இந்தியாவை இறுக்கும் துறைமுகங்களும் நெடுஞ்சாலைகளும்

இலங்கை போர்க்குற்ற செயல் தொடர்பான நிபுணர் குழு நியமனம் குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படுமென ஐ.நா. சபையின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் லின் பாஸ்கோ தெரிவித்துள்ளார். இச்செய்திக்கும் உண்மையைக் கண்டறியும் நிபுணர் குழு அமைக்கும் அரசிற்கு ஆதரவு தெரிவித்த அமெரிக்கச் செய்திக்கும் முரண்பாடான உறவற்ற நிலை இருப்பது போலுள்ளது.

ஜப்பானிலிருந்து வருகை தந்துள்ள யசூசி அகாசி தம்மைப்போல் உதவி வழங்குவதோடு திருப்தி கொண்டு இலங்கை அரசிற்கு உபத்திரவம் கொடுக்க வேண்டாமென ஏனைய நாடுகளுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். அகாசி ஊடாக மேற்குலகையும் குறிப்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனையும் சமாளித்து விடலாமென்று இலங்கை அரசு முயற்சிக்கிறது. ஆசியாவைப் பொறுத்தவரை அமெரிக்காவின் பொருளாதார மற்றும் இராஜதந்திர நண்பர்களாக தற்போது முக்கியத்துவம் பெறும் நாடுகள் ஜப்பானும், இந்தியாவும் தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

இவ்விருநாடுகளின் அனுசரணையுடன் மேற்குலகையும் ஐ.நா. சபையினையும் இலகுவாக எதிர்கொள்ளலாம் என்பதே இலங்கை அரசின் குறுகிய கால திட்டமாகவிருக்கிறது. ரொபர்ட் ஓ பிளேக் தெரிவிக்கும் சமீப கால கருத்துகளைப் பார்க்கும்போது இலங்கை அரசானது ஓரளவு வெற்றியை தமது முயற்சிக்கூடாக பெற்றிருக்கிறது என்று கூறலாம். ஆனாலும் சமாதான காலத்தில் நோர்வே மற்றும் ஜப்பானின் பங்களிப்பினை வரவேற்காத இந்தியா, அகாசியின் வரவினை விரும்பாது என்பதனை புரிந்து கொள்ளலாம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஊடாக புதிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் இந்தியா, பண பலம் மிக்க நாடுகளின் உள் நுழைவினை, ஏதோவொரு வகையில் தடையரண்களை அமைத்து தடுத்து நிறுத்தவே முயற்சிக்கும். நிலத்தொடர்புள்ள எல்லையோர நாடுகளில் பாதைகள் அமைப்பது, துறைமுகங்களை அபிவிருத்தி செய்வது போன்ற நகர்வுகளின் ஊடாக சீனாவின் தலையீடுகள் அதிகரிப்பதனை இந்தியா கவலையுடன் நோக்குகிறது. இலங்கையைப் போன்று இரு மடங்கு தேசிய மொத்த உற்பத்தி கொண்ட அதாவது 80 பில்லியன் டொலர் பொருளாதாரமுடைய பங்களாதேஷிற்கு சீனாவின் உதவி ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்கள் ஜூன் 1314 இல் மேற்கொண்ட உத்தியோகபூர்வ பயணம், பல புதிய செய்திகளை இந்தியாவிற்கு சொல்லுகிறது.

அம்பாந்தோட்டை போன்று பங்களாதேஷின் சிட்டகொங் துறைமுக அபிவிருத்தியிலும் சீனா தனது முதலீடுகளை குவித்து விடுமோவென்கிற பதற்றம் இந்திய கொள்கை வகுப்பாளர்கள் மத்தியில் காணப்படுவதை அவதானிக்கலாம். சீனாவிற்கும் பங்களாதேஷிற்கும் இடையிலான 35 வருட கால இராஜதந்திர உறவினை கொண்டாடும் முகமாக சீன உதவி ஜனாதி பதியின் விஜயம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கடந்த மார்ச் மாதம் பங்களாதேஷ் பிரதமரின் சீன விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்களின் தொடர்ச்சியாகவே இது பார்க்கப்படுகிறது.

