இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தொடரும்: பழ. நெடுமாறன்

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான போராட்டம் தொடரும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்தார். ராஜபட்சவின் இந்திய வருகையைக் கண்டித்து நேற்று முன்தினம் சென்னையில் உள்ள இலங்கைத் துணை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXjQ3f3vVScM9YVKUEFDpjdSinhU0Nyzuf96JZ9BhIRU11RGw2oIFgRl5pIQwAkXcFeL-e8bNVAsSJzIL9W6Oeajr4U-49p6yoLpRmFJNqqoelYXvvc_lVz4I80HF7VjdjXq0-AdK-qjQ/s1600/rajapakse..jpg
அதற்காக, மயிலாப்பூர் நாகேசுவரராவ் பூங்கா அருகே, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஏராளமான தொண்டர்கள் கருப்புக் கொடியுடன் செவ்வாய்க்கிழமை திரண்டனர். அப்போது, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற பழ. நெடுமாறன், மதிமுக பொதுச் செயலர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட 500 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

முன்னதாக தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பேசியதாவது:

இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கு வரவேற்பு அளிப்பதோடு, அந் நாட்டுடன் சில உடன்பாடுகளையும் செய்ய உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு மதிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழகத்தில் இருந்து ஏற்கெனவே இலங்கைக்கு சென்று வந்த எம்பிக்கள் குழு எதையும் சாதிக்கவில்லை. இந்தக் குழுவினர் ராஜபட்சவுக்கு சாதகமாக அறிக்கை வெளியிட்டனர்.

இப்போது மற்றொரு குழுவை முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அந்தக் குழுவாலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை. எனவே, இலங்கைத் தமிழருக்கு ஆதரவான போராட்டம் தொடரும்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ:

இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இப்போது ராஜபட்சவுடன் வந்துள்ள அவரை மத்திய அரசு வரவேற்கிறது. இது இலங்கைத் தமிழர்கள் மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள தமிழர்களையும் அவமதிப்பதாகும்.

இந்த நிலை தொடர்ந்தால் இங்கேயுள்ள இலங்கைத் தூதரகம் காணாமல் போகும். தில்லியில் தமிழர்களுக்காக தூதரகம் தொடங்கும் நிலை ஏற்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு:

உலகின் பல்வேறு நாடுகளும் ராஜபட்சவை போர் குற்றவாளியாக அறிவித்துள்ளன. திமுக எம்பிக்கள் உள்ளிட்ட குழுவிடம் அளிக்கப்பட்ட உறுதிமொழியின்படி இதுவரை எந்தவித அடிப்படை வசதிகளும் தமிழர்களுக்கு நிறைவேற்றப்படவில்லை. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கம் ராஜபட்சவுக்கு இல்லை என்றார் ஆர். நல்லகண்ணு.

Comments