சரத்குமாரும் தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவாரா?

இலங்கை அரசு தமிழர்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று கூறிவிடமுடியாது

“இலங்கை அரசு தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று நாம் பொத்தம் பொதுவாக சொல்லிவிட முடியாது - ஹெட்லைன்ஸ் டுடேயில் சரத்குமார்


ஜூன் 3 ஆம் தேதி , அய்ஃபா விருது விழா திட்டமிட்டபடி தொடங்கிய அதே நாள் இரவு 10 மணி அளவில் ஹெட்லைன்ஸ் டுடே செய்தி தொலைக்காட்சியில் ஒரு விவாதம் நடந்தது. அவ்விவாதத்தில் அய்ஃபா இயக்குனர் திரு சப்பாஸ் ஜோசப், தமிழகத்திலிருந்து சரத்குமார் மற்றும் சேவ் தமிழ் அமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். அப்பொழுது, திரு. சரத்குமார் பேசியவைத் தமிழ்த் திரையுலகத்தைக் கோமாளியாகத் தான் இந்தியர்களுக்கு காட்டியிருக்கும்.

கேள்வி: தமிழர்களின் நலனுக்காக ஏராளமானவைச் செய்யப்படுகின்றன. இன்று கூட சப்பாஸ் ஜோசப்பும், சல்மான் கானும் யாழ்ப்பாணம் சென்று இடம்பெயர்ந்த மக்களைச் சந்தித்துள்ளார்கள். அங்கு நடக்கும் விழாவிலிருந்து திரட்டப்படும் நிதியைத் தமிழர்களுக்குத் தானம் செய்யப்போகின்றார்கள்...

சேவ் தமிழ்: கொழும்பில் நடக்கும் அய்ஃபா விழாவை தமிழ்நாட்டில் எதிர்ப்பதற்கான அடிப்படை காரணத்தைப் புரிந்து கொள்ளுமாறு இவ்விவாதத்தில் கலந்து கொண்டிருப்பவர்களை வேண்டிக் கொள்கிறேன்.சென்ற ஆண்டு நடந்த போரில் 50,000 த்திற்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்தால் கொல்லப்பட்டார்கள். போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக் குற்றங்கள் முதலியவற்றுக்காக விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற ஐ.நா மற்றும் சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது இலங்கை அரசு. அப்படி இருக்கும் போது, அய்ஃபா விழாவைக் கொழும்பில் ஏன் நடத்த வேண்டும்?

கேள்வி: திரு சரத்குமார் அவர்களே, அய்ஃபாவை எதிர்ப்பதன் மூலம் தமிழர்களின் நலனுக்கு ஒரு பப்ளிசிட்டி தேடுவது போல் தெரிகின்றதே?


இந்த கேள்விக்கு சரத்குமார் அளித்த பதில் பின்வருமாறு.

திரு பிரபாகரனின் மறைவோடு போர் முடிவுக்கு வந்த பிறகு, 3 லட்சம் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டி இருந்தது. தமிழகத்தில் இருந்து ஒரு எம்.பிக்கள் குழு சென்று அங்குள்ள குடியேற்றங்களைக் கண்டு வந்தது. அவர்கள் சென்று வந்த பின் அங்கு நடந்து வரும் மீள்குடியேற்றங்கள் தமக்கு திருப்திகரமாக இருப்பதாகச் சொன்னார்கள். இருந்தாலும் இன்னும் ஏராளமானவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்படாமல் இருக்கின்றார்கள். அது தான் அங்குள்ள முக்கியமான பிரச்சனை. நாங்கள் அங்குள்ள மக்களிடம் மொழியால் இணைக்கப்பட்டுள்ளோம். மேலும், இந்தியாவிற்கு மிக அருகில் உள்ள நாடு என்பதால் நாங்கள் மிகவும் கவலை கொள்கிறோம். எனவே, அங்குள்ள தமிழர்களுக்கு எம்முடைய ஆதரவைப் பதிவு செய்துள்ளோம். எங்களுக்கு அமைதியும், பேச்சுவார்த்தையும் மட்டும் தான் வேண்டும்.அதே நேரத்தில், அங்குள்ள தமிழர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்.அதைத் தான் நாங்கள் விரும்புகின்றோம். அங்கு நிலவும் அமைதி முழு திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில் , அய்ஃபா கொழும்புவில் ஏன் நடத்தப்பட வேண்டும்? இது தான் ஒரே பிரச்சனை. நாங்கள் அய்ஃபா விழாவுக்கே எதிரானவர்கள் அல்ல. உலகில் எங்கு வேண்டுமானாலும் நடத்திக்கொள்ளலாம். கொழும்பு என்பதால் மட்டும் தான் நாங்கள் எதிர்த்தோம். உண்மையில், தமிழர்களை மீள குடியமர்த்துவது இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு பெரும் சுமை என்றே நான் கருதுகிறேன். இலங்கை அரசு தமிழர்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று நாம் பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. திரையுலகத்திடமிருந்து இதை எதிர்பார்ப்பதை விட, இவ்விஷயத்தில் இந்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். திரையுலகம் தான் எப்போதும் உணர்வுகளைக் கொண்டுள்ளது; போராடுகின்றது. எனவே, இந்திய அரசைத் தான் நாம் அணுக வேண்டும்.
இந்த பதில் நம்மை அதிர்ச்சியிலும், கோபத்திலும் தள்ளுகின்றது.
தென்னிந்திய திரையுலகம், அய்ஃபாவைக் கொழும்பில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் காரணம் என்ன ?

