கறுப்பு ஜுலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கான நீதி இதுவரை வழங்கப்படவில்லை: த ரொரொன்டோ சன்

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பில் சிறீலங்கா அரசு இன்றுவரை மன்னிப்பு கோரவில்லை என்பதுடன் அதற்கான நீதிகளும் வழங்கப்படவில்லை என கனடாவில் இருந்து வெளிவரும் த ரொரொன்டோ சன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கனடாவில் உள்ள குயின்ஸ் பார்க்கில் ஒன்று திரண்ட பல நூறு தமிழ் மக்கள் 27 வருடங்களுக்கு முன்னர் கறுப்பு ஜுலை என அழைக்கப்படும் இந்த நாளில் படுகொலை செய்யப்பட்ட தமது மக்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினார்கள். அந்த காலப்பகுதியில் நாடு முழவதும் வன்முறை வெடித்திருந்தது.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த இனக்கலவரத்தில் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர், பல இலட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அகதிகளாகினர். தமிழ் மக்களின் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான சொத்துக்களும் அழிக்கப்பட்டதாக கனேடிய தமிழ் தேசிய சபையை சோந்த சிவா விமல் தெரிவித்துள்ளார்.

கனடாவில் உள்ள தமிழ் மக்களை ஒருங்கிணைத்து எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொள்ளும் நோக்கத்துடன் இந்த சபை கடந்த வருடம் உருவாக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரம் தொடர்பில் சிறீலங்கா அரசு இன்றுவரை மன்னிப்பு கோரவில்லை என்பதுடன் அதற்கான நீதிகளும் வழங்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அரசினால் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளில் பல ஆயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதாக அதில் கலந்துகொண்ட ஏனைய மக்கள் தெரிவித்துள்ளனர். அங்கு விடுதலைப்புலிகளுக்கும் – சிறீலங்கா அரசுக்கும் இடையில் மோதல்கள் நடைபெற்றிருந்தன.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு என ஐ.நா குழுவை அமைத்துள்ளது சரியான முடிவு. இவ்வாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படாது விட்டால் சிறீலங்காவில் எந்த முன்னேற்றமும் ஏற்படாது என சிவா மேலும் தெரிவித்துள்ளார்.

இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பில் சிறீலங்கா அரசு அக்கறைகள் காண்பிக்க வேண்டும். இது தொடர்பில் கனேடிய அரசு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் 300,000 தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் பலர் தமது உறவகளை போரில் இழந்தவர்கள். குயின்ஸ் பார்க் பகுதியை இருள் சூழ்ந்து கொண்ட போது தமிழ் மக்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றி தமது உறவுகளை நினைவு கூர்ந்தனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments