கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன?

தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டதோடு, இவ்வாரம் மட்டக்களப்பு படுவான்கரை குடும்பிமலை வனப்பகுதியில் சிங்கள வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்களில் இருந்து குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. உண்மையில் தென்தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? இதில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் பங்கு எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடைபகரும் களமாக இக்கட்டுரை விரிகின்றது.


கடந்த 2006ஆம் ஆண்டு யூலை மாதம் 26ஆம் நாளன்று மாவிலாற்றில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பொழுது, தென்தமிழீழத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத்திற்கு உட்பட்டிருந்த பகுதிகளைத் தனது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் மூலோபாயத்துடன் படை நடவடிக்கைகளை சிங்கள அரசு முன்னெடுப்பதாகவே தென்னிலங்கையின் படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்த பொழுதும், உண்மையில் வன்னிப் பெருநிலப்பரப்பை நோக்கிய பெரும் படையெடுப்பிற்கான பூர்வாங்க ஒத்திகை நடவடிக்கையாகவே தென்தமிழீழத்தில் தனது படை நடவடிக்கைகளை சிங்கள அரசு மேற்கொண்டிருந்தது.

சிங்கள அரசின் இந்த மூலோபாயத்தை சம்பூரில் இருந்து மூதூர் நோக்கி பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட தற்காப்பு நடவடிக்கையின் பொழுதே தமிழீழ விடுதலைப் புலிகள் இனம்கண்டிருந்தார்கள். இக்காலப் பகுதியில் இக்கட்டுரையாளரிடம் தென்தமிழீழத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் போராளி ஒருவர் கருத்துக் கூறுகையில்: ‘‘முன்னர் நாங்கள் தாக்குதல்களை தொடுக்கும் பொழுது எதிரி பின்வாங்கி ஓடிவிடுவான். அப்படி ஓடிச்செல்லும் எதிரி மீண்டும் திரும்பி வருவதில்லை. ஆனால் இம்முறை நாங்கள் தாக்கும் பொழுது பின்வாங்கியோடும் எதிரி, மீண்டும் மேலதிக படைகளுடன் திரும்பி வந்து எம்மைத் தாக்குகின்றான்.’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது நான்காம் கட்ட ஈழப்போரில் தென்தமிழீழத்தில் சிங்களப் படைகளின் போரியல் யுக்தி என்பது தமது தரப்புக்களில் இழப்புக்களை குறைத்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் இழப்புக்களை அதிகரிப்பதையும், ஓய்வுக்கு அவகாசமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ச்சியாக தாக்கி, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கெரில்லா தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்துவதற்கான புறநிலையை இல்லாதொழிப்பதையும் அடிப்படையாகக் கொண்டிருந்ததையே இக்கூற்று வெளிப்படுத்தியிருந்தது. இதில் முக்கிய அம்சமாக கருணா, பிள்ளையான் போன்ற துணைப்படைக் குழுக்களையும் தமது படை நடவடிக்கைகளில் சிங்களப் படைகள் இணைத்துக் கொண்டிருந்தன.

அதேநேரத்தில் வடதமிழீழப் போரரங்கில் சிங்களப் படைகளின் போரியல் யுக்தி என்பது இதிலிருந்து சற்றுவேறுபட்டிருந்தது. அதாவது தமது தரப்பில் எந்தளவுக்கு இழப்புக்கள் ஏற்பட்டாலும், ஓய்வுக்கு அவகாசமின்றி தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இடைவிடாது தாக்குதல்களை தொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழிப் போர்த்திறனை சிதைப்பதையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவும் அணிகளைக் களமிறக்கி, மரபுவழி வலிந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் நிகழ்த்துவதற்கு தேவையான பின்தளப் புறச்சூழலை இல்லாதொழிப்பதையுமே, வடதமிழீழப் போரரங்கில் தமது யுக்தியாக சிங்களப் படைகள் கொண்டிருந்தன.

இவ்வாறான பின்புலத்திலேயே தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த தமது படையணிகளை தந்திரோபாய அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பிற்கு பின்னகர்த்துவதற்கான முடிவை தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்திருந்தார்கள். மரபுவழிப் போருக்கு உகந்த புவியியல் அமைப்பை தென்தமிழீழப் பகுதிகள் கொண்டிருக்காத நிலையில், அங்கு நிலைகொண்டிருந்த தமது படையணிகளை பல்வேறு கட்டங்களாக வன்னிக்குப் பின்னகர்த்திய தமிழீழ விடுதலைப் புலிகள், சொற்ப எண்ணிக்கையிலான போராளிகளை மட்டும் தென்தமிழீழப் பகுதிகளில் நிலைநிறுத்தியிருந்தனர். இதன் பின்னர் இந்த அணிகளுக்கு உதவியாக ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளில் தேர்ச்சி மேலும் ஒரு சில அணிகளையும், வன்னியில் இருந்து தென்தமிழீழப் பகுதிகளை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் நகர்த்தியிருந்தார்கள்.

