''இலங்கையில் தமிழனின் ரத்தம் குடித்தவருக்கு, இங்கே சிவப்புக் கம்பள வரவேற்பா?'' என்று உரக்கக் கொந்தளிப்பு கோஷங்கள் எழுந்தபோதும்,ஜம்மென்று தன் மனைவி மற்றும் அமைச்சரவை சகாக்கள் சகிதம் டெல்லி பூமியில் இறங்கி, ராஜ மரியாதை பெற்றிருக்கிறார் ராஜ பக்ஷே! அவரைப் போய்ப் பார்த்த தமிழக எம்.பி-க்கள் குழு என்னதான் சாதிக்க முடிந்தது என்ற கேள்விகளையெல்லாம் தாண்டி, விறுவிறுப்பாக அலசப்படும் சர்ச்சை - டக்ளஸ் தேவானந் தாவின் வருகை!
''இலங்கையில் ராஜபக்ஷேவுக்கு சாமரம் வீசி அவர் மந்திரி யாகி இருக்கலாம். இங்கே பல வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிதானே இந்த டக்ளஸ் தேவானந்தா? பிரதமரோடும் சோனியா காந்தியோடும் நிகழ்ந்த சந்திப்புகளின்போது, இவரை எப்படி இந்திய அதிகாரிகள் அமருவதற்கு அனுமதித்தார்கள்?'' என்ற கேள்விகள் இப்போது கிடுகிடுவெனக் கிளம்பியுள்ளன. இதற்கு முன்பு 2008-ம் வருடம் ஜூன் மாதத்தில் இது போலவே ராஜபக்ஷே டீமில் ஒருத்தராக வந்து, இந்தியப் பிரதமரோடு டக்ளஸ் கைகுலுக்கி இருந்தாலும்... முள்ளிவாய்க்கால் கொடுமைக்குப் பிறகான இப்போதைய வருகை செமத்தியாகச் சூடு கிளப்பியிருக்கிறது!
இலங்கையின் பாரம்பரியம் மற்றும் சிறுதொழில் மந்திரியாக இருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இந்தியாவில் எப்போது, எப்படி அவர் தேடப்படும் குற்றவாளி ஆனார்? கிடுகிடு க்ரைம் ரிப்போர்ட் வாசிக்கிறார்கள், அப்போதைய தமிழக போலீஸ் அதிகாரிகள். ''எண்பதுகளிலேயே விடுதலைப் புலிகள் இயக்கத்தின் எதிரிதான் இந்த டக்ளஸ். பிரபாகர னோடு பெரிதாக விரோதம் பாராட்டி வந்தார். இலங்கையிலிருந்து இங்கே வந்து தங்கியிருந்த நிலையில்... புலி இயக்கத்தினர் சிலருக்கும் டக்ளஸ் தேவானந்தாவின் ஆட்களுக்கும் சென்னையில் அடிக்கடி வம்புதும்புகள் தொடர்ந்தன. சூளைமேடு ஏரியாவில் தங்கி இருந்த டக்ளஸ் தேவானந்தாவை போட்டுத்தள்ள ஒரு கட்டத்தில் புலிகள் முடிவெடுத் தார்கள்.
மக்கள் மத்தியில் புலிகளுக்கு அபிமானம் வளர்ந்துவந்த நேரம் அது. 1986-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி டக்ளஸ் தேவானந்தா தங்கியிருந்த சூளைமேடு வீட்டை பொதுமக்கள் திடீரென முற்றுகையிட்டனர். கற்களை வீசினர். ஆனால், அந்தத் தாக்குதலைப் புலிகளின் தாக்குதலாக எண்ணிய டக்ளஸ், துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினார். அதில் திருநாவுக்கரசு என்ற அப்பாவி பலியாக... நான்கு பேர் காயமடைந்தனர். அப்போதும் தப்பிக்கும் எண்ணமின்றி வீட்டுக்குள்ளேயே துப்பாக்கியுடன் பொதுமக்களை மிரட்டிக்கொண்டு இருந்தார் டக்ளஸ். அப்போது, சென்னை கமிஷனராக இருந்த வால்டர் தேவாரம் அசுரகதியில் ஸ்பாட்டுக்கு வர... அவரிடம் சரண்டர் ஆனார் டக்ளஸ்.
சில மாதங்களில் ஜாமீனில் வந்தவர் 1988-ம் ஆண்டு நவம்பர் மாதம், அண்ணா நகர் ஏரியாவைச் சேர்ந்த சிறுவனை சில லட்ச ரூபாய் பணம் கேட்டுக் கடத்தியதாக அடுத்த வழக்கு கீழ்ப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் பதிவானது. டக்ளஸ் வளைக்கப்பட்டார். அப்போது, டக்ளஸின் பலமட்ட தொடர்புகள் குறித்த தகவல்கள் அரசுக்கு வர... 1989-ம் ஆண்டு அவரை தேசியப் பாது காப்பு சட்டத்தில் உள்ளே தள்ளியது போலீஸ். ஒரு வருடம் கழித்து வெளியே வந்தவர், அதன் பிறகும் சென்னையில் பல குற்றவழக்குகளில் ஈடுபட்டார். ஒரு இளம்பெண்ணைக் கடத்தி, தவறாக நடந்துகொள்ள முயன்றதாகக்கூட அவர் மீது அப்போது புகார் கிளம்பியது. போலீஸின் தேடுதல் தீவிரமானதால், இலங்கைக்குத் தப்பினார். ஆனாலும், அவர் மீதுள்ள சில வழக்குகள் இன்னும் அப்படியே இருக்கின்றன. அப்படியிருக்க... தேடப்படும் குற்றவாளியான அவரை ராஜ மரியாதையோடு இந்திய அதிகாரத் தரப்பினர் வரவேற்று உபசரிப்பது நம் தேசத்தின் அரசியல் சட்டங்களையே அவமானப்படுத்தும் செயல்!'' என குமுறுகிறார்கள் அந்த முன்னாள் அதிகாரிகள்.
''என் மீது வழக்கு எதுவும் இப்போது கிடையாது. இலங்கை விவகாரம் தொடர்பாக வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் நானும் வருவேன். என் இந்திய வருகை யில் எந்த சட்ட மீறலும் இல்லை!'' என்று டெல்லி நிருபர் களிடம் சொல்லியிருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. இதைத் தொடர்ந்து, ''இது தவறான விளக்கம்...'' என்று கொதித்து எழுந்திருக்கும் சென்னை வழக்கறிஞர் புகழேந்தி, ''இந்தியாவிலிருந்து திரும்பிச் செல்வதற்குள் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்யவேண்டும். தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோருக்கு நான் அளித்த மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லாததால், நீதிமன்றம் இதில் தலையிட வேண்டும்'' என்று உயர் நீதிமன்றத்தில் மனு போட்டுள்ளார்.
இதற்கிடையே, ''டக்ளஸ§க்கு எதிராக இந்திய அரசு இப்போதைக்கு அசைந்து கொடுக்காது'' என உறுதியாகச் சொல்லும் சில விவரப் புள்ளிகள் அதற்கான பின்னணியாகச் சில விஷயங்களை விவரிக்கிறார்கள்.
''டக்ளஸை பெரிய அளவிலான சக்தியாக உருவெடுக்க வைத்ததே இந்திய உளவு அமைப் பான 'ரா'தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போட்டி அமைப்பாக ராவால் உருவாக்கப்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் இருந்து பத்மநாபா ஒரு குரூப் பாகவும், டக்ளஸ் ஒரு குரூப்பாகவும் பிரிந்தார்கள். அப்போது டக்ளஸ், பலரிடம் இருந்தும் விலகி 'மக்கள் ஜனநாயக கட்சி' (ஈ.பி.டி.பி) என்ற அமைப்பை தனியே உருவாக்கினார். அதனால், 'ரா'வின் செல்லப்பிள்ளையாக டக்ளஸ் மாறினார். சென்னையில் பல்வேறு குற்றப் பின்னணிகளில் அவர் சம்பந்தப்பட்ட போதும், அந்த சமயத்தில் அவர் மீது பெரிதாக நடவடிக்கைகள் பாயா மல் தடுக்கப்பட்டதற்கு இது ஒரு காரணம். தமிழக போலீக்குப் பயந்து அவர் இலங்கைக்கு ரகசியமாக தப்பி ஓடிவிட்டதாகச் சொல்லப்படுவது சரியல்ல. தேசிய பாது காப்புச் சட்டத்தில் ஒரு வருடமாக சிறையில் இருந்து வெளியே வந்தவர், 'ரா'-வின் வற்புறுத்தலின் பேரில்தான், இந்திய ராணுவ விமானத்திலேயே யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே புலிகளுக்கு எதிராகச் செயல்பட அவருக்கு ஆயுத உதவியும் பயிற்சிகளும் வழங்கப்பட்டது.
