ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவின் நிலை என்ன?


இந்தியா விடுதலை பெற்ற ஆண்டிலிருந்து இந்தியாவின் அணுகுமுறை என்பது ஒன்றாகவே தான் இருக்கின்றது. குறிப்பாக தென்னாசியப் பகுதியில் தானே தான் பெரியண்ணன் என்ற கர்வத்துடன் பல நடவடிக்கைகளை எடுத்தது. சில சம்பவங்கள் நன்மையில் முடிந்தாலும் சில சம்பவங்கள் தீயனவாக அமைந்தது.

வங்காளதேசம் என்ற நாடு சுதந்திரம் கிடைக்க உதவிய இந்தியா வங்காளிகளுக்கு நன்மையைப் பெற்றுத்தந்தது. இலங்கைக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி நேரடியாக ஈழத் தமிழர் மீது ஒரு போரை நடாத்தி பல ஆயிரம் மக்களை கொன்று குவித்தது. செய்த தவறுக்கு இன்றும் மன்னிப்பு கோராமல், தான் செய்தது சரிதான் என்ற நிலையில் அடுத்த கட்டத்துக்கான காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றது.

இலங்கையின் உள்நாட்டு விடயத்தில் இந்தியா பல காலமாக பல தரப்பட்ட கருத்தை முன் வைக்கின்றது. குறிப்பாக 1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்னரான காலப்பகுதியில் புலிகள் மற்றும் பல ஈழத் தமிழ் இளைஞர்களுக்கு இந்தியா ஆயதப் பயிற்சி அளித்தது மட்டுமில்லாமல் ஆயுதங்களையும் கொடுத்து உதவியது. இந்த காலப்பகுதி பனிக்கால பகுதியென்று வர்ணிக்கப்பட்டது.

இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய உறவைப் பேணி அமெரிக்காவுடன் பகைமையைக் கொண்டு இருந்தது. ஆனால் 1990 - ஆம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் இந்தியா அமெரிக்காவுடன் தோழமை கொள்ளத் தொடங்கியது. திறந்த பொருளாதாரக் கொள்கையை இந்தியா கையாளத் தொடங்கி விட்ட காலப்பகுதி தான் இந்த 1990-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதி. ஆக, தனது சுய லாபத்திற்காக தனது அயல்நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டு அந்த நாடுகளின் இறையாண்மையுடன் விளையாடிய இந்தியா கடந்த சில வருடங்களாக தான் ஏதோ மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாது போன்ற ஒரு மாயையை உருவாக்க எத்தனிக்கின்றது.

குறிப்பாக ஈழத் தமிழர் விடயத்தில் 1990-ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்தியா திடீர் பல்டி அடித்தது. குறிப்பாக இலங்கை என்ற ஒரு சுதந்திர இறைமை கொண்ட ஒரு நாட்டை துண்டாட இந்தியா ஒருபோதும் ஆதரவளிக்காது என்று கூறிவருகின்றது.

வேடிக்கை என்னவென்றால் தான் ஒருபோதும் மற்ற நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளில் தலையிடமாட்டேன் என்று அறிவித்துவிட்டு அந்த நாடுகளில் நடக்கும் உள்விவகாரங்களில் நேரடியாகவே தலையிட்டு ஏன் நச்சு ஆயுதங்களையும் மற்றும் தடைசெய்யப்பட்ட பல ஆயுதங்களை இலங்கைக்கு நன்கொடையாக கொடுத்து தமது மானத்தை காக்க போராடிய ஒரு இனத்தின் மீது போரைத் திணித்து அவர்களை அழிக்க உதவியது இந்தியா. இன்று வந்த ஞானோதயம் ஏன் 1990-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரவில்லை என்பது தான் தமிழ் மக்களிடம் எழும் கேள்வி.

அன்று இந்தியா தமிழ் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சியோ அல்லது ஆயுதங்களோ கொடுத்திருக்காவிட்டால் தமிழ் போராளிகள் பல பரிமாண இராணுவ வளர்ச்சியை எட்டியிருக்கமாட்டார்கள்.
‘குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது’ என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

தனக்கு விசுவாசமான தலைமை பதவிக்கு வந்தால் பங்களாதேஷ் நாட்டுக்கெதிரான சதிவேலையை இந்தியா செய்யாது. எதிரான தலைமை வந்துவிட்டால் பிரமபுத்திர ஆற்றை திசை திருப்பி ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் பங்களாதேஷ் நோக்கி அணையைத் திறந்துவிட்டு பல ஆயிரம் வங்காளிகளை காவுகொள்ள துணைபோகின்றது. இது ஒன்றும் இன்று நேற்று நடக்கும் சம்பவங்கள் அல்ல. பல ஆண்டுகளாக இந்தியா செய்யும் நாசகார வேலை. அந்த ஆற்றுத் தண்ணியை எப்பொழுதுமே பங்களாதேஷ் பக்கம் திறந்துவிட்டால் குறிப்பாக இந்த தண்ணீர் தேவையில்லாமல் வங்காள விரிகுடாக் கடலுக்குள் விடப்படுகின்றது. குறிப்பாக கோடை காலத்தில் இந்த தண்ணீர் பங்களாதேஷை சென்றடைந்தால் அந்த நாடு செல்வச்செழிப்பான நாடாக வளர்ந்துவிடும் என்ற காரணத்தினாலோ என்னவோ இந்தியாவின் இந்த வக்கிர போக்கு இருக்கின்றது.

அதைப் போலவே அத்தனை அருகிலுள்ள நாடுகளுக்கு எதிராகவும் இந்தியா இப்படியான செயல்பாடுகளை செய்து கொண்டிருக்கின்றது.

ஈழவரின் பலத்தை அழித்துவிட்டு அதிகாரம் அளிக்கப் போகின்றார்களாம்

எந்தவொரு கட்சியும் பேச்சுவார்த்தை மேசை செல்ல முன்னர் பலமுடன் சென்றால் அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றையாவது நடைமுறைக்கு கொண்டுவரமுடியும் என்பது தான் பேச்சுவார்த்தையின் அடிநாதம். இப்படியாக சாணக்கியம் இருக்க இலங்கையிலோ எதிர்மாறான நிலை இன்று உருவாகியிருக்கின்றது. ஈழத் தமிழரை அழித்து மற்றும் பல லட்சம் மக்களை இன்றும் அகதி முகாம்களுக்குள்ளும் மற்றும் சித்திரைவதை முகாம்களுக்குள்ளும் வைத்துக் கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக சமாதானத்தையும் மற்றும் தமிழர் பக்கம் உள்ள நியாயமான அரசியல் கோரிக்கைகளை இலங்கை அரசினால் எப்படி செயலாற்ற முடியும்? இது தான் இன்று பலரிடம் எழும் கேள்வி.

இப்படியாக இலங்கையின் பிரச்சினை இருக்கும் பொழுது இந்தியாவோ தனது அரசியல் சாணக்கியத்தைக் காட்ட முனைகின்றது. தமிழரை ஏதிலிகளாக்கிவிட்டு அவர்களின் சொத்துக்களை சூறையாடிக்கொண்டு அவர்களின் பூர்வீகத் தாயகத்தில் வேண்டுமென்றே சிங்கள மயமாக்குகின்ற வேலைகளைச் செய்துகொண்டு ஒரு கண்துடைப்பு நாடகத்தை இந்தியாவின் அனுசரணையுடன் நடாத்திக்கொண்டிருக்கின்றது. பாவம் தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளும் தலையாட்டும் பொம்மைகளாக இருந்து கொண்டேயிருக்கின்றார்கள்.

இந்தியாவின் அழைப்பை ஏற்று மகிந்த ராஜபக்ச தலைமையில் செல்லும் குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஷ் ஜயசிங்க, மின்சக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட சிலர் இடம்பெற்று இருக்கின்றார்கள். இவர்கள் ஜூன் 8 ஆம் திகதி புது டெல்லி சென்று நான்கு நாட்கள் தங்கி இந்தியாவின் மூத்த தலைவர்களையும் மற்றும் தமிழ் நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்தார்கள்.

இந்த விஜயத்தின் போது, சக்திவலு, போக்குவரத்து, சட்டரீதியான ஆலோசனைகள், கலாச்சாரத்துறை, சிறு கைத்தொழில் உட்பட ஏழு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. மேலும் இந்த விஜயத்தின் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிட்டது.

போரினால் இடம் பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் இந்தியா 50,000 வீடுகளை கட்ட நிதியுதவி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் வடகிழக்குப் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்காக கட்டிக் கொடுக்கப்படும். இந்தத் திட்டம் இந்தியா மற்றும் இலங்கையால் கூட்டாக நிறைவேற்றப்படும். இந்தத் திட்டத்துக்காக இந்தியா உடனடியாக 1000 கோடி ரூபாயை வழங்குவதாக இந்தியப் பிரதமர் இலங்கை ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.