2007ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வடதமிழீழப் போரரங்கில் போர் உக்கிரமடைந்து கொண்டிருந்த பொழுது, சார்ள்ஸ் அன்ரனி படையணியின் முன்னாள் சிறப்புத் தளபதி நகுலன் தலைமையிலான அணி ஒன்று திருமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஓரிரு மாதங்களுக்கு அங்கு இடம்பெற்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆழ ஊடுருவும் நடவடிக்கைகளின் பின்னர், 2007ஆம் ஆண்டின் இறுதியில் இந்த அணி அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்து, அங்கு தளபதி ராம் தலைமையில் இயங்கிய அணியுடன் இணைந்து கொண்டது. இதேநேரத்தில் திருமலை மாவட்டத்தில் தேவன் என்ற தளபதியின் தலைமையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் உமாராம் என்ற தளபதியின் தலைமையிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் இயங்கி வந்தன.

இதில் திருமலை – மட்டக்களப்பு மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவிலான தாக்குதல்கள் எவற்றிலும் தேவன் - உமாராம் தலைமையிலான அணிகள் ஈடுபடாத பொழுதும், அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு – பொத்துவில் வனப்பகுதிகளில் இயங்கிய ராம் - நகுலன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆழ ஊடுருவும் தாக்குதல் நடவடிக்கைகள், அம்பாந்தோட்டை, மொனராகலை போன்ற சிங்கள மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டிருந்தன.
தொடர்ச்சியான படை நடவடிக்கைகள் ஊடாக திருமலை – மட்டக்களப்பு மாவட்டங்களை தமது முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் சிங்களப் படைகள் கொண்டுவந்ததை தொடர்ந்து, அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கெரில்லா பாணியிலான தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று இக்பால் அத்தாஸ் போன்ற தென்னிலங்கை படைத்துறை ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டிருந்த பொழுதும், அவ்வாறான தாக்குதல்கள் எவையும் அங்கு நிகழ்ந்தேறவில்லை.

இதற்கிடையே 2008ஆம் ஆண்டு மாவீரர் நாள் நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கிளிநொச்சி நகர் மீதான முற்றுகையை சிங்களப் படைகள் இறுக்கத் தொடங்கியிருந்தன. இதேநேரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்களின் குடிசார் நடவடிக்கைகளில் கருணா – பிள்ளையான் கும்பல்களின் ஆதிக்கமும் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. இந்நிலையில் போர் ஓய்வுக் காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராக கடமையாற்றி தயாமோகன் அவர்கள், மீண்டும் வன்னியில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தார். ஒருபுறம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் பணிகளை விரிவுபடுத்துவதற்கான பணிப்புரை தயாமோகன் அவர்களுக்கு வழங்கப்பட்டதோடு, மாவீரர் நாளுக்கு முன்னர் தென்தமிழீழத்தில் மிகப்பெரும் தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவதற்கான திட்டம் ஒன்றும் அவரிடம் முன்மொழியப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அவ்வாறான மிகப்பெரும் தாக்குதல் எதுவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிகழ்ந்தேறவில்லை. அதேநேரத்தில் அரசியல் பணிகளும் பெரிதளவில் விரிவுபடுத்தப்படவில்லை. மாறாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிய கருணா – பிள்ளையான் குழுவினரின் முகாம்கள் மீதான தாக்குதல்களே, தயாமோகனின் மீள்வருகையை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருந்தன. குறிப்பாக கருணா குழுவினர் மீதான தாக்குதல் செய்திகளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆயுதக் குழு மீதான தாக்குதலாக வர்ணித்து வெளியிடுமாறு செய்தியாளர்களிடம் தயாமோகன் வலியுறுத்தியிருந்தார். அதேநேரத்தில் கருணா குழுவினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் நிகழ்த்திய சில தாக்குதல்களை, பிள்ளையான் குழுவினர் நிகழ்த்திய தாக்குதல்களாக சித்தரித்து, கருணா – பிள்ளையான் குழுவினரிடையிலான மோதல்கள் அதிகரித்திருப்பது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியிலும் தயாமோகன் ஈடுபட்டிருந்தார்.

