கருணாவின் பண்ணையாக காணப்படும் முன்னாள் போராளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்புமுகாம்கள்!

tamil_detaineesதமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிகள் மீது சிறிலங்கா இராணுவம் மேற்கொண்ட முன்னேற்ற நடவடிக்கையின்போது விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்தனர் என்றும், அவர்களுடன் வேலைசெய்தனர் என்றும், அவர்களுடன் ஆதரவாக செயற்பட்டனர் என்று கைது செய்யப்பட்டும் மற்றும் தாமாக வந்து சரணடையும் பட்சத்தில் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் எனக்கூறியதன் காரணமாகச் சரணடைந்தவர்களும் கடந்த ஒருவருடகாலமாக வவுனியா தடுப்பு முகாம்களிலும் வெலிக்கந்தை புனர்வாழ்வு நிலையங்கள் எனக்கூறப்படும் திருக்கோணமடு, கந்தக்காடு மற்றும் சேருவில புனர்வாழ்வு நிலையங்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் ஒரு வருடத்திற்குள் விடுவிக்கப்படலாம் என்று ஐ.நா. முன்னர் கோடி காட்டியிருந்தபோதும் தற்போது, முன்னாள் போராளிகள் சிலருக்கு சிறிலங்கா அரசு திருமணம் செய்து வைத்து சர்வதேச உலகுக்கு காண்பிக்கும் பிரச்சார நாடகத்தை கண்டு, அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் பொறுப்பற்ற போக்கினையே பன்னாட்டு அமைப்புக்களும் கடைப்பிடிப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இவ்வாறு ஒரு வருடத்துக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகளை சென்று பார்வையிட்டு வந்த ஒருவர் தெரிவித்த முழுமையான கருத்துக்கள் வருமாறு:-

இவர்களை சனி மற்றும் ஞாயிறு நாட்களிலேயே உறவினர்கள் சென்று பார்வையிட முடியும்.

இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரில் சிறிலங்கா விமானப்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள திருக்கோணமடுவையும் சிறிலங்கா இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தையும் பார்த்தபோது பெரும் வேதனைக்குரிய விடயங்களைக் காணமுடிந்தது.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையமானது தற்போது ‘புனர்வாழ்வு’ பிரதி அமைச்சராயிருக்கும் விநாயகமூர்த்தி முரளிதரனின் பண்ணையாகவே தோற்றமளிக்கிறது. வெலிக்கந்த சந்தியில் இருந்து சுமார் 25 கிலோமீட்டர் உள்நோக்கியதாக அமைந்துள்ளது இப்பகுதியானது காட்டுப்பகுதியாகவும் மக்கள் தொடர்பு அற்றும் காணப்படுகின்றது.

அதேவேளை மாவிலாற்றிலிருந்து 0.5 கிலோமீற்றர் துரத்தில் இது அமைந்துள்ளது. இந்தப் புனர்வாழ்வு நிலையத்தில் 1000 பேர்வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பெரும் குறைபாடுகள் காணப்படுவதாக அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளோரில் பலர் தெரிவித்தனர்.

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தின் நிலைமை:

* நீர்வசதி கடந்த ஒருமாதகாலமாக இல்லாமையினால் மாவிலாற்றில் இருந்தே தமக்கான குடிநீர் பெறப்படுவதாக இங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் கூறினர். அதைக் கொதிக்க வைத்து பருகுவதற்குக் கூட முடியாமையினால் அப்படியே அருந்துவதாகத் தெரிவித்தனர். அந்த நீரைப் பார்த்தபோது மிகவும் அழுக்காகவும் தூசி நிறைந்ததாகவும் காணப்பட்டதுடன் மஞ்சள் நிறமானதாகவும் காணப்பட்டது.

