சரணடைந்த விடுதலைப்புலிகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் - வாக்குமூலம் அளித்துள்ள சிறீலங்கா இராணுவ அதிகாரி


மகிந்த அரசு மேற்கொண்ட படுபயங்கரமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் பலவற்றை சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் வாக்குமூலமாக பெற்றுள்ள படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள்(Tamils Against Genocide) என்ற அமைப்பு தன்னிடம் உள்ள இந்த நம்பகரமான ஆதாரங்களை சிறிலங்கா அரசுக்கு எதிரான போர்க்குற்ற நீதிமன்றில் சமர்ப்பிக்க தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பல மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக குறிப்பிட்ட இந்த இராணுவ அதிகாரி படுகொலைகளுக்கு எதிராக தமிழர்கள் என்ற அமைப்புக்கு வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்ட இராணுவ அதிகாரி தற்போது வெளிநாடு ஒன்றில் தஞ்சமடைந்திருப்பதாகவும் அவரது பாதுகாப்பு கருதி அவரது பெயரோ அவர் தற்போதுள்ள நாட்டின் பெயரோ வெளியிடப்படமாட்டாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அதிகாரி வெளியிட்டுள்ள தகவல்களின் படி -

* சரணடைந்த மற்றும் பிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள். அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளின் தடயங்கள் எவ்வாறு அழிக்கப்பட்டன.

* படுகொலை செய்யப்பட்டவர்களின் சடலங்களை எரிக்குமாறு உயர்மட்டத்திலிருந்து வழங்கப்பட்ட உத்தரவுகள்.

* தமிழ் பிரதேசங்களில் சிறீலங்கா அரசு மேற்கொள்ளத்திட்டமிட்டுள்ள சிங்களக்குடியேற்றங்கள்.

* கொழும்பை தளமாக கொண்டியங்கிய படுகொலை படையினர் மற்றும் அவற்றுக்கு பொறுப்பானவர்களின் பெயர்கள்.

ஆகிய விடயங்கள் தெரியவந்துள்ளதாகவும் சிறிலங்கா அரசுக்கு எதிராகவும் அந்நாட்டு அரசின் இந்த கொடும் செயல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால் அதற்கு படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தன்னிடமுள்ள இந்த சாட்சியத்தை வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிறிலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தொடர்ந்து செயற்பட்டுவருவதாகவும் போர்க்குற்றங்களை நேரில் கண்ட சாட்சிகளிடமிருந்து சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்கு தமது அமைப்பு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளது.

Comments