தென்னிந்திய திரையுலகத்தின் தீர்மானத்தில் இருந்து சில வரிகள்:

Ø இலங்கையில் தமிழினத்தைப் படுகொலை செய்த சிங்கள வெறிப்பிடித்த அரசு, தமிழர்களின் மயான பூமியில் விழா மேடை அமைத்து இந்த திரைப்பட விழாவை நடத்துகிறது.

Ø இரத்தக்கரைப் படிந்த இலங்கையில் நடக்கும் இந்த திரைப்பட விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் என எங்களது வட இந்திய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள், தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Ø இனி தென்னிந்திய மொழி திரைப்படங்களின் படப்பிடிப்பு மற்றும் கலைவிழாக்கள் இலங்கையில் நடத்தப்பட மாட்டாது.

இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு மாறாக, தமிழ்நாட்டில் உள்ள எதிர்ப்புக்கு காரணம் அங்குள்ள தமிழர்களின் மீள்குடியேற்றம் தொடர்பானது என்றும் அது தான் ஒரே காரணம் என்றும் இலங்கை அரசும் அதற்கு முயற்சி செய்து வருகின்றது என்றும் சரத்குமார் பேட்டி கொடுக்கின்றார். ’தமிழினப்படுகொலை’ என்ற சொல்லைப் பயன்படுத்தாமலே பேசி முடிக்கின்றார். சப்பாஸ் ஜோசப்பும், சல்மான் கானும் தமிழர்களுக்கு நிவாரண உதவிகள் மட்டும் செய்ய அங்கு நிகழ்ந்தது ஒன்றும் சுனாமி போன்ற இயற்கை பேரழிவு அல்ல. திட்டமிட்ட ஓர் இன அழிப்புப் போர். தமிழர்களின் சார்பாக தென்னிந்தியத் திரையுலகம் குரல் எழுப்பியது எதற்காக? அக்குரல், ’தமிழினப்படுகொலைப் புரிந்த சிங்கள அரசைப் புறக்கணிக்க வேண்டும், தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்’ என்ற நீதிக்கான அறைகூவல். இலங்கை அரசு போர்க்குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் புரிந்துள்ளன என்று டப்ளின் மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது. ஐ.நா மன்றத்தைச் சேர்ந்த நவநீதம்பிள்ளை, ’போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குரல் எழுப்பி வருகின்றார். ’நீதியின் பால் பெரு விருப்பு கொண்ட இனம் தமிழினம்’ என்று சொல்லி உயிர் நீத்தார் தியாகி முத்துக்குமார். ஆனால், சரத்குமாருக்கு மட்டும் ஏன் அது முக்கியமான விஷயமாகப் படவில்லை?

இனப்படுகொலை குறித்து பேசாதது மட்டுமல்ல. ’மீள்குடியேற்றம்’ என்று பேசிய போது கூட அதையும் சிங்கள அரசைப் பாதுகாக்கும் நோக்கோடே பேசினார். ‘வதை முகாமில் சிங்கள அரசால் அடைக்கப்பட்ட தமிழர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும்’ என்று குறிப்பிடாமல், பொத்தாம் பொதுவாக ’மீள்குடியேற்றம்’ என்று மட்டும் பேசினார். முகாம் என்ற சொல்லையும் அவர் பயன்படுத்தவேவில்லை. மாறாக இலங்கை அரசு தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட முடியாது என்று பேசுகின்றார்.

அடுத்தது, இந்திய அரசு பற்றி பேசியது. தென்னிந்திய திரையுலகம் பாலிவுட் நடிகர்- நடிகைகளை, அய்ஃபா விழா கொழும்பில் நடந்தால், ’அதை புறக்கணியுங்கள்’ என்று தான் வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களை ஈழத் தமிழருக்காகப் போர் தொடுக்கச் சொல்லவில்லை. சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடச் சொல்லவில்லை. விழாவைப் புறக்கணிக்கத்தான் கேட்டார்கள். இதைப் புரிந்து கொண்ட பலரும் அவ்வண்ணமே விழாவைப் புறக்கணித்தார்கள். இதில் இந்திய அரசு பற்றி நாம் பேசுவதற்கு என்ன இருக்கின்றது?. இதை விட்டுவிட்டு, இந்திய அரசைத் தான் அணுக வேண்டும் என்று தென்னிந்திய திரையுலகத்துக்கு அறிவுரை வழங்குகின்றார் சரத்குமார்.

