ஓடிஓளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல --சீமான்

தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது என நாம் தமிழர் கட்சி, செந்தமிழன் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சிங்கள கடற்படையினரால் தமிழக மீனவர் செல்லப்பன் மீன்பிடிக்கும் போது அடித்துக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் இலங்கையில் 25,000 சீனக் கைதிகளை புனரமைப்புப் பணிகள் செய்ய அனுமதித்திருப்பதன் மூலம் ஈழத்தமிழர்களின் மானத்திற்கும் உயிருக்கும் தீங்கு செய்யும் என்பதாலும், இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் குந்தகம் ஏற்படும் என்பதை தடுக்கக் கோரியும் 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்திட ஐ.நா.மன்றம் நியமித்த போர்க்குற்ற விசாரணைக் குழவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளைக் கண்டித்தும் நாம் தமிழர் கட்சி சார்பில் 9-07-10 சனி அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இதுவரை சுமார் 537 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டும், அடித்தும் கொன்றிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரை படுகாயப்படுத்தியிருக்கிறது. தமிழக மீனவர்களின் பல்லாயிரம் கோடி மூபாய் உடமைகளை அழித்து நாசப்படுத்தியிருக்கிறார்கள். நமது மீனவர்களை காக்க வேண்டிய இந்திய அரசும், தமிழக அரசும் கண்ணாமூச்சி விளையாட்டு போல் கடிதம் எழுதிக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றிவருகின்றனர்.

இதைக் கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் என் மீது பிரிவினை தூண்டினார், இறையாண்மைக்கு எதிராகப் பேசினார் என்றெல்லாம் பொய் வழக்கு போட்டு கைது செய்யத் துடிக்கிறது தமிழக அரசு.

இலங்கை, இந்தியா உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் அங்கம் வகிக்கும் ஐ.நா.மன்றத்தின் பொதுச் செயலாளர் பான்.கி.மூன் அவர்களை தரங்கெட்ட வார்த்தைகளால் இழிவாக எழுதி வைத்து இலங்கையின் வீட்டு வசதித் துறை அமைச்சர் விமல் வீரவன்சே ஐ.நா. தூதரகத்தை முற்றுகையிட்டு, ஐ.நா. நியமித்த மர்சுகி தருஷ்மன் தலைமையிலான போர்க்குற்ற விசாரணைக் குழு இலங்கைக்குள் வர அனுமதிக்க மாட்டோம் என்று அடாவடித்தனமாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார்.

அதை இலங்கை அதிபர் இராஜபக்சேவும் ஆதரிக்கிறார். ஆனால் தமிழ் நாட்டிலோ, எங்கள் தொப்புள்கொடி உறவுகளான மீனவர்கள் இதுவரை 500க்கும் மேற்பட்டவரை சிங்களக் கடற்படை கொன்று குவிப்பதைக் கண்டித்தால் பிரிவினைவாதம் பேசுவதாகக் கூறி தமிழக முதலமைச்சர் தனது சட்ட அமைச்சர் துரைமுருகனை விட்டு, புதிய அடக்குமறைச் சட்டத்தை இயற்றியாவது எங்கள்மீது நடவடிக்கை எடுப்போமென மிரட்டுகிறார் என்றால் தமிழக அரசின்மீது எங்களுக்கு பல சந்தேகங்கள் இயல்பாக ஏற்படுகிறது.

இலங்கையில் ஈழத்தமிழரை இலட்சக் கணக்கில் இனப்படுகொலை செய்தது போதாதென்று இந்தியாவிலும் தமிழினத்தை அதாவது நம் மீனவர்களை இனப்படுகொலை செய்துவரும் சிங்கள இனவெறியர் அதிபர் இராஜபக்சே அரசை நாம் கண்டித்தால், தமிழக அரசுக்கும், இங்குள்ள அமைச்சர் துரைமுருகனுக்கும் கோபம் பொத்துக் கொண்டு வருவது ஏன்? இராஜபக்சே இவர்களுக்கு அண்ணனா, தம்பியா? மாமனா, மைத்துனரா? தமிழின விரோதியைத் திட்டினால் தமிழினக் காவலருக்கு கோபம் வருவதேன்? தமிழர்களின் உயிரென்றால் உங்களுக்கு துச்சமா? அல்லது இராஜபக்சே அரசுக்கு நீங்கள் என்ன அங்கமா?

