வருகிறார்கள் போகிறார்கள்: ஈழத் தமிழருக்கு விமோசனம் கிடைக்குமா?

முக்கிய இராஜதந்திரிகளின் வருகையால் இந்தவாரம் இலங்கை ஒரு களைகட்டிவிட்டது. சிங்கள அரசியல்வாதிகளின் மத்தியில் ஒரு இனம்தெரியாத மகிழ்ச்சி. அவர்களின் மகிழ்ச்சிக்கு இரு காரணங்கள் உண்டு.

ஓன்று அதாவது வெள்ளிக்கிழமை (ஜூன் 18) நடைபெறும் விடுதலைப புலிகளை வெற்றிகொண்ட ஒரு வருட பூர்த்தி விழா. அடுத்ததாக இந்த வெற்றி நிகழ்ச்சி நடைபெறும் வாரத்தில் வரும் முக்கிய இராஜதந்திரிகளை எப்படியாவது தம்வசப்படுத்திவிட வேண்டும் என்ற ஆர்ப்பரிப்புடன் ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கவைக்கப்பட்டு சளைக்காமல் விருந்துகளை அளித்துக் கொண்டிருக்கின்றது இலங்கை அரசு.

பாவம் ஈழத் தமிழர் கண்ணீரும் கம்பலையுமாக இரவல் பாடிக் கொண்டிருக்கின்றார்கள். வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருகிறார்கள் போகிறார்கள், இவர்கள் மூலமாக ஈழத் தமிழரின் வாழ்வில் விடியல் வருமா என்பது தான் சமூக ஆய்வாளர்களிடம் எழும் கேள்வி.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் பல்கலாச்சார மற்றும் மனித உரிமைகளுக்கான சிறப்பு உதவியாளர் சமந்தா பவர் மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அவையின் யுத்த குற்றவியல் மற்றும் வன்கொடுமைகளுக்கு பொறுப்பான டேவிட் பிரஸ்மேன் ஆகியோர் திங்கட்கிழமையன்று கொழும்பை வந்தடைந்தார்கள். இவர்கள் நான்கு நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து கூட்டங்களில் கலந்து கொள்கின்றார்கள்.

கொழும்பிலுள்ள அமெரிக்காவின் தூதுவராலயம் விடுத்துள்ள பத்திரிகை அறிக்கையில் கடந்த மாதம் இலங்கையின் மற்றும் அமெரிக்காவின் வெளிநாட்டு அமைச்சர்களுக்கு இடையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில்தான் இவர்களின் விஜயம் அமைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி செவ்வாய்க்கிழமை இரவு கொழும்பை வந்தடைந்து 20-ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரையில் தங்கியிருந்து சிங்கள மற்றும் தமிழ் தலைவர்களை சந்திப்பார் என்று ஜப்பானின் இலங்கைக்கான தூதுவராலயம் அறிக்கைவாயிலாக தெரிவித்தது.

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் 2002-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சமாதான ஓம்பந்தத்திற்குப் பின்னர் ஜப்பானிய அரசினால் இவர் இலங்கைக்கான சிறப்பு தூதுவராக நியமிக்கப்பட்டார். பல தடைவைகள் இலங்கைக்கு விஜயம் செய்த இவரினால் இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் சந்திரிகா அவரின் பின்னர் வந்த மகிந்தா அரசுகளினால் தமிழர் பகுதிகள் மீது கட்டவீழ்த்தப்பட இராணுவ நடவடிக்கையை உலக நாடுகளினால் நிறுத்தமுடியவில்லை. குறிப்பாக அகாசி அவர்கள் பலதடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்து போரை நிறுத்த முயற்சித்தும் இலங்கை யுத்த முனைப்பை விடவில்லை. தோல்வி முகத்துடன் சென்ற அகாசி விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாக அறிவித்து அதன் ஒரு வருட பூர்த்தியை சிங்கள அரசு இந்த வெள்ளிக்கிழமை கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் காலத்தில் இவரின் வருகை பலரிடம் சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

இன்னுமொரு முக்கிய விருந்தினர் ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல்துறை உதவிச்செயலாளர் லின் பெஸ்கோ. இவர் புதன்கிழமை அதிகாலை கொழும்பை வந்தடைந்தார். இவர் சனிக்கிழமை வரை இலங்கையில் தங்கியிருந்து அரசியல் தலைவர்களையும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கின்றார். இவரின் அறிக்கையின் பின்னர் தான் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை மனித உரிமை விடயத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்று அறியமுடிகின்றது.