* குளிப்பதற்கு அரைமணிநேரம் வழங்கப்பட்டு ஒவ்வொரு கூடாரத்தையும் சேர்ந்தவர்கள் வரிசைக்கிரமமாக மாவிலாற்றிற்கு அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கு அழைத்துச் செல்வதற்கு சுமார் 08 அல்லது 09 சிறிலங்கா இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். அத்துடன் ஒவ்வொரு கூடாரத்தையும் சேர்ந்தவர்கள் குளித்து தமது உடைகளைத் தோய்த்து அரைமணிநேரத்திற்குள் வந்துவிடவேண்டும். பின்னரே மற்றைய அணியினர் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

* முன்பு உணவு சமைப்பதற்கு புனர்வாழ்வு முகாமில் உள்ளவர்களில் 10 பேர் கொண்ட குழு நேர ஒழுங்கில் சமைத்து வந்ததாகவும் பின்னர் அந்த முறை நிறுத்தப்பட்டு இராணுவமே சிலரைக் கொண்டுவந்து சமைப்பதாகவும், அவர்கள் சமைக்கும் சோறு அவிந்தும் அவியாமலும் இருப்பதாகவும் தடுத்துவைக்கப்பட்டிருப்போர் கூறுகின்றனர். கறிகளைப் பொறுத்தவரை சுடுநீரில் அவித்துவிட்டு அதற்குள் மிளகாய் போன்றவற்றை முழுமையாக போட்டு அவிக்கப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இதன்காரணமாக தமக்கு உண்பதற்கு கூட விருப்பமில்லாமல் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

* முகாம் அமைந்துள்ள அனைத்துப்பகுதிகளிலும் இலையான்கள் (ஈ) அதிகமாக உள்ளன. சாப்பாட்டிலும் இலையான்கள் காணப்படுவதாகவும், இதனால் தாம் சாப்பிடும் போதும் கூட நுளம்பு வலைக்குள் இருந்தே சாப்பிடவேண்டியிருப்பதாகவும் அங்கு வைக்கப்பட்டிருப்பவர்கள் தெரிவித்தார்கள். அண்மையில் தமக்கு தரப்பட்ட சோற்றில் பெரியளவிலான வண்டு காணப்பட்டதாக அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர் ஒருவர் தனது உறவினர் ஒருவருக்குத் தெரிவித்தார். அதன்பின் தமக்கு அங்கு உண்பதற்கு அருவருப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

* புனர்வாழ்வளிப்பதாக தம்மை அங்கு அழைத்து வந்திருந்தபோதிலும் இதுவரை காலமும் அதற்கான எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனக்கூறுகின்றனர். அதற்கு மாறாக காட்டுப்பகுதியாக இருக்கும் அப்பகுதியை புனர்வாழ்வு முகாமில் இருப்பவர்களை வைத்தே துப்பரவு செய்து மரக்கறி தோட்டம் செய்யப்படுகின்றது. அவர்களைப்பார்க்கின்ற போது அடிமைகளை வேலைக்கு அழைத்துச் செல்வது போலவும் கடும் வேலைவாங்குவதற்காக வைத்திருப்பது போன்றும் அவர்களது நடவடிக்கை காணப்படுகின்றது.

* முகாம் அமைந்துள்ள பகுதியில் இருந்து பல கிலோமீற்றர் தூரத்திற்கும் அவர்களை வேலைக்காக அழைத்து செல்வதை அவதானிக்கமுடிந்தது. அவ்வாறு அழைத்து சென்றவர்களின் உறவினர்கள் அவர்களை பார்வையிடச் சென்றிருந்தால் உடன் அழைத்துவருகின்றனர்.

* அதேவேளை புல் வெட்டுதல் மற்றும் இராணுவத்தினருக்கான கூடாரங்கள் அமைத்தல் போன்ற வேலைகளையும் இவர்களே செய்கின்றனர் இவர்களை மேற்பார்வை செய்வதற்கு இராணுவத்தினர் நின்றிருந்தனர்.

* மதியம் 1:30 மணிக்கு உணவு வழங்கப்படுவதாகவும் அதற்குப் பிந்திச் சென்றால் உணவு கிடைக்காமலும் போகும் எனவும் தெரிவிக்கின்றனர்.

* அங்கு உள்ள ஒருவரை பார்வையிட்ட பெண் தெரிவிக்கையில் தனது கணவர் வவுனியா தடுப்பு முகாமில் இருந்ததை விடவும் மிகவும் மோசமாக மெலிந்து காணப்படுவதாக தெரிவித்தார்.

* நோய்வாய்ப்படும் போது தம்மை உடன் சிகிச்சைக்கு அழைத்து செல்வதில்லை எனவும் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போகும் பட்சத்திலேயே வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்படுவதாகவும் கூறுகின்றனர்.

* அண்மையில் ஒருவர் வேலைக்குச் செல்ல மறுத்ததாகவும் அதற்கு இராணுவ அதிகாரி ஏசியபோது அதற்கு எதிராக அவரும் ஏதோ கதைத்தபோது இராணுவத்தனர் அடிக்க முனைந்தனர். அப்போது அந்தக் கூடாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து குறித்த கைதியைத் தாக்காமல் பாதுகாத்திருக்கின்றனர். பின்னர் அவர் கல்லால் எறிந்தபோது அது அங்கிருந்த சிறிலங்காக் கொடிக்கம்பத்தில் பட்டதாகவும் அதனால் அவரை இராணுவத்தினர் கடுமையாக தாக்கியதுடன் அவரை வேறு இடத்திற்கு மாற்றி விட்டதாகவும் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் கூறுகின்றனர்.


இந்நிலைமைகள் கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் காணப்படுகின்ற நிலையில் திருகோணமடு முகாமில் மேற்குறித்தவற்றுடன் இன்னும் பல குறைபாடுகளையும் காணமுடிகிறது.

திருகோணமடு முகாமானது வெலிக்கந்தை பகுதியில் இருந்து சுமார் 20 கீலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. வேறு எந்தக்குடிமனையும் இப்பகுதியில் இல்லை.

திருகோணமடு நிலைமைகள்:

இந்த நிலையமானது சிறிலங்கா விமானப்படையினரின் முகாம் தவிர்ந்த அருகில் இருக்கும் காட்டுப்பகுதியிலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் தம்மை வைத்தே தாம் தங்குவதற்கான கூடாரங்களை சிறிலங்கா விமானப்படையினர் அமைத்ததாகவும் அங்கு தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் தெரிவித்ததுடன் A,B,C ஆகிய பிரிவுகளாக மூன்று பிரிவு முகாம்கள் இருப்பதாகவும் இப்பகுதி காட்டுப்பகுதியாக காணப்பட்டமையினால் மரங்களையும் பற்றைக்காடுகளையும் வெட்டி நெருப்பு வைத்து அதன்பின்னரே அப்பகுதியை துப்பரவு செய்து கூடாரங்கள் அமைத்ததாகவும் தெரிவித்தனர்.

* அப்பகுதியால் செல்கின்றபோதே பலர் கடும் வெயிலின் மத்தியிலும் காடுகளை வெட்டி நெருப்பு வைப்பதையும் கிணறு வெட்டுவதையும் கூடாரங்கள் அமைப்பதையும் காணமுடிந்தது.

* இப்பகுதி சுமார் 1.5 கிலோமீற்றர் விஸ்திரணம் கொண்டதாக காணப்படுகின்றது.

* C பிரிவானது கடந்த 2 வாரங்களுக்கு முன்னரே திறக்கப்பட்டமையினால் நீர் வசதியின்றி காணப்படுவதாகவும் அதன்காரணமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ஒருவருக்கு 15 லீற்றர் தண்ணீர் வீதம் விமானப்படையினரால் வழங்கப்படுவதாகவும் அதனையே அங்குள்ளவர்கள் குடிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர். ஏனைய பகுதிகளில் அங்குள்ளவர்கள் தாமாக கிணறு வெட்டி நீரைப் பெற்றுக் கொள்கின்றனர்.

* இங்குள்ளவர்களுக்கு மூன்று வேளையிலும் சோறே உணவாக வழங்கப்பட்டுவருகின்றது.

* இவர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்களை மீண்டும் தம்மைப் பார்ப்பதற்கு வரவேண்டாம் என முகாமில் உள்ளவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதற்குக் காரணம் தாம் படும் சிரமத்தைப் பார்த்துத் தமது உறவினர்கள் கவலைப்படுவார்கள் என்பதாகும்.

* இவர்களைப் பார்வையிடச் செல்லும் உறவினர்கள் தாம் பார்வையிட வந்தவர்களின் பெயர்களை விமானப்படையினரிடம் பதிந்த பின்னர் அங்கு தொண்டரடிப்படையில் பணியாற்றும் முகாமில் உள்ளவர்கள் பெயர் விபரத்தை கொண்டு சென்று சம்பந்தப்பட்டவரை அழைத்துவருவார்கள். தொண்டர்களாக பணியாற்றுபவர்கள் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களிலும் ஒழுங்கு முறையில் மாற்றப்படுகிறார்கள்.

* அங்குள்ளவர்களுக்கு கிழமையில் 06 நாட்களும் வேலை கொடுக்கப்படும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமே விடுமுறை வழங்கப்பட்டு வருகின்றது.

- இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments