தமிழ்நாட்டு அரசின் திட்டமிட்ட விழுப்புரம் ரயில் பாதை குண்டுவெடிப்பு

கடந்த 12-ம் தேதி விழுப்புரம் அருகே ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு நடந்தது. தகவல் கிடைத்து முன்கூட்டியே ரயில் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அது குறித்து தகவல் வெளியிட்ட மாநில காவல் துறை தலைவர் லத்திகாசரன் அவர்கள் 'இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு மாவோயிச தீவிரவாதிகள் காரணம் அல்ல' என்று அறிவித்தார். அதாவது விடுதலை புலிகள் ஆதரவு இயக்கங்கள்தான் என்பதை கோடு போட்டு கொடுத்தார். வழக்கு உடனடியாக கியூ பிரிவுக்கு மாற்றப்பட்டது. அதனையடுத்து பேசிய மாநில உளவு பிரிவு ஐ.ஜி. ஜாபர்சேட் 'விடுதலை புலிகளின் ஆதரவு இயக்கங்கள்தான் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்தியிருக்கும்' என்றார்.

அதாவது 1991-ம் ஆண்டு மே 21-ம் நாள் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலையான போது, அது குறித்த ஆரம்பகட்ட விசாரணைகூட தொடங்கப்படாத நிலையில், அன்றைய மத்திய சட்டத்துறை அமைச்சர் சுப்ரமணியசுவாமி 'ராஜீவ் படுகொலைக்கு விடுதலை புலிகள்தான் காரணம்' என்று அன்றைய சில மணி நேரங்களிலேயே ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். அதே பாணியில் இன்று உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் முனைப்பு காட்டுகிறார். விசாரனை தொடங்கப்படாத நிலையில் எப்படி 'புலிகளின் ஆதரவாளர்கள்' என்கிறார் என பழ. நெடுமாறன், வைகோ, சீமான் உள்ளிட்ட தலைவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கான 'விளக்கம்' இப்போது கிடைத்திருக்கிறது. விழுப்புரத்தில் உள்ள ஈழ ஆதரவு இயக்க இளைஞர்கள் எட்டு பேர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாகவே ரகசியமாக கடத்தி சென்று தடுத்து வைத்து 'விசாரித்து' வருகிறார்கள். அதாவது சம்பவம் நடந்த அடுத்த நாளே அந்த இளைஞர்களை கடத்தி சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கிறது போலீஸ். அதை வைத்துதான். உளவுதுறை அதிகாரி ஜாபர்சேட் அப்படி 'கருத்து' கூறினார். இந்த நிலையில் 14-ம் தேதி திங்கள் அன்று விழுப்புரத்திற்கு சென்ற ஜாபர்சேட் 'வழுக்கு விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு தினங்களில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விடுவோம்' என்று பேட்டி அளித்தார். ஆக முன்கூட்டியே திட்டமிட்டு 'இதுதான். இப்படித்தான்' என்று செயல்படுத்துகிறார்கள்.

சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜோதி நரசிம்மன், எழில் இளங்கோ, தமிழ்வேங்கை, பாபு, ஏழுமலை, கணேஷ், ஜெயராமன், குமார் ஆகிய எட்டு நபர்கள் ஈழ ஆதரவு இயக்கத்தில் செயலாற்றி வருகிறார்கள். கைதுக்கு வேறு பின்னணியும் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதி அன்று ஈழத்தில் போர் நிறுத்தம் வேண்டி தன்னைத்தானே எரித்து உயிர் கொடையளித்த முத்துகமார், சிவகுமாரன் உள்ளிட்ட 19 பேருக்கான முதலாம் ஆண்டு வீர அஞ்சலி பொதுக்கூட்டத்தை நடத்தினார்கள். அந்த கூட்டத்திற்கு சிறப்பு பேச்சாளராக புலமைபித்தன், திருச்சி வேலுசாமி ஆகியோர் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசியில் புலவர் புலமைபித்தன் அவர்கள் கலந்துகொள்ளவில. நேரில் கலந்துகொண்ட வேலுச்சாமி திமுகவையும், அதன் தலைவர் கருணாநிதியையும் கடுமையாக சாடியிருந்தார். அதைவிட அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த அந்த இளைஞர்கள் கருணாநிதியை தாக்கி, மத்திய மாநில அரசுகளை மிகவும் கடுமையாக கேலிசெய்து நாடகம் போட்டிருந்ததுதான். அவர்களின் கேலிக்கை நாடகம்தான் அனைவரையும் பரபரப்பாக பேச வைத்தது.

