உலகெங்கும் நடைபெறுகின்ற விடுதலைப்போராட்ட நிகழ்வுகளில் துரோகங்கள் இடம்பெறா விட்டால் அந்த போராட்டத்தின் வரலாறு நிறைவு பெறாது. கிறித்துவ வரலாறாகட்டும் அல்லது பௌத்த வரலாறாகட்டும், சமணர் வரலாறாகட்டும், திராவிட வரலாறாகட்டும். அதில் துரோகங்களின் பக்கங்கள் என்று ஒன்று இருக்கும். ஆனால் அதை கடக்காமல் நாம் ஒன்றையுமே புரிந்து கொள்ள முடியாது. தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் இப்படி துரோகங்கள் அலை அலையாக எழுந்து, நமது போராட்டத்தின் ஓசையை முடக்க பெரும் எழுச்சியோடு எதிரிக்கு பக்கத்தில் நின்றது. நம்மை, நமது விடுதலையை கொச்சைப்படுத்தும் விதமாக இந்த துரோகக் கூட்டங்கள் செய்த அளவிடமுடியாத மாந்த நேயமற்ற இனதுரோக நடவடிக்கைகளை நாம் இந்த நேரத்திலே புரிந்து கொண்டு, உண்மைக்கும் பொய்மைக்கும் உள்ள இடைவெளிகளையும் வேறுபாடுகளையும் தெளிவாக்கிக் கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.
போராட்ட நகர்வுகள் பொய்மை உண்மையைப் போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும். நாம் பொய்மை எது, உண்மை எது என்பதை புரிந்து கொள்வதற்கு சிந்திக்கவே கூடாது. காரணம், நாம் சிந்திக்கும் நொடியே வீழ்த்தப்படலாம். ஏனெனில் இந்த பொய்மைக்கு ஆற்றல் அதிகம். அளவிட முடியாத செய்திகளை நமக்கெதிராக திசை திருப்பி, அதை முழுமையடைய அது இடைவிடாமல் செயலாற்றும். நமது மூளையை சுரண்டி, அதிலே அதன் கருத்துக்களை பரவலாக்க முயற்சி செய்யும். நமது நியாயத்தை தவறு என சுட்டிக்காட்டும். எனவே, நாம் தலைமை அதன் வடிவமைப்பு, நமது தேவை, நமது எதிர்காலம் ஆகியவைகளைக் குறித்த தெளிவு நம்மில் இருந்து எந்த நிலையிலும் மாற்றமடையக் கூடாது. நமக்கான தலைமை மேதகு தேசிய தலைவரின் தலைமை ஒன்றுமட்டும் தான். நமக்கான தேவை தமிழீழம் என்கின்ற நாடு மட்டும்தான். ஆகவே, இந்த கருத்துக்களிலிருந்து நாம் ஒரே ஒருத்துளிக் கூட பின்வாங்கக் கூடாது. ஒருவேளை இது சரியா? என்று யோசிக்கும் அடுத்த கணமே நம்முடைய சிந்தனை சிதறடிக்கப்படலாம்.
