அரசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டேன்: சீமான்

சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம். உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது.

ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்று சீமான் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மீது தமிழகக் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.

தமிழக மீனவர் செல்லப்பன் அவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டது குறித்த சம்பவத்தில் நேற்று நான் பேசிய பேச்சினை வைத்து தமிழகக் காவல்துறை என் மீது பொய் வழக்குப்பதிவு செய்துள்ளது.

என்னைக்கைது செய்ய முனைப்பு காட்டி வருகின்றது. 600 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் விலைமதிப்பற்ற வலைகள், படகுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக மீனவர்கள் சிங்களனால், தினசரி கொல்லப்படும் பொழுதோ,அவர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் பொழுதோ, அவமானப்படுத்தப்படும் பொழுதோ,மீனவனின் வலை அறுக்கப்படும் பொழுதோ மத்திய மாநில அரசுகள் துளியும் கவலைப்படவில்லை.

மென்மையான முறையில் கடிதம் எழுதினார்கள். குறைந்தபட்சம் ஒரு கண்டனம் கூட தெரிவிக்க வில்லை. ஆனால் மத்திய,மாநில ஆளும் அரசுகள், நேற்று நான் பேசிய பேச்சுக்கள் சிங்களனின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுவதாக கருதி என்னைக் கைது செய்ய தனிப்படை அமைத்து வலை வீசித் தேடுகின்றன.

600 தமிழ்மீனவர்களின் உயிருக்கு இல்லாத மதிப்பு நம் இனம் அழித்த சிங்களனுக்கு இருப்பதை நினைத்தால் நாம் வாழ்வது தமிழ்நாட்டிலா இல்லை இலங்கையிலா என்னும் எண்ணம் எழுகின்றது. ஆஸ்திரேலியாவில் ஒரு மாணவன் தாக்கப்பட்டால் கொதிக்கும் இந்திய மனம் என்ணற்ற மீனவனின் உயிருக்கு சிறு அசைவைக்கூட தெரிவிக்க மறுக்கின்றதே? பாகிஸ்தானி கசாப் மும்பையில் துப்பாக்கியில் சுட்டால் எல்லை கடந்த பயங்கரவாதம் என்று பாகிஸ்தானை எதிர்க்கும் இந்தியா, தினசரி மீனவனை கொலை செய்யும் இலங்கை அரசுடன் விருந்து வைத்து மகிழ்கின்றதே? ஏன்?

பிஜூ தீவில் குஜராத்தி தாக்கப்படும் பொழுது துடிக்கும் இந்தியா இங்கு சாகும் மீனவன் பற்றிக் கவலைப்படாமல் கிரிக்கெட் விளையாட வழியனுப்பி வைக்கின்றதே? ஏன்? செத்தவன் தமிழன் என்பதால் தான் எல்லோரும் பாராமுகம் காட்டுகின்றார்களா? இது தான் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணமா?

சென்ற வருடம் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் சிங்கள ஏகாதிபத்தியத்தால் கொல்லப்பட்டு தமிழினம் ஒடுக்கப்பட்ட பொழுது அதற்கு பேருதவியும் பெரும் ஆதரவும் அளித்த மத்திய, மாநில அரசுகள் இன்று நம் எல்லையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவன் கொல்லப்படும் பொழுதும் இலங்கைக்கு உறுதுணையாய் இருப்பது தமிழர்களை மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றது.

எண்ணற்ற மீனவன் செத்துக் கொண்டிருக்கும் பொழுது உணர்வுள்ள தமிழர்கள் எங்களால் தமிழ் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் வகையில் கடிதம் எழுதவோ, அல்லது பாராட்டு விழாவில் கூச்சமில்லாமல் நனையவோ அல்லது கண் துடைப்புக்காய் ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது.

இன விடியலுக்கான பணியைச் செய்தே தீருவோம். அடக்குமுறைச் சட்டங்கள் காட்டி என்றும் எங்களை அச்சுறுத்த முடியாது. சிங்கள இனவெறியன் ராஜபக்‌ஷேவின் விருப்பத்திற்கு ஏற்ப சோனியாவின் மத்திய அரசும் இங்குள்ள தமிழக அரசும் வேண்டுமானால் செயல்படலாம்.

உண்மைத் தமிழன் என்னால் செயல்பட முடியாது. ஆகவே அச்சுறுத்தலுக்கு அஞ்சாமல் தொடர்ந்து போராடுவோம் என்பதைத் தெரிவித்து கொள்கின்றேன்.

Comments