கருணாநிதி என்ன கடவுளா ?

கருணாநிதி செம்மொழி மாநாட்டை முடித்துவிட்டு ஓய்வு பெறப் போவதாகச் சொன்னாலும் சொன்னார். அடுத்த முடிசூட்டு விழா குறித்த பரபரப்பு செய்தி நாட்டைக் கலக்கத் தொடங்கிவிட்டது. தேர்தலை முன்கூட்டியே சந்திப்பார் கருணாநிதி என்கிறார்கள். பொதுத் தேர்தல் என்பது இடைத்தேர்தல் அல்லவே.

எத்தனையோ நிலை மாற்றங்களும், அணி மாற்றங்களும் ஏற்படுவது மட்டுமன்று; கடுமையான விலைவாசி உயர்வு; நான்காண்டு காலமாக நாடு இருளில் மூழ்கிக் கிடக்கும் அவல நிலை ஆறுகளை எல்லாம் கட்டாந்தரைகளாக்கி, மலைகளை எல்லாம் தரைமட்டமாக்கி கொழுத்துவிட்ட ஓர் ஆட்சியை மக்கள் தரைமட்டமாக்க வேண்டிய தேர்தல் அது. தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலமும், காங்கிரஸ் காலமும் நீங்கலாக, ஆட்சி மாறி மாறியே
அமைந்திருக்கிறது. அவ்வாறு நிகழ்ந்து இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ஆளுங்கட்சித் தலைவராகும் நிலையில், "அடித்து வைத்திருப்பதைக்' காப்பாற்றிக் கொள்வதுதான் ஒவ்வொருவரின் முழுநேர வேலையாக இருக்கும். ஆட்சி கிடக்கட்டும் கட்சித் தலைமையைப் பிடித்து வைத்துக் கொள்வதற்குக் கூட முயல மாட்டார்கள்.

ஆட்சி இல்லாத கட்சியால் என்ன பயன்? இப்போதைய ஆட்சி முடிவதற்குள் மணிமுடியை மாற்றிச் சூட்டக் கருணாநிதி முன்வந்தால், அது பலத்த விளைவுகளை ஏற்படுத்திக் கட்சியைக் கடகடக்கச் செய்துவிடும். கருணாநிதி ஆட்சியைக் கைவிடுவது என்பது அவரை அறியாதவர்கள் முன்வைக்கும் வாதம். இப்போது சக்கர நாற்காலியில் சட்டமன்றம் செல்லும்
கருணாநிதி,பதவியிலிருந்து இறக்கப்பட்டால் ஒழியப் பதவியை விடுவதற்கான மனப்பழக்கம்
உடையவரில்லை. மேலும் கருணாநிதி என்ன தயரதனா?

மகனுக்கு முடிசூட்டிவிட்டுக் காட்டுக்குத் தவம் செய்யப் (வானப்பிரஸ்தம்) போகலாம் என்று கருதுவதற்கு? பிறந்திருக்கிற மக்களெல்லாம் இராமனும் பரதனுமா? ""எனக்கு வேண்டாம்; நீயே வைத்துக் கொள்'' என்று பற்றற்று உதற? வதற்கு! தனக்குப் பின்னால் யார் என்பதற்குத்தான் மகன் என்பது விடையே தவிர, தன் கண்ணோடு சாவியைக் கொடுத்துவிட்டு, மகன் வாயைப் பார்த்துக்கொண்டு, எஞ்சிய காலத்தைப் பாயில் படுத்துக் கொண்டு பழைய நினைவுகளை அசைபோடும் அளவுக்கு உலக அனுபவம் இல்லாதவரா கருணாநிதி? ஆரியர்களுக்கு நான்கு வேதங்கள் இருக்கும்போது, திராவிடர்களுக்கு ஒரு வேதமாவது வேண்டாமா என்னும் குறையைப் போக்கத்தான் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி பராசக்திக்கு வசனம் எழுதித் தமிழை மானக்கேட்டிலிருந்து காப்பாற்றினார் என்று கூவிக் கூவிப் பாடும் புதுக் கவிஞர்களெல்லாம், அடுத்த நொடியே அத்தாணி மண்டபங்களை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என்பதை அறியாதவரா என்ன? தன்னுடைய பலம் கோபாலபுரத்தில் இல்லை கோட்டையில்தான் இருக்கிறது என்பதை எல்லாரையும்விட நன்கு புரிந்தவர் கருணாநிதி.

