தமிழீழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தமது உயரிய உயிர்களை ஈகம் செய்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுதும் நம்பியிருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இன்று கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்க அரசுத் தலைவரது சிறப்பு உதவியாளரும், இனப்படுகொலை, மனித உரிமைகள், மற்றும் பல துறைகளுக்குப் பொறுப்பாக இருப்பவருமான சமந்தா பவர் (Samantha Power), போக்குற்றம், மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் இயக்குனர் டேவிட் பிறெஸ்மான் (David Pressman) ஆகிய முக்கிய பொறுப்புக்களில் இருக்கும் இருவருமே ஒபாமாவின் வாழ்த்தையும், பாராட்டையும் மகிந்தவிடம் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை வெற்றிகரமாக ஒழித்த சிறீலங்கா அரசுடன் தமது உறவை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அரசுத் தலைவர் பராக் ஒபாமா ஆர்வமாக இருப்பதாக இவர்கள் தெரிவித்த கருத்தை மகிந்தவும் ஏற்றுக்கொண்டு, தனது விருப்பத்தினையும் பதிலுக்குத் தெரிவித்துள்ளார்.
சிறீலங்கா அரசு இழைத்துள்ள போர்க் குற்றங்களுக்கு நீதி விசாரணை வேண்டும் என, புலம்பெயர்ந்த மக்களும், பன்னாட்டு மனித உரிமை அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துவரும் ஒரு முக்கிய காலகட்டத்தில், போர்க்குற்றம், மற்றும் மனித உரிமைகளுக்குப் பொறுப்பாக இருக்கும் ஒபாமாவிற்கு நெருங்கிய இரண்டு முக்கிய அதிகாரிகள் சிறீலங்கா அரசிற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டுள்ளமை பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளன.
அமெரிக்காவில் இயங்கும் ஒபாமாவிற்கான தமிழர்கள் என்ற அமைப்பும், ஏனைய அமைப்புக்களும் இந்த விடயத்தை அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன், அமெரிக்காவின் உண்மையான நிலைப்பாட்டை அறிந்து தமிழ் மக்களிற்கு தெளிவுபடுத்துவது மிகவும் முக்கிய பணியாகும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, தமது பிரதிநிதிகள் இருவரும் 14ஆம் நாள் முதல் 18ஆம் நாள்வரை இலங்கையில் தங்கியிருப்பர் எனவும், கொழும்பில் அரச பிரதிநிதிகளைச் சந்திக்கும் இவர்கள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பிற்கும் சென்றும் அங்கும் அரச பிரதிநிதிகளையே சந்திக்க இருப்பதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் அறிக்கை தெரிவிக்கும் அதேவேளை, பொதுமக்களையோ, அன்றி பொதுமக்களின் பிரதிநிதிகள், மனித உரிமை அமைப்புக்களையோ இவர்கள் சந்திப்பது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
அமெரிக்காவில் சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிற்கும், அமெரிக்க வெளிவிவகார (இராஜாங்க) அமைச்சர் ஹிலாரி கிளின்ரனுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக நடைபெற்ற இன்றைய சந்திப்பில், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா ஏ. புட்டினஸ் (Patricia A Butenis), சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், வெளிவிவகாரச் செயலர் றொமேஸ் ஜயசிங்க, அரசுத் தலைவரது செயலர் லலித் வீரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
Comments