அந்த நாடகம் திமுக-காங்கிரஸாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அப்போதிலிருந்தே அந்த இளைஞர்கள் குறிவைக்கப்பட்டார்கள். அது மட்டுமல்ல இளைஞர்களின் இந்தவித வீராவேசமான எழுச்சி தமிழகம் முழுவதும் நடந்தேறிக்கொண்டிருந்தது. ஆளும் கட்சியினருக்கு பெரும் எரிச்சல். நிலைமையை இப்படியே விட்டால் எதிர்கால தமிழகம் இந்த இளைஞர்களின் பிரச்சார வளையத்திற்குள் சென்றுவிடும் என்று அஞ்சி திட்டமிட்டது. அதன் ஒரு வெளிப்பாடுதான் இந்த குண்டு வெடிப்பு நாடகம்.

நினைத்தபடி இப்போது இளைஞர்கள் மீது கைவைக்க தொடங்கிவிட்டார்கள். இப்படி கைது செய்வதன் மூலம் மற்ற இளஞைர்களுக்கு ஒருவித அச்சத்தை எற்படுத்த வேண்டும். அதன் மூலம் அவர்களின் ஈழ ஆதரவு சிந்தனையை, பிரச்சாரத்தை சிதறடிக்க வேண்டும் என்பதுதான் முக்கிய திட்டம். அதை நிறைவேற்றுகிறார்கள். அதற்கு ரயில் தண்டவாள தகர்ப்பு ஏன்? குண்டு வெடிப்பு ஏன்? வேறு ஏதாவது பொய் வழக்கு போடலாமே?...

இதில்தான் விஷமம் இருக்கிறது. மற்ற வழக்குகளை போல் அல்ல குண்டு வெடிப்பு வழக்கு. போலீஸ் எப்படி வேண்டுமானாலும் இதில் விளையாடலாம். கைது செய்யும் இளைஞர்களை ஜாமீனில் விடுவதற்கு ஏதாவது காரணத்தை சொல்லி தாமத்தபடுத்தலாம். இப்படி செய்வதால் மற்ற இளைஞர்களுக்கு அச்சத்தை எற்படுத்த முடியும் என்பதுதான் பின்னணி. ஆக, முதல்வர் கருணாநிதையை கடுமையாக விமர்சித்ததற்கு பழி தீர்த்த மாதிரியும் ஆயிற்று, மற்ற இளைஞர் எழுச்சிகளை தடுத்த விதமாவும் ஆயிற்று என்பதுதான் திட்டத்தின் மையம்.

பிரதான இன்னொரு காரணம் ஈழ விடுதலை ஆதரவு எழுச்சியை உடனடியாக தடுக்க வேண்டும். அது கைது நடவடிக்கைகள் மூலமாக மட்டும் போதாது. புலிகளின் ஆதரவாளர்கள், ஈழ ஆதரவாளர்கள் 'வன்முறையாளர்கள்' 'பயங்கரவாதிகள்'.! தமிழக மக்கள் உயிர்களை பலிவாங்க முனைபவர்கள்.! எங்கோ நடக்கும் ஈழ பிரச்சனைக்கு இங்கே உயிர்பலி செய்வது என்ன நியாயம் என்ற கருத்தை வெகுஜன மக்கள் மத்தியில் பேச வைப்பதுதான். பிரச்சாரப்படுத்துவதுதான். அப்படி பிரச்சாரப்படுத்த காங்கிரஸ்-திமுக ஊடகங்களும், அரசு இயந்திரங்களும் தயாராகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு, புலிகளின் ஆதரவு என்றாலே 'அது சார்ந்த இயக்கம், இளைஞர்கள் எல்லாம் பயங்கரவாதத்தை செய்பவர்கள்' என்ற முத்திரையை குத்துவதான பின்னணிதான் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் 'சுற்றுகிறது'!

ஈழ மண்ணில் கொத்து குண்டுகளால் தமிழர்கள் கொத்து கொத்தாக, குவியல் குவியலாகவே செத்தார்கள். தமிழகத்தில் பெரும் கதறல் ஏற்பட்டது. போராட்டம் வெடித்தது. அப்போதுகூட எந்த இளைஞனும். இயக்கமும் இப்படியான பயங்கரவாத வேலைகளை செய்யவில்லை. சிவகுமாரன் முத்துகுமாரைப்போல் தன்னுயிரைத்தான் மாய்த்துகொண்டார்கள். முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போதுகூட அரசு அடக்குமுறையை ஏவியது. கல்லூரி விடுதிகளை நல்லிரவில் முடி அந்த இளைஞர்களை வீதிக்கு கொண்டு வந்தது. போராட்டத்தற்கு பிறகு அந்த நேரத்திற்கு இல்லை என்று மறுத்துவிட்டு மீண்டும் கல்லூரிகளை இழுத்து மூடியது. அப்போது யாரும் உணர்ச்சிவசப்பட்டுகூட 'இப்படியான குண்டுவெடிப்பு பயங்கரவாத செயலில் ஈடுபடவில்லை என்பதை மட்டுமல்ல...

