மகிந்தவை கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்கள் அணிதிரள வேண்டும் - பழ. நெடுமாறன் அழைப்பு

ஈழத்தமிழ் மக்களைப் பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து இனவழிப்புச் செய்த சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச உட்பட போர்க் குற்றவாளிகளை பன்னாட்டு நீதிமன்றக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் இணைப்பாளரும் தமிழர் தேசிய இயக்கத் தலைவருமான பழ.நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பழ.நெடுமாறனை ஆசிரியராகவும் பூங்குழலியை துணையாசிரியராகவும் கொண்டு தமிழ்நாட்டில் வெளிவரும் தென்செய்தி ஏட்டில் அவர் எழுதிய பத்தியில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி இருக்கின்றார்.

பழ.நெடுமாறன் எழுதிய பத்தியின் முழு வடிவம் கீழே:

இராசபக்சேயைக் கூண்டில் நிறுத்த உலகத் தமிழர்களே அணிதிரளுக! - பழ. நெடுமாறன்

முள்ளிவாய்க்கால்-உலக வரலாற்றில் மூன்றே நாட்களுக்குள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்யப்பட்டு அவர்கள் சிந்திய இரத்தத்தால் இன்னமும் சிவந்து கிடக்கிற மண். நினைக்க நினைக்க நெஞ்சம் பதறுகிறது. உண்ணவும் முடியவில்லை. உறங்கவும் முடியவில்லை.

2007ஆம் ஆண்டிலிருந்து 2008ஆம் ஆண்டுவரை வன்னிப் பகுதியில் வாழ்ந்த நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் திரும்பத் திரும்ப இடம்பெயர்ந்த அவலம் நிகழ்ந்தது. வான்வழியாகவும் தரைவழியாகவும் சிங்கள இராணுவம் இடைவிடாது தொடுத்த கொடும் தாக்குதல்கள் அந்த மக்களை தங்கள் வாழ்விடங்களிலிருந்து தப்பியோடச் செய்தன. இந்த ஈராண்டுகளில் ஒவ்வொரு வீட்டிலும் பதுங்கு குழிகளை மக்கள் வெட்டி வைத்து விமான குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாக்க அதற்குள்ளாகவே வாழ்ந்தார்கள். ஒவ்வொரு முறையும் தங்களின் வாழ்விடங்களிலிருந்து இடம்பெயர்ந்த போதெல்லாம் அங்கேயும் பதுங்குக் குழி வாழ்க்கை தொடர்ந்தது.

வீடுகளை இழந்த மக்கள் சாலையோர மர நிழல்களில் வெய்யிலிலும் மழையிலும் காய்ந்தும் நனைந்தும் வாழ்ந்தார்கள். அந்த மக்களுக்குப் போதுமான அளவு உணவோ மருந்தோ கிடைக்காதபடி இலங்கை இராணுவம் தடுத்தது. வானத்தைப் பார்த்த வண்ணம் மக்கள் அஞ்சிஅஞ்சி வாழ்ந்தார்கள். எந்த நேரம் விமானங்கள் பறந்து வந்து குண்டு வீசுமோ என்ற அச்சத்தில் அவர்களின் வாழ்வு துன்பமயமாக மாறிப்போனது. பதுங்கு குழிகளே மரணக் குழிகளாயின. மக்கள் பயணம் செய்த வாகனங்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் பள்ளிக்கூட வாகனங்கள் ஆகியவையும் பீரங்கித் தாக்குதல்களுக்கு ஆளாகின. வடகிழக்கு மாநில மனித உரிமை செயலகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும்கூட இந்த தாக்குதலிலிருந்து தப்பமுடியவில்லை கொல்லப்பட்டார்கள்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அய்.நா. அகதிகள் ஆணையம் போன்றவை அளித்த நிர்ப்பந்தத்தின் விளைவாக சிங்கள இராணுவம் பாதுகாக்கப்பட்ட வளையங்கள் சிலவற்றை அறிவித்தது. அதற்குள் அடைக்கலம் புகுந்த மக்கள் இராணுவத் தாக்குதலுக்கு ஆளாகமாட்டார்கள் என்ற வாக்குறுதியையும் சிங்கள அரசு அளித்தது. இதை நம்பி பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாதுகாப்பு வளையங்களில் சரண் புகுந்தார்கள். அப்போது அவர்கள் தெரியவில்லை. இராஜபக்சே விரித்த வஞ்சக வலைக்குள் தாங்கள் சிக்குண்டு இருக்கிறோம் என்பதை உணரவில்லை. சிறிய பரப்பளவான பாதுகாப்பு வளையங்களுக்குள் புகுந்த பெருந்திரளான மக்களை கூட்டம் கூட்டமாகக் கொல்வது சிங்கள இராணு வத்திற்கு வசதியாயிற்று.

