தமிழறிஞர்களை காப்பாற்றுங்கள்



சென்னை உயர்நீதிமன்றம் ஒரு சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியும் சில செய்திகளை பதிவு செய்திருக்கிறது. வழக்கின் போக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகவும், தெளிவுள்ளதாகவும் இருக்கிறது. நாம் இன்று கருத்து சொல்பவர்களுக்கு எதிராக அரசின் நடவடிக்கைகளை எவ்வாறு அமைகிறது என்பதை குறித்து விவாதிக்கலாம். ஒருவேளை நமது கருத்துக்களும்கூட விமர்சிக்கப்படலாம். ஆனால் அந்த விமர்சனத்திற்காக அரசும், அரசு சார்ந்த கட்சியும் எந்தவிதமான கருவிகளை கையாள்கின்றன என்பதை பொருத்தே எமது கருத்தின் பதிவுகள் ஆழமாகவும், மாறுபட்டதாகவும் அமையக்கூடும். இந்த செய்தி, இதைக் குறித்த தகவல்களை மீண்டும் பார்க்கலாம்.

இதே போன்றே கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுத்தாளரும், திரைப்பட தயாரிப்பாளரும், அ.தி.மு.க. இலக்கிய அணி தலைவருமான பழ.கருப்பையா மீது அடையாளம் தெரியாத? சில நபர் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். தாக்குதல் நடத்தியதோடு அவரது வீட்டையும் அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். தாக்கியவர்கள் உண்மையிலேயே அடையாளம் தெரியாதவர்களா என்பது அரசுக்கே வெளிச்சம். ஒருவேளை இவர்கள் கைது செய்யப்பட்டால் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதையெல்லாம் நாம் சொல்வதற்கில்லை. நாம் மேலே வாசித்த உயர்நீதி மன்றத்திற்கு தமிழருவி மணியனுக்கு ஆதரவாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. தமிழருவி மணியன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர். சிறந்த தமிழறிஞர். மாநில திட்டக்குழு உறுப்பினராக செயல்பட்டவர். அவருக்கு சென்னை கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

அரசு ஒதுக்கீடு செய்யும் ஒதுக்கீடு ஆணையின்போது, அதில் பல்வேறு சட்டதிட்டங்கள் ஒழுங்கமைப்புகள் குறிப்பிடப்பட்டிருக்கும். அதை பொதுவாக ஒதுக்கீடு தாரர்கள் வாசிப்பது கிடையாது. வாரிய அலுவலர்களும் அதை பெரிதாக சுட்டிக்காட்டுவதும் கிடையாது. காரணம், தமிழ்நாட்டில் உள்ள குடிசைப்பகுதி மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்றவற்றின் ஒதுக்கீடுகள் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்து இருப்பவை என்பது சாமானிய மக்கள் எல்லோருக்கும் புரியும். மாவட்டம், பகுதி, வட்டம், செயற்குழு, பொதுக்குழு என்று பொது பங்கீட்டளவிலே தான் வாரியங்களின் ஒதுக்கீடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அரசியல் சாராதவரும் அறிந்த காரணத்தினால், அரசியல் சார்ந்தவரிடம் அந்த ஒதுக்கீட்டை பெறுவதற்கு முயற்சித்து, அந்த முயற்சிக்கு கைமாறாய் தகுதிக்கேற்றவாறு செலவழித்து பெற்றுக் கொள்கிறார்கள்.

அந்த அடிப்படையிலேதான் வீட்டு வசதி வாரிய நிபந்தனைகளின்படி, ஒப்பந்தத்தை தமிழருவி மணியம் புதுப்பிக்கத் தவறியதாக அவர்மீது குற்றம் சாட்டி, அவர் உடனடியாக வீட்டிலிருந்து வெளியேற வேண்டும் என வாரியம் கடந்த 2009 செப்டம்பர் மாதம் 23ந் தேதி ஒரு உத்தரவை அவருக்கு வழங்கியிருக்கிறது. தமிழருவி மணியம் இந்த உத்தரவு தவறானது என கூறி உயர்நீதிமன்றத்திலே மனு செய்கிறார். அந்த மனுவிலே அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். அதாவது கீழ்ப்பாக்கம் டைலர்ஸ் சாலையில் வீட்டு வசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பில் எனக்கு 2007ஆம் ஆண்டு வீடு ஒதுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்ட நிபந்தனைகள் அனைத்தையும் நான் சரியாக பின்பற்றுகிறேன்.

