பன்னாட்டு விசாரணைக்கு ராஜபக்ச அஞ்சுவது ஏன்?

ஊடகங்களின் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது என்ற 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்ப சூழலை, ஒரு பத்திரிக்கையாளரைக் கூட உள்ளே நுழைய விடாமல் தடுத்து, ஒரு மாபெரும் இனப் படுகொலையை நடத்தி முடித்து, ‘சாட்சிகளற்றப் போர்’ நடத்திய அரச தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள சிறிலங்க அதிபர் ராஜபக்ச, அந்தப் போர் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் ஆதாரங்களையும், அதோடு எழும் ‘பன்னாட்டு விசாரணை நடத்து’ என்ற குரலையும் கேட்டு அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதை அவர் மேற்கொள்ளும் ‘லாபி’ முயற்சிகள் வெளிப்படு‌த்துகின்றன.


இறுதிக் கட்டப் போரில் அப்பாவித் தமிழர்கள் பல பத்தாயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர், காணாமல் போயுள்ளனர் என்று ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மன்றத்தில் பேசியபோதும், அதனையொட்டி சிறிலங்க அரசிற்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்ட போதும், அண்டை நாட்டுச் சகோதரன் இந்தியாவின் துணைகொண்டு அதனை மழுங்கடித்து வெற்றி பெற்ற சிறிலங்க அதிபர், அத்தோடு எல்லாம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்தார். ஆனால், உலகத்தை அதிரவைத்த அந்த இனப் படுகொலையை மறைக்க மேற்கொண்ட அந்த முயற்சியே, அதனை வெளிக்கொணரக்கூடிய பெரும் சக்திகளை உருவாக்கியது.

மனித உரிமை கண்காணிப்பகம், அம்னெஸ்டி இண்டர்நேஷணல் என்றழைக்கப்படும் சர்வதேச பொது மன்னிப்புச் சபை, இண்டர்நேஷணல் கிரைசிஸ் குரூப் என்றழைக்கப்படும் சர்வதேச சிக்கல் தீர்ப்புக் குழு ஆகியன மறைக்கப்படும் அந்த மாபெரும் படுகொலையை வெட்ட வெளிச்சமாக்க தொடர்ந்து போராடின. தி டைம்ஸ், ல மாண்ட் ஆகிய பத்திரிகைகளும், சேனல் 4 தொலைக்காட்சியும் செயற்கைக்கோள் புகைப்படங்களில் இருந்து இரகசிய வீடியோ பதிவுகள் வரை ஒன்ற்ன் பின் ஒன்றாக வெளியிடத் துவங்கிய பின்தான் ராஜபக்ச அரசிற்குப் புரிந்தது உண்மையை இதற்கு மேலும் மறைக்க முடியாது என்பதும், உண்மையை மறைக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு இந்தியாவின் ஆதரவு மட்டும் போதாது என்பதும் புரிந்தது.

இனப் படுகொலைக் குற்றத்தை தனது வார்த்தை ஜாலத்தால் மறைக்கும் வல்லமை பெற்ற பலித கோகணாவை சிறிலங்காவின் தூதராக ஐ.நா.வுக்கு அனுப்பி வைத்தார். “போர்க் குற்றம் புரிந்ததற்காக வெற்றி பெற்ற நாடுகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு இல்லை” என்று பேசி, தாங்கள் போர்க் குற்றம் புரிந்தத்தை சொல்லாமல் சொல்லி தன் வாயால் கெடுத்தார் பலித கோகணா.



1) தமிழ் இளைஞர்கள் நிர்வணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இன வெறி பிடித்த சிங்கள இராணுவத்தினரால் காலால் உதைக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்ட காட்சிகள் சேனல் 4 வெளியிட்டது, அது நிசமானதே என்று ஐ.நா.வின் அறிக்கையாளர் ஃபிலிப் ஆல்ஸ்டன் உறுதி செய்தார்.

2) வன்னி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த போது, தன் கண் முன்னால், முகாம்களில் தஞ்சமடைந்த தமிழ்ப் பெண்களை சி்ங்கள் இராணுவத்தினர் பட்டினி போட்டு பாலுறவிற்கு அழைத்த கொடுமைகளை போட்டு உடைத்தார் மருத்துவர் வாணி.

