ஜெயலலிதா வைத்தார் ஆப்பு

கலைஞர் கருணாநிதிக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அவர்களுக்கும் பல முரண்பாடுகள் இருந்தாலும் அவர்கள் இருவரும் ஒரே கொள்கையுடையவர்கள் என்றால் நிச்சயம் அது ஈழத் தமிழர் விடயமாகத் தான் இருக்க முடியும். இந்தக் கொள்கை இவர்கள் இருவருக்கும் 1990-ஆம் ஆண்டுகளில் இருந்து 2008-ஆம் ஆண்டு வரை ஒன்றாகவே தான் இருந்துள்ளது. கடந்த இரு வருடங்களில் நடந்த மாபெரும் ஈழத் தமிழர் அழிப்பு போரின் போது தமிழகத்தில் ஏற்பட்ட எழுச்சியின் மூலமாக ஜெயலலிதாவின் ஈழத் தமிழர் மீதான ஒரு பார்வையில் கலைஞரிலும் பார்க்க ஒரு மாறுபட்ட கொள்கையை காண முடிகின்றது.

2005-ஆம் ஆண்டுக்குப் பின்னர் தென் தமிழீழத்தில் போர் உக்கிரமடைந்த வேளையில் சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்த போது, “அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல” என்று கூறிய ஜெயலலிதா பின்னர் வன்னி பெருநிலப்பரப்பினுள் போர் மேகம் சூழத் தொடங்கியதும் தமிழக மக்களிடையே ஈழத் தமிழர் மீதான அனுதாப அலை வீசத் தொடங்கியதும் ஈழத்தமிழர் மீது அதீத பாசம் வைத்திருக்கின்றார் என்ற பாணியில் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டார் ஜெயலலிதா.

தமிழக மற்றும் மத்திய அரசுகளை தாக்கி அறிக்கைகளை விட்டார் ஜெயலலிதா. ஒவ்வொரு அறிக்கைக்கும் பதில் அறிக்கை தந்தார் கலைஞர் கருணாநிதி. தனது வாடிக்கையான கட்சித் தொண்டர்களுக்கு ஒரு மடல் என்ற பக்கத்தில் முரசொலி பத்திரிகை மூலமாக ஜெயலலிதாவின் அறிக்கைகளுக்கு தானே ஈழத் தமிழர் மீது பாசம் கொண்டவர் என்ற பாணியில் கடிதங்களை எழுதுவார் கருணாநிதி. இது தான் அவரது வழக்கமான பாணி. மக்களின் கொந்தளிப்பையடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்ற காரணத்தினால் மத்திய அரசுக்கு கோரிக்கைகளை முன்வைப்பதும் உண்ணாவிரதம் இருப்பதும் தொலைநகல்களை அனுப்பச் சொல்வதும் மற்றும் தமிழக பாராளுமன்ற உறுப்பினர்களை இலங்கை அனுப்புவதுமாக காலத்தை கடத்தி வந்தார் கலைஞர். காலமும் கடந்தது அத்துடன் ஈழத்தமிழரும் ஒரு மாபெரும் இனச் சுத்திகரிப்பு போரை எதிர்கொண்டு ஏறத்தாள 50,000 உயிர்களையும் பலிகொடுத்தார்கள்.

ஏதோ 20 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் தாய்த் தமிழகம் தம்மை எப்படியும் காப்பாற்றிவிடுவார்கள் என்று எண்ணியிருந்த அந்த பல லட்சம் ஈழத் தமிழருக்கும் கிடைத்த பரிசு மரண ஓலமும் அரச காட்டுமிராண்டித்தனப் போருமே. இவைகள் அனைத்திற்குப் பிறகும் ஓயாது தனது அரசியல் காய் நகர்த்தலை மேற்கொள்ளும் கலைஞர் இன்னுமொரு படிமேல் சென்று தன்னாலே தான் ஈழத் தமிழருக்கு விமோசனம் பெற்றுத் தரமுடியும் என்ற தோரணையில் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் மற்றும் ராஜதந்திர காய்நகர்த்தலை மேற்கொள்ளும் இவர் இப்போது புதிய சிக்கலுக்குள் மாட்டப்பட்டுள்ளார். அவரின் பரம எதிரியான ஜெயலலிதாவிடம் இருந்து தான் சவாலை எதிர்நோக்கியுள்ளார். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் தமிழக தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்று அரியாசனம் ஏறிவிடவேண்டும் என்ற அரசியல் சாணக்கியத்துடன் களம் இறங்கியுள்ளார் ஜெயலலிதா போலும்.

