எத்தனைக் கோடி என்று தெரியவில்லை. ஆனால் கோடிகளைக் கொட்டி செம்மொழி வளர்க்க மாநாடு துவங்க இருக்கிறது. வீதியெங்கும் தமிழ் காணோம். அங்காடிகளில் தமிழ் பெயர்கள் வலியுறுத்தி சட்டங்கள் போட்டு கண்டித்தப் பிறகும்கூட அதைக் கண்டுகொள்ளாத அங்காடிகள் இருக்கின்றன. அரசே பணியாளர்களைக் கொண்டு அந்த பெயர் பலகைகளை அகற்றிக் கொண்டிருக்கும் அவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் பெயர் சூட்ட வேண்டும், அல்லது தமிழ் பெயர் வேண்டும் என்றெல்லாம் சட்டம் போட்டுத்தான் தமிழ்நாட்டிலே செயலாற்ற வேண்டிய கேடுநிலை நீடித்திருக்கிறது. இந்த அவலங்களுக்கு எதிராக, பலமுறை பல்வேறு கருத்துக்கள் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட பிறகும்கூட, இது தொடர்ந்து கொண்டுத்தான் இருக்கிறது.
அடுக்கடுக்காய் ஆங்கில வழி கல்வி நிலையங்கள், ஆங்காங்கே பெயருக்கு தமிழ் கல்வி நிறுவனங்கள். உயர்கல்வி பயில வேண்டும் என விரும்பும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்கு அடிப்படையாக ஆங்கிலத்தைக் கற்றுத்தர வேண்டும் என்கின்ற ஆர்வத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள்மீது தவறல்ல. காரணம், உயர்கல்விக்கு செல்லும்போது அவர்கள் தமது கல்வி தளத்தை ஆங்கிலத்தில்தான் அமைத்துக் கொள்ளவேண்டி இருக்கிறது. ஆகவே அவர்கள் அடிப்படையில் ஆங்கிலம் கற்க வேண்டும் என்கின்ற இயல்பான மனப்போக்கு அமைவதில் நாம் என்ன செய்ய முடியும்?
இது யாருடைய தவறு? தமிழ்நாடு என்று பெயர். தமிழர்கள் என்ற பெயர். இவைகளைக் கொண்டு தமிழரையும், தமிழ் இனத்தையும் இணைக்கும் பொதுத்தன்மையான மொழியை காக்க வேண்டியது, தமிழ், தமிழ் தேசம், தமிழர் நல்வாழ்வு என்றெல்லாம் பேசும் அரசின் கடமையல்லவா? அவர்கள் ஏன் இதை நிறைவேற்றவில்லை? ஆயிரக்கணக்கான ஆங்கிலப் பள்ளிகளுக்கு இந்த மண்ணிலே அனுமதி அளித்தது எப்படி?
அரசு தொலைநோக்கோடு திட்டமிட்டு, உயர்கல்வி கட்டமைப்புகளை தமிழிலே உருவாக்கி இருக்குமேயானால், இன்றைய மாணாக்கர் ஏன் ஆங்கில வழி கல்விக்கு அலைந்தோடி செல்கிறார்கள் என்பதையெல்லாம் நாம் சிந்தித்தோம் என்றால், இத்தனை தவறுகளுக்கும் காரணமாக இந்த அரசே இருந்திருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் அரசுதான் என்பதை நாம் பகிரங்கமாக குற்றம் சாட்ட முடியும். ஏனெனில் கல்வி என்பது ஒரு சாதாரண நிகழ்வைத் தாண்டி மாந்த கட்டமைப்பிலிருந்து அவனை வெளிகொணரும் ஒரு செயலாக நிகழ்கிறது.
தமத அடிமன சிந்தனைகளை அவன் மேலோங்கி நிற்பதற்கு கல்வியே அடித்தளம் அமைக்கிறது. ஆனால் அப்படிப்பட்ட கல்வி அவனை தாழ்வு மனப்பான்மை கொண்டவனாக இல்லையெனில், அடிமைப்புத்தி கொண்டவனாக மாற்றுகிறதென்றால், இந்த கல்வியின் கட்டமைப்பில் ஏதோ ஒரு கோளாறு இருக்கிறது என்பதை நாம் நுண்ணோக்கி வைத்தா அறிய வேண்டும். இல்லையே? உள்ளங்கை நெல்லிக்கனியாக இது நமக்குத் தெரிகிறதே.
ஆக, மொழி என்பது ஏதோ எண்ணங்களை சொல்வதற்கான ஓசை என்ற நிலை மாறி, இன்று இன அடையாளத்தின் உயரிய தன்மை வாய்ந்ததாக நிலைத்திருக்கிறது.