ஈழத்தமிழரைப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், 6வது திருத்தச் சட்டம் என அடக்குமுறைச் சட்டங்களைக் காட்டி மிரட்டுவதைப் போல், தமிழக சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் இங்கேயும் அடக்குமறைச் சட்டம் போடுவோமென மிரட்டுகிறார் என்றால், இவர்கள் தமிழக மீனவர்களை காப்பாற்ற இலங்கைமீது சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டார்களாம்! ஆனால் அதைக் கண்டித்துப் பேசும் எங்களுக்குத் தான் வாய்ப்பூட்டுச் சட்டம் போடுவாராம்.! இவர் தமிழ் நாட்டு மக்களுக்கு அமைச்சரா? இல்லை இலங்கைக்கு அமைச்சரா?

உலகமே இன்றைக்கு இலங்கையின் இராஜபக்சே அரசு ஈழத்தமிழர்க்கெதிராக போர்க்குற்றம் புரிந்திருக்கிறதா, இல்லையா என ஆய்வுச் செய்திட ஐ.நா.மன்றம் மூலம் குழு அமைத்து ஆராயச் சொல்கிறது. ஆனால் இலங்கை அரசின் ஒரு அமைச்சர் விசாரணை நடத்த ஐ.நா. குழுவை இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோமென மிரட்டுகிறார். சாகும்வரை உண்ணாவிரதமிருக்கிறார். அதை முடித்துவைப்பதற்கு இந்நாடகத்தின் சூத்திரதாரியான இராஜபக்சேவே செல்கிறார்.

இலங்கைப் பாதுகாப்புச் செயலாளரும், அதிபர் இராஜபக்சேவின் தம்பியுமான கோத்தபைய இராஜபக்சே விசாரணைக்கு முன்பே, அரசின் மீதும், இராணுவத்தின் மீதும் விசாரணை எதுவும் நடத்த மாட்டோமென்று ஐ.நா.குழு உறுதியளிக்க வேண்டுமென நிபந்தனை விதிக்கிறார். அதுமட்டுமன்றி சரத்பொன்சேகா ஐ.நா.குழவிற்கு சாட்சியமளித்தால் அவரைத் தூக்கிலிடுவோம் என பி.பி.சி.க்கு அளித்த நேர்காணலில் மிரட்டுகிறார். போர்க்குற்றம் செய்யாதவர்கள் என்றால் இப்படியெல்லாம் ஐ.நா.வை அவமானப்படுத்துவது ஏன்? விசாரணை நடத்த ஒத்துழைக்க மறுப்பதேன்? சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணை நடத்த அனுமதித்தால் இலங்கை போர்க்குற்றவாளி நாடாக அறிவிக்கப்படும் என்ற அச்சத்தால் ஐ.நா. குழுவின் விசாரணைக்கு இவர்கள் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்பதுதானே உண்மை.

ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் இடம்பெற முயற்சிக்கும் இந்தியா இதுவரை இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்து வாய் திறக்காதது ஏன்? 2009 சனவரியில் காசா பகுதியில் சுமார் 1700 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்ட போது, அதே ஆண்டு ஏபரலில் ஐ.நா.மன்றம் அமைத்த போர்க்குற்ற விசாரணைக் குழுவை வரவேற்ற இந்திய அரசு, இலங்கையில் முள்ளிவாய்க்கால் போரில் சுமார் ஒரு இலட்சம் ஈழத்தமிழர்கள் கொத்துக் குண்டுகளாலும், பாஸ்பரஸ் குண்டுகளாலும் சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு இதுவரை ஏன் கண்டிக்கவில்லை?

போர்க்குற்ற விசாரணை நடத்தச் செல்லும் ஐ.நா.குழுவை இந்தியாவும் தமிழக அரசும் ஆதரிக்கிறதா, இல்லை எதிர்க்கிறதா என்று சொல்லட்டும்.மிகச் சிறிய நாடான இலங்கை ஐ.நா.மன்றத்தையே அவமானப்படுத்தும்போது மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா அதைக் கண்டிக்க அஞ்சுவது ஏன்? சீனக் கைதிகளை இலங்கை இறக்குமதி செய்திருப்பது இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக அமையும் என்று ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இந்திய அரசு இதைப்பற்றி சிறிதும் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. இலங்கை அனுமதித்துள்ள 25,000 சீனக்கைதிகளில் பயங்கர குற்றவாளிகளும், உளவாளிகளும் இருக்க மாட்டார்கள் என்று என்ன உறுதியிருக்கிறது? அப்படிபட்டவர்களால் இந்தியாவின் பாதுகாப்பு பகுதியாகவும் இராணுவத்தளங்கள் அமைக்க தகுதியான இடமாகவும் கருதப்படும் தென்னிந்தியாவிற்கு குந்தகம் விளையாதா?

இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மாலத்தீவு போன்ற சார்க் நாடுகளில் இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டு கடலோரப் படைகளும், தன் அண்டை நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டி வந்தால் சுட்டுக்கொல்வது கிடையாது. கைது செய்து அந்தந்த நாட்டிற்கே அனுப்பிவைத்து விடுவதுதான் வழக்கம். ஆனால் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களைக் கொன்ற சிங்கள அரசைத் தட்டிக்கேட்க துணிவு இல்லாவிட்டாலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திலோ, ஐ.நா.மனித உரிமை ஆணையத்திடமோ முறையிட்டு இலங்கை அரசை, இந்தியா தண்டிக்கத் தவறியதேன்.

அரசு, ஆட்சி, அதிகாரம் எல்லாம் உங்கள் கைகளில் தானே இருக்கிறது! அவையெல்லாம் எதற்கு? இராஜபக்சேவிற்கு வெண்சாமரம் வீசுவதற்கா? மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி 168 இந்தியர்களை சுட்டுக் கொன்றதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட் அணியை அனுப்ப மறுத்த இந்தியா முள்ளிவாய்க்கால் போரில் இந்திய வம்சாவழியினரான மலையகத் தமிழர்கள் 15,000 பேர் 50,000 ஈழத்தமிழர்களோடு இனப்படுகொலை செய்யப்பட்டதையும் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்பகுதியிலேயே சிங்கள கடற்படை கொன்றதையும் உதாசீனப்படுத்திவிட்டு இந்திய கிரிக்கெட் அணியை இலங்கைக்கு இரண்டு முறை அனுப்புவது இந்திய ஒருமைப்பாட்டின் இலட்சணத்திற்கு இதுதான் அடையாளமா?

சிங்கள கடற்படையினரால் கொடூரமாகச் சுட்டும், அடித்தும் கொல்லப்படும் தமிழக மீனவர்கள் இந்தியர்களில்லையா? அவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டா இல்லையா? எனக்கேட்டால், தன்னைத் தமிழன் என்று மார்த்தட்டிக் கொள்ளும் பொறுப்புள்ள ஒரு தமிழக முதலமைச்சர், "சூராதி சூரர்கள், சூரபத்ம பேரர்கள் இதோ புறப்பட்டுவிட்டது இலங்கைக்கு எங்கள் படை என்று கடற்படையை அனுப்பப் போகின்றார்களா?" என்றும் "கொழும்புக்கு கடலிலேயே நீந்திச் சென்று அங்குள்ள கோட்டைக் கொத்தளங்களை முற்றுகையிடப் போகிறார்களா?" என்றும் தமிழர்களைக் கேலி பேசி இருப்பது தமிழினத் தலைவருக்கு அடையாளமா?.

செம்மொழி மாநாடு நடத்தியவருக்கு பாவம் இராஜராஜ சோழன் காலத்தில், நந்திவர்ம பல்லவன் காலத்தில் இலங்கைக்குப் படையெடுத்துச் சென்று தமிழரிடம் வாலாட்டிய சிங்கள மன்னர்களின் கொட்டத்தை அடக்கிய வரலாறு தெரியாதென்று சொல்ல முடியாது. பதவிப்பித்தும், குடும்பச் சொத்தும் தமிழக முதல்வரைத் தமிழர் வீரத்தைப் பற்றியே கேலியும் கிண்டலும் செய்யத் தூண்டியிருக்கிறது. இதுதான் அண்ணா, பெரியார் உங்களுக்கு காட்டிய வழியா?

தமிழனுக்கு என்றொரு நாடோ, படையோ இன்றில்லாவிட்டாலும் முப்படைகளைக் கொண்டிருக்கும் இந்திய அரசில் தன்னை பங்காளி ஆக்கிக்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் கலைஞர் தன்னை எம்.ஜி.ஆரைப் போல் எண்ணிக்கொண்டு, சோனியா காந்தி தன்னை இந்திராகாந்தி போல் கருதிக்கொண்டு அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு ஆயதங்களும், பயிற்சியும், நிதியுதவியும் செய்தததைப் போல எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு உதவிகள்கூட செய்ய வேண்டாம். குறைந்தது எங்களைத் தடுத்து நிறுத்தாமல் இருக்க முடியுமா உங்களால்?