இச்சந்திப்பில் வர்த்தக முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, ஆழ்கடல் துறைமுக அபிவிருத்திக்கான நிதி வழங்கல், பாதுகாப்புத்துறைக்கான கனரக ஆயுத விநியோகம் மற்றும் செயற்கைக்கோள் வடிவமைப்பும் அதனை விண்ணிற்கு ஏவுதலில் ஒத்துழைப்பு போன்ற விடயங்களில் இரு நாடுகளும் பல உடன்பாடுகளை எட்டியுள்ளன. ஆனாலும் பாரிய நிதி வளத்தை விழுங்கப்போகும் சிட்டகொங் ஆழ்கடல் துறைமுக அபிவிருத்தி குறித்த தீர்க்கமான உடன்பாட்டில் சீனா கைச்சாத்திடவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. துறைமுக அபிவிருத்தித் திட்டத்தை ஒத்தி வைத்துள்ள சீனா, மியன்மார் ஊடாக செல்லும் சிட்டகொங் குன்மின் நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் திட்டத்திலேயே அதிக அக்கறை செலுத்துவதை அவதானிக்கலாம்.

தென் ஆசியா மற்றும் தென் கிழக்காசியாவைப் பொறுத்தவரை நிலத்தால் சூழப்பட்ட நேபாளம், பூட்டான் போன்றவற்றிற்கான பாதைத் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு ஆழ்கடல் துறைமுகத்தைக் கொண்ட பங்களாதேஷ் மிக முக்கியமான கேந்திர மையமென சீனா கருதுகின்றது. அதேவேளை, கடந்த இரு வருட கால வர்த்தக பரிமாற்றத்தினை நோக்கினால் 4.58 பில்லியன் டொலர் மொத்த வர்த்தகத்தில் 4.4 பில்லியன் டொலர்களை சீனாவின் ஏற்றுமதி கொண்டுள்ளது. 80 பில்லியன் பொருளாதாரத்தை கொண்ட பங்களாதேஷ், 4.3 ரில்லியன் அமெரிக்க டொலர்களைக் கொண்ட சீனாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை நிரப்புவதற்கு கையேந்த வேண்டிய நிலைமையே பங்களாதேஷிற்கு ஏற்படும்.

ஏற்கனவே தொலைத் தொடர்பு உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டத்திற்காக 211 மில்லியன் டொலர்களை சீனாவிடமிருந்து எதிர்பார்த்து காத்திருக்கிறது பங்களாதேஷ். றொபி என்ற பெயரில் இயங்கும் அக்சியரா பங்களாதேஷ் லிமிட்டெட் என்கிற தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு 100 மில்லியன் டொலர்களை வழங்கும் ஒப்பந்தத்தில் சீன அபிவிருத்தி வங்கி கைச்சாத்திட்டுள்ளது. இதில் தொலைத் தொடர்பு வலயமைப்பிற்கும் கைத்தொலைபேசி சேவை விரிவாக்கத்திற்குமான உபகரணங்களை குவாவெய் என்கிற சீன நிறுவனமே பங்களாதேஷின் றொபிக்கு விநியோகிக்கப் போகிறது.

