கொண்டுள்ளோம்.

எனினும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நாடோடிகளாக உலகெங்கும் அலைந்து திரிந்து, இறுதியில் ஹ்ட்லரின் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகிய பொழுது தனியரசு தேடிய யூதர்களுக்கு நீதியளித்த உலக சமூகம், புதுயுகம் என்றழைக்கப்படும் இருபத்தோராம் நூற்றாண்டில் வரலாறு காணாத இனவழித்தொழிப்பிற்கு ஆளாகிய ஈழத்

தமிழர்களாகிய எம்மை, தமிழீழத் தனியரசுக் கோரிக்கையைக் கைவிடுமாறு தொடர்ந்தும் நிர்ப்பந்தித்து வருகின்றது.ஒருபுறம் இறுதிப் போரில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாகக் கரிசனை வெளியிடும் உலக சமூகம், மறுபுறம் சிங்கள அரசையும், அதன் ஆயுதப் படைகளையும் பன்னாட்டு நீதிமன்றத்தில் முன்னிறுத்தித் தண்டிப்பதற்குப் பின்னடிக்கின்றது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற மேற்குலக வல்லரசுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களாயினும் சரி, ஐக்கிய நாடுகள் சபையாயினும் சரி, ஐ.நா மன்றத்தின் முன்னாள் மனிதவுரிமைகள் உயராணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாராகவிருப்பினும் சரி, இந்நாள் உயராணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாராகவிருப்பினும் சரி, போர்க்குற்ற ஆய்வு - தேசிய நல்லிணக்கம் என்ற மட்டுப்படுத்தப்பட்ட வீச்செல்லையைக் கொண்ட இரண்டு கண்களின் ஊடாகவே ஈழப்பிரச்சினையை அணுக முற்படுவதை அடிக்கடி இவர்களால் வெளியிடப்படும் அறிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் அப்பால், மனிதவுரிமைகளை தமது விழுமியங்களாக ஏந்திக்கொள்ளும் பன்னாட்டு மனிதவுரிமை அமைப்புக்கள் கூட, தமிழீழ மக்களுக்கு எதிராக இனவழித்தொழிப்பு யுத்தத்தில் சிங்கள அரசும், அதன் ஆயுதப் படைகளும் ஈடுபட்டதை மறுதலிக்கும் வகையிலேயே தமது அறிக்கைகளைக் கட்டமைத்துக் கொள்வதையும் நாம் அவதானிக்க முடியும். அதாவது இனவழித்தொழிப்பு என்று தமிழில் பொருள்படக்கூடிய ஜெனோசைட் (Genocide) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சொற்பதத்தை, ஈழப்பிரச்சினையைப் பொறுத்தவரை தீண்டத்தகாத ஒன்றாகவே மேற்குலக அரசுகளும், ஊடகங்களும், மனிதவுரிமை அமைப்புக்களும் ஒதுக்க முற்படுகின்றன.

அதாவது ஈழப்பிரச்சினை தொடர்பான மேற்குலகின் தற்போதைய அணுகுமுறையை ஒற்றைச்சொல்லாடலில் கூறுவதனால்: “ஈழத்தமிழர்கள் இனவழித்தொழிப்பிற்கு ஆளாகவில்லை, ‘பயங்கரவாதிகளை’ அழிக்கும் யுத்தத்தின் பொழுது போர்க்குற்றங்களில் சிறீலங்கா சனநாயகக் குடியரசின் ஆயுதப் படைகளும், அரச உயர்தரப்பினர் சிலரும் ஈடுபட்டிருக்கக்கூடும், ஆனால் இதற்காக இவர்களை பன்னாட்டு நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல முடியாது, அது நடைமுறையில் சாத்தியமாகாது, மாறாக போர்க்குற்றங்களை ஆய்வுசெய்து, தவறுகளைத் திருத்தி, பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்குவதன் ஊடாகவும், அதிகாரப்பரவலாக்கத்தின் அடிப்படையில் அரசியல் தீர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவும் நிரந்தரமாக தமிழ் - சிங்கள சமூகங்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விட முடியும்.”

இதுவே மேற்குலக சமூகத்தின் தற்போதைய அணுகுமுறையாக விளங்குகின்றது. அடுத்தபடியாக, தேசிய நல்லிணக்கம் என்ற திரைக்குள் நாம் நுழைந்து கொள்வதற்கு முன்னர், தென்னாபிரிக்கா, மொசாம்பிக், றுவாண்டா, லைபீரியா, சியர்லியோன் போன்ற ஆபிரிக்க நாடுகளிலும், கொலம்பியா, ஆர்ஜன்டீனா போன்ற லத்தின் அமெரிக்க நாடுகளிலும், பொஸ்னியா, கொசவோ போன்ற கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலக வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் நிகழ்ந்தேறிய நல்லிணக்க நடவடிக்கைகளின் காட்சிகளை எமது மனத்திரையில் நாம் முதலில் வீழ்த்திக்கொள்வோம். அதாவது, உள்நாட்டுப் போர் அல்லது உள்ளகக் கிளர்ச்சியில் இருந்து மீண்டெழுந்ததாக மேற்குலக அரசறிவியலாளர்களால் வர்ணிக்கப்படும் மேற்குறிப்பிட்ட நாடுகளில் அமைக்கப்பட்ட எந்தவொரு தேசிய நல்லிணக்க அமைப்புக்களும், இனவழித் தொழிப்பிற்கு அல்லது கொடூரமான மனித உரிமை மீறல் களுக்கு ஆளாகிய மக்களுக்கு உண்மையான நீதியை வழங்கவில்லை.