பதினெட்டு அம்ச கோரிக்கை நிறைவேறுமா?

இலங்கைத் தமிழர் நலனுக்கு 18 அம்சத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கை வைத்துள்ளார். இதுவே தமிழக முதல்வர் கருணாநிதிக்கும் மத்திய காங்கிரஸ் அரசுக்கும் அவர் வைத்த ஆப்பு. கோவையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இப்போதுள்ள சூழ்நிலையில் தேவையற்றது என்று கூறி கடந்த வாரம் அவர் வெளியிட்ட அறிக்கையில், 18 அம்சத் திட்டங்களை நிறைவேற்றிய பிறகுதான் மாநாடு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

ஜெயலலிதா தெரிவித்த 18 அம்சத் திட்டங்கள் பின்வருமாறு:

1) இலங்கை வடபகுதி முகாம்களில் இன்னும் 1 லட்சம் பேர் ஆதரவற்றவர்களாய் முகாம்களில் உள்ளனர். அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்;

2) மறு குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிவாரணம் செய்து தரப்பட வேண்டும்;

3) அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள் சீரமைக்கப்பட வேண்டும்;

4) அழிக்கப்பட்ட நீர் ஆதாரங்கள் சரிசெய்யப்பட வேண்டும்;

5) மக்களுக்கு கல்வி கொடுக்கப்பட வேண்டும்;

6) கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்;

7) புதிய பள்ளிகள் கட்டப்பட வேண்டும்;

8) பழைய பள்ளிகள் புனர் நிர்மாணம் செய்யப்பட வேண்டும்;

9) போரினால் கணவனை இழந்த விதவைகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும்;

10) போரினால் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளுக்கும், பெண்களுக்கும் கவுன்சிலிங் தரப்பட வேண்டும்;

11) கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் புனர் நிர்மாணம் செய்து தரப்பட வேண்டும்;

12) கோயில்கள், தேவாலயங்கள், புத்த மடாலயங்களாக ஆக்கப்படுவதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்;

13) போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சையும், மறுவாழ்வும் தர வேண்டும்;;

14) ஆண்கள் குறைந்துவிட்டதால் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மன ரீதியான அழுத்தம் போக்கப்பட வேண்டும்;

15) பெண்களே நடத்தும் தொழிற்கூடங்கள் உருவாக்கப்பட வேண்டும்;

16) வருகின்ற அனைத்து நிவாரண உதவிகளும் தமிழ் மக்களுக்கு சரியான முறையில் சென்றடைய வேண்டும்;

17) தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அங்கு பணியாற்ற அனுமதிக்கப்பட வேண்டும்;

18) பத்திரிகையாளர்கள் தமிழர்களை சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் நிறைவேற்றிய பின்னர், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் அழைத்துப் பேசி மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் உலகமே எதிர்பார்க்கின்றது. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், தமிழர்கள் எதிர்பார்க்கும் உரிமையும், சுய மரியாதையும் கொண்ட சமூகம் இலங்கையில் அமைக்கப்பட்ட பின்னரே தமிழ்நாட்டில் மாநாடு நடத்தப்பட வேண்டும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