இந்த நிலையில், 11 மாதங்களுக்கு பிறகு ஒப்பந்தத்தை புதுப்பிக்க தவறியதாகக்கூறி எனக்கு அரசு குறிப்பு அனுப்பப்பட்டது. அதிலே, நான் ஒப்பந்தத்தை தவறியாக கூறி, அந்த குறிப்பை முடித்திருக்கிறது. குறிப்பை பார்த்தப்பிறகு தான் அதுபோன்ற ஒரு விதி இருப்பதே எனக்கு தெரிய வந்தது. எமது குடியிருப்பில் உள்ள வேறுயாரிடமும் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என வாரியம் அறிவுறுத்தவில்லை. நான் வார இதழ்களில் ஆளுங்கட்சிக்கு எதிராக கட்டுரைகள் எழுதியதால், என்னையும், என் குடும்பத்தினரையும் அவமானப்படுத்தவே வீட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எங்கள் ஒப்பந்தத்தை புதுப்பிக்குமாறு எந்த தகவலும் அளிக்காமல் திடீரென்று இப்படிப்பட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது அரசியல் காரணங்களுக்காக பாரபட்சமாக பிறக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை தடை செய்ய வேண்டும் என்று மனுவிலே தமிழருவி மணியன் கேட்டுக் கொண்டிருக்கிறார். இதை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு அளித்த தீர்ப்பு அரசுக்கு எதிரானது மட்டுமல்ல, செம்மொழி மாநாடு என்று கூறி கோடிக்கணக்கான பணத்தை விரையம் செய்த கருணாநிதியின் அவலமான போக்கிற்கு அறைகூவலாகவும் அமைந்திருக்கிறது. உத்தரவில் கீழ்க்கண்டவாறு நீதிபதி கே.சந்துரு அவர்கள் கூறியிருக்கிறார். வரிவரியாக வாசிக்கும்போது இதில் புதைந்துள்ள உள்ளார்ந்த உணர்வுகளை நம்மால் தெரிந்து கொள்ள முடியும். கீழ்ப்பாக்கத்தில் உள்ள வீட்டுவசதிவாரிய குடியிருப்பில் மனுதாரரைப்போன்றே வீடு ஒதுக்கப்பட்ட மற்றவர்கள், ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வீட்டுவசதி வாரியம் வலியுறுத்தவில்லை.

ஆக, அடிப்படையில் திட்டமிட்டு தமிழருவி மணியத்தை அவமானப்படுத்தவும், அவர் அரச கட்டளைகளுக்கு பணிந்து நடக்கவும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்குமோ? என்றுதான் நமக்கு தோன்றுகிறது. அடுத்து, மனுதாரரிடம் இரண்டு ஆண்டுகளாக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. அரசுக்கெதிராக எழுதிய காரணத்தால் அவரை வெளியேற்றுவதற்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளது. தமிழருவி மணியம் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் இருந்தாலும், அவருக்கென்று சொந்த வீடு இல்லை என்ற அவரின் வழக்கறிஞரின் வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. எனவே, வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறியதோடு இந்த வழக்கின் தீர்ப்பு முடிந்திருந்தால், இது சாதாரண ஒரு தீர்ப்பாகவே அமைந்திருக்கும்.

ஆனால், நீதிபதி அதையும் தாண்டி மிக சிறப்பான ஒரு தகவலை கூறியிருக்கிறார். அது, தமிழறிஞர்களை காப்பாற்ற வேண்டும். வீட்டு வசதி வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தமிழ் வாழ்க என்ற முழக்கம் இடம்பெற்றுள்ளது. இது நடைமுறைக்கு வரவேண்டுமென்றால் தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் அறிஞர்கள், சிந்தனையாளர்களை காப்பாற்ற வேண்டும். கொள்கைகளில் மாறுபாடு கொண்டிருப்பதால் சாதாரண காரணங்களைக் கூறி அவர்களுக்கு வாழ்விடங்களை மறுக்கக்கூடாது. அதன்பிறகே தமிழ் வாழ்க என்ற முழக்கம் மேலும் ஒளிரும். அந்த நம்பிக்கையும் நடைமுறைக்கும் வரும் என்ற நீதிபதி தமது தீர்ப்பிலே தெரிவித்திருக்கிறார். ஒன்று, தமிழருவி மணியன் அரசுக்கெதிராக கட்டுரை எழுதியதால், அரசு அதிகாரிகள் அவர் வாழ்விடத்தைவிட்டு வெளியேற்ற புதிய காரணத்தை கண்டுபிடித்து, அதை செயல்பட முனைந்திருக்கிறார்கள். இதேபோன்றுதான் பழ.கருப்பையா அவர்களும் அரசுக்கெதிராக கட்டுரை எழுதியதால் தாக்கப்பட்டிருக்கிறார்.