ஏற்கனவே பங்களாதேஷின் தொலைத்தொடர்பு செயற்பாடுகளுக்கு 260 பில்லியன் டொலர்களை சீன வங்கி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு வரை சீனாவின் நேரடி முதலீடு 88 மில்லியன்களை எட்டியுள்ளது. அத்தோடு 186 பதிவு செய்யப்பட்ட சீன நிறுவனங்கள் 328 மில்லியன்களை முதலீடு செய்து பங்களாதேஷில் இயங்குவதையும் கவனிக்க வேண்டும். ஆனாலும் சிட்டகொங் துறைமுகத்தை தமது எதிர்கால திட்டத்தில் இணைத்திருந்தாலும் சீனாவின் தற்போதைய உடனடியான கேந்திர நலன் பேணும் வியூகத்தின் ஸ்ரீலங்காவும், பாகிஸ்தானுமே மேற்கு ஆசியா மற்றும் ஆபிரிக்காவிலிருந்து எரிபொருள் வரும் விநியோகப் பாதை சீராகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்பதுதான் சீனாவின் பெருங்கவலை.

அதை நிவர்த்தி செய்ய இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளின் துறைமுகங்களும் அங்கிருந்து சீனாவை இணைக்கும் நெடுஞ்சாலைகளும் மிக முக்கியமாகச் சீனாவால் நோக்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் மெக்ரன் கரையோரப் பிரதேசத்திலுள்ள குவாடர் துறைமுக அபிவிருத்திப் பணியின் முதற்கட்ட வேலைத்திட்டம் கடந்த வருடம் பூர்த்தியாகியுள்ளது. அங்கு இரண்டாம் கட்டப் பணி ஆரம்பமானாலும் குவாடர் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் நிலவும் மோதல் நிலைமை துறைமுகத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாமென சீனா கருதுகிறது. ஆனாலும் தலிபான்களுக்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் தீவிரவாத அழிப்பு யுத்தத்தில் இராணுவத் தளவாட வழங்கல்களுக்கான துறைமுகமாக குவாடரை பயன்படுத்தும் திட்டமும் உள்ளது.

குவாடர் துறைமுக கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள சீனா, அமெரிக்க உள்நுழைவைத் தடுப்பதற்காக இரண்டாம் கட்டப் பணியினை இழுத்தடிக்கலாம். அதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமுண்டு. இவைதவிர சோமாலியா கடற்கொள்ளையர்களால் தமது விநியோகக் கப்பல்கள் பேராபத்தை எதிர்கொள்வதாகக் கூறும் சீனா தனது நீண்ட நோக்குக் கொண்ட ஆசிய வல்லரசுக் கனவினை கைவிட்டதாக கருத முடியாது.

தமது வர்த்தகக் கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்கும் அதன் ஏனைய தேவைகளுக்கு அவசியமான வழங்கலை உறுதிப்படுத்துவதற்கும் இந்து சமுத்திர மற்றும் ஏதென் வளை குடாவில் சீனாவிற்கு நம்பிக்கையான நட்பு ரீதியான நாடுகளின் துறைமுக அனுசரணை தேவைப்படுகிறது. எரிபொருள் நிரப்ப உதவி புரிவதாக கூறப்படும் துறைமுகங்கள், நாளை சீனாவின் கடற்படைத் தளமாக மாறிவிடலாமென்கிற அச்சமே இந்திய மேற்குலகின் மாற்று நகர்வுகளுக்கான காரணிகளாக அமைவதை காணலாம். ஆனாலும் மியன்மாரின் அரகன் கரையோரப் பிரதேசத்திலுள்ள கியாக்யூ துறைமுக அபிவிருத்தியில் பங்காற்றும் சீனா, குவாடரிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இதற்கும் வழங்குகிறது.

கடந்த வருடம் ஆரம்பமான இத்துறைமுக அபிவிருத்திப் பணிகள் துரித கதியில் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. பங்களாதேஷ், மியன்மார், சீனா என்கிற முத்தரப்பு நாடுகளை நெடுஞ்சாலைகள் ஊடாக இணைக்கும் திட்டத்திலேயே சிட்டகொங்கும், கியாக்யூவும் முக்கோணத்தின் இரு சந்திப்புப் புள்ளிகளாக அமைவதைப் பார்க்கலாம். இவை எவ்வாறு இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷவின் அம்பாந்தோட்டை கனவு நிறைவேறக்கூடிய சாத்தியங்களே அதிகமாகக் காணப்படுகிறது. இங்கு இந்து சமுத்திரப் பிராந்திய கடல்வழித் தலைவாசலில் அமைந்திருக்கும் அம்பாந்தோட்டையும் சற்று விலகி நிற்கும் பாகிஸ்தானின் குவாடர் துறைமுகமுமே சீனாவின் தீவிர அவதானிப்பிற்குள்ளாக்கப்படும் கேந்திர மையங்களாக அமையும்.