3) இந்த ஆண்டு ஜனவரியில் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தனது விசாரணையின் முடிவில் சிறிலங்க அரசு போர்க் குற்றவாளியே என்றும், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்ட தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் என்றும் தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, தமிழர்கள் அங்கே இனப் படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாற்றின் மீது விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.

4) இறுதிகட்டப் போரில் சரண்டைய வந்தவர்களை தங்கள் இராணுவத்தின் தலைமை கட்டளையிட்டதற்கு இணங்கவே படுகொலை செய்தோம் என்று சிறிலங்க களத் தளபதி ஒருவரும், அவர்களை சித்தரவதை செய்தே படுகொலை செய்தோம் என்று அந்த ஈன நடவடிக்கையில் ஈடுபட்ட சிங்கள சிப்பாய் ஒருவனும் பேசியதை சானல் 4 வெளியிட்டது. இதையும் பொய்யானதென சிறிலங்க அரசு மழுப்பியது.



5) தங்களிடம் சிக்கிய தமிழ்ப் போராளி ஒருவரை சங்கிலியால் பிணைத்து கத்தியால் குத்தி சித்தரவதை செய்து பிறகு கொன்ற புகைப்படங்கள் வெளிவந்தது.

இப்படி ஒன்றன் பின் ஒன்றாக ஆதாரங்களும், அதன் மீது நடவடிக்கை எடு என்று உலக அளவில் எழுந்த குரலாலும், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்து, தவறினால் சிறிலங்க பொருட்களுக்கு அளித்துவரும் வரிச் சலுகையை (GSP+) இரத்து செய்வோம் என்று எச்சரித்து, தற்காலிமான வரிச் சலுகையை நிறுத்தியும் வைத்தது.

டப்ளின் தீர்ப்பாயத்தின் அதிர்ச்சித் தீர்ப்பிற்குப் பிறகு செயல்படத் துவங்கிய ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன், இலங்கைப் போரில் நடந்து மனித உரிமை மீறல்கள் தொடர்பான, தான் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை வழங்க இரண்டு நிபுணர்களைக் கொண்ட குழு அமைப்பதாக அறிவித்தார்.

இதனால் நிலைகுலைந்த சிறிலங்க அரசு, தன்னை காத்துக் கொள்ளும் முகமாக, ‘போரினால் கற்ற பாடம், மக்களிடையே இணக்கப்பாடு’ என்ற தலைப்பில் 8 பேர் கொண்ட ஒரு டம்மி விசாரணை ஆணையத்தை அமைத்து உலக நாடுகளையும், ஐ.நா.வையும் ஏமாற்றப் பார்த்தது.

சிறிலங்கா கடைபிடித்த படுகொலை வழியைக் கடைபிடிக்கும் அதன் அண்டை நாடுகள் வரவேற்றன, ஆனால் உலகம் ஏற்கவில்லை. நேரடியாக லாபியில் இறங்கினார் ராஜபக்ச. தனது நாட்டின் அரசமைப்புச் சட்ட நிபுணரும், உண்மையை பேசாமல் இழுத்தடிக்கும் சாமர்த்தியம் வாய்ந்தவரும், அயலுறவு அமைச்சருமான பேராசிரியர் ஜி.எல்.பெய்ரீஸை உடனடியாக அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தார்.

அவர் ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனை சந்தித்து, தாங்கள் நடத்திய போரில் அத்து மீறல் ஏதும் நடந்துள்ளதா என்பதை கண்டறிய விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதை விளக்கினார். அதனைக் கேட்டுக் கொண்ட பான் கி மூன் பதிலேதும் தெரிவிக்கவில்லை. அதன் பிறகு, இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மீது ஐ.நா.வின் பன்னாட்டு பிரகடனங்கள் அடிப்படையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழுவை அமைக்க வேண்டாம் என்று வலியுறுத்தினார். அதை பான் கி மூன் ஏற்கவில்லை. இதனால் அதிர்ச்சியுற்றது சிறிலங்க தலைமை.