பாதுகாப்பு வளையங்களைச் சுற்றிலும் பீரங்கித் தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு அந்த மக்கள் கொத்துக் கொத்தாக அலறித் துடித்து மாண்டனர். இறந்தவர்களின் உடல்கள் குப்பைகளை அள்ளிச் செல்லும் லாரிகளில் வாரித் தூக்கி எறியப்பட்டு வயல் ஓரங்களிலும் சாலை ஓரங்களிலும் வீசப்பட்டன. அவைகளை அடக்கம் செய்ய உறவினர்களோ வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் திறந்தவெளிகளில் அமைக்கப்பட்ட மருத்துவமனைகளில் உயிருக்காகப் போராடினார்கள். அருகே செத்துப் போனவர்களின் சடலங்களும் கிடந்தன. மருத்துவர்களும் மருத்துவத் தொண்டர்களும் தங்கள் உயிரைப் பணயமாக வைத்து இந்த மக்களுக்கு மருத்துவ உதவிகள் அளித்தனர். ஆனாலும் அவர்களும் குறிவைத்துத் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.

முள்ளிவாய்க்கால் பகுதி மணற் பாங்கான பகுதி. அங்கு தோண்டப்பட்ட பதுங்கு குழிகள் மழையினாலும் குண்டு வீச்சின் அதிர்வுகளாலும் சரிந்து உள்ளே பதுங்கி இருந்த மக்களை உயிரோடு புதைத்தன. பெற்ற குழந்தைகளை மார் போடு அணைத்தவண்ணம் தாய்மார்கள் துடிதுடித்து இறந்தனர். குழந்தைகளின் கதறல்களும் அன்னையரின் ஓலமும் கடலோசையை மிஞ்சின.

போரின் இறுதிக்கட்டத்தில் மிகக் கொடூரமான போர்த்திட்டங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்வதற்கு சிங்கள இராணுவம் கொஞ்சமும் தயங்கவில்லை. ஜெனீவா உடன்பாட்டின்படி சர்வதேச நாடுகள் தடை செய்த கொத்துக் குண்டுகள், நாபாம் குண்டுகள், உடலில் பட்டாலே பற்றி எரியும் பாஸ்பரஸ் குண்டுகள் ஆகியவற்றை சிங்கள இராணுவம் தாராளமாகப் பயன்படுத்தியது. உடலெங்கும் எரிந்த காயங்களுடன் கிடந்த சடலங்கள் இதை உறுதி செய்தன. தமிழர்களை இனப்படுகொலை செய்ததோடு சிங்கள இராணுவத்தினரின் கொலைவெறி குறையவில்லை. தாங்கள் கைப்பற்றிய பகுதிகளிலிருந்த குடியிருப்புகள், மருத்துவமனைகள், பள்ளிகள், கோயில்கள் ஆகியவற்றைத் திட்டமிட்டு அழித்தார்கள். தமிழர்களின் பொதுக் கட்டமைப்புகளை அழிப்பதன் முலம் அவர்களை மீண்டும் தலையெடுக்கவிடக்கூடாது என்பதே அவர்களின் திட்டமாகும்.

