ஈழம்: காணாமல் போன் இருவரில் ஒருவர் உயிருடன் கண்டு பிடிப்பு, மற்றவர் எங்கே?
இலங்கையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று சொல்லி ஒரு இணைத் த(றுத)லை நாடுகள் என்று ஒரு அமைப்பு உருவாக்கப் பட்டது. இதில் நோர்வே, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் ஆகியன இடம்பெற்றன. பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தினர். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவது போல் பாசாங்கு செய்து தமிழர்களை ஏமாற்றிக் கொண்டனர். இந்த இணைத் தறுதலை நாடுகளில் இந்தியா பங்குபற்றாமல் திரை மறைவில் அவற்றுடன்கள்ளத் தனமாக இணைந்து செயற்பட்டது. இவர்களின் முக்கிய சதி சமாதானப் பேச்சு வார்த்தை போர் நிறுத்த உடன் படிக்கை என்று தமிழர்களின் கவனத்தை திசை திருப்புவதும் அவர்களுக்குள் பிணக்குகளை பிரிவுகளை ஏற்படுத்துவதுமாகும்.
இணைத்(தறு)தலை நாடுகளில் முக்கியமான இருவர்கள் நோர்வேயின் எரிக் சொல்ஹெய்மும் ஜப்பானின் யசூசு அக்காசியும். இவர்கள் ஏதோ நல்லவர்கள் போல தம்மைக் காட்டிக் கொண்டனர். அதில் எரிக் சொல்ஹெய்ம் தன்னை ஒரு தமிழர்களின் நண்பன் என்று பொய்யாக அடையாளம் காட்டிக் கொண்டார்.
இவரைத் தாக்கி சிங்களப் பேரினவாதிகளும் சிங்கள் ஊடகங்களும் எழுதின. அவரை ஒரு வெள்ளைப் புலி என்றே அவர்கள் வர்ணித்தனர். உண்மையில் இவர்தான் தமிழர்களுக்கு எதிரான சதிநாடகத்தின் நாயகன்.
யசூசு அக்காசி எரிக் சொல்ஹெய்ம் ஆகிய இருவரும் இலங்கையின் சமாதனத் தேவதைகள் போல் தம்மைக் காட்டிக் கொண்டனர். ஆனால் இலட்சக் கணக்கான மக்கள் சிறு இடத்துக்குள் அடக்கப்பட்டு தடை செய்யப் பட்ட ஆயுதங்களால் கொல்லப் பட்ட போதோ உயிருடன் புதைக்கப் பட்ட போதோ இவர்கள் அதைத் தடுக்க எதுவும் செய்யவில்லை. மூன்று இலட்சம் மக்கள் வதை முகாம்களில் அடைக்கப் பட்ட போதும் இவர்கள் எதுவும் செய்யவில்லை. சரணடையச் சென்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவினரை சுட்டுக் கொன்ற சதியில் எரிக் செல்ஹெய்மிற்குப் பெரும் பங்கு உண்டு. ஆனால் விடுதலைப்புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்தவுடன் இவர்கள் இருவரும் காணாமற் போய்விட்டனர்.
இந்த இருவரில் யசூசி அகாசி இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளார். இவர் 15-ம் திகதி செவ்வாய் கிழமை இலங்கை செல்கிறார். இவரின் இலங்கைப் பயணத்தின் நோக்கம்:
* நீண்ட கால சமாதானத்தை இலங்கையில் ஏற்படுத்துவதற்கான தேசிய இணக்கப் பாட்டை உருவாக்குவதற்கான அரசியற் தீர்வை துரிதப் படுத்துதல்.
இலங்கையில் இப்போது பல நாடுகளும் அதிகாரப் பரவலாக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. சிங்கள மக்களைப் பொறுத்தவரை அதிகாரப் பரவலாக்கம் என்பது ரெம்பக் கெட்ட வார்த்தை. அதனால் அவை புதிதாக ஒரு சொல்லைப் பயன்படுத்துகின்றன அதுதான் தேசிய இணக்கப் பாடு.
சரி காணமற் போன யசூசி அகாசியை உயிருடன் கண்ட்டு பிடிக்கப் பட்டுள்ளார். எங்கே எரிக் சொல்ஹெய்ம்?
யசூசு அகாசியின் இலங்கைப் பயணம் இலங்கையின் இனப்பிரச்சனை சம்பந்தப்பட்டது என்று சொன்னாலும் அவருக்கு இலங்கை இனப் பிரச்சனையில் அக்கறை இல்லை. அவர் தமிழர்களைப் பற்றியோ அல்லது அவர்களுக்கு நடந்த பேரவலங்களைப்பற்றியோ கவலை கொண்டவரல்லர். கவலை கொள்ளப் போவதுமில்லை. இலங்கையில் அதிகரித்து வரும் சீன ஆதிக்கத்தை எப்படி சரி செய்வது என்பதுதான் அவரது கரிசனை. இலங்கைக்கு சீன உதவிப் பிரதமர் ஷாங் டிஜியாங் செய்த பயணமும் அவர் அங்கு செய்து கொண்ட ஒப்பந்தங்களுமே யசூசு அகாசியின் பயணத்திற்கு வழிவகுத்தது. இவரின் பயணத்திற்கு வலுச்சேர்க்கவே நேற்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் நடந்த போர்குற்றம் தொடர்பாக சுதந்திரமான விசாரணை தேவை என்று வலியுறுத்தியது.
இணைத் த(றுத)லை நாடுகள்
நோர்வே என்றொரு மாரீசன்
ஜப்பான் என்றொரு நயவஞ்சகன்
அமெரிக்கா என்றொரு அயோக்கியன்
ஐரோப்பிய ஒன்றியம் என்றொரு கயவன்
இத்தறுதலைகள் போதாதென்று
இந்தியா என்றொரு விபீஷணன்
இணைந்தாங்கள் தமிழரை ஏமாற்ற
கதையுங்கள் கதையுங்கள் எனச் சொல்லி
கழுத்தறுத்தாங்கள் ஈழத் தமிழரை
சமாதானம் சமாதானம் எனச் சொல்லி
ஆயுதங்கள் கொடுத்தாங்கள் சிங்களவனுக்கு
கொன்றொழித்தாங்கள் தமிழர்களை
Posted by வேல் தர்மா
Comments