நந்திக்கடலும் அம்பாந்தோட்டையும்

அடப்பாவிகளே..! சீன மக்களுக்கு பிடித்தமான ‘சீபாஸ்’ மீன் இனங்கள், நந்திக் கடலில் கிடைப்பதால்தானா, எறிகணைகளையும் தாங்கிகளையும் வழங்கி, இறுதிப் போரில் இத்தனை ஆயிரம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்க உதவியது சீனா? நந்திக்கடலை, சீன நிறுவனமொன்றிற்கு தாரை வார்க்க, சிறீலங்காவின் மீன்பிடி அமைச்சர் இராஜித சேனரட்ன அவசரப்படுவதற்கு வேறொரு பின்புலமும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இலங்கை விவகாரம் தொடர்பாக, பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விவாதத்திலும், நந்திக்கடல் மர்மங்கள் வெளிப்படுத்தப்பட்டது. இறுதிப்போரில், மக்களும், போராளிகளும் நயவஞ்சகமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாக, சர்வதேச அளவில் எழும் போர்க்குற்றச் சாட்டுக்களை மூடி மறைப்பதற்கு, பல சதிகளை சிங்களம் மேற்கொள்ள முயற்சிப்பதை நாம் அறிவோம். சீன நிறுவனத்திற்கு, நந்திக்கடலை கையளித்து, மீன் இன விருத்திக்கு வழி சமைக்கப் போவதாக கூறும் அதேவேளை, இன அழிப்புத் தடயங்களை வேரோடு அழிப்பதற்கு, சீனாவின் உதவியை சிங்களம் நாடுவதாகக் கூறப்படுகிறது.
எலும்புக் கூடுகளின் நகரமாகும் கிளிநொச்சியையும், அபிவிருத்தி என்கிற போர்
வையில், இன அழிவிற்குத் துணை போனவர்களிடம் கையளிக்கலாம்.

1000 கோடி ரூபாய் இந்திய நாணய மதிப்பில், போரினால் இடம்பெயர்ந்து நடுத் தெருவில் நிற்கும் தமிழ் மக்களுக்கு 50,000 வீடுகளைக் கட்டித்தர இந்தியா முன்வந் திருப்பதாக செய்திகள் வெளிவந்தன. யாழ்குடாவிலுள்ள தமிழர் மறுவாழ்விற்கும், அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும், 80 கோடி அமெரிக்க டொலர்களை ஒதுக்கயுள்ள இந்தியா, 13 ஆயிரம் வீடுகளையும் அங்கு நிர்மாணிக்கவிருக்கிறது. ஆனாலும் எதுவித வேலைத் திட்டங்
களும் இன்றி, நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்களின் வங்கிக் கணக்கில், பணத்தை வைப்பிலிட இந்தியா முன்வருவதன் நோக்கம் சற்று வித்தியாசமானது.

தம்மைத் தவிர வேறெவரும், தமிழ் மக்களிற்கான மீள் குடியேற்ற நிவாரணப் பணியை முன்னெடுத்துவிடக் கூடாதென்கிற அவசரம், இந்திய நகர்வில் தென்படுவதுபோல் தெரிகிறது. 20வது தடவையாக சிறீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள யசூசி அகாசி அவர்கள், வடபகுதி மீள் குடியேற்றத்தில், அக்கறை கொள்வதையும் அவதானிக்க வேண்டும். யார் இடித்தாலும் அரிசியாகும். ஆனால் எவர் இடிக்கக்கூடாதென்பதை தீர்மானிப்பதில் இந்து சமுத்திர பிராந்திய வல்லரசே முதன்மைப் பாத்திரத்தை வகிக்குமென்பதை தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மகிந்தரின் மூன்றுநாள் இந்திய விஜயத்தின் பின்னர், இந்திய அரசின் போக்கில் தீவிர மாற்றமொன்று காணப்படுவதை மறுக்க முடியாது.

முழுமையான முதலீட்டு ஆக்கிரமிப்பு ஒப்பந்தமான ‘சீபா’ உடன்படிக்கை, கைநழு
விச் சென்ற நிலையில், வட-கிழக்கில் தனது கூடுதல் கவனத்தை திருப்பியுள்ளது இந்தியா.