இது அராபியர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் கையாண்ட போர்த் தந்திரமாகும். 2006ஆம் ஆண்டு லெபனான் போர் நடைபெற்ற காலத்தில் அராபியர்களின் எண்ணிக்கைக்கு பன்மடங்கு அதிகமான படைகளை ஏவி அந்த மக்களை மட்டுமல்ல அவர்களின் கட்டமைப்புகளையும் அடியோடு நாசம் செய்தது இஸ்ரேல். தாஹியா தத்துவம் என அழைக்கப்பட்ட இதே தந்திரத்தை இஸ்ரேலிலிடமிருந்து சிங்கள இராணுவம் கற்றுக்கொண்டு தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

போர் முடிந்த பிறகு விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என இராசபக்சே கொக்கரித்த பிறகுகூட தமிழர்களை விட்டுவைக்கவில்லை. சுமார் 3 இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு போதுமான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், மற்றும் மருத்துவ உதவிகள் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டார்கள். இந்த முகாம்களுக்குள் நடைபெற்ற சித்திரவதைகளும் படுகொலைகளும் வெளியுலகத்திற்கு தெரியாத வகையில் அடியோடு மறைக்கப்பட்டன. முகாம்களில் மொத்தம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதோ அவர்களின் பட்டியலோ தயாரிக்கப்படவில்லை. ஏனென்றால் பட்டியல் இருந்தால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அம்பலமாகிவிடும்.

முள்வேலி முகாம்களில் அரசால் நடத்தப்பட்ட நலன்புரி கிராமங்களிலும் சிங்கள இராணுவம் பெண்கள் மீது நடத்திய பாலியல் வன்கொடுமைகள் வாயால் கூறமுடியாதவை. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முகாம்களில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளானார்கள். அய்.நாவிற்கான இலங்கைத் தூதுவர் பாலித்த கோகொன்னா என்பவர் பின் வருமாறு கூறினார்: 'தனி முகாம்களில் 13 ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மேலும் மற்ற முகாம்களில் 10 ஆயிரம் புலிகள் மறைந்திருக்கக்கூடும். 'ஆனால் இவர்கள் அனைவரையும் அடையாளங்கண்டு அழிப்பதுதான் எங்கள் நோக்கம்' என்று பகிரங்கமாகக் கூறினார்.

நேரடிப் போரினால் பாதிக்கப்படாத யாழ்ப்பாணத் தீபகற்ப பகுதியில் வாழ்ந்த மக்களும் சொல்லொண்ணாத கொடுமைகளுக்கு ஆளானார்கள். வடமராச்சிப் பகுதியில் வலிகாமம் என்னும் ஊரில் மிகுந்த பாதுகாப்புப் பகுதி என்று கூறி அந்த ஊரையே இராணுவம் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அந்தப் பகுதியில் வாழ்ந்த ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வெளியேற்றப் பட்டார்கள். 20 ஆண்டு காலத்திற்கு மேலாக அவர்கள் தங்கள் வீடுகளுக்கோ, விவசாய நிலங்களுக்கோ திரும்ப முடியவில்லை. இதைப்போல வடக்கு மாநிலத்தில் ஏராளமான பகுதிகளை இராணுவம் எடுத்துக்கொண்டிருக்கிறது. அங்குள்ள பல இலட்சம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

வடக்குப் பகுதியில் இரண்டு இலட்சத்து 60 ஆயிரம் வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் கூறியுள்ளது. இந்த வீடுகள் அனைத்தும் மனிதர்கள் வசிக்க முடியாத அளவிற்கு உருக்குலைந்து விட்டன. ஓர் வீட்டில் குறைந்த பட்சம் 5 பேரைக் கொண்ட குடும்பம் வாழ்ந்தது என்று வைத்துக்கொண்டாலும் மொத்தத்தில் 13 இலட்சம் மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். இவர்கள் மீண் டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான அறிகுறியே தெரியவில்லை. இராசபக்சேயின் சகோதரர் பசில் இராசபக்சே பின்வருமாறு கூறினார்: ''பாலஸ்தீன அகதிகளை மறுகுடியமைக்க 70 ஆண்டுகள் ஆயிற்று. வங்காள தேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அகதிகளை மீள்குடியமைக்க 10 ஆண்டுக ளுக்கு மேல் பிடித்தன. இப்படி இருக்கும்போது தமிழ் அகதிகளை மீண்டும் குடியமைக்க வேண்டுமென எங்களை அவசரப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமற்றது'' என இறுமாப்போடு கூறியுள்ளார்.