கருணாநிதியைச் சாணக்கியர் என்று சொல்லி அவரை மகிழ்விப்பவர்கள் இருக்கிறார்கள். எதிரியின் வலிமையை தன் மன விருப்பத்திற்கேற்றவாறு மதித்து மகிழாமல், உள்ளவாறு உணர்வதுதான் சாணக்கியம். ஆனால் கருணாநிதி எம்ஜிஆரின் வலிமையை வெறுந் திரைப்படக் கவர்ச்சியினால் வந்த வலிமை என்று குறைவாக மதிப்பிட்டு, இன்னொரு மாற்று நடிகனை அவருக்கு எதிராக உருவாக்குவதன் மூலம் எம்ஜிஆரைச் சாய்த்துவிடலாம் என்று தப்பாகக் கணக்கிட்டுத் தன் மகன் மு.க. முத்துவை உருவாக்கி மோத விட்டவர். அதன் காரணமாகப் படம் தோற்றால்கூடக் குற்றமில்லை; ஆட்சியையும் அல்லவா தோற்றார் கருணாநிதி.

அதற்குப் பிறகு ஓராண்டா, ஈராண்டா? பதினான்கு ஆண்டு காலமல்லவா வனவாசம் போக நேரிட்டது. உட்கார இடமில்லாமல், மேலவைக்குப் போனார்; மேலவையும் கலைக்கப்பட்டதே. எம்ஜிஆர் வங்கக் கடலோரம் நீள்துயில் கொண்ட பிறகுதானே, மீண்டும் அரசியலையே கருணாநிதியால் நினைத்துப் பார்க்க முடிந்தது. இதுவா சாணக்கியம்? இன்றும் கருணாநிதியின் அரசு சிறுபான்மை அரசுதானே. நாதியற்றுப் போன கருணாநிதியின் அரசை
எற்றுவதற்கு எவ்வளவு நேரமாகும் காங்கிரஸிக்கு? கருணாநிதியைச் சார்ந்து இன்றைய காங்கிரஸ் அரசும் இல்லையே! இவ்வளவு அனுபவமுடைய தானே பொய்க்காலில் நிற்கும்போது, தன் மகனுக்குக் கருணாநிதி எப்படி முடிசூட்டுவார்? கருணாநிதி ஆட்சிக் காலத்தில் அவருடைய குடும்பங்கள் சொல்லொணா வகையில் செழிப்புற்றதுபோல,கட்சியும் வலிவு பெற முடிந்தது.

அதிகாரத்தை வைத்துப் பணம் திரட்டல்; பணத்தை வைத்து அதிகாரத்தைப் பெறல் என்னும் நச்சுச் சுற்று கருணாநிதியால் தமிழக அரசியலில் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு அரசியலுக்குக் கருணாநிதி வழங்கிய கொடை இது என்று வரலாறு வரிந்து வரிந்து எழுதும்.
அவரிடமிருந்த "செல்வம்' அவருடைய குடும்பங்களுக்குள் பங்கிடப்பட்டதுபோல, அரசியல் அதிகாரமும் பங்கிடப்பட்டது. தமிழ்நாடு வடக்கு, தெற்காகப் பிரிக்கப்பட்டு இரு மகன்களும் பொறுப்பாக்கப் பெற்றனர். தமிழ்நாட்டு ஆட்சியில் ஒரு மகனும், மத்திய ஆட்சியில் இன்னொரு மகனும் அமர்த்தி வைக்கப்பட்டனர்.

மகள் மாநிலங்களவைக்கு நியமனம் பெற்றார். அண்ணா காலத்துக்குப் பிறகு இரா. செழியனை மெல்ல அகற்றிவிட்டு அந்த இடத்தில் தன்னுடைய அக்காள் மகன் முரசொலி மாறனை அமர்த்தி அமைச்சராக்கியதுபோல, மாறனின் மகன் தயாநிதி மாறனையும் தில்லியில் அமைச்சராக்கினார் கருணாநிதி. தன்னுடைய சுற்றம் முழுவதையும் கோபாலபுரத்தில் பக்கம் பக்கத்தில் குடியேற்றியதுபோல, தன்னுடைய முதல் சுற்றம், இரண்டாம் சுற்றம் என்று வரிசைப்படி அவர்களின் நிலைகளுக்கும் உறவுக்கும் தகப் பதவிகளையும் பங்கிட்டவர் கருணாநிதி. ஒரு குடும்பத்திற்குள்ளேயே அதிகார மொத்தமும் இருந்துவிட்டால், வெளிப்போட்டி இருக்காது என்பது கருணாநிதியின் எண்ணம்.

