புதைகுழிகள் மீது கட்டப்படும் சீன நெடுஞ்சுவர்கள்

சுயநிர்ணய உரிமைக்கான தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தினை அழிப்பதிலும், அடக்கு வதிலும், இந்தியா - சீனாவின் பங்களிப்பு எவ்வாறு இருந்ததென்பதை ஈழத் தமிழினம் நன்கறியும். ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்த கணத்திலிருந்து, இவ்விரு வல்லரசாளர்களும் தமக்குள் முட்டிமோதுவதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
2004இல் 0.7 பில்லியனாக இருந்த சிறீலங்காவிற்கான சீனாவின் ஏற்றுமதி வர்த்தகம் தற்போது 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது.

விசேட பொருளாதார வலயம், 1000 ஏக்கர் ரபியோகா பண்ணை அம்பாந்தோட்டை துறைமுகம், 900 மெகாவட் நுரைச்சோலை அனல் மின் நிலையம், கொழும்பு - கட்டு நாயக்கா துரிதகதிப்பாதை, இராணுவத்திற்கான யாழ். வீடமைப்புத் திட்டம் போன்றவை சீனச் சேவையின் பல பரிமாணங்களைச் சொல்கிறது. இவற்றை வெளிப்படுத்துவதால், இந்தியா அதிர்வடைந்து, ஈழப் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவினை வழங்குமென்று, தமிழ்தேசிய உணர்வாளர்களோ அல்லது விடுதலைக் கருத்தினை விதைக்கும் ஊடகவியலாளர்களோ கற்பிதம் கொள்ளவில்லை.

சீனாவின் ஆதிக்க நகர்வு குறித்து, எம்மைவிட, இந்திய ஆய்வாளர்களுக்கும், வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களுக்கும் நன்கு தெரியும். திருமலைத் துறைமுகத்தினூடாக அமெ
ரிக்கா கால்பதிக்க முயல்கிறது என்கிற அச்சத்தில், ஈழப் போராளிகளை அரவணைத்த இந்தியா, 20 வருடங்களின் பின், மேற்குலகையும் சீனாவையும் ஓரங்கட்டுவதற்கு, சிங்களத்தோடு, கைகோர்த்த கதை தமிழ் மக்களுக்குத் தெளிவாகத் தெரியும்.
மூலதனத்தின் பெருக்கத்தையோ அல்லது உற்பத்தி உறவு, உபரி மதிப்பு பற்றி தெரியாத மூடர்கள் அல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் விடுதலைக்காக எழுத்துச் சமராடும் ஊடகவியலாளர்கள் என்பதனை சீனாவின் சிவப்பு உடை அணிந்த மேலாதிக்கத்தை நியாயப்படுத்த முயலும் நபர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை, முல்லைத்தீவு, பூநகரி போன்ற இடங்களில், 60 ஆயிரம் இலங்கை இராணுவத்தினரின் குடும்பங்களை குடியமர்த்தும் திட்டத்திற்கு, 110 மில்லியன் டொலர்களை சீனா வழங்கி, அதன் கட்டுமானத்திற்கு உதவியும் புரியப்போகிறது.

இவைதவிர, வடக்கிலுள்ள இராணுவ நிலைகளைப் பலப்படுத்த, மேலதிகமாக 20 மில்லியன் டொலர்களை கடனடிப்படையில் வழங்க சீனா முன்வந்துள்ளது. இப்புள்ளி விபரங்களை மக்களுக்குத் தெரிவித்தால், சீனா மீது வெறுப்பு அதிகரிக்குமென்று இவர்கள் கவலைப்படுகிறார்கள்.

சீனாவின் பொருளாதார முற்றுகை, இந்தியாவிற்கு குளிர்காய்ச்சலை ஏற்படுத்து மென்று, எமக்கு மட்டுமல்ல சிங்களப் பேரினவாதிகளுக்கும் விளங்கும். இந்த இருதரப்பின் மோதல்களால் சிங்களமே அதிக நன்மையடையும் என்பதனைப் புரிந்துகொள்ள, விரிவுரையாளர்கள் தேவையில்லை. இந்தியத் திரைப்பட விழாவினை கொழும்பில் நடாத்துவதன், பொருளாதார நலன்கலந்த ஆத்திரங்களையும் நாம் புரிந்து கொள்ளலாம். வர்த்தக நலன் சாராத பெருவிழாக்களுக்கு மிகுந்த பொருட் செலவில், எயர்ரெல் போன்ற நிறுவனங்கள் அனுசரணை வழங்க முன்வராது. விழாவில் கலந்துகொண்டால், திரைப்
படம் மூலம் புலம்பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கும் பெருந்தொகைப் பணவரவு, தடைப்படுமென்கிற அச்சமும் தென்னிந்திய திரைப்பட வர்த்தகர்களுக்கு உண்டு.