நாம் வாழ்வது ஜனநாயக குடியரசு. விமர்சனத்திற்குரிய அனைத்தும் விமர்சனப்படுத்தப்பட வேண்டும். விமர்சனம் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் மட்டுமல்ல, நிறுவனம், அரசு, பொதுக்கூட்ட அமைப்பு என எதுவானாலும் அந்த உயிரோட்டம் நீடிக்க விமர்சனம் என்பது அடிப்படையாகும். விமர்சனம் என்பது தம்மை மேலும் மேலும் வலிமை கொண்டதாக மாற்றிக் கொள்வதற்கு வழங்கப்படும் ஒரு சிறப்பு என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் கருணாநிதியை புகழ வேண்டும். புகழ மறுத்தால் ஒன்று, பழ.கருப்பையா வீட்டை போன்று தாக்கப்படலாம். தமிழருவி மணியனைப் போன்று வீட்டிலிருந்து அப்புறப்படுத்தப்படலாம்.

இது ஒரு அரசியல் ஆரோக்கியம் இல்லை என்பது மட்டுமல்ல, அநாகரீக அரசியலின் உச்சமாக இந்த நிகழ்வுகள் அமைந்திருக்கிறது. நடந்து முடிந்த செம்மொழி மாநாட்டிலும்கூட பேசியவர்கள் எல்லாம் தமிழே வாழ்க என்று சொல்வதற்குப் பதிலாக, கருணாநிதியே வாழ்க என்று சொல்வதற்குத்தான் கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டார்கள். கொஞ்சம் காலமாக திரைப்படத் துறையினர் பெரிதாக விழா எடுத்து, கருணாநிதியை வாழ்த்தாததை ஒரு மாபெரும் விழா நடத்தி தம்மை வாழ்த்துவதற்காக இதை கருணாநிதியை செய்துகொண்டாரோ என்ற எண்ணம் நமக்கு இயல்பாகவே வருகிறது. உலக செம்மொழி மாநாடு என்பது மொழியை நெறிப்படுத்தவும், அந்த மொழி எந்த நிலையிலும் உயிர் துடிப்புடன் இயங்கவும், வரலாற்றுத் தமிழ், அறிவியல் தமிழ், கணினி தமிழ், ஆராய்ச்சித் தமிழ் என அதன் ஆழ நீளம் அளப்பரியா ஆற்றல் கொண்டதாக மாறுவதற்காக இந்த மாநாடு பயன்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், மொழி என்பது பேசப்படும் மனிதர்களின் வாழ்வியல் கூறு என்பதால் எந்த மனிதன் பேசுகிறானோ அவன் உயர்ந்த நிலையில் இருக்கும்வரைதான் அதைவிட அவன் உயிரோடு வாழும் வரைதான் அந்த மொழி உயிர் வாழும். அப்படியிருக்க லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்வியல் ஆதாரங்களை இழந்து, தாம் ஏதிலிகளாக சொந்த மண்ணிலே நொந்து கொண்டிருக்கும்போது செந்தமிழ் மாநாடு எதற்கு என்ற கேள்வி பொதுவாக தமிழ் மீதும், தமிழ் மக்கள் மீதும் அக்கறை கொண்ட எல்லோருக்கும் இயல்பாகவே எழும். எழ வேண்டும். எழுந்தால்தான் அவன் மனிதன். ஒன்று, மண்டியிட்டு மானம் இழந்து, கேவலம் பதவி தரும் சுகத்திற்காகவும், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தம்மை இழந்து வாழ்பவனுக்கு வேண்டுமாயின் இது கேடல்ல என்ற நிலைப்பாடு இருக்கலாம். ஆனால் தமிழ் வாழ வேண்டும் என்று நினைப்பவன் முதலில் தமிழன் வாழ வேண்டும் என்றுதான் நினைக்க வேண்டும்.