மேலும், மன்னார் மாவட்டத்திலுள்ள புனித திருக்கேதீஸ்வரம் ஆலய புனரமைப்பு பணிகளுக்கு இந்தியா உதவும். இராமேஸ்வரம் தலைமன்னார் மற்றும் கொழும்பு தூத்துக்குடிக்கு இடையேயான படகு சேவை தொடங்குவது, மடு தலைமன்னார் ரயில்வே பாதையை இந்திய உதவியுடன் அமைக்கவும் உடன்பட்டுள்ளனர்.

இந்தப் பணி இந்திய நிறுவனமான இர்கான் அமைப்பால் முன்னெடுக்கப்படும். அதே போன்று பலாலி காங்கேசன்துறை ரயில் பாதை புனரமைப்பு இலங்கை ரயில்வே துறையால் அமைக்கப்படும் எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பகுதியில் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலைய நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் டாலர்கள் கடனுதவியை இந்தியா வழங்கும் என இந்திய தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டது. இந்த அனல் மின்நிலையம் இந்தியாவின் தேசிய அனல்மின் நிறுவனமும் இலங்கை மின்சார சபையும் இணைந்து கூட்டாக அமைக்கும்.

அத்துடன் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அம்பாந்தோட்டையில் இந்தியாவின் துணைத் தூதரகங்களை அமைக்கவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.

இப்படியான உடன்படிக்கைகளுக்கு ஊடாக இந்தியா சில அழுத்தங்களை தமிழர் மற்றும் சிங்களத் தலைமைகள் மீது கொடுத்துக்கொண்டிருப்பதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக இந்தியா சிபாரிசு செய்த 13-ஆவது அரசியல் சீரமைப்பு ஊடாக வடக்கு கிழக்கை ஒன்றாக்கி இந்தியாவில் இருக்கும் மாநில அதிகாரங்களை வழங்க முயற்சிக்கின்றது.

இலங்கையின் இனப்பிரச்சினைகளுக்கு 13-ஆவது திருத்தச் சட்டத்துக்கு இசைவாக, அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுத் தீர்வு ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் இலங்கை ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார். இதற்கு பதிலளிக்கையில், சிறுபான்மை இன மக்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் விதத்தில் தீர்வு ஒன்றைக் காண்பதற்காக அவர்களின் பிரதிநிதிகளூடாகத் தாம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகவும், 13-ஆவது திருத்தத்தை உள்ளடக்கிய தீர்வைக் காண்பதே தமது இலக்கு என்று மன்மோகன் சிங்கிடம் மகிந்தா வாக்குறுதியளித்தார்.

இப்படியாக சம்பந்தபட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தங்களுக்குள் முடிவுகளை எடுத்து பாதிக்கபட்டவர்கள் மீது அவர்கள் விரும்பாத ஒரு தீர்வைத் திணிக்க இந்தியா முனைகின்றது. இப்படியான வாக்குறுதிகள் ஒன்றும் இலங்கைக்கு புதியனவல்ல. இந்தியாவிடம் இருந்து பெற வேண்டிய அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதுதான் சிங்களத் தலைமையின் நோக்கம்.

தமிழர் தரப்பு தங்களைத் தானே ஆளும் சம உரிமையை குறிப்பாக திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட தீர்வை செயலாற்ற கேட்கையில் சிங்களத் தரப்போ தமிழருக்கு என்ற ஒரு இடமே இலங்கையில் இல்லை என்கின்ற நிலையில் இந்தியா இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு தீர்வை முன்வைக்க முயற்சிக்கின்றது. இதற்கு வெள்ளோட்டம் விடும்போல் மகிந்த ராஜபக்ச புதுடெல்லியை குளிர்மைப்படுத்த தான் ஒரு சிங்கள மிதவாதி இல்லையென்ற மாயையை காட்ட தமிழர் தரப்பு அரசியல் கட்சிகளை புது டெல்லி செல்லும் ஒரு தினங்களுக்கு முன்னர் திடீர் என்று சந்தித்து இந்தியாவை சாந்தப்படுத்த முனைந்து அதிலும் வெற்றிகொண்டுள்ளார். அதற்கமைவாகவே புதுடெல்லிக்கும் வாக்குறுதிகளையும் கொடுத்திருக்கின்றார்.

தமிழர் தரப்பை சந்தித்ததன் பின்னணி என்ன?