உண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அரசியல்துறைப் பொறுப்பாளராக மட்டும் தயாமோகன் விளங்கிய பொழுதும், மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக விளங்கிய உமாராம் எடுக்கக்கூடிய முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய ஒருவராகவும், திருமலை – அம்பாறை மாவட்டத்தில் நிகழ்ந்தேறிய அரசியல் - படைய நிகழ்வுகள் மீதும், அம்பாறை மாவட்ட தளபதி ராம் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவராகவுமே தயாமோகன் விளங்கியிருந்தார். இதில் அம்பாறை மாவட்ட அரசியல்துறையினருக்கான பணிகளை தற்காலிகமாக நகுலன் முன்னெடுத்திருந்த பொழுதும், அதிலும் தயாமோகனின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது.

இதற்கிடையே, புலம்பெயர்தேசங்களில் உள்ள செய்தியாளர்கள் சிலருடனும், தமது உறவினர்களுடனும் நேரடித் தொலைபேசித் தொடர்புகளை தயாமோகன், நகுலன், ராம் போன்றோர் பேணிவந்தனர். இந்தத் தொடர்பாடல்கள் நாளடைவில் வெளிநாடுகளில் இயங்கிய கே.பி குழுவினருடன் விரிவுபடுத்தப்பட்டு, 2009ஆம் ஆண்டின் முற்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளியுறவுத் தொடர்பாளராக கே.பி நியமிக்கப்பட்ட பொழுது மேலும் வலுப்படுத்தப்பட்டிருந்தது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், தயாமோகன், ராம் போன்றோருடன் அடிக்கடி தொலைபேசித் தொடர்பாடல்களைப் பேணி வந்த கே.பி, அழிவுநிலையை நோக்கி தமிழீழ விடுதலைப் புலிகள் சென்று கொண்டிருப்பதாகவும், ஆயுதங்களைக் கீழே போட்டாலே ஒழிய, தமிழீழ விடுதலைப் புலிகளை உலகம் காப்பாற்றப் போவதில்லை என்றும், போர்நிறுத்தம் சாத்தியப்படப் போவதில்லை என்று வலியுறுத்தி வந்திருந்தார்.

இதற்கிடையே, வன்னிப் போர் உச்சகட்ட உக்கிரநிலையை அடைந்த பொழுது, இந்திய அமைதிப் படைகளின் காலத்தில் முன்னெடுக்கப்பட்டமை போன்று படைய, அரசியல், நிர்வாகப் பணிகளை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு தயாமோகன், ராம், நகுலன் போன்றோருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. தென்தமிழீழத்தில் எதிர்காலத்தில் தமது போராளிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் தெளிவான தரிசனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கொண்டிருந்ததையே இந்த அறிவுறுத்தல் புலப்படுத்தியிருந்தது.

இதனிடையே, மக்களைக் காப்பதற்காக வெள்ளைக் கொடியுடன் சமாதானம் பேசச்சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் சீ.புலித்தேவன், தளபதி ரமேஸ் ஆகியோரை, கடந்த ஆண்டு மே 18ஆம் நாள் அதிகாலையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்தும், நிராயுதபாணிகளான போராளிகளையும், பொதுமக்களையும் வகைதொகையின்றி கொன்றுகுவித்தும், பெரும் இனவழித்தொழிப்பு நடவடிக்கையை சிங்களப் படைகள் அரங்கேற்றி முடித்த பொழுது, உடனடியாக தயாமோகன், ராம் ஆகியோருடன் அவசர அவசரமாக தொடர்பு கொண்ட கே.பி, ‘தமிழீழ தேசியத் தலைவர் வீரச்சாவைத் தழுவிவிட்டார்’ என்ற செய்தியை சகல போராளிகளுக்கும் தெரியப்படுத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு மட்டும் நின்றுவிடாது, இவர்களின் உதவியுடன், தென்தமிழீழத்தின் பல்வேறு இடங்களில் சிறு அணிகளாக நிலைகொண்டிருந்த போராளிகளுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, ‘இனி ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை’ என்ற செய்தியையும் கே.பி வலியுறுத்தியதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறாக தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த போராளிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்களின் போர்க்குணத்தை சிதைப்பதே கே.பி அவர்களின் முதன்மை இலக்காக அமைந்திருந்தது. மறுநாள் 19ஆம் நாளன்று, ‘தேசியத் தலைவரின் உடல்’ என்றுகூறி காணொளிகளை சிங்கள ஊடகங்கள் ஒளிபரப்பிய பொழுது, மீண்டும் தென்தமிழீழத்தில் உள்ள போராளிகளுடன் தொடர்பு கொண்ட கே.பி, ‘அது தலைவரின் உடல்தான்’ என்று அடித்துக்கூறியதோடு, எஞ்சியிருக்கும் மூத்த உறுப்பினர் என்ற வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் தகமை தனக்கு இருப்பதாகவும், தனது முடிவுகளை தளபதி ராம், தயாமோகன் போன்றோர் ஆமோதிப்பதாகவும் கூறியிருந்தார்.