அந்தக் காலத்திலேயே ரா-வின் கைப்பிள்ளையாக உலவிய டக்ளஸ், இன்றுவரை அப்படியே தொடர்கிறார். இலங்கையின் இறுதிப் போரின்போதும் அவர் செய்த 'உதவி'கள் அநேகம். அதனால்தான் ஜம்மென்று விருந்தாளி யாக இந்தியாவுக்குள் அவர் வந்து போகிறார்'' என்கிறார்கள் இவர்கள்.
இன்னும் சிலர், ''ஈழப் போர் தீவிரமான காலத்தில் அவர் மறைமுகமாக சென்னைக்கு வந்து பல முக்கியப் புள்ளிகளைச் சந்தித்தார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை சந்திக்கவும் முயற்சி எடுத்தார். புலிகளின் தீவிர ஆதரவாளரான திருமாவளவன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை!'' என்கிறார்கள்.
திருமாவளவனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''டக்ளஸ் என்னிடம் நேரடியாகப் பேசவில்லை. ஒரு நண்பர் மூல மாக அவர் சந்திக்க விரும்புவதாகச் சொல்லப்பட்டது. அடுத்த கணமே அதற்கு மறுப்புச் சொல்லிவிட்டேன். அப்போது, டக்ளஸ் சென்னையில்தான் இருந்தாரா... அல்லது வெளியே இருந்துகொண்டே சென்னையில் இருப்பதாகச் சொல்ல வைத்தாரா என்றெல்லாம் எனக்குத் தெரியாது!'' என்றார்.
ராஜபக்ஷேவை டெல்லியில் சந்தித்த தி.மு.க. கூட்டணி எம்.பி-க்கள் குழுவில் திருமாவளவன் இடம்பெறவில்லை. 'ஏன்' என்று கேட்டோம்.
''ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசுவதால் எந்தப் புண்ணியமும் இல்லை. இலங்கைக்கு தமிழக எம்.பி-க்கள் குழு போனபோது, முகாம்களில் சிக்கி இருக்கும் தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக எத்தனையோ கோரிக்கைகளை வலியுறுத்திச் சொன்னோம். தலையாட்டிக் கேட்டுக் கொண்ட ராஜபக்ஷே, ஒருமாத காலத்துக்குள் அதை எல்லாம் நிறைவேற்றுவதாகச் சொன்னார். அதன்பிறகு இந்திய அரசிடம் பேசுகையில் ஜனவரி மாதம் வரை அவகாசம் கேட்டார். அதுவும்கூட கடந்துவிட்டது.
அதுபோல், இந்திய-இலங்கை நாடுகளுக்கு இடையிலான புதிய ஒப்பந்தங்கள், மிருகவெறிப் பிடித்த இலங்கையின் வளர்ச்சிக்காக பயன்படுமே தவிர, தமிழர்களுக்கு எவ்வித நன்மையும் நடக்கப் போவதில்லை. இந்த ஒப்பந்தங்களில் உருப்படியான ஒரே விஷயம் இலங்கை சிறைகளில் இருக் கும் தமிழர்களை தமிழ்நாட்டுக்கு அனுப்புவது குறித்த உடன்படிக்கை மட்டும்தான்.
போர்க் காலத்தில் இந்தியா செய்த உதவிகளுக்கு நன்றிகூறும் முகமாகத்தான் ராஜபக்ஷே இங்கே வந்திருப் பதாகச் சொல்லப்படுகிறது. சர்வதேச அரங்கில் இலங் கையின் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, நீதி கேட்க வேண்டிய இந்திய அரசு, அவருக்கு பட்டுக் கம்பளம் விரித்து, விருந்து கொடுத்து வரவேற்கிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் பரவிவிடுமோ என்கிற பயம் இந்தியாவுக்கு. அதனால்தான் இந்த உபசரிப்பு... உறவு கொண்டாடல்! அப்படியிருக்க இலங்கைத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் நல்லது நடக்கப் போவதே இல்லை!''