போரின் இறுதிக்கட்டத்தில் புத்த மத தலைவரான தலாய்லாமா போரை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் சிங்கள பவுத்தர்கள் அதை அலட்சியம் செய்தார்கள். ஜப்பான், நார்வே மற்றும் அய்ரோப்பிய நாடுகள் விடுத்த வேண்டுகோளும் மதிக்கப்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா 'இலங்கை அரசு தாக்குதல்களைத் தொடருமானால் இருதரப்பிற்கு மேலும் பகைமை வளரும், இலங்கை இனச் சிக்கலுக்கு இணக்கத்தீர்வு காணலாம் என்ற நம்பிக்கை தகர்ந்துபோகும்' என்று எச்சரித்தார்.

போர் நிறுத்தத்தை வலியுறுத்த பிரிட்டன், பிரான்ஸ், சுவீடன் ஆகிய நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கொழும்பு சென்று இராசபக்சேயை நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிட்டார்கள். ஆனால் சுவீடன் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விசா தர இராசபக்சே மறுத்துவிட்டார். எனவே பிரிட்டிசு வெளிநாட்டு அமைச் சர் டேவிட் மிலிபாண்ட், பிரான்சு வெளிநாட்டு அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் ஆகியோர் கொழும்புக்கு வந்து இராசபக்சேயை சந்திக்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித பொகலாகாவை மட்டுமே சந்தித்துப் பேசமுடிந்தது. எந்தப் பயனும் விளையவில்லை.

மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்கள் போரை நிறுத்தவேண்டும் என்பதற்காக முயற்சிகளை மேற்கொண்டி ருந்தபோது இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா போன்ற அணு ஆயுத வல்லரசுகளும் மேலும் 15 நாடுகளும் சிங்கள இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களையும் இராணுவ ரீதியான சகல உதவிகளையும், ஆலோசனை களையும் வழங்கின. இதில் இந்தியாவின் பங்கு மன்னிக்க முடியாதது ஆகும்.

குறைந்தபட்சம் போரின் கடைசிக் கட்டத்திலாவது முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக்கொண்ட மக்களைக் காப்பாற்றி கப்பல்கள் மூலம் இந்தியாவுக்குக் கொண்டுவந்து சேர்க்க வேண்டிய மனிதாபிமான கடமையைக்கூட இந்தியா செய்யவில்லை. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்புவில் நடைபெற்ற மோசமான இனக்கல வரத்தில் சிக்கிக்கொண்ட தமிழர்களை இரு கப்பல்களை அனுப்பி அவர்களைக் காப்பாற்றி பத்திரமாக யாழ்ப்பாணம் கொண்டுவந்து சேர்க்க உதவினார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. அவர் பேரால் ஆட்சி நடத்துவதாகக் கூறும் இன்றைய இந்திய அரசு தமிழர்களைக் கொன்றுகுவிக்க சிங்கள அரசுக்கு உதவியதாக இருந்ததே தவிர, தமிழர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை.

இலங்கைப் போரில் நடைபெற்ற கொடூர நிகழ்ச்சிகள் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் என்ற அமைப்பு டப்ளின் நகரில் 2010ஆம் ஆண்டு சனவரி 14 முதல் 16 வரை கூடி நடத்திய விசாரணையின் முடிவில் இலங்கை அரசு போர்க்குற்றங்களைப் புரிந்துள்ளது என முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் சர்வதேச நீதிமன்றத்தில் இராச பக்சே, பொன்சேகா போன்றவர்களைப் போர்க்குற்றவாளிகளாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இதிலிருந்து தப்புவதற்காக இராச பக்சே அவரே முன்வந்து ஒரு விசாரணைக் குழுவை அமர்த்தியிருக்கும் கேலிக்கூத்து அரங்கேறியிருக்கிறது. இலங்கைப் போரின்போது மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்ஙகள் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த 8 பேர் கொண்ட ஒரு குழுவை இராசபக்சே நியமித்திருக்கிறார். இராசபக்சேயின் சட்ட ஆலோசகராக இருக்கக்கூடிய ஒரு சிங்களவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் இராசபக்சேயின் அடிவருடிகளான இரு தமிழர்களும் நியமிக்கப்பட்டிருப்பது வேடிக்கையானதாகும்.