இதில் குறிப்பாக தென்னாபிரிக்காவை நாம் எடுத்துக் கொண்டால், பன்னாட்டுக் கண்காணிப்பின் கீழ் அங்கு முன்னெடுக்கப்பட்ட பெரும்பாலான தேசிய நல்லிணக்கப் பணிகள், கறுப்பின மக்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்திய வெள்ளையின நிறவெறியர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, குற்றவியல் சட்டங்களில் இருந்து அவர்களை பாதுகாப்பதையே குறியாகக் கொண்டிருந்தன. பல சந்தர்ப்பங்களில் தம்மை சிறைப்பிடித்து, கொடூர வதைகளுக்கு உட்படுத்திய வெள்ளையின நிறவெறியர்களுடன் கறுப்பினப் போராளிகளும், அவர்களின் அனுதாபிகளும் சமரசம்செய்து கொள்வதற்கான தளங்களாகவே இவ்வாறான தேசிய நல்லிணக்கப் பணிகள் அமைந்திருந்தன.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பான அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரிக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் இது தொடர்பான ஆய்வுகளை நிகழ்த்துவதாகக்கூறி ஆணையங்களை நிறுவுவதும், அவற்றின் ஊடாகக் காலத்தை இழுத்தடித்து இறுதியில் எதுவுமே நிகழ்ந்தேறாதது போன்று முடிவுரை எழுதுவதுமே சிங்கள ஆட்சியாளர்களின் மூன்றரை தசாப்தகால யுக்தியாகத் திகழ்கின்றது. கறுப்பு யூலை இனக்கலவரமாயினும் சரி, செம்மணிப் புதைகுழிகளாயினும் சரி, மூதூர் அக்சன் பாம் பணியாளர்களின் படுகொலைகளாயினும் சரி, ஆணையங்களை நிறுவுவதும், காலத்தை இழுத்தடித்துக் கவனத்தைத் திசைதிருப்புவதும் சிங்கள ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மிகவும் கைதேர்ந்த கலையாகவே காணப்படுகின்றது.

இந்த வகையில், தற்பொழுது போர்க்குற்ற ஆய்வு என்ற ‘பாசுபத அஸ்திரத்தை’ தனக்கு எதிராக மேற்குலகம் ஏவுவதை நன்கு உணர்ந்துகொண்டிருக்கும் சிங்களம், அதே மேற்குலகம் தேசிய நல்லிணக்கம் என்ற ‘நாராயண அஸ்திரம்’ ஊடாக போர்க்குற்றங்களின் வீரியத்தை அணைப்பதற்கு தயாராக இருப்பதைப் புரிந்து கொண்டு, தேசிய நல்லிணக்க ஆணையத்தை அமைத்து, அதுபற்றி உலகெங்கும் பரப்புரைகளை முன்னெடுத்து வருகின்றது.

‘சமாதானத்திற்கான போர்’ என்ற மகுடத்தின் கீழ் சந்திரிகா குமாரதுங்க முன்னெடுத்த தமிழின அழித்தொழிப்பு யுத்தத்திற்கு அரசியலமைப்பு வடிவம் கொடுத்தவரும், ரணில் விக்கிரமசிங்கவால் வனையப்பட்ட ‘அனைத்துலக பாதுகாப்பு வலைப்பின்னலுக்கு’ இராசதந்திர வடிவம்கொடுத்த பெருமைக்குரியவருமான காமினி லக்ஸ்மன் பீரிஸ் அவர்கள், தற்பொழுது தேசிய நல்லிணக்கம் என்ற ‘ஒலீவ்’ இலையேந்தி, சமாதானப் புறவாக மேற்குலகப் பரப்பை வலம்வருவது இதனையே வெள்ளிடைமலையாக நிதர்சனப்படுத்தி நிற்கின்றது.
இந்த வகையில், ‘சிறீலங்கா அரசாங்கம் அமைத்துள்ள தேசிய நல்லிணக்க ஆணையம் நம்பிக்கையை அளிக்கின்றது.’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கிலாரி கிளின்ரன் அவர்களும்,

‘போர்க்குற்ற ஆய்வுகள் தேசிய நல்லிணக்கத்திற்கு வழிகோலும்’ என்று ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ-மூன் அவர்களும், மனிதவுரிமைகள் உயராணையாளர் நவநீதம்பிள்ளை அம்மையாரும் வெளியிட்டுள்ள கருத்துக்கள், தேசிய நல்லிணக்க நாடகத்தின் ஊடாகப் போர்க்குற்றங்களைப் பூசி மெழுகி, நீதியை சிங்களம் குழிதோண்டிப் புதைப்பதற்கு இடமளிப்பதற்கான சமிக்ஞைகளை உலக சமூகம் வெளியிடுவதையே புலப்படுத்துவதாகக் நாம் கொள்ள முடியும்.

சேரமான்

நன்றி:ஈழமுரசு

Comments