கே.பி இன் அபிவிருத்தித் திட்டத்துக்கு மலேசியாவில் நிதி சேகரிப்பு

இலங்கை அரசாங்கத்துடன் கூட்டுச் சேர்ந்துள்ள கே.பி புலம்பெயர் தமிழர்கள் 8 பேரைத் தம்முடன் சேர்த்து வடக்குக் கிழக்கின் அபிவிருத்திக்கு உதவ உள்ளார் என அரச தரப்புக் கூறியுள்ளமை தெரிந்ததே. இவ்வாறு ராஜபக்ஷவும் கே.பி உம் கூட்டிணைந்து தீட்டும் திட்டத்துக்கு மலேசியாவிலுள்ள இலங்கைத் தமிழ் பெருநிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் ஆதரவு தெரிவித்து நிதி சேகரித்துள்ளனர் என மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தை ஆதாரம் காட்டி லக்பிம செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை கூடிய இலங்கைத் தமிழர்கள் கூட்டத்தில் ஒரு மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகச் சேர்ந்துள்ளதாம். அதோடு மார்க்சிஸ் கம்யூனிகேசன் சி.ஈ.ஓ 35 மில்லியன் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேர்க்கப்படும் நிதியானது மீள்குடியேற்றம், மீள் கட்டுமானம் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகளின் புனர்வாழ்வுக்கும் அதோடு அங்கவீனமாகியுள்ள இராணுவச் சிப்பாய்களுக்குமாகச் செலவளிக்கப்படவுள்ளது.

இதேவேளை, தற்போது மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் முன்னாள் உயர் ராணுவ அதிகாரி என்றும் அவர் தமிழர்களுக்கு எதிரான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்றும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மலேசியத் தமிழர்களில் புலிகளுக்கு ஆதரவாக இருந்த பலரும் இப்போது கே.பி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை ஆதரிக்கிறதாம்.

மேலும் சில புலம் பெயர்ந்தவர்கள் கே.பி உடன் இணைந்து பணியாற்றுவதானது புலம்பெயர் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துகிறது என்பதும் உண்மையாகும். இவ்வாறான பிளவை தமிழர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது இலங்கையில் பலநாள் கனவாக இருந்தது என்பதையும் மலேசியாவிலுள்ள தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-----------------------

கே.பியின் முதலாவது நிதி திரட்டும் நடவடிக்கை மலேசியாவில் நடைபெற்றது

வடக்குக் கிழக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் நிதி திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குமரன் பத்மநாதனினால் நிதி திரட்டும் நோக்கில் ஒழுங்கு செய்யப்பட்ட விசேட நிகழ்வொன்று நேற்று முன்தினம் மலேசியாவில் நடைபெற்றது. இலங்கை நேரப்படி 4.30 மணியளவில் இந்த நிதி திரட்டும் கலாசார நிகழ்வு நடைபெற் றதாக மலேசி யாவுக்கான இலங்கைத் தூதரக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குமரன் பத்மநாதனுக்கு விசுவாசமாகச் செயற்பட்டு வரும் குழுவினர் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து வடக்குக் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர் எனவும், மீள்குடியேற்றம், புனரமைப்பு, புலி உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு, காயமடைந்த படை வீரர் நலத்திட்டம் போன்றவற்றுக்காக திரட்டப்படும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது.

இவ்வாறான நிதி திரட்டும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன் னெடுக்கப்படும் எனத் தெரிவிக் கப்படுகின்றது. இதேவேளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்ட குமரன் பத்மநாதனை வடக்குப் புனர்வாழ்வுத் திட்டங்களில் பங்குபடுத்தி வருகின்றமை தொடர்பில் சில அரசியல் கட்சிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமது எதிர்ப்பைப் பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

-------------------------

நாடுகடந்த அரசு விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர்: கே.பி


நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் நான் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றேன். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வழங்கப்படும் நிதி விழலுக்கிறைத்த நீர் போன்றது என சிறீலங்கா அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக த லக்பிம வாரஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அது தனது பத்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக சிறீலங்க அரசு தெரிவித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் அவர் எங்கு உள்ளார் என்பதை தென்னிலங்கை மக்கள் அறியவில்லை.

ஆனால் திடீரென கே.பி புலம்பெயர் தமிழ் சமூகத்தை சேர்ந்த சிலருடன் வடக்கு – கிழக்குக்கு பணயம் மேற்கொண்டுள்ளார். அங்கிருந்து திரும்பிய கே.பி குழுவினர் கொழும்பில் உள்ள ஒரு ஆடம்பர விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளனர்.

பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழ வெள்ளை நிற காரில் வந்து இறங்கினார் பத்மநாதன். அவரின் பையை பாதுகாப்பு படையினரே சுமந்து வந்தனர். அவருக்கு தேவையன சிகரட்டையும் அவர்களே ஓடிச் சென்று வாங்கி வந்தனர்.

கே.பியின் குழுவில் அங்கம் வகித்த 9 உறுப்பினர்களின் சில உறவினர்களும் அவர்களுடன் வந்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் நிதியை பயன்படுத்தி வருகின்றனர். எனவே தான் நான் அதற்கு எதிராக செயற்பட்டு வருகின்றேன். நாடுகடந்த தமிழீழ அரசுக்கு வழங்கப்படும் நிதி விழலுக்கிறைத்த நீர் போன்றது என ஊடகவியலாளர் மாநாட்டில் பேசிய கே.பி தெரிவித்தார்.

கே.பி என்ன சுகபோகங்களை அனுபவிக்கிறார் என்பது இங்கு முக்கியமானதல்ல, அதனை கேட்டால் அரசுக்கு கோபம் வரலாம். ஆனால் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்ததாக கூறப்பட்டு 10,000 இற்கு மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். அவர்கள் எப்போது விடுவிக்கப்படுவார்கள் என்பது குறித்து யாருக்கும் எதுவும் தெரியாது. ஆனால் கே.பி அரசுடன் இணைந்து சுகபோகங்களை அனுபவிக்கும் ஒருவராக வலம்வருகின்றார் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments