ம(ற)றைக்கப்படும் பதினோராயிரம் போர்க் கைதிகள்!

“எந்தவொரு அரசாங்கமோ, அல்லது நீதி நிர்வாகக் கட்டமைப்போ குற்றவாளிகளை சட்டத்திலிருந்து காப்பாற்ற முடியாது. அவர்கள் ஒரு நாட்டின் உயர் இராணுவ அதிகாரிகளாக, அல்லது அந்நாட்டின் உயர்மட்ட அரசியல் தலைவர்களது உத்தரவினை நிறைவேற்றும் அரச அதிகாரிகளாக இருப்பினும் அவர்கள் புரிந்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும்”.


இவ்வாறு குறிப்பிட்டிருப்பவர் வேறு யாருமல்ல, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றினை (International Criminal Court) மீளாய்வு செய்வது தொடர்பாக, கடந்த மாத இறுதியில் நடைபெற்ற ஒரு மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே பான் கி மூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரச படைகள் புரிந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரிப்பதற்கென நிபுணர்கள் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாக இழுத்தடிப்புச் செய்து வரும் பான் கி மூன், மேற்படி உரையில், அரசுகள் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து விலக்கு பெற்றுவந்த சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பான் கி மூன் இவ்வாறு குறிப்பிட்டமை அவர் இவ்விடயத்தில் விரைந்து செயற்படப்போகிறார் என்பதை உணர்த்துவதாக எடுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அவர் குறிப்பிட்ட விடயங்கள் பயங்கரவாதத்தினை அடக்குகிறோம் என்ற போர்வையில், பாரிய இனப்படுகொலையை நடாத்திய சிறிலங்காவிற்கு அச்சொட்டாகப் பொருந்துகின்றது என்பதனை சாதகமான ஒரு விடயமாக எடுத்துக் கொள்ளலாம். ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் உயர்ஸ்தானிகர் நவநீதம் பிள்ளை, அதன் முன்னாள் உயர்ஸ்தானிகரும், சர்வதேச முரண்பாடுகள் மையத்தின் தலைவரருமான லூயிஸ் ஆர்பர் போன்றவர்களும் பான் கி மூன் இன் கருத்தையொட்டிய தமது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

இங்கு போர்க்குற்றங்கள் என்பன, போர் நடைபெற்று வந்தபோது, நடைபெற்ற வன்செயல்கள் என்பதற்கு அப்பால், இப்போது நடைபெறும் செயல்களும் உள்ளடங்கியுள்ளன என்பதும், அவற்றினை தடுத்து நிறுத்த வேண்டிய கடப்பாடு சர்வதேச சமூகத்திற்கு உள்ளது என்பதனையும் நாம் வெளிப்படுத்தத் தவறி வருகிறோம்.

பிரித்தானியாவின் அலைவரிசை 4 தொலைக்காட்சி அண்மையில் ஒளிபரப்பிய காணொளியும், அமெரிக்காவைத் தலமையகமாகக் கொண்ட மனிதவுரிமைக் காப்பகம் வெளியிட்ட ஒளிப்படங்களும், வெறுமனே நடந்து முடிந்த போரில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் அல்ல. மாறாக சிறிலங்காப் படைகளின் பிடியில் சிக்கியிருப்பவர்கள், சித்திரவதை செய்யப்படுகிறார்கள், கொல்லப்படுகிறார்கள் அல்லது சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுகிறார்கள் என்பதனை ஆதாரத்துடன் நிருபிப்பவையாக அமைந்துள்ளன.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் தமது ஆயுதங்களை மௌனிப்பதாக அறிவித்ததன் பின்னர், கைது செய்யப்பட்ட, மற்றும் இடைத்தரகர்களின் உத்தரவாதத்தின் நிமித்தம் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளின் நிலைபற்றி நாம் அச்சப்பட வேண்டியுள்ளது. ஏற்கனவே அவர்கள் படும் சித்திரவதைகள் பற்றி பல்வேறு கதைகள் உலாவுகின்றன. சிறிலங்காப் படைகளின் பிடியில் இருப்பவர்களில் பதினோராயிரம் பேர்களது பெயர் விபரங்களை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வகையான பட்டியல் எதுவும் வெளியிடப்பட்டதாக அறிய முடியவில்லை. பட்டியலில் இல்லாவர்கள் (காணாமல் போனவர்கள்) கொல்லப்பட்டு விட்டதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என சிறிலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய வெகு சாதாரணமாகக் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களும், பொது மக்களும் போர்க் கைதிகளாக கணிக்கப்பட்டு அவர்கள் சர்வதேச விதி முறைகளுக்கு ஏற்ப நடாத்தப்பட வேண்டும் என்பதே வழமையான நடைமுறையாக இருக்கின்ற போதிலும், ஒருவருடம் கடந்த நிலையிலும் இவர்கள் இரகசியமான இடங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சந்திப்பதற்கு செஞ்சிலுவைச் சங்கத்தினருக்குகூட அனுமதி வழங்கப்படவில்லை.

போர்க் கைதிகள் விடயத்தில், அவர்கள் எவ்வாறு நடாத்தப்பட வேண்டும் என்பதுபற்றி முதன் முதலில் 1907 ம் ஆண்டு நெதர்லாந்து நாட்டின் கேக் (Hague) நகரில் உலக நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட் ஒரு மாநாடு நடாத்தப்பட்டது. இம்மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்படட தீர்மானம், பின்னர் 1929ல் ஜெனிவா நகரில் மாநாட்டில் விரிவு படுத்தப்பட்டது, 1949ல் மேலும் திருத்தங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, அவை இன்று வரைக்கும் நடைமுறையில் உள்ளது.

மேற்படி உடன்படிக்கைகளின்படி ஒரு அரசியல் கைதி அல்லது போர்க்கைதி கைது செய்யப்பட்ட நாளிலிருந்து அவர் விடுவிக்கப்படும் வரை எவ்வாறு பராமரிக்க வேண்டும் போன்ற விடயங்கள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவ்வாறான விதிமுறைகள் எதனையும் சிறிலங்கா அரசு, தடுத்து வைத்திருக்கின்ற தமிழ் போர்க் கைதிகள் விடயத்தில் கடைப்பிடிக்கவில்லை. மாறாக தனது இனவெறியிளை போர்க் கைதிகளின் மீது கட்டவிழ்த்து அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடாத்தி வருகிறது.

யுத்தம் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும், போர்க்கைதிகள் எங்கு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற விபரம் கூட இதுவரை வெளியிடப்படவில்லை. அதே சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களை, தாம் போர்குற்றங்கள் செய்யதாக ஏற்றுக் கொள்ளுமாறு நெருக்குதல் கொடுத்து வருவதாக கொழும்பிலுள்ள சட்டத்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. அவ்வாறு குற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அவர்கள் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படுவார்கள் என வாக்குறுதி வழங்கப்பட்டு வருவதாகவும் மேற்படி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக சிறிலங்கா பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிறிலங்கா பிரதமர் ஐயரத்ன, போர்க்கைதிகளில் 1,350 பேர் பாரிய குற்றம் இழைத்துள்ளதாகவும் அவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அறிவித்துள்ளார். ஆனால், சிறிலங்காவினல் நடைமுறையிலுள்ள சட்டங்களின் அடிப்படையில் போர்க்கைதிகள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டால், அதன் மூலம் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் வெளிப்படுத்தப்படும் நிலை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஆகையால் அவர்கள் மீது நீதி விசாரணையை நடாத்துவதை சிறிலங்கா அரசு முடிந்தவரை தவிர்த்து கொள்ளும்.

போர்க் கைதிகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக நடாத்தப்படவேண்டும் என்ற விடயத்தினை வலியுறுத்தி போராட்டங்களை நடாத்த வேண்டிய பொறுப்பு தமிழ் மக்களிடமே உள்ளபோதும், இதுவரை அவர்கள் இவ்விடயத்தில் பாராமுகமாக இருந்து வருகிறார்கள். தமிழ் மக்களைப் பிரதிநிதித்துப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எவ்வித நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. ஆனால், இடசாரி விடுதலை முன்னணியைச் சேர்ந்த விக்கிரமபாகு கருணாரத்ன அவர்கள் தலைமையில, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட ஒரு ஆர்ப்பாட்டம் அண்மையில் வவுனியாவில நடைபெற்றுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டவர்களை விடுவிப்பதில், மறைமுகமான (சட்டத்திற்கு புறம்பான) நடவடிக்கைள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதனை மறைப்பதற்கில்லை. சிறிலங்கா தூதரக அதிகாரிகள் ஊடகவும், வேறு முகவர்கள் மூலமாகவும் ஏற்கனவே சிலர் விடுவிக்கப்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கிறது. இருப்பினும் போர்க்கைதிகளின் நிலையை வெளிப்படுத்தி சர்வதேச அழுத்தங்கள் மூலம் அவர்களை விடுவிக்க அல்லது அவர்கள் மனிதாபிமானமான முறையில் நடாத்தப்படுவதை உறுதிப்படுத்த எவ்விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பதனை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது.

இவ்விடயத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவுள்ளது.

Comments