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். தீவிரவாதத்தை கண்காணிக்கும் மாநில கியூ பிரிவும், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்த நிறுத்தவே பாடுபடும் உளவு பிரிவு போலீஸ§ம் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவ்வளவு தூரம் இறக்கை கட்டி பறப்பதேன். சில மாதங்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ஒரு தனி ரயிலயே ஒருவன் கடத்தி சென்றான். ஓட்டிச் சென்ற ரயில் அனைத்து சிக்னல்களையும் மீறி சென்று வியாசர்பாடி ரயில் நிறுத்தத்தில் பெரும் விபத்தோடு கவிழ்ந்தது. நான்கு பேர் அதில் உயிர் இழந்தார்கள். அந்த நேரம் எதிரே எந்த ரயிலும் வரவில்லை. வந்திருந்தால் 'மோதல்' மூலம் மேலும் பெரும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கும். அந்த சம்பவத்திற்கு நேரில் சென்றாரா உளவுத்துறை அதிகாரி. ஏதாவது உடனடி கருத்தை சொன்னாரா? ஏன்?

ஏனென்றால், வியாசர்பாடி விபத்து எதேச்சையாக நடந்தது. அதாவது நடத்தியவன் திட்டமிட்டபடி நடந்தது. அதனால் அதில் என்ன எப்படி முடிவெடுப்பது என்ற 'தெளிவு' காவல்துறை வீரர்களுக்கு இல்லை. ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு 'சிலரால்' திட்டமிடப்பட்டது. திட்டமிட்டபடி நேரடியாக 'விளக்க' வந்துள்ளார்கள். இந்த வித்தியாசத்தையும் கவனிக்க வேண்டும்.

மற்றொரு காரணத்தையும் பார்க்க வேண்டும். உண்மையில் பெரிய அசம்பாவிதம், விரவாதம் என்று நடக்கும் போதெல்லாம் 'அப்படி ஒன்றும் பெரிதாக இல்லை' என்று பூசி மெழுகுவதையேதான் காவல்துறை செய்யும். அதாவது சட்டம்-ஒழுங்கு கெட்டுவிடவில்லை. சுமூகமாக இருக்கிறது என்று காட்டிக்கொள்ளவே முனைப்பு காட்டும். ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்தினால் எரிச்சல்படும் போலீஸ். ஆனால் விழுப்புரம் குண்டு வெடிப்பு சம்பவத்தில் நேரெதிராக உள்ளது. மாநில அரசு, காவல்துறை கட்டமைப்பு வரிந்துகட்டிகொண்டு 'ஆமாம், குண்டு வெடிச்சதுததான். இது புலி ஆதரவாளர்கள்தான்' என்று கூப்பாடு போடுவதிலிருந்தே 'என் அப்பன் குதிருக்குள் இல்லை' என்று வலிந்து போய் சொல்லும் கதையை நினைவு படுத்துகிறது. முதர்வர் கருணாநிதியின் 'வாழ்நாள் கனவான' உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடக்க இன்னும் ஒரு வாரமே இருக்கின்ற நேரத்தில், உண்மையிலே குண்டு வெடிப்பு நடந்திருந்தால் உளவுத்துறை ஐ.ஜி. ஜாபர்சேட்டின் டவுசரை கழட்டியிருப்பார் கருணாநிதி. மாநாட்டிற்கு யார் எந்த நம்பிக்கையில் வருவார்கள். எந்த நம்பிக்கையில் ரயில் மற்றும் பேருந்துகளில் ஏறி கோவைக்கு வருவார்கள் என்று கதறியிருப்பார். ஆக இந்த நேரத்தில் 'நாடு நன்றாக இருக்கிறது' என்றே காட்ட முனைவார்கள்.

அப்படியிருக்க 'குண்டு வெடித்து. அது புலிகளின் ஆதரவு அமைப்புதான் செய்தது' என்று சொல்கிறார்கள் என்றால் என்ன பொருள். அவர்கள் திட்டமிட்டது என்று அர்த்தம். உண்மையில் ஈழ ஆதரவாளர்கள் யாரும் அப்படி செய்ய மாட்டார்கள் என்று மக்கள் நம்புவார்கள். அதனால் கோவை செம்மொழி மாநாட்டுக்கு எந்த சிக்கலும் வந்துவிடாது என்று அரசே 'தெளிவு'கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம்.