ஆகவே தான் இலங்கை அரசு இவர்களை எப்படியாயினும் தன் வலையில் வீழ்த்திவிடவேண்டும் என்று கங்கணம் கட்டி களம் இறங்கியிருக்கின்றது.


இவர்களின் பயணத்தின் நோக்கம் என்ன?

இலங்கை வந்தடைந்த அமெரிக்க இராஜதந்திரிகள் மறுதினமே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்தனர். அவர்களின் சந்திப்பில் போர்க்குற்றங்கள் பற்றியதாக எந்தவொரு கருத்துப் பரிமாற்றமமும் இடம்பெற்றதாக தகவல் இல்லை. ஆனால் இரு சாராரும் போருக்கு பின்னரான நிலை தொடர்பாக கலந்துரையாடினர். அத்துடன் இரு நாடுகளுக்கிடையேயும் உள்ள இராஜதந்திர உறவுமுறைகளை வலுப்படுத்தவேண்டிய விடயம் குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர்.

கடந்த சில வருடங்களாக இலங்கை அரசு மீது அமெரிக்க அரசு மனித உரிமை பிரச்னையை முன்வைத்து கண்டன அறிக்கையும் அதற்கு பதிலாக இலங்கை அரசும் அமெரிக்கா மீது சேறு வாரிப் பூசுவதுபோன்ற பதில் அறிக்கைகளும் அமைந்திருந்தன.

கடந்த வருடம் இடம்பெற்ற நான்காம் ஈழப்போரின் இறுதிப் பகுதியில் பல ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் மற்றும் பல மனித உரிமை மீறல் சம்பவங்களுக்காக இலங்கை மீது சுயாதீன விசாரணை நடைபெற வேண்டுமென்று அமெரிக்கா தொடந்தும் குரல் கொடுத்து வந்தது. ஆனால் அமெரிக்காவின் நடவடிக்கையில் இப்பொழுது சந்தேகம் வலுக்கத் தொடங்கியுள்ளது.

இரு இராஜதந்திரிகளும் யாழ்ப்பாணம் சென்று அரச பிரதிநிதிகளை மற்றும் யாழ் ஆயர் ஆகியோரைச் சந்தித்தார்கள். விடுதலைப் புலிகள் மீது இந்தியா தடை விதித்தவுடன் அமெரிக்கா மற்றும் பிரித்தானிய அரசுகள் உடனையே தடை விதித்தது. விடுதலைப் புலிகளை தடைவிதிக்க இந்தியா கொடுத்த காரணம் ராஜீவை புலிகள் கொன்றுவிட்டார்களென்று. ஆனால் அமெரிக்காவிற்கோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிராக புலிகள் ஒன்றும் செய்யவில்லையே. எதற்காக இந்தியா தடை செய்த பின்னர் மட்டும் இந்த நாடுகள் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க முனைந்தது என்று பலர் கேட்கலாம்.

இலங்கையின் அயல்நாடான இந்தியா என்ன சொல்கின்றதோ அதைத் தான் பல நாடுகள் கேட்கின்றன என்பது மட்டும் உண்மை. ராஜீவ் சாவிற்கு முன்னர் பல இலங்கைத் தலைவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள். யாரால் இவர்கள் கொலைசெய்யப்பட்டார்கள் என்பது கேள்வி அல்ல. எதற்காக அன்று எழாத கேள்வி ராஜீவ் மரணத்திற்கு பின்னர் எழுந்தது.