இந்தியாவில் எழும்பியிருக்கும் இலங்கைக்கு எதிரான வலுவை அடக்க தேவைப்பட்டது தான் ஈழத் தமிழர் தரப்பை சந்திக்க மகிந்த ராஜபக்ச ஒப்புதல் அளித்தது. குறிப்பாக தமிழ்நாட்டின் அரசியல்வாதிகளினால் முன்வைக்கபட்டிருக்கும் கோரிக்கைகளின் பின்னர் புதுடெல்லி கொழும்பை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்த சந்திப்பு நடந்தது. தமிழ் தேசிய முன்னணியினருக்கும் மகிந்த ராஜபக்சாவிற்கும் இடையில் அலரி மாளிகையில் ஒன்றரை மணி நேரமாக நடைபெற்ற சந்திப்பின்போது அரசியல் தீர்வு, மீள்குடியேற்றம், அத்துமீறிய குடியேற்றம், அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கல், அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மக்களை மீளக்குடியமர்த்தல், அரசியல் அமைப்பு சீர்திருத்தம் போன்ற விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

வேடிக்கை என்னவென்றால் பயங்கரவாதிகளின் தீர்வோ அல்லது பிரபாகரனின் தீர்வோ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ராஜபக்ச தெளிவாக கூறினாராம். தமிழர் தரப்புக்கு. அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்குதல் தொடர்பாக பேசப்பட்ட போது ஏற்கனவே இரண்டு பேருக்கு தாம் மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தபோதும் அவர்களில் ஒருவர் மாத்தறையில் இருந்து உளவுப்பணிகளில் ஈடுபட்டமை தொடர்பில் தம்மிடம் ஆதாரம் இருப்பதாக ராஜபக்ச மழுப்பினாராம். மேலும் லண்டனில் உள்ள அமைப்புகள், தற்போது ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் பொதுமன்னிப்பு வழங்கி அரசியல் கைதிகளை விடுவித்தால், அவர்களும் குறித்த அமைப்புகளில் இணைந்து நாட்டுக்கு எதிராக செயற்படும் நிலை ஏற்படும் என அவர் பதிலளித்தாராம். அத்துடன் அதியுயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றம் உட்பட்ட பிரச்சினைகளுக்கும் ராஜபக்சாவிடம் இருந்து நம்பிக்கைக்குரிய பதில்களை எதிர்பார்க்க முடியவில்லை என சந்திப்பில் பங்கேற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

போர் காரணமாக நிர்மூலமான ஒரு லட்சத்து அறுபதினாயிரம் வீடுகளை கட்டித்தரக்கூடிய வசதி இலங்கை அரசாங்கத்திடம் கிடையாது என்றும், விவசாய அறுவடைகளின் பின்னர் மக்களே அவற்றைக் கட்டிக்கொள்வார்கள் என்றும் இலங்கை அரசாங்கத்தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயத்துக்கான உதவிகளை மக்களுக்கு அரசாங்கம் வழங்கும் என்றும் அரசாங்க தரப்பில் தம்மிடம் கூறப்பட்டதாகாவும் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் இச்சந்திப்பின்போது சில விடயங்களில் முடிவுகள் எட்டப்பட்டன. இனப்பிரச்சினைக்கான தீர்வு, வன்னி மக்களின் மீள்குடியேற்றம் ஆகிய இரண்டு விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்கு அரசாங்கத்தினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளைக் கொண்ட விசேட கூட்டுக்குழு ஒன்று நியமிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஜனாதிபதி தமது இந்திய விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர் இந்தக் குழு நியமிக்கப்பட்டு செயற்படத் தொடங்கும். தடுப்பு முகாம்களிலுள்ள விடுதலைப்புலி சந்தேக நபர்களை டிசெம்பருக்கு முன் விடுதலை செய்வது, சிறைகளிலுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை விரைவில் விடுவிப்பது, மற்றும் வன்னியில் மீளக்குடியமர்ந்தோர் தொழில் வசதிக்கு அரசு நிதியுதவி செய்வது போன்ற முடிவுகளும் எடுக்கப்பட்டன. சிங்களத் தலைமைகளுக்கு வாக்குறுதிகளை கொடுப்பது ஒன்றும் புதியனவல்ல. இப்படியாக பல வாக்குறுதிகளை கொடுப்பதும் பின்னர் அசட்டை செய்வதும் கிழித்தெறிவதும் தான் நடைமுறையில் சிங்களத் தலைமைகளால் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இன்னொரு அதிசயம் என்னவென்றால் அரசாங்க அமைச்சராகவும் ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஈ.பி.டி.பி.கட்சியையும் மகிந்த ராஜபக்ச சந்தித்துத் தமிழ் மக்களின் அரசியலுரிமை மற்றும் உடனடிப் பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் என்று அறிவித்தார்கள். ஈ.பி.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவை சாந்தப்படுத்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான 13-ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதோடு அதிலிருந்து தொடங்கி அதை மேலும் செழுமைப்படுத்தி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சமவுரிமையும் உள்ளதான அரசியல் ஏற்பாடு நோக்கிச் செல்வதே தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடைமுறைச் சாத்தியமான வழிமுறை என்றும், அதை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.

