சிறிலங்காவின் ஆணைக் குழுக்களும் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவும்

குற்றஞ் செய்யும் படையினர் காவல்துறையினர் உயர் அரச அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக நேர்மையான நீதி விசாரணையும் தண்டனை வழங்கலும் சிறிலங்காவில் நடப்பதில்லை இது இந்த நாட்டின் விசேட பண்பாடு என்று ஏற்றுக் கொள்ளப்படும் நடைமுறையாகும். சில சமயங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகக் கண்டனக் குரல்கள் சர்வதேச அரங்கில் எழுவதுண்டு அதை சமாளிப்பதற்காக ஆணைக்குழு நீதி விசாரணை மன்றம் போன்றவற்றை நிறுவி நெருக்கடி நிலையை அரசு இல்லாமற் செய்து விடும்.

சிறிலங்காவின் ஆணைக்குழுக்கள் காலம் கடத்தும் நோக்குடன் செயற்படுகின்றன அரசு நீதியாக நடப்பதாகவும் சட்ட ஒழுங்கிற்கு மதிப்பளிப்பதாகவும் காட்டிக் கொள்வதற்காக இந்தரக ஆணைக்குழுக்கள் நிறுவப்படுகின்றன ஆணைக்குழுக்கள் தமக்கு இட்ட பணியைத் திருப்தியாக நிறைவேற்றிய வரலாறு இந்த நாட்டில் இல்லை வெறும் கண்துடைப்பாகவே அவற்றை வகைப்படுத்த வேண்டும். சிறிலங்கா விசாரணைக் குழுக்களின் நோக்கம் அவற்றின் தோல்லி நீதியற்ற தன்மை பற்றிய மிகத் தெளிவான ஆய்வு நூலைச் சிங்கள வழக்கறிஞரும் மனித உரிமை ஆர்வலருமான கிசாலி பின்ரோ ஜெயவர்த்தனா என்பவர் ஜனவரி 2010ல் வெளியிட்டுள்ளார்.

நூலின் பரப்பளவு 1977ம் ஆண்டு தொட்டு இன்று வரையாகும் இந்த நூலில் சிறிலங்கா அரசுகள் நியமித்த ஆணைக்குழுக்கள் பற்றிய விபரங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன இரு நீதி விசாரணைகள் மாத்திரம் தண்டனை வழங்கும் முயற்சிகளை மேற்கொண்டன. கிரிசாந்தி குமாரசுவாமி என்ற பள்ளிச் சிறுமியின் பாலியல் வல்லுறுவும் படுகொலையும் அவருடைய சகோதரன் மற்றும் தாயாரின் படுகொலை பற்றிய விசாரணை இறுதிவரை நடைபெற்றது ஆனால் குற்றவாளியாகக் காணப்பட்ட படையாள் தண்டிக்கப் படவில்லை.

பின்துனுவேவா மறுவாழ்வு மையத்தில் தடுத்து வைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் காவல்துறையினரின் ஒத்தழைப்புடன் சிங்களத் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டன இதில் குற்றம் சாட்டப்பட்ட அனை வரும் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் தமிழர்கள் சம்பந்தமான வழக்குகளில் சிங்கள நீதி மன்றங்கள் எவ்வாறு நடக்கின்றன என்பதற்கு இவை சிறந்த உதாரணங்களாக அமைகின்றன.

2006ம் ஆண்டில் மனித உரிமை மீறல்களும் படுகொலைகளும் உச்சம் அடைந்தன இது தொடர்பாகக் கிளம்பிய பரவலான கண்டனத்தைத் தணிப்பதற்காக ஜனாதிபதியின் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது இந்த விசாரணைக் குழுவின் பார்வைக்குப் பதினாறு (16) வழக்குகள் சமர்பிகக்ப்பட்டன இதில் மிக முக்கியமானது பிரெஞ்சு அரச சார்பற்ற நிறுவனத்தின் பதினேழு பணியாளர்களின் படுகொலையாகும்.

விசாரணைக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட பதினாறு வழக்குகளில் ஏழு மாத்திரம் விசாரணைக்கு எடுக்கப்பட்டது அந்த ஏழில் ஐந்தை மாத்திரம் விசாரணைக் குழு விசாரணை செய்து அறிக்கை எழுதி முடித்திருந்தது குற்றஞ் சாட்டப்பட்ட ஒருவருக்கு எதிராகவேனும் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப் படாமல் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டது.

சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த புலமை பெரியோர்கள் அடங்கிய குழுவைப் பார்வையாளர்களாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்தார் இவர்கள் மேற்கூறிய விசாரணையைக் கணிப்பீடு செய்யும் பணிக்காக அழைக்கப்பட்டிருந்தனர் இந்தியா, வங்காளதேசம், ஜப்பான், மலேசியாவுடன் மேற்கு நாடுகளைச் சேர்ந்தவர்களும் இந்தப் பெரியோர் குழுவில் இடம் பெற்றனர்.

15 ஏப்பிரல் 2008ம் நாள் இந்தப் பெரியோர் குழு பின்வருமாறு தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டது தனது படையாட்களுக்கு எதிரான விசாரணைகளை முழுமையான கருத்தூக்கத்துடன் நடத்துவதற்கு அரசுக்குத் தீர்மானம் இல்லை அதோடு சர்வதேச ஒழுங்கு நியமங்களுக்கு அமைவாக இந்த விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற குற்றச் சாட்டையும் இந்தக் குழு சுமத்தியுள்ளது.