துரோகிகளின் பொய், ஆற்றல் வாய்ந்தவை. ஆனால் நேர்மையானவை அல்ல. நாம் வெறும் ஆற்றலை மட்டும் உண்மையென்று நம்பிவிட முடியாது. உலகில் உள்ள எல்லா ஆற்றலும் மாந்தத் தன்மை மிக்கதல்ல. விடுதலையை வெல்வதல்ல. இருவேறு ஆற்றல்கள்தான் இந்த உலகை ஆட்சி செய்கிறது. இதைநாம் புரிந்து கொண்டு, எது நமக்கான ஆற்றல் என்பதை உள்வாங்கி செயல்பட முடிவு செய்ய வேண்டும். இந்த துரோகிகள் எங்குப் போனாலும் அவர்களுக்கான இயல்பு நிலை மாறப்போவது கிடையாது. கருணா, கருணாநிதி, டக்ளஸ் என நீளும் இந்த துரோகிகள் எதிரியின் கரங்களைப் பற்றிக்கொண்டு அவனின் பார்வையிலே புண்ணியத்தைத் தேடிக் கொள்ளும் புனிதப் பணியை செய்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அவர்கள் நமது இனத்திற்கு பெரும் இழப்பை பெற்றுத் தந்தாலும், தமது குடும்பத்திற்கு கேவலம் பதவி, பணம், சுகத்தை கையகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இவர்களின் வாழ்நிலை மாறப்போவது கிடையாது. அவர்கள் தொடர்ந்து ஒரே நிலையில்தான் இருக்கப்போகிறார்கள். இந்திய நாடோடிக் கதை ஒன்று இப்படிப்பட்ட இனம் மாறாத துரோகிகளை மிக சாதாரண சொல்லாடலால் இனம் காட்டுகிறது. பருந்து ஒன்று, இறை தேடி அலைந்தபோது, எலி ஒன்றை கண்டது. பாய்ந்து எந்த பருந்து எலியைப் பிடித்து தமது கூரிய நகங்களால் அழுத்தி பறந்தது. ஆனால், மேலே பறந்து கொண்டிருந்த பருந்தின் நகங்களிலிருந்து எலியின் துள்ளலால் பருந்தின் விரல்கள் விலக, அது கீழே விழுந்தது. கீழே விழுந்த எலி, துள்ளி குதித்து ஓடி ஒரு மந்திரவாதியின் காலடியில் போய் நின்றது.
எலியின் பரிதாபகரமான தோற்றத்தைப் பார்த்த மந்திரவாதி, அந்த எலியை எடுத்து தம்முடைய இல்லத்திலே வளர்த்துக் கொண்டு வந்தான். காலங்கள் கடந்தன. ஒருநாள் அந்த குடிசையை விட்டு எலி வெளியே காலாற நடக்கலாம் என புறப்பட்டு போனது. வெளியே வந்த எலி, பதறி அடித்துக் கொண்டு மீண்டும் மந்திரவாதியின் கால்களில் நடுநடுங்கி நின்றது. அது மந்திரவாதியைப் பார்த்தப்பின்னரும் கூட அதன் நடுக்கம் தீரவில்லை. இதைக் கண்ட மந்திரவாதி, எலியை தடவிக் கொடுத்து, என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி துள்ளி குதித்து பதறி கொண்டு நிற்கிறாய்? எனக் கேட்டான். எலி தம்முடைய பரிதாபமான நிலையை மந்திரவாதியிடம் எடுத்துரைத்தது. நான் காலாற நடக்கலாம் என வீட்டை விட்டு வெளியேப் போனேன். அங்கே ஒரு பூனை என்னை பயமுறுத்தி கொன்றுவிடுவதைப் போல் பார்த்தது என்றது.
அதற்கு மந்திரவாதி, சரி இப்போது என்ன செய்யலாம். அந்த பூனையைப் பார்த்து பயப்படாதப்படி நான் ஒரு வழி செய்கிறேன். நீ உறங்கி காலையில் விழிக்கும்போது பூனையாக உருமாறி இருப்பாய். இனி, நீ பூனையைப் பார்த்து அச்சமுற வேண்டாம் என்றான். ஏனென்றால் நீயும் ஒரு பூனைத் தானே. ஆகவே எந்த நிலையிலும் நீ பூனைக்குப் பயப்பட வேண்டாம் என்று சொல்லி அனுப்பினான். காலையில் விழித்தபோது குட்டி எலி, தாம் பூனையாக மாறி இருப்பதை கண்டு பெரும் மகிழ்ச்சியுற்றது. இனி எந்த இடையூறும் இல்லை என நினைத்துக் கொண்டு வெளியில் சூரிய வெப்பத்தில் தமது உடலை வெப்பப்படுத்திக் கொள்ள சிலிர்த்து, உருண்டு, புரண்டு, நெலிந்து கொண்டிருந்தது.