இதன் உச்சக்கட்டமாக போராளிகளை சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு அறிவுறுத்திய கே.பி, இவர்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதத்தை அனைத்துலக சமூகம் தனக்கு வழங்கியிருப்பதாகவும், முற்றுமுழுதாக ஆயுதங்கள் களையப்பட்ட அரசியல் அமைப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மாற்றம் பெறும் பொழுதே இயக்கத்தின் மீதான தடையை வெளிநாடுகள் நீக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இதில் கே.பியின் முடிவை ஏற்றுக் கொள்வதாக பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியின் ஊடாக தயாமோகன் பகிரங்கமாக அறிவித்திருந்த பொழுதும், அப்படியான பகிரங்க அறிவித்தலை வெளியிடுவதற்கு ராம் தயக்கம் காட்டியிருந்தார்.

அதற்கு ஒரு முக்கிய காரணமும் இருந்தது. அதாவது கே.பியின் முடிவை ஏற்றுக் கொள்வதற்கு தென்தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த ஒரு தொகுதி போர்க்குணம் மிக்க போராளிகள் மறுப்புத் தெரிவித்திருந்தனர். தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பாகவோ அல்லது போராட்டத்தின் எதிர்காலம் தொடர்பாகவோ எந்தவொரு முடிவுகளையும் வெளிநாடு ஒன்றில் தங்கியிருந்தவாறு கே.பி எடுக்க முடியாது என்பதே அந்தப் போராளிகளின் நிலைப்பாடாக அமைந்திருந்தது. இதே நிலைப்பாட்டையே தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசிய உணர்வாளர்களும் எடுத்திருந்தனர். மனதளவில் கே.பியின் முடிவை ராம் ஏற்றுக்கொண்டு, கே.பியின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் செயற்படுவதற்கு முன்வந்திருந்த பொழுதும், சக போராளிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் கே.பியின் முடிவை பகிரங்கமாக ஆதரிப்பதற்கு ராம் விரும்பவில்லை.

இந்நிலையில், கே.பியை தனது தலைமையாக அறிவித்து பி.பி.சி தமிழோசைக்கு தயாமோகன் வழங்கிய செவ்வி, ஒரு தொகுதி போராளிகளை கடும் சீற்றத்திற்கும், ஏனைய போராளிகளை குழப்பத்திற்கும் ஆளாக்கியிருந்தது. இது இவ்வாறிருக்க தனது பொறுப்பின் கீழ் இயங்கிய ஒரு தொகுதி போராளிகளை கே.பியின் அறிவுரைக்கு அமைய சிங்களப் படைகளிடம் சரணடையுமாறு தயாமோகன் பணித்திருந்தார். இவ்வாறு தயாமோகனின் கட்டளையை ஏற்றுச் சென்ற மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த ஒரு தொகுதி போராளிகள் சிங்களப் படைகளால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்கள். இதேபோன்று கே.பியின் அறிவுரைக்கு செவிசாய்த்து சிங்களப் படைகளிடம் சரணடைந்த தேவன் தலைமையிலான திருமலை மாவட்டத்தை சேர்ந்த மேலும் ஒரு தொகுதி போராளிகள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இதற்கிடையே அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு, பொத்துவில் வனப்பகுதிகள் மீதான பெரும் படை நடவடிக்கை ஒன்றும் சிங்களப் படைகளால் தொடங்கப்பட்டிருந்தது. வன்னியில் நிலைகொண்டிருந்த சிங்களப் படைகளின் ஒரு டிவிசன் படையணி, முள்ளிவாய்க்கால் யுத்தத்தை தொடர்ந்து அம்பாறை மாவட்டத்திற்கு நகர்த்தப்பட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான தேடியழிப்பு நடவடிக்கைகளில் களமிறக்கப்பட்டிருந்தது. இதன்பொழுது கஞ்சிக்குடிச்சாறு, பொத்துவில் வனப்பகுதிகளில் ‘இனம்காணப்பட்ட’ தமிழீழ விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது தொடர்ச்சியாக சிங்களப் படைகளால் எறிகணைகள் பொழியப்பட்டன. கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் சிங்களப் படைகள் நிகழ்த்திய பதுங்கித் தாக்குதல் ஒன்றில் ஒரு தொகுதி போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டிருந்தார்கள்.