சிறிலங்க அதிபர் அமைத்த 8 பேர் கொண்ட விசாரணை ஆணையம் எத்தன்மை வாய்ந்தது, இதற்கு முன்னர் சிறிலங்க அதிபர்கள் நியமனம் செய்த ஆணையங்கள் எப்படி செயல்பட்டன என்பதையெல்லாம் உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் நன்கறிந்துள்ள நிலையில், அதன் யோக்கிதையை புரிந்துகொள்ளாமல் அப்படியே ஏற்பதற்கு ஐ.நா. என்ன டெல்லி அரசா? ஐ.நா. பொதுச் செயலர் தங்களுடைய கோரிக்கையை நிராகரித்துவிட்ட நிலையில், வாஷிங்டனைக் குறிவைத்துள்ளார் பெய்ரீஸ்.

அவருக்கு அங்கே மிகச் சாதகமான அதிர்வு கிடைத்துள்ளது என்று செய்திகள் கூறுகின்றன. சிறிலங்க அதிபர் அமைத்துள்ள ஆணையத்தை வரவேற்றுள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், “அந்த ஆணையம் நம்பிக்கை தருகிறது” என்று கூறிவிட்டு நிறுத்திக் கொள்ளாமல், “சிறிலங்க அரசப் படைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பான கடுமையான குற்றச்சாற்றுகள் அனைத்தையும் விசாரணைக் குழு முழுமையாக விசாரிக்கும் என்று உறுதியளித்துள்ளார்கள்” என்று கூறி ஒரு ஆப்பையும் வைத்துள்ளார் என்பதை கவனிக்கத் தவறலாகாது.



அதுமட்டுமல்ல, சிறிலங்க அதிபர் விசாரணைக்கு உத்தரவிட்டுவிட்டார், அதனால் ஐ.நா. விசாரணை தேவையில்லை என்றும் ஹில்லாரி கூறவில்லை! இந்த இடத்தில்தான் பெய்ரீஸ் லாபியும் தோற்றுள்ளது. இந்தியா, சீனா, பாகிஸ்தானைத் தவிர, இந்த உலகில் சிறிலங்க அரசை நம்புவதற்கு ஒரு நாடும் இல்லை என்கிற பெருமை பெற்றுவிட்டது ராஜபக்ச அரசு!

“ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையிலோ அல்லது பொது அவையிலோ எதையும் செய்ய முடியாத சக்திகள் (மனித உரிமை அமைப்புகள்), சில நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள இம்முயற்சியில் ஈடுபடுகின்றன. இந்த அமைப்புகள் ஆதாரங்களை எதையும் வெளியிடவில்லை. அந்த இடத்தில்தான் அவர்களுடைய குத்துவாள் மறைந்திருக்கிறது” என்று திகில் கதை கூறியுள்ளார்.

‌சி‌றில‌ங்க அர‌சி‌ற்கு எ‌திராக ஆதார‌ங்க‌ள் ஏது‌மி‌ல்லை எ‌ன்று ந‌ம்‌பினா‌ல் ‌பிறகு ப‌ன்னா‌ட்டு ‌விசாரணை‌‌க்கு ஒ‌ப்பு‌க்கொ‌ள்ள மறு‌ப்பது ஏ‌ன்? ஏனெ‌ன்றா‌ல், சா‌‌ட்‌சிகள‌ற்ற போ‌ர் எ‌ன்று இவ‌ர்க‌ள் பெருமையடி‌த்து‌க் கொ‌ண்ட த‌மிழன‌ப் படுகொலை‌க்கு இ‌ன்று ஏராளமான சா‌ட்‌சிக‌ள் உ‌ள்ளன. அவ‌ர்க‌ள் இ‌ன்னு‌ம் வா‌ழ்‌ந்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். ப‌ன்னா‌ட்டு ‌விசாரணை‌க் குழு த‌மி‌‌ழீழ‌த்‌தி‌ல் வ‌ந்து ‌விசாரணை நட‌த்‌தினா‌ல் அ‌ப்போது தெ‌ரியு‌ம் போ‌ர்‌க் கு‌ற்ற‌த்‌தி‌ற்கான சா‌ட்‌சிக‌ள் அ‌ங்‌கிரு‌ப்பது. இது ‌சி‌றில‌ங்க அர‌சி‌ற்கு‌ம் தெ‌ரியு‌ம், அதனா‌ல்தா‌ன் அ‌ஞ்சு‌கிறது.