ஆனால், அதற்குப் பிறகு குடும்பத்திற்குள்ளேயே குத்து வெட்டு நடக்கும் என்பது வரலாற்றின் அடிமட்ட மாணவர்களுக்கே தெரியுமே. "உனக்கு இது, உனக்கு அது'' என்று கருணாநிதி பங்கிட்டுக் கொடுத்ததை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு அதிகாரம் என்ன சோற்றுருண்டையா? ஒருவர் நான்கு உருண்டையோடு போதும் என்று எழுந்து விடுவார்; இன்னொருவருக்கு ஆறு உருண்டைகள் தேவைப்படும். வயிற்றுத் தேவையும்,
அதிகாரத் தேவையும் ஒன்றல்லவே! சொத்தைச் சமமாகப் பங்கிட முடியும்; அதிகாரத்தைச் சமமாய்ப் பங்கிட முடியுமா என்ன? இருப்பது ஒரு முதலமைச்சர் நாற்காலிதானே?

இரண்டு பேரின் குறியும் ஒன்றின்மீதுதான் என்றால் எப்படிச் சிக்கறுக்க முடியும்? கருணாநிதி பல மோசமான அரசியல் செல்நெறிகளை உண்டாக்கியதுபோல, அழகிரி "திருமங்கலம் சூத்திரம்' என்னும் புதிய செல்நெறியை உண்டாக்கவில்லையா? அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாது; அது ஒரு குற்றமா? கருணாநிதி குடும்பத்தில் யாருக்கு ஆங்கிலம் தெரியும்? மேலும் இந்தியா என்ன இங்கிலாந்தா? பத்தாண்டு காலமாகப் பாரதிய ஜனதாவும், காங்கிரஸýம் கருணாநிதியின் தயவால் ஆட்சியில் இருந்தும், கண்ணையே திறக்காமல் ஓராண்டுக் காலம் படுத்த படுக்கையாக இருந்த முரசொலி மாறனை துறை இல்லாத அமைச்சராக வைத்துக் கொள்ளத் தேவையில்லாமல் தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்திய கருணாநிதி, இந்திய மொழிகளை எல்லாம் ஆட்சி மொழிகளாக்க தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தியதுண்டா?

அப்படிச் செய்திருந்தால் தமிழுக்கு மட்டுமா வாழ்வு வந்திருக்கும்? அழகிரிக்குமல்லவா வந்திருக்கும்! "கருணாநிதியைத் தவிர யாரையும் தலைவராக ஏற்க மாட்டேன்' என்று அழகிரி சொன்னதன் பொருள், "நீ விலகி நில் நான் பார்த்துக் கொள்கிறேன்' என்பதுதான்!
கி.பி. 2000-ல் அழகிரியைத் தி.மு.க.வை விட்டு விலக்கி வைத்து அறிக்கை வெளியிட்டார்
பொதுச் செயலர் அன்பழகன். விவரம் தெரிந்த அழகிரி, அன்பழகனின் மீது கோபம் கொள்ளவில்லை. தன்னுடைய நீக்கத்துக்குப் பின்னணியில் இருந்த தன் தகப்பனார் கருணாநிதியோடேயே மோதிப் பார்த்தவர் அழகிரி. தி.மு.க.வுக்கு எதிராக 2001-ல் போட்டி வேட்பாளர்களை நிறுத்திப் பணமும் செலவழித்துக் கலங்க அடித்தவர் அழகிரி.