ஏதோ அமெரிக்கா ஈழத் தமிழருக்கு விடிவை பெற்றுத்தரும் என்று எண்ணியிருந்த பல லட்சம் தமிழரின் மனங்களில் அதிர்ச்சியை உண்டாக்கியது அமெரிக்காவின் இந்த வார அறிக்கை. மூன்று தசாப்தங்களாக விடுதலைப் புலிகள் யுத்தம் செய்து நாட்டை இந்த நிலைக்கு ஆக்கிவிட்டார்கள் என்றும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இலங்கை வந்தவுடன் ஐ.நா.வின் அரசியல்துறை உதவி செயலாளர் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். இதன் போது வற்றாப்பளை பகுதியில் மீள்குடியமர்த்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார். மக்களின் வாழ்க்கை யுத்ததின் போது அவர்கள் அனுபவித்த துன்பங்கள் என்பவை தொடர்பில் அவர் மக்களிடம் இருந்து தகவல்களை பெற்றுக்கொண்டதாக தகவல். மீள்குடியேற்ற நடவடிக்கைகளையும் அவர் பார்வையிட்டார். கண்ணி வெடி அகற்றல் தொடர்பான விபரங்களையும் அறிந்து கொண்டார்.

கொழும்பு திரும்பியவுடன் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின் போது இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு மற்றும் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் சந்தித்து மீள்குடியேற்றம், அரசியல் தீர்வு குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை, மீள்டியேற்றம், அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே தற்போது நிலவும் கருத்து வேறுபாடுகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பான நிபுணர்கள் குழு நியமனம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அடுத்த வாரம் தகவல்களை வெளியிடுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜப்பானின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி யசூசி அகாசி அரசியல் தலைவர்களை சந்தித்து இடம்பெயர்ந்த நிலையில் உள்ளவர்களை, மீளக் குடியமர்த்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கோரியிருந்தார். யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்த அகாசி யாழில் ஜப்பானின் நிதியுதவியுடன் மீள் குடியேற்றம் குறித்த திட்டங்களின் முன்னேற்றங்களை நேரடியாக சென்று பார்வையிட்டார்.

ஜப்பான் இலங்கைக்கு அதிகளவில் நன்கொடையளிக்கும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலங்கைக்கு தொடர்ந்தும் ஜப்பான் நன்கொடையளிக்கும் என்று வாக்குறுதியளித்தார். இலங்கைக்கு எதிராக வெளிநாடுகளில் உள்ள புலிகள் இயக்கம் மேற்கொண்டுவரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை உருவாக்கும் முயற்சியை சர்வதேச சமூகம் முறியடிக்கவேண்டும் என பிரதமர் ஜயரத்ன அகாசியை சந்தித்த வேளையில் கோரிக்கை விடுத்தார்.

புலிகள் இயக்கத்துக்கு உத்தியோகபூர்வமாக தடை விதித்துள்ள சில நாடுகள் அவ்வியக்கத்தினரை தமது நாடுகளுக்குள் அனுமதித்துள்ளமையானது அந்நாட்டு அரசாங்கங்கள் இலங்கைக்கு செய்யும் நம்பிக்கை துரோகமாகும் என்றும் அவரிடம் ஜயரத்னா தெரிவித்தார். இதனை செவிமடுத்த அகாசி பார்ப்போமென சொன்னதாக தகவல்.

ஐநா பிரதிநிதியின் வருகையும் கோத்தபாயாவின் எச்சரிக்கையும்

ஐ.நா. சபையின் அரசியல்துறை உதவிச் செயலாளர் லின் பெஸ்கோ இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதன்கிழமை கொழும்பை வந்தடைந்தார். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர் இலங்கை வருவதற்கு சில தினங்களுக்கு முன்னர் இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்புச் செயலாளருமான கோதபாய ராஜபக்ஷ கூறுகையில் இலங்கையில் கடந்த வருடம் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகளுக்கான எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லையென்று கூறியுள்ளார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் இலங்கை ஒருபொழுதும் தான் செய்த மனித உரிமைமீறல் அத்தாட்சிகளை மற்றவர்களிடம் போய்ச் சேர்க்காமல் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் என்பது மட்டும் உண்மை. மேலும் அதை அழிப்பதற்கு சீனா உதவி வருகின்றது என்று தகவல்.