இதனால் அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அணிகள் தொடர்ந்தும் நிலைகொண்டிருப்பது பெரும் சவாலாக அமைந்தது. இதேநேரத்தில் தனது பொறுப்பின் கீழிருந்த போராளிகளை அப்படியே அனாதரவாகக் கைவிட்டு, கடந்த ஆண்டு யூன் மாத இறுதியில் மட்டக்களப்பை விட்டு வெளியேறி, பாதுகாப்பாக கொழும்பின் ஊடாக மலேசியாவிற்கு தயாமோகன் புறப்பட்டுச் சென்றார். தயாமோகனின் மலேசியப் பயணத்தின் பின்னணியில் பல அந்தரங்க நகர்வுகள் இருந்தாகக் கூறப்படுகின்றது. மலேசியாவை சென்றடைந்த தயாமோகன், அங்கு கே.பி அவர்களை அவரது குடும்பத்துடன் சந்தித்து, பின்னர் சுவிற்சர்லாந்தை சென்றடைந்திருந்தார்.

இதேபோன்று சிங்கள அரசுடன் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் கோத்தபாயவின் நேரடிக் கட்டுப்பாட்டின கீழ் இயங்கும் சிங்கள படைப் புலனாய்வுப் பிரிவினரிடம் சரணடைந்த ராம், யூலை மாத முற்பகுதியில் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் கசிந்திருந்தன. கே.பியின் அறிவுரைக்கு அமைய முதலில் சரணடைந்த போராளிகளை சிங்களப் படையினர் படுகொலை செய்த பொழுதும், பின்னர் கே.பியிற்கும், கோத்தபாயவிற்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் ராம் போன்றோரின் சரணடைவிற்கு சிங்களப் படையினர் இடமளித்திருந்தனர்.

ராம் அவர்களின் சரணடைவைத் தொடர்ந்து தயாமோகனால் கைவிடப்பட்ட மேலும் ஒரு தொகுதி போராளிகள், கே.பியின் உதவியுடன் பொலனறுவை வெலிக்கந்தைப் பகுதியில் சிங்களப் படைகளிடம் சரணடைந்தனர். இதேநேரத்தில் அம்பாறையை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் ஒன்றிற்கு நகர முற்பட்ட போர்க்குணம் மிக்க ஒரு தொகுதி போராளிகள், கே.பி – ராம் தரப்பினரின் உதவியுடன் மிகவும் நயவஞ்சகமான முறையில் திருமலை – மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதியில் வைத்து சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டனர்.

இவ்வாறாக தென்தமிழீழத்தில் காதும்காதும் வைத்தாற்போல் நிகழ்ந்தேறிய போராளிகளின் படுகொலைகள், சிறைப்பிடிப்புக்கள், சரணடைவுகளின் நடுநாயகமாக கே.பி அவர்களே திகழ்கின்றார். தற்பொழுது தயாமோகன் சுவிற்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள நிலையில், ராம், நகுலன் போன்றோர் சிங்களப் படைகளிடம் கட்டுப்பாட்டிலேயே உள்ளனர்.
தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலிப்பதற்கு தான் எடுத்த முயற்சிகள் கைகூடாத நிலையில், கடந்த ஆண்டு மாவீரர் நாளில் ராம் - நகுலன் ஆகியோர் ஊடாக இதே அறிவித்தலை வெளியிடுவதற்கு கே.பி எடுத்த முயற்சி உலகத் தமிழர்களிடம் எடுபடவில்லை.

இதன் தொடர்ச்சியாக ‘மக்கள் விடுதலை இராணுவம்’ என்ற பெயரில் தென்தமிழீழத்தில் சிங்களப் படைப் புலனாய்வாளர்களால் தொடங்கப்பட்ட ஆயுதக் குழுவும், மக்களிடம் எடுபடாது பிசுபிசுத்துப் போயுள்ளது. இவ்வாறான சூழலில் மீண்டும் ராம் அவர்களைப் பயன்படுத்தி கே.பி – கோத்தபாய தரப்பு அரங்கேற்றிய மற்றுமொறு நாடகமும் புஸ்வாணமாகியுள்ளது. கே.பியின் உண்மை முகம் இப்பொழுது உலகத் தமிழர்களிடையே அசிங்க முகமாக வெளிப்பட்டுள்ள நிலையில், இனியும் கே.பியின் கபட நாடகங்கள் சாத்தியப்படப் போவதில்லை என்பதே யதார்த்தம். ஆனாலும் தமது எசமான்களின் கட்டளை கிடைக்கும் வரை தமது நாடகங்களை கே.பி குழுவினர் தொடர்வது மட்டும் திண்ணம்.

- சேரமான்

Comments