இதில் இன உணர்வு என்பதற்கப்பால், வர்த்தக நலனே முதன்மை வகிக்கிறதென்பதை உணர்ந்து கொள்ளலாம். சீனாவின் நிலத்தொடர்புள்ள எல்லை யோர நாடுகளான கிர்கிஸ்தான் (kyrgyzutha), ககிஸ்தான், போன்றவற்றில், ஏராளமான சீனர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார்கள். இது போன்ற ஆளணித் திணிப்பினை சிறீலங்காவிலும் சீனா முதலீடு, அபிவிருத்திப் பணி ஊடாக அதிகரிக்கின்றது. 36 மெகாவட் உற்பத்தி செய்யும் சுண்ணாகம் மின் நிலையத்தில் பணிபுரியும் 50 சீனர்கள், இன்னமும் நாடு திரும்பவில்லை. மீரிகம விசேட பொருளாதார வலயத்தில் தமது தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க, 29 சீன நிறுவனங்கள் தயார் நிலையில் உள்ளன.

அத்தோடு 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமையவுள்ள ரபியோகா பண்ணை (Tapioca farm) அனேகமாக வடமாகாணத்தில் அல்லது மத்திய மாகாணத்தில நிறுவப்படலாமென்று சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 18ஆம், 19ஆம் நூற்றாண்டில், தமது காலனித்துவ நாடுகளுக்கு, இந்தியாவிலிருந்து கூலித் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்த பிரித்தானியாவின் நடைமுறைகளை தற்போது சீனா பிரயோகிப்பதாக ஒப்பீட்டாய்வு செய்யப்படுகிறது. இதில் சிறியதொருவேறுபாடு என்னவென்றால், தமது சொந்த நாட்டு மக்களையே, சீனா அண்டைய நட்பு நாடுகளுக்கு அனுப்புகிறது.

இதனை முறியடிப்பதற்கு, இந்தியா மேற்கொள்ள எத்தனிக்கும் புதிய நகர்வுதான், சீபா (Cepa) என்றழைக்கப்படும் முழுமையான பொருளாதார இருதரப்பு உடன்படிக்கையாகும். ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட சுதந்திர வர்த்தக உடன்பாட்டினை மேலும் விரிவுபடுத்தி, கொழும்பை மையப்படுத்திய பொருண்மிய ஆதிக்க நகர்வின் ஊடாக, சீனாவின் விரிவாக்கத்தை தடுக்கலாமென இந்தியா கணிப்பிடுகிறது. ஆகவே இச் சந்தைப் போட்டியினால், தமிழர் தாயக்தின் இறைமை மேலும் பலவீனமடைந்து, அடிப்படைக் கோட்பாடுகளும் சிதைக்கப்படும் அபாயம் உருவாகின்றது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்திய நலன்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லது அவர்களின் ஆதரவை நாம் பெறுவதற்காகவோ, சீனா மேற்கொள்ளும் மியன்மார் பாணியிலான, நவீன பொருண்மிய ஊடுருவலை அம்பலப்படுத்தவில்லை.

மாறாக, இவ்விரு நாடுகளும் இலங்கையில் முரண்படும் நோக்கங்களையும், அதன் எதிர்விளைவுகளையும் சுட்டிக்காட்டுவதன் மூலம், தமிழர் தாயகம் எவ்வாறானதொரு பேராபத்தை எதிர்கொள்ளப் போகிறதென்பதை தெளிவுபடுத்தலாம். அதேவேளை சீனாவும் இந்தியாவும், தமிழின அழிப்பு குறித்தோ அல்லது போர்குற்றங்கள் பற்றியோ இதுவரை வாய்திறந்து பேசவில்லையென்பதையும் குறித்துக்கொள்ள வேண்டும்.

இதுபற்றிப் பேசும் மேற்குலக மனித உரிமை அமைப்புக்களும், அதன் சிந்தனை மையங்களும், இருதரப்பு போர்க்குற்றங்கள் குறித்தே அதிகம் பேசுகின்றனர். சிங்களப் பேரினவாதத்தால் திட்டமிடப்பட்ட வகையில் மேற்கொள்ளப்படும் இன அழித்தொழிப்பினை கருத்தில்கொள்ளாது, இறுதியுத்தத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்களை மட்டும் உயர்த்திப் பிடிப்பதன் மூலம், போராட்டத்திற்கான அடிப்படைகளை மறுதலிக்க முயல்கிறது மேற்குலகம். அதனை எதிர்கொள்ளும் அதேவேளை, பிராந்திய வல்லரசாளர்களின் நிஜமுகத்தை உலக மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டிய கடப்பாடும் ஈழத்தமிழினத்திற்கு உண்டு என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

-இதயச்சந்திரன்

நன்றி:ஈழமுரசு

Comments