ஆகவே, தமது தேசிய இன அடையாளத்தை தக்க வைத்துக் கொள்ள, தேசிய இன உறவுகளை பிண்ணி பிணைக்க, தேசிய இன கொள்கைகளை உயர்த்திக் கொள்ள, மொழி என்பதே மிக ஆற்றல் மிக்கதாக இருக்கிறது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. எப்பொழுது மொழி அழிகிறதோ, அப்போது அந்த தேசிய இனம் அழிந்துவிடும். ஆகவே தான் 1956ல் இலங்கையிலே சிங்கள பாசிச வெறியர்கள் தமிழ் மொழிக்கு கல்லறை கட்ட, சிங்கள சிறீ எழுத்தை நடமாட விட்டார்கள். மொழி காக்கத்தான் முதல் முதல் தமிழ் தேசிய இனம் களத்திற்கு வந்தது. இது தமிழ்நாட்டிற்கும் பொருந்தும்.
1930களில் தந்தை பெரியார் உயர்நிலைப் பள்ளிகளின் வாயில் அருகே நின்று, இந்தி திணிப்பிற்கெதிராக குரல் உயர்த்தினார். அது பற்றி எறிந்து 1967ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை பிடிக்கும் அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததாக நீடித்தது. இப்படி மொழி காக்கும் களம் தான் காங்கிரசிற்கு தமிழ்நாட்டிலே கல்லறை களமாகியது. அப்போது வீழ்ந்த காங்கிரஸ், இன்றுவரை தமிழ்நாட்டில் தலைஉயர்த்த முடியாமல், ஏதாவது ஒரு திராவிட கட்சிகளின் முதுகில் ஏறிக் கொண்டு அவர்கள் வெற்றிப் பெற்றவுடன் என்னை சுமந்ததால்தான் வெற்றி என்கின்ற வெற்றுக் கூச்சல் பேர்வழிகளாக இருந்து கொண்டிருக்கிறார்கள். ஆக, ஒன்று நமக்கு தெள்ளத்தெளிவாக புரிகிறது. மொழி என்பது வெறும் இணைப்புக்கான ஓசை என்ற நிலை முறிந்து, இன்று அது இன அடையாளத்தின் உச்சமாக உயர்ந்திருக்கிறது.
உலக நாடுகளில் எல்லாம் இன்று மொழி என்பது தேசிய அடையாளமாக ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆகவே, நாமும் மொழியை உயர்த்திப்பிடிக்க வேண்டும் என்பதிலே எந்தவித சமரசமும் இன்றி தெளிவாக இருக்கிறோம். மொழி நமது வாழ்வோடு பிணைந்திருக்கும் உயிர் அமைப்பு என்பதை நம்மால் மறுக்கமுடியாது. நாம் மொழியை காப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று சிந்திப்பதற்கான கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம்.
எந்த தளங்களில் எல்லாம் மொழி தேவையோ, அத்தளங்களில் மொழியை ஆதிக்கம் செய்வதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் இன்று தமிழர்கள் என்று தெரிந்து கொள்வதற்கு, அவர்களின் பெயர்கள் பெரும் அடையாளமாக இருக்கிறது. ஆனால் என்ன ஒரு பரிதாபநிலை என்றால், தமிழர்கள் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள விரும்புவது கிடையாது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது.
முதலில் மத அடையாளங்களால் தமிழ் பெயர்கள் சிதைக்கப்படுகிறது. கிறித்துவர்கள் தமது மதத்தில் இணையும்போது, அவர்கள் ஆங்கில, கிரேக்க அல்லது பிரென்ஞ் லத்தின் மொழிகளில் பெயர் சூட்டுகிறார்கள். காரணம், இது ஆங்கில அல்லது ரோம அரசியலிலிருந்து தோன்றியதால் அந்த அடிப்படையான பெயர்களே கிறித்துவ பெயர்களாக அடையாளப்படுத்தப்படுகிறது.
தமிழர்கள் என்ன செய்யலாம்? தாங்கள் விரும்பி இஸ்லாம், பௌத்தம், கிறித்துவம் இப்படி எந்த மதத்தில் சேர்ந்தாலும், மத வழிபாடுகளில் தங்களை நெறிப்படுத்திக் கொண்டாலும், தாம் தமிழர் என்று சொல்வதற்கு தமிழ் பெயர்களையே தாம் சூட்டிக் கொள்ள வேண்டும். அப்போது மதத்திற்கான அடையாளம் உள்ளார்ந்து இருக்கும்போது, இனத்திற்கான அடையாளம் மேலோங்கி இருப்பதை நம்மால் தக்கவைத்துக் கொள்ள முடியும். இது ஒருப் படி. அடுத்த நிலையில் நாம் சென்றோம் என்றால், வாயில் நுழையாத புதிய புதிய பெயர்களை தமது திரைப்பட தாக்கத்தால் குழந்தைகளுக்குச் சூட்டுவது என்பது மிக இயல்பான நிகழ்வாக தமிழ்நாட்டில் மாறிவிட்டது.
தமக்குப் பிடித்த விளையாட்டு வீரரின் பெயர் சூட்டுவது, தமக்குப் பிடித்த திரை நடிகரின் பெயர் சூட்டுவது, இல்லையென்றால் சோதிடத்தின்படி முதல் எழுத்து இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை தீர்மானித்து, அதற்கேற்றவாறு ஏதோவது பொருள் புரியாத பெயரை குழந்தைகளுக்கு வைப்பது. இந்த நிலை தொடர்ந்து நீடிக்குமேயானால், தமிழர்கள் என்று தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள அவர்களுக்கான வாழ்வியல் கோட்பாடுகள் சிதைவடையத் தொடங்கும். இது இனத்தையும் குழி தோண்டி புதைக்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
தமிழீழ அரசின் மேதகு தேசிய தலைவர் அவர்கள் இதை உணர்ந்து தமிழீழ குடியரசு காட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அங்காடிகளுக்கு கட்டாயமாக தமிழில்தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கட்டளையிட்டார். அதை செயல்படுத்தினார்.
அதைப்போன்றே ராணுவ கட்டளைகளை தமிழிலே செயல்பட கட்டமைப்பை உருவாக்கினார். மேலும் காவல்துறை, ஆட்சித்துறை, அரசு துறைகளில் ஒட்டுமொத்த தமிழை தீர்மானித்தார். குழந்தைகளுக்கு தமிழ் பெயர்தான் வைக்க வேண்டும் என்பதை அடிப்படையிலேயே சரியாக நிலைநாட்டினார். அதற்காக தமிழ் பெயர்கள் கொண்ட கையேடுகளை மருத்துவமனைதோறும் வழங்கினார்.
ஒருவேளை சிங்கள பாசிச வெறியர்களால் இந்திய-பார்பனிய பனியா அரசுகளால் தமிழீழ குடியரசு சிதைவு ஏற்படாமல் அது ஆட்சி தொடர்ந்திருக்குமேயானால், இன்னும் 10 ஆண்டுகளில் தமிழ் என்பது உலக சிறப்பு தன்மைகளில் ஒன்றாக நிலைப்பெற்றிருக்கும் என்பதை நமது எதிரிக்கூட மறுக்கமுடியாது. மிகக் குறைந்த காலத்திலேயே தமிழீழ குடியரசில் தேசிய தலைவரால் இதை நிறைவேற்ற முடிந்ததென்றால், 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மொழியால் ஆட்சி நடத்தும் இந்த நாட்டிலே, ஏன் இதை நிலைநிறுத்த முடியவில்லை என்பதை நாம் சிந்திக்கும் காலத்திற்கு வந்திருக்கிறோம்.
அடிப்படையில் இது இந்தியாவின் காலணியாக தமிழ்நாடு இருப்பதும், ஆகவே தமிழ்நாடு என்பது இந்தி, இந்திய வெறியர்களின் விரல் அசைவுக்கு ஆடுவதுமே நடுக்குறிக்கோளாக இருக்கிறது. இந்த அடிப்படையிலே தான் முதற்கட்டமாக நாம் வழக்காடுவதற்கு தமிழிலே உரிமை வேண்டும் என்று வழக்கறிஞர்கள் தமது உண்ணாநிலை அறப்போராட்டத்தை துவக்கினார்கள். அறப்போராட்டம் என்பதெல்லாம் இந்த ஆட்சிக்கு எதிரானது. செம்மொழி மாநாடு நடைபெறும் இக்காலத்தில் இப்படி ஒரு அறப்போராட்டத்தை நடத்தினால் எப்படி? என்று நினைத்த அரசு, போராட்ட தளகர்த்தாக்களை சிறைக்குள் பூட்டியது.
செம்மொழி அறிவிக்கப்பட்ட காலத்திலிருந்து அதற்கான அடிப்படை கட்டமைப்பை செம்மைப்படுத்த தவறிய அரசு, அதை முழக்கமாக வைத்து போராட்டம் நடத்தியவர்களை சிறைக்குள் தள்ளியது.