அவரின் கூற்றில் ஒரு திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. அவருக்கு தெரியுமோ என்னவோ அவர் கூறியவாறு ஒரு லட்சம் மக்கள் மட்டுமே அகதிகளாக ஈழத்தில் இல்லை. ஐந்து லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இன்னமும் தமது உறவினர்கள், சிநேகிதர் வீடுகளிலும் மற்றும் தற்காலிக இடங்களிலும் தங்கியுள்ளார்கள். காரணம் இவர்களின் கிராமங்களை இலங்கை இராணுவம் தமது இராணுவ நலன்களுக்காக பிடித்து வைத்துள்ளது. மேலும் இந்த இடங்களை உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தி வைத்துள்ளது. ஆக பல லட்சம் தமிழர் தமது கிராமங்களுக்கு போக முடியாமலும் அவர்களின் நிலங்களில் விவசாய வேலைகளை செய்யவிடாமல் பல இன்னல்களை இலங்கை அரசு கொடுத்துக் கொண்டிருக்கின்றது. ஆகவே இந்த உயர் பாதுகாப்பு வலயத்தை நீக்கி நாட்டுக்குள்ளையே புலம்பெயர்ந்து இருக்கும் தமிழரை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தி வாழ வைக்கவேண்டுமென்பதே ஈழத் தமிழரின் முக்கிய கோரிக்கை. இந்த கோரிக்கையையும் இந்த 18 அம்சத் திட்டத்துடன் சேர்த்து இந்தியாவில் ஒரு மாபெரும் போராட்டத்தை நடாத்த வேண்டும் என்பது தான் உலகத் தமிழரின் ஆவல்.

ஜெயலலிதா போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்கள் நிச்சயம் இந்த திட்டங்களை நிறைவேற்ற போராட்டங்களை நடாத்தினால் இந்திய மத்திய அரசு தலைவணங்கும் என்பது மட்டும் திண்ணம். ஆகவே ஜெயலலிதாவின் திட்டம் சாத்தியமானதொன்றே. ஆனால் அதன் பெறுபேறு நிச்சயம் அவரின் அடுத்த கட்ட மக்கள் சக்தியுடன் எடுக்கப்படும் போராட்டங்களின் வழியே தான் நடைமுறைச் சாத்தியமாகும்.

சீனர்களின் நடவடிக்கை இந்திய உபகண்டத்திற்கே பேராபத்தானவை

கடந்த வாரம் மாபெரும் குண்டொன்றை போட்டார் ஜெயலலிதா. இலங்கையில் நெடுஞ்சாலைப் பணிகளையும், ரயில்வே பணிகளையும் மேற்கொள்வதற்காக, சிறைக் கைதிகளாக இருந்த 25,000 தொழிலாளர்கள் சீனாவிலிருந்து இலங்கையில் வந்து இறங்கியுள்ளார்கள் என்று அறிக்கை வாயிலாக கூறினார். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பதற்காக இந்திய அரசாங்கம் 1,000 கோடி ரூபாய் அனுமதித்துள்ளது. ஆனால் இந்த மறுசீரமைப்பிற்கான ஒப்பந்தத்தை சீனாவிடம் இலங்கை அரசு அளித்திருக்கிறது. இதிலிருந்து, இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக அனுப்பப்பட்ட இந்திய மக்களின் வரிப்பணம் சீனாவை சென்றடைகிறது என்பது தெளிவாகிறது.

ஜெயலலிதா மேலும் கூறியதாவது: “இந்தியாவின் பணம் சீனாவிற்கு செல்கிறதே என்பது தற்போது எனது முக்கிய கவலை இல்லை. இதுவரை பாதுகாப்பாக உள்ள இந்தியாவின் தெற்குப் பகுதியில், இந்தியாவிற்கு எதிரான வேவு பார்க்கும் பணிகளை தொடங்கும் குறிப்பிட்ட நோக்கத்துடன் சீன ஒற்றர்களும், உளவுத் துறையினரும் சீனத் தொழிலாளர்களுடன் இலங்கைக்குள் ஊடுருவி இருப்பதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டின் தெற்கு கடலோரத்திலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் தான் இலங்கை உள்ளது. 1962ம் ஆண்டைய சீன ஆக்கிரமிப்பு இந்திய தேசத்தையே உலுக்கியது. அப்போதிருந்த இந்திய அரசு சகோதரத்துவ மனப்பான்மையுடன் சீனாவோடு அபரிமிதமாக உறவாடிக் கொண்டிருந்த போது கூட, சீனா இந்தியாவின் மீது தாக்குதல் தொடுத்தது. குறுகிய நோக்குப் பார்வையும், தவறான முடிவுமே அந்த சமயத்தில் இந்தியா தோல்வியுற்றதற்கு காரணம். சர்வதேச அரசியல் சதுரங்க விளையாட்டில் தலைசிறந்தவர்களால் இந்தியாவிற்கு இந்த படுதோல்வி அடைந்து அவமானப்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டது."