என்றார் திருமாவளவன் மனம் வெறுத்து.
- இரா.சரவணன்
------------------------------------------------------------------------------------------------------
ஏன் சிவப்புக் கம்பள வரவேற்பு?
ஈழப்போர் முடிந்து ஒரு வருடம் கழித்து, இலங்கை அதிபர் இந்தியா வந்திருக்கிறார். இந்திய அரசு ராஜபக்ஷேவுக்கு சிவப்புக் கம்பளம் விரித்தது. ராஷ்டிரபதி பவன் முன்பு மரபுரீதி யிலான வரவேற்பு அமர்க்களமாகக் கொடுக்கப்பட்டது. அஹிம்சாவாதி மகாத்மா காந்தியின் சமாதியில் ராஜபக்ஷே(!) மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார்!
இலங்கை அதிபருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு எதற்கு? இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் சொல் லும் பதில்... ''சீனா போன்ற நாடுகளுடன் இலங்கைக்கு உள்ள நட்பும் அந்நாட்டுக்கு இலங்கையில் அளிக்கப்படும் அனுமதியும் இந்தியாவை கவலைகொள்ள வைக்கிறது. இதனால், இந்தியா, 'தமிழ், தமிழர்கள்...' என்று சொல்லி 'கூச்சல்' போட்டுக்கொண்டு இருக்காமல், சீனா எந்தெந்தப் பகுதிகளில் எல்லாம் இலங்கையில் கால் வைக்கத் துடிக்கிறதோ... அந்தந்தப் பகுதிகளில் இந்தியா இலங்கைக்கு உதவி... அங்கு சீனாவை நுழையவிடாமல் தடுப்பதே இந்த வரவேற்பின் முதல் நோக்கம். சீனா, இலங்கையில் கால் ஊன்றாமல் பார்த்துக்கொள்வதே நமக்குப் பாதுகாப்பானது!'' என்பதுதான்.
அதே சமயத்தில் இலங்கைத் தமிழர் பிரச்னை குறித்தும் தமிழக மக்கள் மற்றும் தமிழக மீனவர்கள் குறித்தும் மத்திய அரசோடு கலந்து பேசினாரோ... இல்லையோ... தமிழக எம்.பி-க்களிடம் நன்றாகவே அரட்டையடித்துள்ளார் இலங்கை அதிபர். தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி-க்கள் (அமைச்சர்களைத் தவிர) டி.ஆர்.பாலு தலைமையில் ராஜபக்ஷேவை அவர் தங்கியிருந்த ஹோட்டலில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்ட் எம்.பி-க்கள் மட்டுமல்ல, காங்கிரஸின் ஜி.கே.வாசன் கோஷ்டி எம்.பி-க்களும் கலந்துகொள்ளவில்லை; இவர்களுக்கு அழைப்பும் இல்லை. எம்.பி-க்கள் தமிழர்களைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு வழக்கம்போல் நழுவும் பாணியிலேயே பதில் சொன்னார் இலங்கை அதிபர். எதைக் கேட்டாலும், 'கண்ணிவெடிகள் அகற்றப்பட்டால்தான் அடுத்தடுத்த வேலைகள் நடக்கும்...' என்றார். கூடவே, இலங்கைக்கு உதவப் பெரும்பான்மையான உலக நாடுகள் முன்வரவில்லை என்றும் குறைப்பட்டுக்கொண்டார். இந்தச் சந்திப்புக்குப் பின், ''பேச்சுவார்த்தையில் எங்களுக்கு முழுத் திருப்தி இல்லை...'' என்றார் டி.ஆர்.பாலு. ஆனால், காங்கிரஸ் எம்.பி-க்களோ, ''பேச்சுவார்த்தை பிரமாதம்!'' என்றார்கள்.
- சரோஜ் கண்பத்
நன்றி : ஆனந்தவிகடன் இதழ்
Issue Date: 16-06-10
Comments