எதிர்பாராத வகையில் மீண்டும் அந்த பூனை, அந்த பூனையாக மாற்றப்பட்ட குட்டி எலியின் முன்னால் வந்தது. பூனையைப் பார்த்த அந்த குட்டி எலி, தான் பூனை என்பதையும் மறந்து, மிரண்டு ஓடிப் போய் மந்திரவாதியின் பாதங்களில் போய் நின்றது. மந்திரவாதி வியப்படைகிறான். என்ன நிகழ்ந்தது? என்று கேட்கிறான். பூனையாக மாறியிருந்த எலி, வெட்கமடைந்தது. தாம் பூனையைப் பார்த்து அஞ்சுகிறோம் என்று சொன்னால், அது சரியாக இருக்காது. ஆகவே, மந்திரவாதியிடம் ஒரு பொய் சொன்னது. நான் காட்டில் ஒரு நாயை சந்தித்தேன். அந்த நாய், என்னைக் கண்டதும் துரத்தியது. அதனிடமிருந்து தப்பித்ததே பெரிய செயலாகி விட்டது. ஒரே ஓட்டமாய் உங்களிடம் வந்து சேர்ந்தேன் என்றது.
மந்திரவாதிக்கு தாம் வளர்த்த எலி வேறொரு மிருகத்தால் கொல்லப்படுவதை விரும்பவில்லை. ஆகவே சரி கவலைப்படாதே. இன்று நீ உறங்கி காலையில் விழிக்கும்போது நாயாக உருமாறி இருப்பாய். நீ மகிழ்ச்சியாக காட்டுக்குள் ஓடலாம். ஓடி விளையாடலாம். எந்த நாயும் உன்னை விரட்டாது என்று சொல்லி அனுப்பினான். அந்த எலியும் பூனையாக உருமாறி, காலையில் விழித்த போது நாயாக மாற்றப்பட்டிருந்தது. உடனே நாயாக உருமாறிய அந்த எலி, உறக்க ஊளையிட்டது. குரைத்துப் பார்த்தது. குதித்தது. இனி தம்மை அந்த பூனை விரட்டாது என்று நம்பியது. அந்த வீட்டை விட்டு நாய் வெளியே வந்தபோது, முன்னர் பார்த்த அதே பூனை இந்த நாயைப் பார்த்து தம்மை நாய் ஏதோ செய்துவிடுமோ என்ற பயத்தில் உடலை சிலிர்த்து ஓடுவதற்கு தயாராக அந்த நாயைப் பார்த்து உறுமியது. அந்த பூனை மியாவ்... என்று உறுமிய சத்தத்தைக் கேட்டவுடன் நாயாக உருமாறி இருந்த எலி, ஒரே தாவலில் ஓடி மந்திரவாதியிடம் அடைக்கலமானது.
மந்திரவாதிக்குப் புரியவில்லை. அவன் நாயைப் பார்த்துக் கேட்டான். இப்போது உன்னை யார் அச்சமூட்டியது என. இந்த நாய்க்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. நான் நாயாக இருக்கிறேன். பூனையைப் பார்த்து பயந்தேன் என்றுச் சொன்னால் எங்கே தம்மை தவறாக நினைத்து விடுவானோ, என பயந்து, நல்லவேளை நான் தப்பித்து வந்துவிட்டேன் ஒரு புலி என்னை விரட்டியது. அந்த புலியைப் பார்த்தவுடன் நான் நடுநடுங்கிப் போய்விட்டேன். என்னை கொன்றுவிட அது பாய்ந்து வந்தது. நான் வேகமாக வந்துவிட்டேன் என்று சொல்லியது. மந்திரவாதி அந்த நாயை எதுவும் சொல்லாமல், அந்த நாயை தடவிக் கொடுத்து சரி, சரி, இனி எந்த நிலையிலும் உன்னை யாரும் அச்சமுறுத்தாதபடி உனக்கு ஒரு வேலை செய்கிறேன். இனி எதற்கும் நீ அஞ்ச வேண்டாம். நீ காலையில் விழிக்கும்போது புலியாக உருமாறி இருப்பாய் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றுவிட்டான்.