மூன்று நாட்களாக சட்டவிரோத தடுப்பில் வைத்து ரகசிய விசாரணைக்குள்ளாகியிருக்கும் எட்டு இளைஞர்களின் தரப்பாக நீதிமன்றத்தை நாடும் வழக்கறிஞர் கண்ணனிடம் பேசியபோது...

''அந்த எட்டு நபர்களையும் எப்போது எங்கே கைது செய்து அழைத்து சென்றார்கள் என்று தெரியாது. சிலரை வீட்டில் இருந்து அழைத்து சென்றிருக்கிறார்கள். மற்றபடி எங்கே வைத்துள்ளார்கள். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தகவல் ஏதும் தெரியவில்லை. அவரவர் வீட்டாருக்குகூட தெரிவிக்கவில்லை. வழுக்றிஞர் என்ற முறையில் நான் முயற்சி எடுத்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியும் பயனில்லை. இந்த குண்டு வெடிப்பு வழக்கில் இவர்கள் ஈடுபடவில்லை. ஈழ ஆதரவு தரப்பினர் யாருமே ஈடுபடவில்லை. அப்படி செய்யவும் மாட்டார்கள் என்பதுதான் வழக்கறிஞர்களின் கருத்து. அப்படி அசம்பாவிதம் செய்வதால் ஈழ ஆதரவாளர்களுக்கு ஆதாயம் ஏதும் இல்லை. மக்கள் வெறுப்பார்கள். இழப்புதான். ஆனால் ராஜபக்சேவுக்கும், காங்கிரஸ் தரப்புக்கும் இதில் பெரிய நலன் இருக்கிறது. ஆகவே அவர்கள் செய்திருக்கதான் அதிக வாய்ப்பு.

அதுதான் எங்களின் எதிர் புகார். குறிப்பாக காங்கரிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அசன்அலியின் பங்கு இந்த குண்டு வெடிப்பில் இருக்கிறது. அதற்கான ஆதாரம் உள்ளது. உறுதியாக கூறுகின்றோம். சாட்சிகள் மறைக்கப்படும், விசாணை போக்கு மாறிவிடக்கூடும் என்பதால் இப்போது மக்கள் மத்தியில் வெளிப்படையாக சொல்ல முடியாது. சரியான நேரத்தில் அதை அம்பளப்படுத்துவோம். ஆனால் அசன் அலியின் கடந்த காலங்களை பார்த்தாலே தெரியும். அவர் இங்கே ராஜபக்சேவின் ஏஜன்ட்டாகதான் வேலை செய்தார். நான் ராஜபக்சேவின் நண்பர்தான் என்றார். அந்த ராஜபக்சேவுக்கு ஆதரவாக இங்கே பல வேலைகளை செய்தவர்.அப்போது இலங்கை துணை தூதர் அம்சாவுடன் சேர்ந்துகொண்டு பத்திரிகைளார்களை வளைத்து அவர்களுக்கு 'அன்பளிப்பு, நிதியுதவி' என்று ஏற்பாடு செய்து கொடுக்க உதவியாக இருந்தவர். ராஜபக்சேவின் திட்டத்திற்கு ஏற்ப இங்கே முக்கிய அதிகாரிகளை சந்தித்து அவர்களுக்கு ஆதரவாக காய் நகர்த்தியவர். தமிழக முதல்வரை சந்தித்து ஈழ ஆதரவு போராட்டத்தை நசுக்க மாற்றுவழி திட்டம் இருப்பதாக சொன்னவர்.

அப்படியான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ அசன் அலி மீது எங்களுக்கு சந்தேகம் இருக்கிறது. அதற்கான ஆதாரத்தோடு புகார் கொடுக்கின்றோம். இந்த வழக்கில் அவரை விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் ஒன்று சேர்ந்து புகார் கொடுக்க இருக்கின்றாம்.'' என்று கூறினார். இந்த பின்னணியை வைத்து பார்க்கும் போது விழுப்புரம் ரயில் தண்டவாள குண்டு வெடிப்பு வழக்கு காங்கிரஸின் 'ஆசைகளுக்கு' ஏற்ப நடந்தேறியிருக்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மாநில அரசு இயந்திரமும் அதற்கேற்ப துணை போகிறதோ என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.

Comments