சிங்கள இராணுவத்தின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த அய்.நா. பேரவை ஏதேனும் குழுவை அமைத்துவிடக்கூடாது என்பதற்காக இத்தகைய போலியான ஒரு குழுவை இராசபக்சே நியமித்திருக்கிறார். இந்த விசாரணைக் குழு தனது அறிக்கையை அளிப்பதற்கான கால அவகாசமும் நிர்ணயிக்கப்படவில்லை. எனவே பல ஆண்டுகளுக்கு இந்த விசாரணை நீடிக்கப்படும். அதற்குப் பின்னால் விசார ணைக்குழுவின் முடிவுகளும் வெளியே வராமலே மறைக்கப்பட்டுவிடும். இந்தக் கால இடைவெளியில் உலகம் தனது போர்க்குற்றங்களை மறந்துவிடும் என இராசபக்சே நம்புகிறார்.

ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சட்ட நிபுணரான பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல் மிகத் தெளிவாக பின்வருமாறு கூறியிருக்கிறார்: 'போர்க்குற்றங்களைக் குறித்து அய்.நா. விசாரணை நடத்த முன்வருமானால் அது இலங்கையின் இறைமையில் குறுக்கிடும் செயலாகும் என இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறி யிருப்பதை நான் கண்டிக்கிறேன். 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு எதிரான அய்.நா. மாநாட்டில் செய்துக் கொள்ளப்பட்ட உடன்பாட்டை ஏற்றுக் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். எனவே அய்.நா. பேரவையின் பொதுச்செயலாளர் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரிக்க உடனடியாக அய்.நா. குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

அதற்கு 'எல்லாவிதமான அதிகார மும் அவருக்கு உண்டு' என்று கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில் 'கடந்த ஆண்டு காசா பகுதியில் பாலஸ்தீனிய அராபிய மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்து. அய்.நா. மனித உரிமைகள் குழு அமைத்த கோல்டு ஸ்டோன் ஆணையம் அந்தக் குற்றங்கள் உண்மையானவையே என்று கூறியிருக்கிறது. பாலஸ்தீனிய மக்களுக்கு அய்.நா. மனித உரிமைக் குழு வழங்கிய நீதியை ஈழத்தமிழர்களுக்கும் வழங்க முன்வரவேண்டும்.

உலகம் முழுவதுமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி சர்வதேச போர்க்குற்றங்கள் விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும். அய்.நா. பட்டயம் 22வது பிரிவின் கீழ் இதை அய்.நா.வின் இணை யமைப்பாக ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் அய்.நா. பேரவைக்கு உண்டு. அய்.நா. பேரவையில் யாரும் ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்த முடியாது. அய்.நா. பேரவை யில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பெரும் பான்மையின் ஆதரவை உலகத் தமிழர் கள் திரட்டவேண்டும். இதன் மூலம் இலங் கையின் போர்க்குற்றங்களை விசாரிக்க சர்வதேச போர்க்குற்றங்கள் விசாரணை மன்றம் ஒன்றை உருவாக்க முடியும். அவ் வாறு உருவாக்க உலகத் தமிழர்கள் முன் வருவார்களானால் அவர்களுக்கு நான் துணையாக இருப்பேன்' என்று கூறியிருக்கிறார்.

அமெரிக்கப் பேராசிரியர் ஒருவருக்கு இருக்கக்கூடிய இந்த உணர்வு உலகத்தமிழர்கள் அனைவருக்கும் இருக்க வேண்டும். இலங்கையில் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் அகதிகளாக உள் நாட்டிலும் உலக நாடுகளிலும் சிதறி வாழ் கிறார்கள். இதற்குக் காரணமான குற்ற வாளிகளை ஒருபோதும் மன்னிக்கக் கூடாது. குற்றவாளிக்கூண்டில் அவர் களை நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுக்கொடுப்பது உலகத் தமிழர்களின் கடமை. அதைத் தலையாய ஒன்றாக எண்ணி செயல்படுவோம்.

Comments