ஈழத் தமிழர்களுக்கான பலம் பொருந்திய சக்தியாக, ஈழத் தமிழர்களுக்கான பேரம் பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்துவதன் மூலம், அந்த மாபெரும் சக்தியை முள்ளிவாங்க்காலில் முடங்கச் செய்தது சிங்கள அரசு. இது, கொடூரங்கள், மனிதாபிமானமற்ற போர்க் குற்றங்கள் நிறைந்த செயற்பாடாக இருப்பினும், சிங்கள தேசத்தால் விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் கருணாவை உருவாக்கவும், பிளவுகள் மூலம் பலமிழக்கச் செய்யவும் முடிந்திருக்கிறது எனும்போது நாங்கள் சிங்கள தேசத்திடமிருந்து கற்றுக் கொள்வதற்கும், எம்மை மீளமைத்துக் கொள்வதற்கும் ஏராளமான விடயங்கள் உள்ளன என்பதை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
பிரபாகரன் தேசத்து அத்தனை கட்டமைப்புகளுக்குள்ளும் சிங்கள தேசத்தால் ஊடுருவ முடிந்தது. ஊஐருவியிருந்தது என்பதை இப்போது மறைப்பதனால் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது. ஆனாலும், தனி மனித ஒழுக்கமும், இறுக்கமான கட்டுப்பாடுகளும் நிறைந்த அந்த யுத்த பூமியில் சிங்கள தேசத்தால் துரோகிகளை விதைக்க முடிந்திருந்ததானால், எந்தக் கட்டுப்பாடுகளும், இறுக்கங்களும் அற்ற புலம்பெயர் தேசங்களில் வாழும் எம் மத்தியில் எத்தனை கருணாக்களை உருவாக்கியிருக்க முடியும் என்பதை எண்ணிச் சொல்வதற்கு முடியாது என்றே நம்பப்படுகின்றது.
முள்ளிவாய்க்கால் இறுதிக் கணங்களுக்குப் பின்னர் குழம்பிப்போயிருந்த தமிழ்ச் சமூகத்தை மீட்டெடுத்து, போர்க்களத்திற்கு அழைத்து வர வேண்டிய பாரிய கடமைகளிலிருந்து நாம் அனைவருமே தவறிச் செல்கிறோம் என்றே தோன்றுகிறது. எதிரிகள் எங்கோ தொலைவில் இருந்து கொண்டே எம்மை எல்லாம் ஆட்டுவிக்கும் அளவுக்கு நாம் தரம் தாழ்ந்து போய் விட்டோமோ, என்று சந்தேகப்படுவது தவிர்க்க முடியாததாகவுள்ளது.
அடித்து நொருக்கி, துவைத்துப் போட்டுள்ள தமிழீழ மக்களது நாளைய வாழ்வு குறித்த நம்பிக்கைகளை ஊட்ட வேண்டிய நாம், எங்கள் தேசத்து மீன் கடைப் பக்கம் நிற்கும் சொறி நாய்கள் போல் எங்களுக்குள் நாங்களே அடித்துக்கொண்டு, எங்களை நாமே காயப்படுத்திக் கொண்டு, அடுத்து எங்கே யாரை அடிக்கலாம் என்று காரணம் தேடி அலைகின்றோம். இந்த வெட்கக்கேடான நாம் எம்மைத் தேசியவாதிகளாகவும் காட்டிக்கொள்ள முற்படுகின்றோம்.
ஆயுத போராட்ட வெற்றிகள் மீது ஏற்பட்டிருந்த அபார நம்பிக்கை வேறு வழியின்றி எம்மை ஓர் அணியில் கட்டிப் போட்டிருந்தது. அதன் பின்னரான, ஜனநாயக போராட்ட தளங்களில் முரண்பாடுகளும் சந்தேகங்களும், பிளவுகளும் உருவாகுவது தவிர்க்கப்பட முடியாத நியதியாகவே உள்ளது. ஆனாலும், அந்தப் பிளவுகளினூடாகவும் நாங்கள் எங்கள் சுதந்திரத் தமிழீழம் நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டியவர்களாகவே உள்ளோம். பல்வேறு எதிர்த் துருவங்களில் நின்று, ஒருவரை ஒருவர் விமர்சித்த எமது தேசத்துத் தலைவர்களும் தமிழீழ மக்களின் வரலாற்றுத் தேவைகளின் நிமித்தம் தம்முள் இணக்கங்களை உருவாக்கிக்கொண்டு இணைந்து பயணித்த, பயணிக்கும் உண்மைகளையும் மறுக்க முடியாதவர்களாகவே உள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசின் உயர் பீடமோ, மக்களவைகளின் உயர் பீடமோ ஒருவரை ஒருவர் விமர்சித்ததோ, இழிவு படுத்தியதோ இல்லை. அவர்கள் இரு இடங்களில் நிலை எடுத்தாலும் அவர்கள் இரு தரப்பினரதும் குறி சிங்கள தேசத்திடமிருந்து எம்மையும், எமது மக்களையும் மீட்டு எடுப்பதாகவே உள்ளது. நம்மிடையே, நம் மத்தியில் உள்ள சிலர்தான் ஒருவர் மீது ஒருவர் சேறடிக்கும் முயற்சிகளை வெட்கமின்றி மேற்கொண்டு வருகின்றோம். நாங்கள் அணிகளாகப் பிளவு பட்டாலும், எங்கள் திறமைகளும், வலிமைகளும் எதிரியை நோக்கி ஒருமுகப்படுத்தப்பட வேண்டியது என்ற உண்மையை விட்டு விலகி, நாங்கள் எங்கோ பயணித்துக்கொண்டுள்ளோம்.
நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் தம்மை மீளமைத்துக் கொள்ள முற்படாவிட்டால், புலம்பெயர் தமிழர்களிடமிருந்து இந்த இரு அணிகளுமே அந்நியப்பட வேண்டிய அவல நிலையை அடைந்து விடும். எந்த ஒரு அமைப்பும், அதன் நோக்கத்தை நோக்கி நகர முடியாவிட்டால், அது மக்களிடமிருந்து காணாமலேயே போய்விடும். அதற்கு இந்த இரு அமைப்புக்களும் விதிவிலக்கல்ல. ஒருவர்மீது ஒருவர் சேறு பூசுவதும், வசை பாடுவதும் நிறுத்தப்படா விட்டால் இந்த இரு அமைப்புக்களும் விரைவில் பூச்சியத்தினுள் சங்கமமாகிவிடும் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒழுங்காகக் கட்டமைக்கப்பட்ட எந்த ஒரு அமைப்பின் கருத்தும், அதன் தலைமையிடமிருந்தே வெளிவர வேண்டும். அல்லது, தலைமையால் அங்கீகரிக்கப்பட்ட தகைமை பெற்ற அந்த அமைப்புக்கான பேச்சாளரிடமிருந்து வரவேண்டும். அந்தக் கட்டுப்பாட்டையும். வரை முறையையும் மீறும் எந்த அமைப்பும் நீண்ட காலம் உயிர் வாழ்ந்ததாக வரலாறு இல்லை.
நாடு கடந்த தமிழீழ அரசுக்கான நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. உருத்திரகுமாரன் அவர்களும், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்திரு. இம்மானுவல் அடிகளாரும் திறந்த மனத்துடன் தொடர்புகளை உருவாக்கி, மக்கள் மத்தியில் குழப்பங்களை உருவாக்கிக் குளிர் காயும் விஷமிகளின் நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அணிகளை உருவாக்க முயல்பவர்களினதும், பிளவுகளை உருவாக்குபவர்களினதும் நோக்கம் மிக வெளிப்படையானதே. அவர்களது தமிழ்த் தேசிய விரோத போக்குக்களை இந்தத் தலைமைகள் தடுத்து நிறுத்த வேண்டும்.
போதும், போதும் என்ற அளவில் மக்கள் வெறுப்புற்றுப்போயுள்ளார்கள். நீங்கள் போகும் பாதை குறித்த சந்தெகங்கள் மக்கள் மத்தியில் பூதாகரமாக உருவாகி வருகின்றது. இந்த நிலை போக்கப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் விமர்சிப்பதற்காக, களத்தில் உயிர் துறந்த மாவீரர்களும் தோண்டி எடுக்கப்பட்டு மரண விசாரணை நடாத்தும் அசிங்கங்கள் நிறுத்தப்பட வேண்டும். யார் பெரியவர், யார் சிறியவர் என்ற ஏற்ற - தாழ்வுப் போராட்டம் தவிர்க்கப்பட வேண்டும். தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்.
எங்கள் முன்னால் ஏராளமான பணிகள் குவிந்து கிடக்கின்றன. நாள்தோறும் வெளிவரும் சிங்கள தேசத்தின் போர்க் குற்ற ஆதாரங்கள் எம்மை நிலை குலையச் செய்கின்றது. எங்களின் உறவுகளின் அவல வாழ்க்கை நீண்டு செல்கின்றது. அகதிகளாக மக்கள் அலைய விடப்பட்டுள்ளார்கள். மிகுதியான மக்கள் இப்போதும் முள் வேலிக்குள் முடக்கப்பட்டே உள்ளார்கள்.
எங்கள் தேசத்தின்மீதும், எங்கள் தேசியத்தின்மீதும், எங்கள் மக்கள் மீதும், சரணடைந்த எங்கள் போராளிகள் மீதும்... சிங்களம் நடாத்திய, நடாத்திவரும் அத்தனை கொடூரங்களும் எங்களுக்குக் கோபத்தை மூட்டவில்லை. எங்களைப் பேச வைக்கவில்லை. எங்களை எழுத வைக்கவில்லை. ஆனால், நாங்கள் எல்லோரும் எங்கள் நேரங்களை ஒதுக்கி நமக்கு நாமே வசை பாடல்களை நடாத்தி வருகின்றோம். நாடு கடந்த தமிழீழ அரசும், மக்கள் பேரவைகளும் ஒரு புள்ளியில் சந்தித்துவிடக் கூடாது என்பதற்காக நாம் எது எதுவெல்லாமோ செய்ய முயற்சிக்கிறோம். நாங்கள் சிங்கள தேசத்தின் சதிகளுக்கு உடந்தையாகி விட்டோமோ என்று நம்மை நாமே உரைத்துப் பார்க்கும் காலம் வந்துவிட்டது.
தமிழீழ மக்களுக்கான புலம்பெயர் தமிழர்களின் போர்க் களங்களை வெட்கமில்லாமல் விமர்சிக்கின்றோம். எம் தேசத்து மக்களின் அவலங்களைப் புரிந்து கொள்ளாத கல்நெஞ்சத் திமிரோடு அவர்கள் இப்போது சந்தோசமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தமிழீழம் தேவையில்லை என்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசில் போட்டியிட்டு வென்ற மக்கள் பேரவையினர் முதலாவது அமர்வுக்குச் செல்வதற்கு முன்னதாகவே பொல்லுகள், கத்திகளோடு வேரறுக்கப் புறப்பட்டு வந்துகொண்டிருக்கிறார்கள் என்று எச்சரிக்கின்றோம். எங்களுக்கு எழுதுவதற்கு இதைவிட என்ன கிடைக்கப் போகின்றது?
இப்போது ஒரு தொலைக்காட்சி விளம்பரம்... மக்களை இன்னமும் பரபரப்படைய வைத்துள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசுக்கும், மக்கள் பேரவைக்கும் இடையே நெருப்பைக் கக்கும் போர் மூள வேண்டும் என்ற கணக்கை மட்டுமே அதில் பார்க்க முடிகின்றது. யார் துரோகி, யார் தியாகி என்ற ஆராய்ச்சியில் யாரோ ஒருவர் பரபரப்பை உருவாக்கினாலும், அது தமிழ்த் தேசியத்தைக் குறி வைத்த தாக்குதல் என்பதில் சந்தேகமே இல்லை. இவர்களுக்கெல்லாம், எமது மக்களின் அவலங்களும், அழு குரல்களும், பட்டினித் தவிப்புக்களும், எதிர்கால நம்பிக்கையற்ற வாழ்வுகளும் மனதைத் தொடாத சம்பவங்களாகி விட்டன.
சிங்கள தேசம், தான் நடாத்தி முடித்த போர்க் குற்றங்களின் சாட்சிகளாக எத்தனையோ ஆதாரங்கள் வெளிவந்த போதும், தம் தேசத்தில் விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று தமது சிங்கள தேசியத்தை நிலைநாட்ட, நாம் எது எதுக்கெல்லாமோ விசாரணை நடாத்தி, எம்மை நாமே அசிங்கப்படுத்த முனைகின்றோம். சிங்கள தேசத்தின் நிகழ்ச்சி நிரலுக்குள் புலம்பெயர் தமிழர்களையும் அழைத்துச் செல்லும் புதிய கருணாக்களாக மாறி வருகின்றோம்.
போதும்! போதும்!! எங்களுக்காக மரணித்த அந்த மாவீரர்களின் கனவுகளை மண்ணாக்கி விடாதீர்கள். நடேசனும், சிவராமும், இன்னும் எத்தனையோ தமிழ் ஊடக உணர்வாளர்கள் சேர்த்து வைத்து விட்டுப்போன தமிழ்த் தேசிய எச்சங்களைச் சிதைத்து விடாதீர்கள். பிளவு பட்டுக்கிடந்த தமிழ்த் தேசிய உணர்வாளர்களை ஒன்றுபடுத்தி, விடுதலைப் புலிகளை ஏற்க வைத்து தமிழத் தேசிய கூட்டமைப்பை உருவாக்கிய நாட்டுப் பற்றாளன் சிவராமின் ஆத்மாவைக் களங்கப்படுத்தாதீர்கள்.
- ஈழநாடு
Comments