ஈழத்தமிழர்களையும், தமிழக மீனவர்களையும் காப்பாற்ற எத்தனை இலட்சம் தமிழர்கள் அணிவகுத்து புறப்படுகிறார்கள் என்று சோதித்து பார்க்க நீங்கள் தயாரா? குடிநாயகம் அனுமதிக்கும் பேச்சு சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்க தடைச்சட்டங்களிடம் தஞ்சம் புகும் நீங்களா தமிழக இளைஞர்களின் வீரத்தைப் பற்றி கேலி பேசுவது? நாங்கள் சூராதி சூரர்கள் என்று நிரூபிக்கத் தயார்! ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள உங்களைப் போன்றவர்கள் நந்தி போலிருந்து முட்டுக்கட்டை போடாமலிருக்கத் தயாரா?

ஈழத்தமிழர்கள் 2009ல் இனப்படுகொலை செய்யப்படும் போதுகூட, உங்கள் தயவால் நடந்து கொண்டிருந்த மத்திய அரசுக்கு ஒரு நெருக்கடி தந்து போரை நிறுத்தாமல் மூணுமணி நேர உண்ணாவிரத நாடகமெல்லாம் எங்களுக்கு நடத்தத் தெரியாது. பணமோ, பதவியோ ஏதுமற்ற ஏழைத்தமிழர்களான முத்துக்குமார் முதல் முருகதாசன் வரை 18 மானத்தமிழர்களால் தீக்குளித்துத் தங்கள் இன்னுயிரை மாய்க்கத்தான் தெரிந்தது. தமிழினத்தைக் காட்டிக்கொடுக்க அவர்களுக்குத் தெரியவில்லையே! வங்காளி என்ற இனப்பற்று இருந்ததால்தான் ஒரு மேற்குவங்க காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த சித்தார்த்த சங்கர் ரேயிக்கு வங்கதேசத்திற்கு விடுதலை பெற்றுத் தர முடிந்தது.

ஆனால் இந்தியாவையே வழிநடத்தும் முதலமைச்சரான கலைஞரால் இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களும், 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களும் இனப்படுகொலை செய்யப்படுவதைக் கண்டு வேடிக்கைதானே பார்க்க முடிந்தது? மலேசியாவில் சுமார் 250 ஆந்திர மென்பொருள் பொறியாளர்களின் கடவுச்சீட்டைக் அந்நாட்டின் காவல்துறை கிழித்து அவமானப்படுத்தியபோது, ஆந்திர முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு கொதித்தெழுந்து பிரதமாயிருந்த வாஜபாய்க்கு நெருக்கடி தந்து உடணடியாகப் புதுக்கடவுச் சீட்டு வழங்கச் செய்ததோடு மலேசிய அரசுடனான சுமார் 65,000 கோடி ரூபாய் இந்திய வணிகத்தையே இரத்து செய்ய வைத்தார்.

ஆனால் உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவராக ஆசைப்படும் உங்களால் தமிழக மீனவர்களைக் காக்க நடுவன அரசுக்குக் கடிதம் விடு தூதுதான் நடத்த முடிகிறது என்பது பெருமைக்குரிய செய்தியா என்பதை சற்று எண்ணி பாருங்கள் ஹரியானா வம்சாவழி வந்த பிஜி நாட்டின் அதிபர் சவுத்ரி இராணுவப் புரட்சியால் தூக்கி எறியப்பட்டதற்கு, ஹரியானா முதல்வராக இருந்த சவுதாலாவின் வற்புறுத்தலை ஏற்று இந்திய அரசு பிஜி நாட்டுடனான அரச உறவுகளை துண்டித்துக் கொண்டதோடு தன்னாட்டு தூதுவரையும், பிஜியிலிருந்து திரும்பப் பெற்றுக் கொண்டது.

ஆனால் தமிழக முதல்வரோ மகனுக்கும், பேரனுக்கும் நடுவணரசின் இலாபகரமான துறைகள் வேண்டி நெருக்கடி கொடுத்தாரே தவிர தமிழர்களைக் காக்க ஏன் எவ்வித நெருக்கடியும் தர மனமில்லாது போனது? கென்யா நாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத்தியர்கள் பாதிக்கப்பட்டபோது, இந்தியாவில் உள்ள குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, கென்யாவில் வாழும் குஜராத்தியர்கள் கடவுச்சீட்டு இல்லாமல் இந்தியா வரலாம். ஆவர்களை குஜராத் அரசு பாதுகாக்கும் என்று துணிவோடு பேசினார்.

ஆனால் தமிழக முதல்வர் கலைஞரோ, 83 வயதான உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து இந்தியா வந்த மாவீரன் பிரபாகரன் அவர்கிளின் தாயார் பார்வதி அம்மாளை இரக்கமில்லாமல் விமானதளத்திலிருந்தே திருப்பியனுப்பிய கருணைக்கடல் அல்லவா நீங்கள்? அதுமட்டுமல்லாமல் முள்ளிவாய்க்கால் போரின் போது அங்கிருந்து தப்பித்து தமிழகம் முயற்சி செய்த எண்ணற்ற தமிழ்க் குடும்பங்களை இரக்கமில்லாமல் இந்தியக் கடற்படையை வைத்து தடுத்து திருப்பியனுப்பியது போர்க்குற்றத்திற்கு உடந்தையான செயலல்லவா?

போர் முடிந்து ஒராண்டு ஆகியும் பல்லாயிரம் தமிழ் இளைஞர்களை வதைமுகாம்களில் வைத்தும் சுமார் 80,000க்கும் மேற்பட்ட தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடிப்படை வசதிகளின்றி கொடுமைப்படுத்தியும் வருகிறது சிங்கள அரசு. ஆனால் போர் எதுவும் இல்லாமலே தமிழ் நாட்டில் எவ்வித விசாரணையுமின்றி ஈழத்தமிழர்களை சிறப்பு முகாம் என்ற பெயரில் வதைமுகாம்களில் தடுத்து வைத்து இருக்கிறீர்கள் நீங்கள், அது நியாயம்தானா?

அண்மையில் கனடா அரசு, கைது செய்து வைத்திருந்த 86 ஈழத்தமிழர்களை 3 மாதத்திற்குள் விசாரித்து விடுதலை செய்தது மட்டுமன்றி அகதிகளாகவும் ஏற்றுக் கொள்கிறது. ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதோடு ஈழத்தமிழர்களை அகதிகளாகவும் ஏற்று ஆதரிப்போம் என மனிதநேயத்தோடு அரசாணையும் பிறப்பித்திருக்கிறார்.

ஆனால் தமிழக முதல்வரோ, இந்திய பிரதமரோ அல்லது சோனியா காந்தியோ ஐ.நா மன்றம் இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த நியமித்த குழுவை இதுவரை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்று துணிவுடன் கூற முடியாதது ஏன்? குற்றமுள்ள நெஞ்சுகள்தானே குறுகுறுக்க வேண்டும்!உலகில் வாழும் 10 கோடி தமிழர்களும் ஐ.நா.மன்றம் இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆய்வு செய்யும் குழுவை நியமனம் செய்ததற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கி.மூன் அவர்களுக்கும், இதற்கு பெருமுயற்சி எடுத்துக்கொண்ட ஐரோப்பிய, அமெரிக்க, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு நன்றிகள் செலுத்தி பாராட்டி வருகிறார்கள்.

இனப்படுகொலையை விசாரிக்க இவர்கள் எடுக்கும் நல்ல முயற்சிக்கு யார் தடையாய் இருக்க நினைத்தாலும் அதனை முறியடித்துக் காட்டும் ஆற்றல் உலகத் தமிழர்க்கு உண்டு எனவே ஈழத்தமிழரையும், தமிழக மீனவர்களையும் காத்திட ஆட்சியில் உள்ளவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், தாங்கள், எங்களை இலங்கைக்குச் செல்ல தூண்டிவிடுவது போல், தமிழக இளைஞர்களை புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வழியில் "பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால், சங்காரம் நிஜமென சங்கே முழங்கு" என்கிற வழியில் எங்களை அனுமதிக்க நீங்கள் தயாரா?

எங்கள் மீது தமிழக அரசு போடும் பொய் வழக்குகளை நாங்கள் சட்டப்படி சந்திப்போமே தவிர ஒருபோதும் ஓடிஓளிய நாங்கள் ஒன்றும் கோழைகளல்ல என்பதை தமிழக அரசுக்குத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

செந்தமிழன் சீமான்

Comments