![](http://athirvu.com/phpnews/images/ndtv.jpg)
இந்த விவரணத்தில் பல பொய்யான தகவல்கள் இருப்பதாகக் கூறும் காரியவாசம், தற்போது இடம்பெயர் முகாம்களிலும், முட்கம்பிக்குப் பின்னாலும் 3 முதல் 6 லட்சம் வரையான மக்கள் இருப்பதாக பேராசிரியர் செனோய் குறிப்பிட்டுள்ளார், ஆனால் தற்போது 30,000 பேர் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் உள்ளனர். இவர்களுக்கும் வெளியே சென்றுவர சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. மிகுதி மக்கள் மீளக்குடியேற்றப்பட்டு விட்டனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அந்த விவரணத்தில் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ள போதும், அதற்கு ஆதரவு தெரிவித்துவரும் திரைப்பட இயக்குநர் சீமானுக்கு கருத்துக்கூறும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் காரியவாசம் குறிப்பிட்டுள்ளார். சீமான் இலங்கை அரசாங்கத்தை இழிவு படுத்தும்விதமாகப் பேசுவதோடு அவரது கருத்துக்கள் பகைமையாகவும், குறிப்பிட்ட ஒரு கொள்கைக்கு மட்டும் துணைபோவதாகவும் இருப்பதாக இலங்கை உயர் ஸ்தானிகர் குறையாகக் கூறியுள்ளார்.
அதோடு, என்.டி.ரி.வி இன் குறித்த விவரணச் சித்திரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட பல காட்சிகள் மூன்று வருடங்களுக்கு முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்டவை எனக் குறிப்பிட்டுள்ள காரியவாசம், அதில் கருத்து வெளியிட்டுள்ள சில தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும், கொல்வதாகவும் கூறுவது அப்பட்டமான பொய்களெனவும் தெரிவித்துள்ளார்.
வருகின்ற 8 ஆம் திகதி இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லி செல்லவுள்ளமை தெரிந்ததே. எனவே என்.டி.ரிவியின் சென்னைப் பிரிவு இந்த விவரணத்தை இப்போது ஒளிபரப்பியுள்ளமை ஆச்சரியத்துக்குரியது என்றும் நட்புறவுக்கு எதிரான போக்குடையது என்றும் காரியவாசம் கூறியுள்ளார். ஆகவே இவ்வாறான சூழ்நிலைகளில் உண்மைக்குப் புறம்பான அந்த விவரணச் சித்திரத்தை உடனடியாக மீளப்பெறும்படி அவர் என்.டி.ரி.டி நிர்வாகத்தைக் கேட்டுள்ளார்.
Comments