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் தாய்மொழியில் வழக்காடும் உரிமை, அவர்களின் அடிப்படை உரிமையாக ஆக்கப்பட்டிருக்கிறது. இது பல ஆண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டு இன்றுவரை நடைமுறையில் இருக்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் உயர்நீதி மன்றங்களில்கூட இந்தியில் வழக்காடுவதற்கு உரிமை இருக்கிறது. ஆனால், தமிழில் வாதிடுவதற்கு உரிமையற்று, தமிழை சிறைபூட்டும் இந்த கொடுமையை எப்படி ஏற்றுக் கொள்வது என்பது விளங்கவில்லை. தமிழனை சிறைக்குள் தள்ளி, தமிழுக்கு சிறப்பு செய்வது எந்த விதத்தில் சரியானது என்பதை செம்மொழி மாநாடு நடத்துபவர்கள்தான் விளக்கவேண்டும். மொழி என்பது இனத்தின் அடையாளம் என்பதை நாம் கூறினோம். இனம் என்பது மக்கள் குமுகத்தின் செயல் மற்றும் நடவடிக்கைகளை சார்ந்து, அவர்களின் கலை, இலக்கிய பண்பாட்டு, பழக்கவழக்கங்களை உடன் இணைத்து, வாழ்வியல் பொருளாதார கட்டமைப்புகளை உள்வாங்கி செயல்படுவதாகும். ஆக, இந்த அடிப்படையில் குமுகத்தின் வாழ்வே மொழி வாழ்வதற்கான அடிப்படையாக இருக்கிறது. இப்படி இருக்க, ஒட்டுமொத்தமாக ஒரு இனத்தை குழி தோண்டி புதைத்த பெரும் கொடுமை நிகழ்ந்திருக்கிறது. சொந்த மண்ணிலே தமது மக்கள் ஏதிலிகளாய் வாழ்வறியாது, திகைத்து நிற்கிறார்கள்.
அவர்கள்மேல் வீசப்பட்ட கொடும் குண்டுகளின் வேகம் இன்றுவரை நமது மனக்கண்ணிலிருந்து அகலாமல் மறுபடியும் மறுபடியுமாய் நம்மை அதிர்ச்சியுற செய்துக் கொண்டிருக்கிறது. அங்கே சிதறிக்கிடந்த தமிழர் தசைகள், இன்னமும் காய்ந்துப் போகாமல் நிலைத்துப் போயிருக்கிறது. கண்ணெதிரே கருகிப்போய் கிடந்த நமது சொந்த உறவுகளின் சோகங்கள் நம்மை இன்னமும் பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறது. கண்ணெதிரேயே சிங்கள காட்டெருமைகள் தமிழர் நிலத்தை அபகரித்துக் கொண்டு, அவர்களை அழிப்பதற்கான பெரும் பணிகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு இதுவரை நம்மால் ஒரு தீர்வும் சொல்லமுடியவில்லை. ஒட்டுமொத்த தமிழனும் செத்தப்பிறகு மொழி என்ன பிடுங்கப் போகிறது.
மனிதனை காப்பதற்கு வக்கில்லாத இந்த அரசு, மொழியை காக்க மாநாடு நடத்துவது மாந்தத்தையே அவமதிக்கும் செயல் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இது மொழியைக் காக்கவா, அல்லது தம் புகழை காக்கவா? என்பதை மக்கள் புரிந்துக் கொண்டுத்தான் இருக்கிறார்கள். இந்த மாநாடை நடத்தி முடிப்பதற்குள் எத்தனை விதமான நிகழ்வுகளை இந்த அரசு மாற்றி மாற்றி செய்திருக்கிறது என்பதை செய்திகள் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழில் பெயர் இல்லை, தமிழில் கல்வி இல்லை, தமிழில் வழக்காடும் உரிமையில்லை, தமிழில் அரசு பணிகள் இல்லை, தமிழில் ஆராய்ச்சி இல்லை, தமிழில் பேசுவதற்கான தகுதி இல்லை, மொத்தத்தில் தமிழர் என்று சொல்லிக்கொள்பவனுக்கு தமிழே உரிமை இல்லாதபோது இந்த மாநாடு எதற்கு? இதை எதிர்த்துக் கேட்கும்போது சிறையில்பூட்டு, பெருங்கொடுமை செய்யும் இந்த அரசைக் கேட்கிறோம், தமிழுக்கு மாநாடு, தமிழனுக்கு சிறையா?
-கண்மணி
Comments