அவர் மேலும் கூறுகையில் “வட இலங்கையில் சீனர்கள் குவிக்கப்பட்டுள்ளதன் மூலம் மற்றுமொரு கடுமையான ஆபத்து ஏற்கெனவே மிக மோசமாக உருக்குலைந்துள்ள இலங்கைத் தமிழர்களுக்கு காத்திருக்கிறது. 27 ஆண்டு கால இனப்போர் பல உயிர்களை பலிவாங்கியுள்ளது. பெரும்பாலான ஆண்கள் இந்த இனப்போரில் உயிரிழந்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் பாதுகாப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையில், தற்காத்துக் கொள்ளும் சக்தியற்று பலவீனமாக உள்ள முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பெண்கள் அடங்கிய மீதமுள்ள தமிழர்களை சீனாவிலிருந்து வந்துள்ள 25,000 சிறைக் கைதிகள் தங்களுடைய அத்துமீறல்களுக்கு உட்படுத்த ஆரம்பித்தால், அங்குள்ள தமிழர்களின் அவல நிலைமை மேலும் விபரீதமாகும்."

அவர் தனது அறிக்கையில் இந்திய அரசாங்கத்திடன் இந்தப் பிரச்சனையில் காலதாமதமின்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இலங்கை அரசுடன் கடுமையாகப் பேச வேண்டும், கடினமாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார் ஜெயலலிதா. இவரின் அறிக்கைக்கு முதலில் எதிர்ப்பு இந்திய அரசியல்வாதிகளிடம் இருந்து வரவில்லை மாறாக இலங்கை வெளிவிவகார அமைச்சகத்தில் இருந்தே வந்துள்ளது.

அந்த மறுப்பறிக்கையில் இலங்கை வெளிவிவகார அமைச்சக உயர் அதிகாரியொருவர் கூறுகையில் இலங்கையில் கைதிகள் எவரும் பணி புரியவில்லை. ஒப்பந்த அடிப்படையில் வருகை தந்துள்ள ஊழியர்களே பணியாற்றுகின்றனர். தமது பணி காலத்துக்கான விசா முடிவடைந்தவுடன் இவர்கள் நாடு திரும்புவர் மேலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறுவது போல் இவர்களால் எவர்களுக்கும் அச்சுறுத்தல் இல்லை என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார். இது ஒருபுறம் இருக்க இந்த விவகாரம் தொடர்பாக ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகையில் இலங்கையில் பணியாற்றும் சீன ஊழியர்கள் பற்றி செல்வி. ஜெயலலிதா கவலைப்படுவதை விட்டு இந்தியாவிலுள்ள சீனர்களைப் பற்றி கவனம் செலுத்தட்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் இலங்கையில் இருக்கும் சீனர்களைவிட இந்தியாவிலேயே சீனர்கள் அதிகம் வாழ்ந்து வருவதால், இந்தியா முதலில் அந்த அச்சுறுத்தல் பற்றியே கவனம் செலுத்த வேண்டும் எனவும், அயல் நாடுகள் பற்றிக் கவலைப்படக் கூடாது எனக் கூறினார்.