2008ம் ஆண்டு புள்ளி விபரப்படி,4.3 ரில்லியன் அமெரிக்க டொலர்களை தேசிய மொத்த உற்பத்தி (GDP) யாகக் கொண்ட சீனாவும், 1.2 ரில்லியன் டொலர்களைக் கொண்ட இந்தியாவும், 40 பில்லியன் சிறீலங்காவில், சந்தைப் போட்டியில் ஈடுபடுகிறார்களென்று கணிப்பிடுவது தவறானதாகும். இங்கு கேந்திர மையத் தரிப்பிடத்தை கைவசப்படுத்தும் போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில், நீண்டகால, கடற்படைத்தள நிர்மாணிப்புக் கனவில், சீனா முன்னெடுக்கும் நகர்வுகளே இராஜதந்திர ரீதியில் காத்திரமானது. இந்தியாவின் நகர்வுகளைப் பொறுத்தவரை, சீனாவின் அம்பாந்தோட்டைக்கு நிகரான வேறொரு கேந்திர மையங்களை, எங்கே, தேடுவது என்கிற தடுமாற்றத்தில் தரித்து நிற்கிறது.

ஏனெனில் சீனன்குடா எண்ணெய் சேமிப்பு குதங்களும், காங்கேசன்துறை துறைமுகமும் அம்பாந்தோட்டைக்கு மாற்றீடாக அமையப்போவதில்லை. ஆகவே வட-கிழக்கில் தமது நிலையினை பலப்படுத்துவதனூடாக, சீனாவின் தென்னிலங்கை ஆக்கிரமிப்பினை, சமநிலைப்படுத்தலாமென்று இந்தியா கருதுகிறது. முதலீட்டு ஆக்கிரமிப்பின் மூலம் இரு முனைவாக்கம் பெறும் இலங்கையின் வர்த்தகச் சந்தை, அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும். அதேவேளை சீன உதவிப் பிரதமரின் அண்மைய இலங்கை விஜயம், இந்தியாவிற்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திலுள்ள குவாடர் (Gwadar) துறைமுக அபிவிருத்தியின் முதற்கட்ட பணியை பூர்த்தி செய்துள்ள சீனா, இந்த வருட இறுதியில் அம்பாந்தோட்டை துறைமுக கட்டுமானத்தின் முதற்கட்டத்தை நிறைவு செய்துவிடும்.

கொழும்பு துறைமுகத்திற்கு நிகராக, 30 கப்பல்களை நிறுத்தக்கூடிய வகையில், அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதே சீனாவின் நீண்டகால நோக்கம்.

அத்தோடு எண்ணெய் சேமிப்பு குதங்கள் மற்றும் சப்புகஸ்கந்த போன்ற எண் ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்கும் திட்டமும் இதில் உள்ளடங்கும். ஆனாலும் மகிந்தாவின் அம்பாந்தோட்டை கனவினை சீனா நிறைவேற்றுமாவென்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். பாகிஸ்தான் துறைமுகத்தில் சீனக் கடற்படைத்தள நிர்மாணிப்பு பின் போடப்படு மாயின், அம்பாந்தோட்டையிலேயே தனது முழுக் கவனத்தையும் சீனா செலுத்துமெனபதே இந்திய ஆய்வாளர் பி. இராமனின் எதிர்வுகூறலாக அமைகிறது.

அதேவேளை பாகிஸ்தான், சிறீலங்கா, மியன்மார் என்கிற மூன்று தெரிவுகளில், எந்த நாட்டில் தனது தீவிர கவனத்தை சீனா செலுத்தப்போகிறது என்பது குறித்து இந்தியாவாலும் அனுமானிக்க இயலாமல் உள்ளதென்பதே உண்மையாகும். ஒரு இலக்கில் பார்வையைச் செலுத்தி, வேறொரு இலக்கிற்கு பந்தை உதைக்கும், சீனாவின் கால்பந்து விளையாட்டை, சீன உதவி அதிபரின் அண்மைய பங்களாதேஷ் விஜயத்தில் காணக்கூடியதாகவிருந்தது.

சிட்டகொங் ஆழ்கடல் துறைமுக அபிவிருத்திப் பணிக்கு உதவிசெய்வதுபோல் பாவனை காட்டி, அம்பாந்தோட்டையில் தனது தீவிரப் பார்வையை செலுத்துகிறது சீனா.

இருப்பினும் மியன்மாரா (பர்மா) அல்லது பங்களாதேஷா என்கிற தெரிவுச் சிக்கல் உருவாகும்போது, சீனாவானது, மியன்மார் முறைமுகத்தையே தெரிவுசெய்யும் என்பது தான் யதார்த்தமானது. ஆனாலும் இந்தியாவைச் சூழ, சீனா கோர்க்கும் துறைமுக முத்துக்களில், பாகிஸ்தான், மியன்மாரை விட மகிந்தரின் அம்பாந்தோட்டையே சக்திவாய்ந்த முத்தாக அமையப்போகிறது. ஆகவே இதன் எதிர்வினையாக இன்னும்பல இந்திய ‘பூமாலை’ நடவடிக்கைகளை இனிவரும் காலங்களில் நாம் காணக்கூடியதாகவிருக்கும்.

-இதயச்சந்திரன்

நன்றி்:ஈழமுரசு

Comments