நாடுகடந்த அரசின் இடைக்கால இயக்குனர் திரு.உருத்திரகுமாருடன் ஒரு நேர்காணல்

இலங்கை தமிழ் சங்கம் வெளியிட இருக்கும் சங்கம் வருடாந்த இதழுக்காக தமிழீழ நாடு கடந்த அரசின் இயக்குனர்
திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல். சங்கம் வருடாந்த இதழ் வருகின்ற ஜூன் மாதம் 6ம் நாள் New Jerseyயில் வெளியிடப்படுகின்றது.

திரு. உருத்திரகுமார் வழங்கிய நேர்காணல் புலம்பெயர் தமிழீழத்திற்க்காக நெருடல் மூலம் பிரசுரிக்கப்படுகின்றது.

கேள்வி: பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் நாடு கடந்த அரசின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்பட்டாலும், அண்மைக் காலங்களில் சில ஊடகங்கள் நாடு கடந்த அரசு தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளையும், பொய்பரப்புரைகளையும் வெளியிட்டு வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. ஆயினும், இவ் ஊடகங்கள் முன்வைக்கும் கடும் விமர்சனங்கள், எழுப்பும் வினாக்கள், கிழப்பும் சந்தேகங்கள் தொடர்பில் உங்கள் கருத்துகளை மக்களிற்கு தெளிவுபடுத்துவது அவசியம் எனக் கருதுகிறோம். இவற்றுள் கோட்பாட்டு ரீதியாக அதிகம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்ட விடயம் வடகிழக்கு முஸ்லிம் மக்களிற்கான தன்னாதிக்க உரிமை ஆகும். இது மத ரீதியாக தமிழ் தேசியத்தை பிளவுபடுத்தும் முயற்சியென கடுமையாக சாடப்பட்டது. வடகிழக்கு தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் தமக்கான தன்னாதிக்க உரிமை கோரிக்கைய ஆணித்தரமாக முன்வைக்காதபோதும், இவர்கள் தம்மைத்தாமே ஆண்டதற்கான வரலாற்று சான்றுகளோ, தொடர்ச்சியான நிலப்பரபோ, தன்னாதிக்க வலுவுள்ள பொருளாதார கட்டமைப்போ இல்லாதபோதும், இவ் உரிமை இவர்களிற்கு உள்ளதாக எதன் அடிப்படையில் நாடுகடந்த அரசின் வழிகாட்டி கோட்பாடுகளில் உள்ளடக்கப்பட்டது என்பதை விளக்குவீர்களா?

பதில்: எமது மதியுரைஞர் குழு இவ் விடயம் தொடர்பாக மிக ஆழமாக ஆராய்ந்த பின்னரே சில முன்மொழிவுகளை வழிகாட்டி கோட்பாடுகளினுள் உள்ளடக்கியது. எமது வழிகாட்டி கோட்பாடுகளில் தமிழ் ஈழத்தை சுதந்திரமும் இறைமையும் உள்ள தேசம் என்று குறிப்பிடும் அதேவேளை முஸ்லிம் மக்கள் தொடர்பாக இச் சொற்பிரயோகங்கள் இடம்பெறவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எமது மதியுரை குழுவின் அறிக்கையில் separate autonomous state என்ற பதமே பாவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையை ஏற்றுகொள்வது என்பது, எந்தவித அடக்குமுறைகளிற்கும் அப்பாற்பட்டு தமிழ்தேசியத்துடன் இணைந்திருக்க முடியும் என்ற நம்பிக்கையை அவர்களிற்கு ஏற்படுத்துவதாக இருக்கும். மேலும், இதுபோன்ற சிக்கலான விடயங்களிற்கான நாடுகடந்த அரசின் கொள்கைகளை வகுப்பதில் மக்களால் தெரிவுசெய்யப்படும் உறுப்பினர்களே முஸ்லிம் பிரதிநிதிகளுடன் பேசி முடிவினை எடுப்பார்கள்.

கேள்வி: நாடுகடந்த அரசின் தேர்தலிற்கு மக்கள் கொடுத்த ஆதரவு உங்களை திருப்திப்படுத்தியுள்ளதா? நாடுகடந்த அரசு தேர்தலை வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கு அளித்த வாக்குகளோடு ஒப்பு நோக்கி தமிழரின் பிரபல ஆங்கில செய்தி இணையம் விமர்சனங்களை முன்வைத்துள்ளதே?

பதில்: மக்கள் கொடுத்த ஆதரவு திருப்தியாக உள்ளது. எதிர்பார்த்த அளவை விட சில நாடுகளில் வாக்குகள் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது திருப்தியாக உள்ளது. அவை நிற்க, வட்டுக்கோட்டை தீர்மான தேர்தலும் நாடுகடந்த அரசின் தேர்தல்களும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல என்பதால் அவற்றிற்கிடையிலான ஒப்பீடுகள் தேவையற்றவை. இரண்டு கோட்பாடுகளும் ஒன்றுடனொன்று இறுக்கமாக இணைந்து செல்பவை.

கேள்வி: நாடுகடந்த அரசை சில வெளிச்சக்திகளின் ஆலோசனைக்கேற்ப நீங்கள் வழிநடத்துவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதே?

பதில்: அதில் எந்தவித உண்மையும் இல்லை. அவ்வாறான நம்பிகையீனம் இருந்திருந்தால் இப்பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்காது.

கேள்வி: உங்களிடம் இப்பணியை ஒப்படைத்தவர் மீதும் சந்தேகங்கள் கிளப்பப்படுகிறதே?

பதில்: இப்பணி எனக்கு ஒரு தனிப்பட்ட நபரால் தரப்பட்டதாக நான் கருதவில்லை. மதியுரைக் குழுவின் அறிக்கையும் எமது கடந்த பத்து மாதகால செயற்பாடும், நாடுகடந்த அரசமைக்கும் குழு தமிழ் மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை மக்களால் அறியக்கூடியதாக உள்ளது. எமது நடவடிக்கைகளில் எந்த ஒரு விடயமாவது வேறு எந்த சக்திகளின் நலன்களிட்கு சாதகமாக அமைந்ததாக நான் கருதவில்லை. உருவாக்கப்பட்டுள்ள நாடுகடந்த அரசாங்கம் எந்தவொரு தனி நபரால் அல்லாமல், தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் வெளிப்படை தன்மையுடன் செயல்பட உள்ளது.

கேள்வி:நாடுகடந்த அரசின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி சுருக்கமாக கூறமுடியுமா?

பதில்: நாடுகடந்த அரசின் சட்ட வரைபுகளை எழுதுவதற்காக முதல் அமர்வில் அரசியல் நிர்ணய சபை ஒன்று ஏற்படுத்தப்படும். மேலும், அவசர அவசிய விடயங்களை கையாள்வதற்காக இடைக்கால நிர்வாக குழுக்கள் ஏற்படுத்தப்படும்.

கேள்வி: இத்தேர்தலில் கிடைத்த அனுபவத்தை வைத்து அடுத்த தேர்தலில் எவ்வாறான மாற்றங்களை ஏற்படுத்த உத்தேசித்துள்ளீர்கள்?

பதில்: கடந்த முறை தேர்தல் ஆணையம் நாடுவாரியாக இருந்தது. இதனை ஒருமுகப்படுத்தி அனைத்து நாடுகளிற்கும் பொதுவாக தேர்தல் ஆணையத்தை உருவாக்குவது பற்றி உத்தேசித்துள்ளோம். இது தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கப்படும்.

நன்றி

- நேர்காணல்: சசி செல்லத்துரை

Comments