இலங்கை அதிகாரிகளின் இப்படியான அறிக்கைகளின் பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறுகையில் இலங்கையில் சீனர்கள் குடியமர்த்தப்பட்டு வருவதால் இந்தியாவுக்கு ஆபத்து என்று ஜெயலலிதா கூறி இருப்பதுபோல் இந்தியாவுக்கோ, தமிழர்களுக்கோ எந்த ஆபத்தும் வராது. மேலும் அவர் கூறுகையில்: “இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மத்திய-மாநில அரசுகள்தான் உறுதியான நிலைப்பாட்டுடன் செயல்படுகிறது. ஜெயலலிதா போன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தவறாக திரித்து கூறுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் மக்கள் ஏற்கமாட்டார்கள்...இலங்கை தமிழர்களின் மறுவாழ்வுக்கான ஏற்பாடுகளை மத்திய அரசுதான் செய்கிறது. தி.மு.க., காங்கிரஸ் எடுக்கும் முயற்சிதான் இதில் உறுதியாக உள்ளது. ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள், அறிக்கை விடுபவர்கள் சார்பில் எதுவும் செய்ய முடியாது. மேலும் காங்கிரஸ் அரசியல் நாடகம் நடத்தவில்லை. சீன கைதிகள் இலங்கையில் குடியமர்த்தப்படுவதாகவும் ஜெயலலிதா கூறி இருக்கிறார். இதனால் இந்தியாவுக்கோ தமிழர்களுக்கோ எந்த பிரச்சனையும் வராமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும். தவறாக பிரசாரம் செய்து அவர் நாடகம் நடத்துவது நல்லதல்ல. இன்னும் தமிழக மக்களை யாரும் ஏமாற்ற முடியாது."

இப்படியாக ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பின்னர் வந்த மறுப்பறிக்கைகள் கூறினாலும் இந்திய உபகண்டத்தில் நடக்கும் பலப் பரீட்சை என்பது குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இலங்கையில் நடக்கும் நிகழ்ச்சியானது நிச்சயமாக இந்திய உபகண்டத்திற்கு ஒரு அச்சுறுத்தலாகத் தான் பார்க்க வேண்டும். இந்திய சமுத்திரத்தை நீல உடை அணிந்த படையினர் தம் வசம் கொண்டுவர வேண்டுமென்ற சீனாவின் பல கால கனவை நனவாக்கக் கிடைத்த ஆயுதம் தான் இலங்கையில் நடக்கும் தற்கால நிகழ்ச்சிகள். இந்திய மத்திய அரசும் இதை உணர்ந்தாலும் அதைப் பெரிதாக ஊதி இந்தியாவிற்குள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட்டங்களை நடாத்தி காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கை குறைக்க இந்த விடயம் ஆயுதமாக எதிர்க்கட்சிகளினால் பிரயோகிக்கப்படும் என்ற பீதியில் இந்திய மத்திய அரசு இந்த விடயத்தில் ஒரு மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கின்றது என்று அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்.

தமிழக முதல்வருக்கு மட்டுமல்லாமல் அவரின் தோழமைக் கட்சியான மத்தியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சிக்கும் வைத்தார் ஜெயலலிதா ஆப்பு. தமிழகத்தில் மாற்றமடைந்திருக்கும் ஈழத் தமிழர் மீதான அபரீத ஆதரவு ஜெயலலிதாவின் கடந்த கால ஈழத் தமிருக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மாறாக சம காலத்தில் ஒரு புது வடிவத்தில் உருப்பெற்றிருக்கின்றது என்றால் மிகையாகாது. இந்த மாற்றத்துக்கான பலன்களை அறுவடை செய்ய வேண்டுமாயின் தமிழக மக்களை ஒன்றிணைத்து மாபெரும் அறவழிப் போராட்டங்களினூடாக இந்தியாவின் இலங்கை மீதான வெளிவிவகார கொள்கையில் மாபெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். இதுவே ஈழத் தமிழரின் அடுத்த கட்ட போராட்ட வடிவத்திற்கு உந்துசக்தியாக அமையுமென்பதே புத்தி ஜீவிகளின் கருத்து.

-அனலை நிதிஸ் ச. குமாரன்-
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

Comments

k selvaprabhu said…
அது ஒரு காலிபெருங்காய டப்பா என்பது அடுத்த வருடம் தெரியும்.