மந்திரவாதி சொன்னபடியே அந்த நாய் மறுநாள் காலை புலியாக மாறியிருந்தது. புலி உருவத்தோடு அது சுற்றித் திரிந்தபோது, அந்த சிறிய குடிசை தமது உருவத்திற்கு ஏற்றதல்ல. ஆகவே காட்டில்போய் உலாவலாம் என்று நினைத்து காட்டை நோக்கி நடந்தது. அப்படி அது நடக்கும்போது, அது தமக்குள் சொல்லிக் கொண்டது, இனி எல்லோரும் என்னைப் பார்த்து அஞ்ச வேண்டும். அப்படி அஞ்சும்படி நான் செய்வேன் என்று உறுமி, வாலாட்டி, ராஜநடை போட்டுக் கொண்டு அங்கும் இங்கும் நடைப் பழகியது. எதிர்பாராத விதமாக முன்பு கண்ட அதே பூனை புலியைப் பார்த்துவிட்டது. அச்சத்தால் நடுங்கிய பூனை, உடலை சிலிர்த்து, முதுகு வளைத்து, சாவு நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில் சிலிர்த்து நின்றது. அடடா... இந்த புலியால் நமக்கு முடிவு வந்துவிடும் என்று நினைத்து, இனி புலியிடமிருந்து தம்மால் தப்பிக்க முடியாது. இனி என்ன செய்வது? என்று பூனை புலியை வெறித்துப் பார்த்து தம்முடைய இறப்பை நினைத்துக் கவலைக்கொண்டது. ஆனால், அந்த பூனையைப் பார்த்த புலி என்ன செய்தது தெரியுமா? உடலை படபடவென அடித்துக் கொண்டது. பயந்து, பதறி ஒரே ஓட்டமாக ஓடிப்போய் குடிலுக்குள் ஒளிந்து கொண்டது.
புலி பயந்து ஓடி வருவதைக் கண்ட மந்திரவாதி, என்ன நிகழ்ந்தது? ஏன் இப்படி நீ ஓடிவருகிறாய் என்று கேட்டான். உம்மைக் காட்டிலும் பலம் பொருந்திய ஏதாவது விலங்கினைக் கண்டாயோ? என்றான். ஆமாம். பார்த்தேன் என்று பயந்து நடுங்கி புலி சொன்னது. புலியைவிட பயங்கரமான விலங்கு என்ன இருக்கிறது என்று புரியாத மந்திரவாதி, எதைப் பார்த்து நீ பயந்தாய்? என்று கேட்டபோது, அந்த புலி சொன்னது. அது ஒரு பூனை என. மந்திரவாதிக்கு எல்லாம் புரிந்து போனது. ஒரு எலி என்னத்தான் ஆற்றல்வாய்ந்த புலியாக மாற்றினாலும், அதற்குள் இருக்கும் எலி என்கின்ற எண்ணம் ஒருபோதும் மாறாது. பதவி பலத்தாலும், உடல் பலத்தாலும் உலா வந்தாலும் மனதில் துணிவற்றவர்களால் எந்த காலத்திலும் புலியாக மாற முடியாது என்பதை புரிந்து கொண்ட மந்திரவாதி, அந்த புலியை எலியாக மாற்றி, பொந்துக்குள் விட்டான்.
இப்படித்தான்
ராசபக்சேவிடம் இந்த எலிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்கள் போன்ற பதவிகளை பெற்றுக் கொண்ட தம்மை புலியாக நினைத்துக் கொண்டாலும் ஒருநாள் நிஜமான புலி நேரில் வரும்போது, அவையெல்லாம் எலியாக பொந்துக்குள் ஒளியும்.அந்த காலம் வரப்போகிறது. அதற்கு நாம் தயாராக வேண்டும். நமது தாகமான தமிழீழத்தை அடைவதற்கு இப்படிப்பட்ட எலிகளை வேட்டையாட நாம், நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இந்த எலிகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்த வேண்டும்.
இது நமது இன கடமை. மறந்துவிடக்கூடாது. தொடர்ந்து போராடுவோம். மேதகு தேசிய தலைவர் தலைமையில் ஆட்சி அமைக்கும்வரை நமது போராட்டத்தில் எந்தவித இடையூறும் வராமல் நாம் நம்மை தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டும். வெற்றிக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
--கண்மணி-
Comments