மேலும், இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்திருந்த ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்து நட்பு நாடாகிய இந்தியா உட்பட சர்வதேச சமூகம், மற்றும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளும் ஏற்றுக்கொண்டிருக்கும் யோசனைகளையே தாம் வலியுறுத்தி வருவதாகவும், அரசியல் தீர்வை நடைமுறைப்படுத்துகின்ற சமகாலத்தில் தமிழ் மக்களின் உடனடி அவசியப் பிரச்சினைகளுக்கும் அரசாங்கம் உடனடியாகத் தீர்வு காணவேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.

அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துதல், கைது செய்யப்பட்டோர், மற்றும் சரணடைந்திருப்போரை விடுதலை செய்தல், அவ்வாறு விடுதலை செய்யப்படும் முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் முகமாக அவர்களுக்கான தொழிற்பயிற்சி, வேலை வாய்ப்பு, மற்றும் அவர்களுக்கான கல்வி கற்கும் வசதிகளை ஏற்படுத்துதல் போன்ற மனிதாபிமானப் பணிகளையும் அரசியல் தீர்வு முயற்சிகளை நடைமுறைப்படுத்தும் ஏக காலத்தில் விரைவாகச் செய்து முடிக்க வேண்டும் என்றும் ஈ.பி.டி.பி. தரப்பினர் சந்திப்பில் வலியுறுத்தினர் என்று அந்த அமைப்பு அறிக்கைவாயிலாக தெரிவித்தது.

எது எப்படியாயினும் ‘சோழியன் குடுமி சும்மா ஆடாது’ என்ற பழமொழிக்கேற்ப இந்தியாவின் அரசியல் காய்நகர்த்தல் அனைத்தும் தனது சுயநலத்திற்காகவே. அனைத்து நடவடிக்கைகளுக்கு பின்னாலும் பல திட்டங்கள் மறைந்திருக்கும். தமிழர் தரப்பு பலமாக இருக்கையில் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதை இந்தியா ஒருபோதும் விரும்பியதில்லை. தமிழர் தரப்பு சர்வதேச ரீதியில் செல்வாக்கை பெற்று தனிநாட்டை பெற்றுவிடுவார்கள் என்ற காரணத்தினால் அவர்களை பலமிழக்கச் செய்த பின்னர் பேச்சுவார்த்தை மேசைக்கு அனுப்பினால் ‘வலிமையில்லாதவன் செயல் காற்றுடன் கலந்துவிடும்’ என்ற நோக்குடன் காய்நகர்த்துகின்றது இந்தியா.

ஆக இந்தியா ஈழத் தமிழரின் விடுதலையை ஆதரிக்க முன்வரத் தயங்குகின்றது. குறைந்த பட்சம் ஈழத் தமிழருக்கு சுய நிர்ணய உரிமையுடன் கூடிய அதிகாரத்தை பெறுவதற்கும் இந்தியா விரும்புவதாகத் தெரியவில்லை.

அதற்காகத் தான் தேவானந்தாவை மகிந்த ராஜபக்ச சந்தித்து இந்தியாவின் ஆசையான 13-ஆவது அரசியல் யாப்பை மாற்றி தமிழருக்கு வெறும் கண்துடைப்பு அரசியல் அதிகாரம் என்ற போர்வையில் அவர்களின் வீரமிக்க எழுச்சியை ஒடுக்கி விடலாம் என்று கங்கணம் கட்டி வேலைத் திட்டங்களை செய்கின்றது இந்தியா. இதற்கு துணைபோகின்றார்கள் தமிழர்களில் சிலர்.

-அனலை நிதிஸ் ச. குமாரன்-
nithiskumaaran@yahoo.com

Comments