மும்பையில் குண்டு வைத்த பாகிஸ்தானியர்களுடன் உல்லாச நடனம் ஆடுவார்களா? - சீமான்

தமிழ் உணர்வாளர்களும், தென்னகத் திரைத்துறையினரும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தமிழர் வேதனையைச் சொல்லியும் கேளாமல் கொழும்பு விழாவில் கூத்தடித்த இந்தி நடிகர்கள், மும்பையில் குண்டுவைத்த பாகிஸ்தானியர்கள் அழைத்தாலும் இதே மாதிரி போய் கூத்தடிப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாம் தமிழர் இயக்க தலைவர் சீமான்.



இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:

ஈழத்தில் 1 லட்சத்துக்கும் மேல் கடந்த ஆண்டு தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இன்று அனைத்துலக நாடுகள் ராஜபக்சே மீதும், சிங்கள ராணுவத்தின் மீதும் போர்க்குற்றங்களைச் சுமத்தி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளன.

தமிழினத்தை கொலை செய்த பெரும் குற்றத்தை சர்வதேசத்தின் கண்களில் இருந்து மறைக்க கொழும்புவில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகின்றது. இதில் பங்கேற்க இருந்த அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நாம் தமிழர் இயக்கத்தின் எதிர்ப்பு காரணமாக கலந்து கொள்ள மறுத்து விட்டனர். அதைப்போல தென்னிந்தியாவைச் சேர்ந்த எந்த நடிகர் நடிகைகளும் கல்ந்து கொள்ளக்கூடாது என்று தென்னிந்திய திரையுலகம் தடை விதித்தது.

ஆனால் அதனை மீறி இந்தி நடிகர்கள் ஹிரித்திக் ரோஷன், விவேக் ஓபராய், கத்ரினா கைப், கரீனா கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவர்களுக்கு எதிராக நாம் தமிழர் இயக்கம் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

இவர்கள் நடித்த படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சென்னையில் ஹிருத்திக் ரோஷன் நடித்த கைட்ஸ் படம் ஈகா, சத்யம், ஐநாக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்டிருந்த்து. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன் தினம் நாம் தமிழர் இயக்கம் சார்பில் திரையரங்க உரிமையாளர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. தொடர்ந்து திரையிட்டால் திரையரங்கு முன் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. நாம் தமிழர் இயக்கத்தின் வேண்டுகோளை ஏற்று அனைத்து திரையரங்குகளில் இருந்தும் படம் தூக்கப்பட்டது.

அதைப்போல மதுரையில் உள்ள பிக் பி திரையரங்குகளில் கத்ரினா கைப் நடித்த 'ராஜ்நீதி' எனும் படம் திரையிடப்பட்டிருந்த்து. மதுரை நாம் தமிழர் இயக்கத்தின் கோரிக்கையை ஏற்று அந்த திரையரங்கில் இருந்து இன்றிலிருந்து படம் தூக்கப்பட்டது.

எம் தமிழினம் அங்கு செத்துக் கொண்டிருக்கையில் இவர்கள் அவர்களின் கல்லறை மீது நின்று கொண்டு உல்லாச நடனம் நிகழ்த்துகின்றார்கள். எங்களின் ஒப்பாரியை மறைக்க கும்மாளம் ஆடுகின்றார்கள்.

இது எங்களைக் காயப்படுத்துகின்றது. ஆகவே நாங்கள் இவர்களுக்கு எதிராய் அனைத்து போராட்டங்களையும் நடத்துவோம்.

மும்பை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படும் பாகிஸ்தானில் போய் இவர்கள், எதிர்ப்பை மீறி உல்லாச நடனம் நிகழ்த்த முடியுமா? அப்படி நடத்தி விட்டு இவர்கள் தாயகம் திரும்பி வர முடியுமா?

தமிழன் என்றால் இளிச்சவாயன் என்று நினைப்பா? ஆகவே கொழும்பு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட அனைவரின் படங்களும் திரையிடப்படுவதை கடுமையாக எதிர்ப்போம். அவர்களின் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடந்தால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் இயக்கம் போராட்டம் நடத்தும். அறிவித்தபடி, தென்னகத்தின் 5 மாநிலங்களிலும் இந்த நடிகர்களின் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும்," என்று கூறியுள்ளார்.

http://thatstamil.on...wood-stars.html

Comments