சீனாவின் எக்சிம் வங்கி வழங்கிய 360 மில்லியன் டொலர்கள், இந்த வருட இறுதிக்குள் நிறைவேறும் முதல்கட்ட பணிக்கு செலவிடப்படுகிறது. அத்தோடு ஜூன் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்த சீன துணைப் பிரதமர் சாங் டிஜியாங் அவர் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிக்கான 200 மில்லியன் டொலர்களை வழங்க இணக்கம் தெரிவித்திருக்கிறார். சீனாவின் ஒரு பில்லியன் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படும் அம்பாந்தோட்டை துறைமுகக் கட்டுமானப் பணிகள் 2023 ஆம் ஆண்டளவில் நிறைவடையலாமென்று கூறப்படுகின்றது. அம்பாந்தோட்டைக் கனவில் எதிர்பார்க்கப்படும் முக்கிய விடயங்களைப் பார்க்கலாம். இவ்வருட இறுதியில் மூன்று கப்பல்கள் தரித்து நிற்கும் வசதி பெறும் இத்துறைமுகமானது அபிவிருத்தித் திட்டம் முழுமையடைந்தவுடன் கொழும்புத் துறைமுகம் போன்று 30 கப்பல்களை உள்ளடக்குமென்று கூறப்படுகிறது.

இம்மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் சர்வதேச விமான நிலையம், உல்லாசப் பயணத்துறையை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது. அத்தோடு சர்வதேச மாநாட்டு மண்டபமும் அனைத்துலக தரம் வாய்ந்த முழுமையான விளையாட்டரங்கும் இக்கனவில் இணைக்கப்படுகின்றது. ஆயினும் சர்வதேச மாநாட்டு மண்டபத்தை நிர்மாணித்துத் தருமாறு தென்கொரியாவை அணுகுவதாகவும் ஒரு செய்தி உண்டு. இக்கனவில் சீனாவின் பூரணமான பங்களிப்பு துறைமுகத்திலும் எண்ணெய் சேமிப்பு குதங்களிலும் அதிகளவில் இருக்குமென்று எதிர்பார்க்கலாம். இங்கு சந்தைப் போட்டி என்பதற்குமப்பால் கேந்திர மையத்திற்கான ஆதிக்கப் போட்டியே முன்னிலை வகிக்கிறது என்பது தான் உண்மை.

இலங்கையில் துறைமுகமும், பாகிஸ்தான், மியன்மார், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் துறைமுகமும் நெடுஞ்சாலைகள் இணைந்த விடயங்களே சீனாவிற்கான தேவையாக இருக்கும். அதனைவிடுத்து தமது நாட்டின் திறைசேரி நிதி வளத்தினை இந்நாடுகளின் நிர்வாக உட்கட்டுமானங்களுக்கு சீனா பயன்படுத்தப்போவதில்லை. சீனாவில் தற்போது வாழ்க்கைச் செலவும் தொழிலாளர் ஊதியமும் அதிகரித்துச் செல்வதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. முதலாளித்துவ உற்பத்தி உறவு முறையினை உள்வாங்கும் சீன நிர்வாக உட்கட்டமைப்பு, அதன் பண்பு ரீதியான சமூக மாற்றங்களையும் எதிர்கொள்கிறது.

இதயச்சந்திரன்

நன்றி்:வீரகேசரி

Comments