இதுதான் தமிழீழ விடுதலை போராட்டம் குறித்த இன்றைய தேவைகள் பற்றிய சரத்குமாரின் புரிதலா? இல்லை தமிழினப்படுகொலையை மறைக்கத் துடிக்கும் சிங்கள அரசுக்கு துணை போகும் நிலைப்பாடா? ஆங்கில ஊடகத்திற்கு தானே நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேட்டி கொடுக்கின்றோம் என்று தமிழினப் படுகொலையை மறைத்துப் பேசினாரா? இதைப் போன்றே இனப்படுகொலையை மறைத்து சிங்கள அரசை ஆதரித்து ஏதாவது ஒரு தமிழ் ஊடகத்தில் பேசுவாரா?

இனவெறிச் சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரால் பேரழிவைச் சந்தித்திருக்கும் ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தென்னிந்திய திரையுலகம் குரல் கொடுத்தது. ஆனால், பொறுப்பிலிருக்கும் சரத்குமாரோ இனப்படுகொலையை மூடி மறைக்க முயன்றது வேதனை மட்டுமல்ல வெட்கமும் கூட.

அகில இந்திய செய்தி தொலைக்காட்சியில் பேசக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்து கூறுவதன் மூலம் நீதிக்கு துணை நிற்பதற்கு மாறாக, சிங்களப் பேரினவாதத்திற்கு கவசமாகிய சரத்குமார், நீதிக்காகப் போராடிவரும் மக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

இல்லையேல், இனப்படுகொலையை மறைக்கத் துணை போன சல்மான் கான், விவேக் ஓபராய் வரிசையில் சரத்குமாரையும் சேர்க்க வேண்டி வரும்.

இணைப்பு: சரத்குமார் பேசியவற்றைத் தாங்கியுள்ள சுட்டி:






குறிப்பு: இன்னொரு கேள்விக்கு சரத்குமார் அளித்த பதில் பின் வருமாறு. இது குறித்த ஆய்வை வாசகர்களுக்கும், தென்னிந்திய திரையுலகத்திற்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் விட்டுவிடுவோம்..


”நான் இதை இவ்வண்ணம் விளக்க விரும்புகிறேன். நாங்கள் எந்த நட்சத்திரங்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்க விரும்பவில்லை. நாமெல்லாம் சகோதரர்களாக ஒன்றுபட்டுள்ளோம். நான் அமெரிக்காவிலிருந்து திரும்பிய போது அவர்கள் என்னிடம் சொன்னார்கள், “ தென்னிந்தியாவிலிருந்து யாரும் கலந்து கொள்ளக்கூடாது. அங்குள்ள தமிழர்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பிய காரணத்தினால் அவ்விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களும் கலந்து கொள்ளக் கூடாது என்று வேண்டுகோள் விட்டார்கள். இது சரத்குமாரின் போராட்டம் அல்ல. நான் ஒரு அரசியல்வாதியும் கூட. தனிப்பட்ட கருத்துக்களும் எனக்கு உண்டு. இம்முடிவு ஒட்டு மொத்தத் தென்னிந்தியத் திரையுலகத்தால் எடுக்கப்பட்டது. நான் இல்லாத போது, எங்கள் சங்கத்தின் பொது செயலாளரால் கையெழுத்திடப்பட்டக் கடிதத்தை தென்னிந்திய நடிகர் சங்கம் மும்பை திரையுலகத்திற்கு அனுப்பியது. ”இறுதி நேரத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. நாங்கள் இரக்கப்படுகின்றோம்” என்று அவர்கள் கடிதம் அளித்தார்கள். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் என்ற் முறையில் நான் சொல்கிறேன், ”அது ஒரு திருப்திகரமான கடிதம்”. இப்போது அந்நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. இதை மேலும் சிக்கலாக்க வேண்டாம். அவர்கள் திரும்பி வரட்டும். தென்னிந்திய திரையுலகம் அவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர்களுக்கு தடை விதிக்கப் போகிறதா? என்பது குறித்து நாம் மீண்டும் பரிசீலிப்போம். இவ்வுலகில் யாரும் யாரையும் எந்த இடத்திலும் பணிபுரிவதைத் தடை செய்ய முடியும் என்று எனக்கு நம்பிக்கை இல்லை.”

- சேவ் தமிழ் குழுமம்.

Comments