கடந்த இருபது வருடங்களாக சிறிலங்கா விசாரணைகள் என்ற பெயரில் சர்வதேசத்தை ஏமாற்றி வருகி றது என்று தனது கண்டன அறிக்கையை மன்னிப்புச் சபை 11 ஜூன் 2009ல் வெளியிட்டிருக்கிறது. 02 ஜனவரி 2006ம் நாளில் உதாரணத்திற்கு சிறிலங்கா காவல்துறையினர் ஐந்து அப்பாவித் தமிழ் மாணவர்களைத் திருகோணமலையில் படுகொலை செய்தனர் படுகொலை செய்யப்பட்டவர்களில் ஒருவரின் தந்தையான மருத்துவர் காசிப்பிள்ளை மனோகரன் ஆரம்பக் கட்ட நீதி விசாரணையில் பொலிசாருக்கு எதிராக வாக்கு மூலம் அளித்தார் அத்தோடு ஊடகங்களுக்கும் தனது மகனைக் கொன்றது யார் என்ற செய்தியையும் பகிரங்கப்படுதத்தினார்.

டாக்டர் காசிப்பிள்ளை மனோகரனுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் நேரடி மற்றும் தொலைபேசி மிரட்டல்கள் தொடர்சிசியாக விடுக்கப்பட்டன இதனால் அவர் தனது குடும்பத்தோடு நாட்டை விட்டு ஓடவேண்டிய அத்தியாவசியம் ஏற்பட்டது. இன்று நீதி விசாரணைகளில் சாட்சிகள் உண்மையைச் சொல்வதற்கு கொலை மிரட்டல்கள் காரணமாகத் தயக்கம் காட்டுகின்றனர் இதனால் நீதி விசாரணைகள் அர்த்தமற்றவையாக அமைகின்றன சிறிலங்காவின் விசாரணைக் குழுக்களையும் நீதி விசாரணைகளையும் கேலிக் கூத்தென்றும் காதில் பூச் சுற்றும் நடவடிக்கை என்றும் கூறலாம்.

ஐந்து தமிழ் மணவர்கள் சுட்டுக் கொள்ளப்பட்ட வழக்கை மிகத் தீவிரமாகப் புலனாய்வு செய்த திருகோணமலை பத்திரிக்கையாளர் சுப்பிரமணியம் சுகிர்தராசா 24 ஜனவரி 2006ம் நாள் காவல்துறையி னரால் சுட்டுக் கொள்ளப்பட்டு;ளார். ஓக்ரோபர் 2009ல் அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்கள் மனிதத்திற்கு எதிரான வன்முறைகள் அடங்கிய அறிக்கை வெளியிட்டது.

உடனடியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றச் சாட்டுகளைப் பரிசீலனை செய்வதற்காக ஒரு நிபுணர் குழுவை நியமித்தார் இதில் அரச சேவையில் இருந்து இளைப்பாறிய அதிகாரிகளும் ஆளும் தரப்பிற்கு நெருக்கமானவர்களும் உறுப்பினர்களாக இடம் பெற்றனர். 2009ம் ஆண்டு முடியுமுன் அறிக்கையிடும் படி இந்த நிபுணர்கள் குழுவுக்கு ஆணை இடப்பட்டது ஆனால் ஒரு அறிக்கையும் வெளிவரவில்லை பின்பு ஏப்ரல் 2010 வரை கால நீடிப்பு வழங்கப்பட்டது அப்போது அறிக்கை பிறக்காத நிலையில் ஜூலை 2010 வரை மேலும் கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது விசாரணையோ அறிக்கையோ நடவாது என்று துணிந்து கூறலாம்.

சிறிலங்கா போர் குற்றங்களை ஆராய்வதற்கு ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீன் மூன் ஒரு நிபுணர் குழுவை நியமித்துள்ளார் சற்றேனும் அசைந்து கொடாத இவர் இப்போதாவது ஏதோ செய்கிறார் போல் தெரிகிறது ஒன்று மாத்திரம் தெளிவு தன்னுடைய அசமந்த போக்கிற்க்கு இவர் பரிகாரம் தேடுகிறார் என்பது வெளிப்படை.

பான் கீ மூன் நியமித்த இந்தோனேசியாவின் மர்சுகிடாருஸ்மன் குழுவினர் சிறிலங்காவிற்கு வரமாட்டார்களாம் ஆனால் சிறிலங்கா அதிகாரிகளுடன் இணைந்து செயற்படுவார்களாம் அத்தோடு நிபுணர் குழுவின் பணி உண்மை அறிதல் அல்லவாம் சிறிலங்கா அதிகாரிகள் பக்கசார்பின்மை மற்றும் நடுநிலை பற்றி நாம் நன்கு அறிவோம் இன அடிப்படையயில் துருவமயப்படுத்தப்பட்ட இந்த நாட்டில் விசாரணைகள் பயனற்றவை என்பது பொதுவான கருத்து.

மேலும் இந்தக் குழு பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதைத் தனது முக்கிய பொறுப்பாகக் கொண்டிருக்கும் என்று ஐ.நா பேச்சாளர் மார்டின் நெகிர்சி தெரிவித்திருக்கிறார் இலங்கையில் என்ன நடந்தது என்று விசாரிப்பது சிறிலங்காவின் பொறுப்பு என்று அதே பேச்சாளர் கூறியிருக்கிறார். மகிந்த ராஜபக்ச இன்னுமொறு விசாரணைக் குழுவை அறிவிப்பார் அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் இடம் பெறுவார்கள் காலம் விரயமாகும் பான்; கீ மூன் நெருக்கடிகளில் இருந்து தப்பிக் கொள்வார். பழைய குருடி கதவைத் திறப்பாள் என்பது நிட்சயம்

Comments