இதைத்தான் நீதிபதி கே.சந்தூர் அவர்கள் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். தமிழறிஞர்களைக் காப்பாற்றுங்கள் என்று கூறியது செம்மொழி மாநாடு நடத்திய தி.மு.க. அரசுக்கு மிகப்பெரிய அவமானத்தை தந்திருக்கிறது. தமிழின் வளர்ச்சிக்கு உதவுவதற்கு முன்னால், தமிழரின் வளர்ச்சிக்கு உதவ திட்டமிடுங்கள். இன்று குடிசை பகுதியில் வாழும் ஏழை விவசாய மக்களால்தான் தமிழ் உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. படித்த பணக்காரர்கள் தமிழை கைக்கழுவி தம்மை ஆங்கிலப் பண்டிதர்களாக நினைத்துக் கொண்டு வலம் வந்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தமிழை தமது வாழ்வாய், தமது உணர்வாய், தமது மொழியாய் இன்றுவரை காத்துக் கொண்டிருக்கும் இந்த ஏழை மக்களின் நல்வாழ்வுக்கு அரசு என்ன செய்ய வேண்டும்? தமிழருவி மணியனுக்கு மட்டுமல்ல, தமிழராய் வாழும் ஒவ்வொருவருக்கும் அரசு இல்லம் தர வேண்டும். அவர்கள் குடிசை பகுதியில் கடும் நெருக்கடிக்குள்ளே வாழும் வாழ்வு மாற்றியமைக்கப்பட வேண்டும். தமிழர்களின் நலன் தமிழ்மொழி காக்கும். தமிழர்களின் வாழ்வு தமிழை உயர்த்தும். அது கடைநிலையில் உள்ள தமிழர்களால் மட்டுமே முடியும்.

காரணம் இன்றுவரை தமிழை காப்பவர்கள், தமிழை பேசுபவர்கள், தமிழால் எழுதுபவர்கள், தமிழாய் வாழ்பவர்கள் ஏழை எளிய மக்கள் தான். இவர்கள்தான் தமிழ் அறிஞர்கள். இவர்கள்தான் தமிழ் இதயம் கொண்டவர்கள். இவர்கள் ஆங்கிலம் படித்த அதிமேதாவிகளால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுபவர்கள். இவர்களுக்கு ஆங்கில வழி கல்வியை குறித்த அக்கறை கிடையாது. அரசு அளிக்கும் தமிழ்வழி கல்விதான் இவர்களின் வாழ்வுக்கு உயர்வுதரும் என்ற நம்பிக்கையோடு தமிழிலேயே தொடர்ந்து பயில்கிறார்கள். ஆகவே, பழ.கருப்பையா வீட்டை தாக்குவதும், தமிழருவி மணியன் வீட்டை காலி செய்ய துடிப்பதும் தமிழாய்ந்த அரசுக்கு தகுதி வாய்ந்த செயலல்ல, அதோடு சேர்த்து தமிழால் வாழும் ஏழை எளிய மக்களின் வீடுகளுக்கும் உத்தரவாதம் வழங்க இந்த அரசு முனைப்பு காட்ட வேண்டும்.

முதல்வர் கருணாநிதி அவர்கள் அறிவித்துள்ள ஐந்தாண்டுக்கு ஒருமுறை செம்மொழி மாநாடு அறிவிப்பு ஐந்தாண்டுகளுக்குள் தமிழர்களுக்கான வீடு உத்தரவாதம் என்ற உயரிய உத்தரவை அளிக்க வேண்டும். அதுவே கருணாநிதி தமிழுக்குச் செய்யும் பெரும் தொண்டாக அமையும். அதை தவிர்த்து, தாக்குவதற்கும், வீழ்த்துவதற்கும் புதிய வியூகங்களை அமைப்பாராயின், அது நிச்சயம் வரலாற்றிலே கருப்பு நிலைகளைத்தான் பதிவு செய்யும். அது நல்லதல்ல என்பதை புரிந்துகொள்ளும்போது தமிழரின் வாழ்வும் விடுதலையடையும், கருணாநிதியின் அரசும் உயர்வு பெறும்.

கண்மணி

Comments