சிங்கள ஊடகமான லங்காதீப பத்திரிகைக்கு அவர் மேலும் கூறுகையில் இலங்கைப் படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருந்தால் அவற்றை இலங்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கலாம். அவற்றின் அடிப்படையில் சட்டத்தரணிகள் ஊடாக வழக்கு பதிவு செய்யலாம் என்று அவர் கூறியிருக்கின்றார்.


மேலும் அவர் கூறுகையில்:

“ஊடகங்களுக்கு புகைப்படங்களையும் காணொளிகளை வழங்கி வருவது பயனற்ற செயல். இலங்கையில் நீதித்துறை உள்ளது. அந்த கட்டமைப்பிற்கு முன்னால் ஆதாரங்களை சமர்ப்பிக்கலாம். அல்லது பொலிஸாரிடம் கூட சென்று முறையிடலாம்."

இவற்றின் கூற்றில் இருந்து என்ன தெரிகின்றது என்றால் இலங்கையிடம் சண்டித்தனம் ஓன்று மட்டுமே உள்ளது. அத்துடன் இலங்கையிடம் இருந்து எந்தவித நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பது மட்டும் தெரிகின்றது. அத்துடன் இலங்கை நீதிமன்றத்திடம் சான்றுகளை முன் வைத்தால் எப்படி அது பராமரிக்க முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

கடந்த ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையினால் பல தமிழ் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு தப்பி ஓட்டினார்கள் என்பது தான் உலகமறிந்த உண்மை. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாரும் இன்று வரை தண்டிக்கப்படவில்லை.

1987-ஆம் ஆண்டு ராஜீவை கொலைசெய்ய முயற்சித்த சிங்கள கடற்சிப்பாயை இலங்கை விடுதலை செய்து பின்னர் பரிசுகள் அளித்தது சிங்கள அரசு என்பது உண்மை. இப்படியாக இலங்கை ஜனாதிபதியின் கீழ் செயல்படும் சக்திகளினால் எப்படி குற்றவியலாளர்களைத் தண்டிக்க முடியும் என்பதே கேள்வி.

இலங்கை ஏறத்தாழ 10-க்கும் அதிகமான விசாரணைக் குழுக்களை நியமித்தது. எந்தவொரு குழுவும் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரவில்லை என்பது தான் நிஜம். இந்த வேடிக்கையில் எப்படி கடந்த வருடம் அரசே அரங்கேற்றிய போர் வெற்றியையும் மற்றும் ஈழத் தமிழர்களே தமது வாழ்வில் கண்டிராத கோர நிகழ்வுகளையும் நிகழ்த்திய இலங்கை அரசின் அராயகத்தை அந்த நாட்டின் நீதி நிறுவனமே நீதியை பெற்றுத் தரும் என்பது தான் கேள்வி.

இந்த வாரம் இலங்கையில் தங்கியிருக்கும் உலக இராஜதந்திரிகளுக்கு கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறும் கொண்டாட்டம் சிறப்புத்தான். மக்கள் அரசாங்கத்திடம் முழு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்ற மாயையை காட்ட இலங்கைக்கு கிடைத்த ஆயுதம் தான் இந்த களியாட்டம் நிகழ்வு.

அத்துடன் இந்த இராஜதந்திரிகளை எப்படியேனும் தம் வசமாக்கி ஈழத் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற மனிதப் பேரவலத்தை மூடி மறைத்து தமிழர் மீது மிகுந்த பாசம் கொண்டிருக்கின்றது என்ற மாயையை தோற்றுவித்துள்ளது இலங்கை அரசு.

ஆக வருகிறார்கள் போகிறார்கள் ஆனால் ஒருபோதும் ஈழத்தமிழருக்கு எந்தவொரு விமோசனத்தையும் பெற்றுத் தராமல் காலத்தை வீணடிக்க நடாத்தப்படும் பல அவதாரங்களில் இதுவுமொன்றே.

- அனலை நிதிஸ் ச. குமாரன்

Comments