கட்சிக்கு ஏற்பட்ட சேதத்துக்கு அஞ்சி அழகிரியிடம் சமாதானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் கருணாநிதி. இதுதான் இன்றைக்கும் அழகிரியின் நிலைப்பாடு. மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வது கருணாநிதியின் பாடு. இது விசுவாசமற்ற நிலை இல்லையா என்று கேட்டால், அதிகாரத்துக்கான போட்டியில் விசுவாசம் என்ன
விசுவாசம்? மத்திய அமைச்சர் பதவியில் இருக்க விருப்பமில்லை அழகிரிக்கு. தலைவராகலாம் என்று நினைக்கிறார். அதற்குள் திமுக ஒரு ஜனநாயகக் கட்சி; கட்சிதான் முடிவு செய்ய வேண்டும் என்று யாருக்குச் சொல்கிறார் கருணாநிதி? திமுக என்ன சங்கர மடமா? என்பது கருணாநிதியின் புகழ் பெற்ற சொல்லாட்சி! சங்கர மடத்தில் நியமனம் பெற ஒருவர் ஸ்மார்த்த பிராமணராக இருக்க வேண்டும்.

திமுகவில் நியமனம் பெற கருணாநிதியின் குடும்பத்தவராக இருக்க வேண்டும். என்ன வேறுபாடு? நினைத்தாலும் வீரபாண்டி ஆறுமுகம் ஆக முடியுமா? "அப்படியானால் தேர்தல் நடக்கட்டும்; தலைவரைக் கட்சி முடிவு செய்யட்டும்' என்று வெளிப்படையாக
அந்த அறைகூவலை அழகிரி ஏற்றுக் கொண்டு விட்டாரே! "நீயாக ஏன் முடிவு செய்கிறாய்? குடும்பத்திற்குள்ளாவது ஜனநாயகம் வேண்டும்' என்பது அழகிரியின் கூக்குரல்.
""என் மக்கள் இருவருக்கும் இடையே மோதல் என்றால் என் இதயத்தில் ரத்தம் வடியும்'' என்று எதற்குப் புலம்புகிறார் கருணாநிதி? யார் தோற்றாலும் யார் வென்றாலும் கோபாலபுரத்துக்கு அது மொத்தத்தில் வெற்றிதானே! 1961-ல் சம்பத், 1972-ல் எம்ஜிஆர், நெருக்கடிநிலை காலத்தில் நெடுஞ்செழியன், ஈழப் போரின்போது வைகோ என்று ஒவ்வொருவரையாக வெளியேற்றிக் கட்சியைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்ட பிறகு, குடும்பத்திற்குள்ளே ஜனநாயகம் வேண்டும் என்று அழகிரி கோருவது அதிசயமானது என்றாலும் நியாயமானதுதானே!
முதல்வருக்கான போட்டி நடக்கப் போவதில்லை; கருணாநிதி நாற்காலியை விட்டு இறங்கப் போவதில்லை.

அப்படி ஒருவேளை நடக்கும் என்று கொண்டால், அது கருணாநிதி நினைப்பதுபோல் இருமுனைப் போட்டியாக இருக்காது; மும்முனைப் போட்டியாகவே இருக்கும்.
தயாநிதி மாறன் திமுககாரராகவே, நேரே முகங்காட்டாத காங்கிரஸôல் களமிறக்கப்படுவார்.
தயாநிதியிடம் இல்லாத பணமா? ஒவ்வொரு திமுக சட்டமன்ற உறுப்பினரும் "போதும்; போதும்' என்னும் அளவுக்குப் பணத்தால் அடிக்கப்படுவார்கள். காங்கிரஸின் தயவில்லாமல் கருணாநிதியே ஆட்சியில் இருக்க முடியாதே! கருணாநிதியின் மகன்களால் எப்படி முடியும்? திமுகவின் சார்பாக சிறுபொழுதுக்கு யார் ஆள்வது என்பதைக் காங்கிரஸ் தீர்மானிக்கும்.

தீர்மானிக்கும் சக்தி மாறுவதோடு திமுக வரலாறு முடியும்! தோன்றியவை எல்லாம் அழிந்தே தீரும்என்பது இயற்கை விதி!

அப்படியல்லாமல் நீருள்ள அளவும், நிலமுள்ள அளவும், காருள்ள அளவும், கடலுள்ள அளவும் நானே எல்லாவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பேன் என்று சொல்வதற்குக் கருணாநிதி என்ன கடவுளா?

"ஓடாத மானும், போராடாத மனித இனமும் வென்றதாக வராலாறு இல்லை" - புதுவை இரத்தினதுரை


- பழ. கருப்பையா

Comments