புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நிதி வசூலிக்கும் திட்டம் - கே.பி தலைமையில் சிறீலங்கா புதிய நகர்வு

சிறீலங்கா அரசினால் மலேசியாவில் வைத்துக் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட குமரன் பத்மநாதன், அந்நாட்டு அரசுடன் இணைந்து பணியாற்றுவதை சிறீலங்காவின் அரச ஊடகமான சண்டே ஒவ்சேவர் வார கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பலப்படுத்தியிருந்தது.

இதுதொடர்பாக ஏற்கனவே சில செய்திகளை ஈழமுரசு வெளியிட்டிருந்ததுடன், கே.பியை நேரடியாக களத்தில் இறக்கி தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சிறீலங்கா தயாராகி வருவதை கடந்த ஒரு மாதங்களுக்கு முன்னர் ஈழமுரசில் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இந்நிலையில் இவற்றை உறுதிப்படுத்துகின்ற செய்திகள் வெளிவரத்தொடங்கியுள்ளன. இந்நடவடிக்கையின் மூலம் கே.பியின் ஊடக புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்களிடம் நிதியை வசூலிக்கும் பாரிய திட்டம் ஒன்றை சிறீலங்கா கொண்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

இதேவேளை, சண்டே ஒவ்சேவர் தனது செய்தியில் கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, பிரித்தானியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர் என்று தெரிவித்திருந்ததுடன், "புலிகள் இயக்கத்துக்காக வெளிநாடுகளில் திரட்டப்பட்ட பெருந்தொகையான நிதியை அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு வழங்குவதற்கு குமரன் பத்மநாதன் சம்மதித்துள்ளதாகவும், இதனை ஒருங்கமைப்பதற்காக வெளிநாட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை ஸ்தாபிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஊடகம் தெரிவித்திருந்தது.

"வடக்கு, கிழக்கு அபிவிருத்தித் திட்டம்" எனப் பெயரிடப்படவுள்ள இந்தத் தன்னார்வ அமைப்பின் மூலம் நிதி சேகரிப்பதற்கு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில், இலண்டனில் இருந்து கடந்த வாரம் கொழும்பு சென்ற பிரித்தானிய தமிழ் மருத்துவர் தலைமையிலான குழுவொன்று, சிறீலங்கா அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் கொழும்பை சென்றடைந்த பிரித்தானிய தமிழர் நலவாழ்வுக் கழகத்தை சேர்ந்த மருத்துவர் வேலாயுதம் அருட்குமார் தலைமையிலான குழுவினருக்கு, சிறீலங்கா பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபாய ராஜபக்ச, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஆகியோரால் விருந்துபசாரமளிக்கப்பட்டு, சினேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதில் மருத்துவர் அருட்குமார் அவர்களுடன், ரெலோ இயக்கத்தை சேர்ந்த சார்ள்ஸ் என்பவர் உட்பட பிரித்தானிய குடியுரிமை பெற்ற நான்கு பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்பொழுது இவர்களுக்கு கைலாகு கொடுத்து இவர்களை ஆரத்தழுவிக் கொண்ட கே.பி, உண்மை நிலையைப் புரிந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு இவர்கள் இணங்கியமை தனக்கு தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகக் குறிப்பிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்பொழுது பிரித்தானிய தமிழர் நலவாழ்வுக் கழகத்தால் எதிர்காலத்தில் திரட்டப்படும் நிதியை நேரடியாக சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சிடம் கையளிப்பது தொடர்பாக ஆராயப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இவ்விடத்தில் கருத்துரைத்த சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்: ‘‘நாங்கள் எல்லோரும் இலங்கையர்கள். புலிகளின் காலத்தை மறந்துவிட்டு இனி எங்களோடு செயற்படுங்கள். புலிகளுக்கு வழங்கிய நிதியை இனி எம்மிடம் புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்க வேண்டும்.'' என்று குறிப்பிட்டதாக தமிழர் நலவாழ்வுக் கழக வட்டாரங்கள் கூறுகின்றன.

தமிழர் நலவாழ்வுக் கழகத்தின் தலைவர் மருத்துவர் புவி அவர்களினதும், பிரித்தானியாவின் தமிழ் நகராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரினதும் அனுசரணையுடனேயே மருத்துவர் அருட்குமார் தலைமையிலான குழுவினர் கோத்தபாய - பீரிஸ் - கே.பி தரப்பினரை சந்தித்திருப்பதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பிரமுகர் ஒருவர் கருத்துக் கூறுகையில்: ‘‘போர்க்குற்றம் பற்றி நாம் பேசிக்கொண்டிருப்பது அர்த்தமற்றது. இறந்து போனவர்களைப் பற்றிக் கதைப்பதை விடுத்து, உயிருடன் இருப்பவர்களைப் பற்றி இனிப் பேசுவோம். சிறீலங்கா அரசாங்கம் யுத்தத்தில் வெற்றியடைந்து விட்டது. எமது மக்களுக்கு நாம் ஏதாவது உதவிகளைப் புரிய வேண்டும்.

அதற்கு சிறீலங்கா அரசாங்கத்துடன் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை. சிறீலங்கா அரசாங்கம் எம்மைப் பயன்படுத்த முற்படுகின்றது. நாமும் சிறீலங்கா அரசாங்கத்தைப் பயன்படுத்த முற்படுகின்றோம். யாரின் கை ஓங்குகின்றது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எமது குழுவினருடன் மிகவும் சினேகபூர்வமான முறையில் கோத்தபாய ராஜபக்ச கலந்துரையாடினார். இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களுடனும் நாம் பேசி வருகின்றோம்.'' என்றார்.

இதற்கிடையே, கோத்தபாய - கே.பி தரப்பினரை புத்திஜீவிகள் என்ற போர்வையில் மேற்குலக நாடுகளில் இருந்து தமிழர்கள் சிலர் சந்தித்திருப்பது புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களிடையே கடும் சீற்றத்தையும், அதிருப்தியையும் தோற்றுவித்துள்ளது.

வன்னியில் ஒன்றரை இலட்சம் தமிழீழ மக்களைக் கொன்றுகுவித்த சிங்கள அரசுடன் சமரசம் பேசி நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு இவர்கள் முற்படுவதையிட்டு புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் பலர் தமது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி ஒருவர் எம்மிடம் கருத்துக் கூறுகையில்: ‘தனித் தமிழீழத்திற்கான ஆணையை வட்டுக்கோட்டை தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் புலம்பெயர்வாழ் தமிழீழ மக்கள் வழங்கியுள்ளார்கள்.

சிங்கள அரசை போர்க்குற்றவாளியாக பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நாம் முற்படும் பொழுது, சிங்கள அரசுக்கு சாமரம் வீசும் வகையில் இவர்கள் நடந்து கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

எமது மக்களைக் கொன்றுகுவித்த கோத்தபாய ராஜபக்சவுடன் இவர்கள் விருந்துண்டது, எமது மக்களின் உடல்களின் மீது அமர்ந்திருந்து உணவருந்தியமைக்கு நிகராகும்.'' என்றார் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி.

- நன்றி: ஈழமுரசு

Comments