இலங்கை அரசுடன் இணைந்திருக்கும் கே.பியின் இன்றைய நிலை என்ன?

2009ம் ஆண்டு தொப்பியுடன் வெளியான கே.பியின் படத்திற்கு பின்னர், சமீபகாலமாக அவர் புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இப் புகைப்படம் கடந்த 14ம் திகதி எடுக்கப்பட்டது. 9பேர் அடங்கிய குழுவில் சென்றுவந்த ஒருவரால் இப் புகைப்படம் அதிர்வுக்கு வழங்கப்பட்டது.

சமீபத்தில் 9 பேர் அடங்கிய தமிழர் குழு ஒன்று இலங்கை சென்று அங்கு கே.பி மற்றும் கோத்தபாய ஆகியோரைச் சந்தித்து வந்ததை யாவரும் அறிவர். அதில் பிரித்தானியாவைச் சார்ந்த மருத்துவர் அருட்குமார் பல தகவல்களை வெளியிட்டிருந்தார். பிரித்தானியாவில் இருந்து சென்ற மற்றும் இருவரான சாள்ஸ் அன்ரனிதாஸ், விமல் ஆகியோர் தற்போது அதிர்வு இணையத்திற்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளனர். இலங்கைக்கு தாம் சென்ற நோக்கம் என்ன அங்கு என்ன நடந்தது என்பது போன்ற பல விடயங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் கூற்றின்படி முன் நாள் போராளிகளுக்கு, ஒரு கற்கை அல்லது நெறிப்படுத்தும் வாழ்வாதார கல்வியறிவு கொடுக்கப்பட்டால் தான் அவர்களை விடுவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதனால் அவர்கள் புனர்வாழ்விற்கு புலம்பெயர் தமிழ் சமூகம் ஆதரவு வழங்கவேண்டும் என இலங்கை அரசு கோரியுள்ளது. சர்வதேச அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடம் ஏன் இதை விடக்கூடாது என நாம் கேட்டபோது, புலம்பெயர் தமிழ் சமூகத்திற்கும் ஈழத்தில் இருக்கும் தமிழ் சமூகத்திற்கும் இடையே ஒரு நல்லுறவைக் கட்டி எழுப்பவேண்டி உள்ளதாக சொல்லப்பட்டது.

கொழும்பில் ஒரு வீட்டில் தங்கியிருக்கும் கே.பி பின்னர் யாழ்ப்பாணம், மற்றும் வன்னி சென்றுள்ளார். 9 பேர்கொண்ட தூதுக்குழுவினர் பின்னர் முன் நாள் போராளிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.



வன்னியில் மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். வெக்கை காலத்தில் மேலே போடப்பட்டுள்ள தகரங்களால், கூடாரத்திற்குள் அதிக வெப்பம் காணப்படுகிறது. இதனால் ஒரு போறணை போன்றே இவர்கள் கூடாரங்கள் காணப்படுகின்றன.







இராணுவத்தினர் சுமார் 8 வீடுகளை அமைத்து அதனை தமிழ் குடும்பங்களுக்கு வழங்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதன் மூலமாக சிங்கள இராணுவம் மிகவும் சகஜமாக மக்களோடு உறவாடி வருவதாகவும், அவர்களின் நடவடிக்கை காரணமாக மக்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே நல்லுறவு ஒன்று கட்டியெழுப்பப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தவிடுபொடியாக்கவே தாம் இதில் தலையிட்டுச் செயல்பட இருப்பதாக அங்கு சென்றுவந்த தூதுக்குழுவினர் நியாயப்படுத்துகின்றனர்.


வன்னியில் உள்ள பல ஆயிரக்கணக்கான தமிழர்களுக்கு வெளிநாட்டில் உறவுகள் இருப்பதாகவும், அவர்கள் உதவுவதாகவும் , ஆனால் அப்படி வெளிநாட்டில் உறவினர்கள் இல்லாத அகதிகளின் நிலை என்ன என்று தற்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இவை அனைத்தும் பிரித்தானியாவில் இருந்து சென்ற 2 பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும். இக் கருத்துக்களுக்கும் அதிர்வு இணையத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவர்களுடனான நேர்காணல் விரைவில் காணொளியாக வெளிவரும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறோம் !


தற்போது தடுப்புமுகாமில் உள்ள முன் நாள் போராளிகள் நிலை என்ன ?




Comments