போர்க் குற்றங்கள் குறித்தும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் 200க்கும் மேற்பட்ட புகைப்படங்களை வைத்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிரிவு இயக்குனர் எலைன் பியர்சன், அதில் விடுதலைப் புலிகள் ஒட்டுமொத்தமாகப் படுகொலை செய்யப்படுவதும், தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்படுவதும் உள்ளது என்று கூறியுள்ளது.

பாதுகாப்பு வலயத்திற்கு வாருங்கள் என்று அழைத்து, அவர்கள் மீது நாசகார குண்டுகள் வீசி அழித்துள்ளது என்று குற்றம் சாற்றியுள்ள சர்வதேச சிக்கல் தீர்வுக் குழுவின் ஆசியத் திட்ட இயக்குனர் பாப் டெம்ப்ளர், “ஆதாரங்களை அழிப்பதிலும், சாட்சிகளைக் காணடிப்பதிலும் சிறிலங்க அரசிற்கு ஒரு நீண்ட சரித்திரம் உள்ள காரணத்தினால்தான் நாங்கள் ஆதாரங்களை வெளியிடுவதில்லை” என்று கூறியுள்ளார்.

“சிறிலங்க அதிபர் நியமித்துள்ள இந்த விசாரணை ஆணையம் அங்கு நடந்த போர்க் குற்றங்கள் குறித்து நியாயமாக விசாரிக்கும் என்று நம்புவதற்கு எந்த அடிப்படையும் இல்லை” என்று சர்வதேச சிக்கல் தீர்வுக் குழுவின் தலைவரும், ஐ.நா.மனித உரிமை முன்னாள் ஆணையருமான லூயிஸ் ஆர்பர் கூறியுள்ளார்.

ஆக, இந்த உலகில் எந்த நாடும், எந்த அமைப்பும், எவரும் நம்பாத ஒரு ஆணையத்தை அமைத்து அதன் மூலம் தான் நடத்தி முடித்த இனப் படுகொலையை மூடி மறைத்திட ராஜபக்ச போட்டத் திட்டம் தவிடுபொடியாகிவிட்டது.

இதற்கு மேலும் எந்த லாபியும் சிறிலங்காவைக் காப்பாற்றப் போவதில்லை. பாலிவுட்டின் அழகான கலைஞர்களை அழைத்து கொழும்புவில் விருது வழங்கு விழா நடத்தி, இலங்கையின் சந்ததையைக் கைப்பற்ற நாவைத் தொங்கவிட்டுக் கொண்டு அலையும் இந்திய தொழில் நிறுவனக் கூட்டங்களைக் கூட்டி வணிக மேப்பாடு மாநாட்டை நடத்தியெல்லாம் 21ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய மானுடப் படுகொலையை மறைத்துவிடவும் முடியாது. போருக்கு பின்னான இலங்கையை தங்களின் வர்த்தக, ராஜதந்திர நலன்களுக்காக கூறுபோடத் துடிக்கும் தெற்காசிய வல்லாதிக்கங்களினாலும் இதற்கு மேலும் உண்மையை மறைத்திட முடியாது.

உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும் என்பது தமிழரின் முதுமொழி. சிங்கள இன வெறியுடன் சிறிலங்க அரசு நடத்திய தமிழினப் படுகொலை குற்றத்தில் இருந்து ராஜபக்ச மட்டுமல்ல, சிறிலங்காவிற்கு துணை நின்று அதனை நிறைவேற்ற உதவிய சக்திகளும் தப்பிக்க முடியாது.

குற்றவாளிகள் உறங்குவதில்லை, உண்மை அவர்களை உறங்க விடுவதுமில்லை.

Comments