விலங்கை உடைப்பது யார்?

சிங்களம் மட்டுமே போரை நடத்தியதாக முழுப்பூசணியை மறைக்க முயல, இப்போது உலகமே ஒன்று சேர்ந்துதான் ஒரு இனத்தை அழித்தனர் என்பதற்கான உண்மைகள் ஒவ்வொன்று ஒவ்வொன்றாக வெளிப்படத் தொடங்கிவிட்டன. இறுதி இன அழிப்புப்போரை வெளிப்படையாக சிறீலங்கா நடத்திக் கொண்டிருந்தபோது, தமிழ் மக்களைக் காப்பாற்ற இந்தியாவும் மறுத்தபோது, அமெரிக்கா ஓடிவரும் என எதிர்பார்த்த தமிழர்களுக்கு இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சியது.

ஒரு நாட்டின் சுதந்திரத்திற்குள் இன்னொரு நாடு ஒரு எல்லைவரையே தலையிடமுடியும் என நம்பமுடியாத பல காரணங்கள் சொல்லப்பட்டன. ‘வல்லரசாலும் முடியவில்லையே!’ என்ற வருத்தம்தான் ஏற்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்
களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா இப்போது சிறீலங்காவுடன் கைகுலுக்கி பாராட்டைப் பகிர்ந்துகொண்டுள்ளமையானது, இந்த இன அழிப்பின் பின்னால் எத்தனை வலிய கரங்கள் எல்லாம் இருந்திருக்கின்றன என்ற உண்மையை அம்பலப்படுகின்றது.

அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் பாராட்டுக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை உலகத் தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போர்க் குற்றவாளியாக குற்றம்
சாட்டப்பட்டு நிற்கும் சிறீலங்காவுடன் அமெரிக்கா கைகுலுக்கிப் பாராட்டியது அதன் இன அழிப்பை மேலும் தொடர ஊக்கப்படுத்தியதாக பார்க்கமுடிகின்றது. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பாகவே, ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பொன்றை ஆரம்பித்து, அவரது வெற்றிக்காக குரல் கொடுத்தவர்கள் அமெரிக்கத் தமிழர்கள்.

தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுது வரை நம்பியிருக்கும் உலகத் தமிழர்களுக்கு இந்தச் செயலானது மிகுந்த வேதனையையே ஏற்படுத்தியிருக்கின்றது. ஈழத் தமிழர்கள் தொடர்பாகவும் அவர்களின் ஏகபிரிதிநிதிகளான விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் பயங்கரவாதம் என்ற முத்திரையைக் குத்திவிட்டு, சர்வதேசத்தின் கண்களில் கடிவாளத்தைப்பூட்டிவிட்டு அதன் வழியாக மட்டுமே ஈழத் தமிழர்களை பார்க்கவைத்துள்ளது இந்தியா. பூட்டியுள்ள கடிவாளத்தைக் கழற்றிவிட்டு, உண்மைகளைப் பார்ப்பதற்கு சர்வதேச நாடுகளை, பொருளாதாரம், பிராந்தியம்சார் நலன்கள் தடுக்கின்றன.

இதனால் அடிமைப்பட்ட இனமாக தமிழினம் ஒட்டுமொத்தமாக மாற்றப்பட்டிருக்கின்றது.
தமிழ் மக்களும் உலகத்து மக்களைப்போல சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகவே, வாழவேண்டிய வயதில் தங்கள் உயிர்களை அர்ப்பணித்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்தியவர்கள் விடுதலைப் புலிகள். அவர்கள் பலமாக இருந்தவரை சிங்களம்தான் நினைத்ததுபோன்று அம்மக்களை அடக்கி அடிமைப்படுத்தி ஆள முடியவில்லை. ஆனால், இன்று அதனால் அது முடிகின்றது. தமிழ் மக்களை எவ்வாறெல்லாம் நடத்தவேண்டும் என்று சிங்களம் நினைக்கின்றதோ, அவ்வாறெல்லாம் அவர்களை கையாளமுடிகின்றது. இலங்கையில் அடிமைப்பட்ட ஒரு இனமாக தமிழினம் மாற்றமடைந்து வருகின்றது.

தமது கருத்துக்களை, தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்த முடியாத ஒரு இனமாக இன்று ஈழத் தமிழினம் மாறியிருக்கின்றது. சிங்கள தேசம் இந்த இனத்தை இன்று எது வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம் எனும் அளவிற்கு தமிழனத்தின் நிலைமை சென்றிருக்கின்றது. தமது சொத்துக்களையும் இழந்து, தமது மண்ணையும் பறிகொடுத்து அடுத்தவேளைக்காக சிங்களத்தின் கைகளை நம்பிவாழவேண்டிய ஒரு அடிமை வாழ்விற்குள் அவர்கள் நிரந்தரமாகத் தள்ளப்பட்டிருக்கின்றனர்.

இந்த அடிமை வாழ்வில் இருந்து அவர்களை மீட்டெடுக்கும் பலமோ, அதற்கான முயற்சியோ சிந்தனையோ இன்று தமிழர்களுக்கான பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் எந்தத் தமிழ்க் கட்சிகளிடமும் கிடையாது. அவர்களும் இன்னொரு வகை அடிமைகளாகவே சிங்கள தேசத்
தின் அரசியல்வலைக்குள் சிக்குப்பட்டுப்போய் உள்ளனர். இந்த நிலையில் அவர்களை இந்த அடிமை வாழ்வில் இருந்து மீட்டெடுப்பது யார்? ஒன்று விடுதலைப் புலிகள் மீளவும் பலத்தோடு வரவேண்டும். அல்லது ஸ்பாட்டகஸ்கள் தோற்றம் பெறவேண்டும். இந்த இரண்டும் நடக்காதவரை அவர்கள் அடிமை வாழ்வில் இருந்து மீள முடியாது என்பதே உண்மை.

ஈழமுரசு ஆசிரியர் தலையங்கம்

Comments