படையினர் ஊசி மருந்து செலுத்தியதில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழப்பு!

வெலிக்கந்தை தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போராளிகளுக்கு படையினர் ஒரு வகை ஊசி மருந்தினை தடுப்பு மருந்து என்ற பெயரில் செலுத்தியமையால் ஒருவர் உயிரிழந்துள்ளார். பெருமளவானோர் காய்ச்சல் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

வெலிக்கந்தை பகுதியில் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் பலநூற்றுக் கணக்கானவர்களை உள்ளடக்கிய தடுப்பு முகாம் ஒன்று உள்ளது.

அந்த முகாமில் அனைத்துப் போராளிகளுக்கும் நோய்த் தடுப்பு மருந்து செலுத்துவதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு படையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இதன் அடிப்படையில் அங்கு சென்ற போராளிகளில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு படையினர் தடுப்பூசியினைச் செலுத்தியுள்ளனர். அவர்களுக்கு தலா இரண்டு ஊசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

அவர்களில் பலர் உடனடியாகவே சோர்வடைந்திருக்கின்றனர். சிறிது நேரத்தில் சிவம் என்கின்ற போராளி உயிரிழந்திருக்கின்றார். சம்பவம் தொடர்பில் அங்கிருந்த போராளிகள் உடனடியாகவே வெளியில் உள்ள தமது உறவினர்களுக்கு அறிவித்திருக்கின்றனர்.

இதனை அடுத்து ஏனைய போராளிகள் தமக்கு மருந்து செலுத்தவேண்டாம் என்றும் மருந்து செலுத்துவதற்கு அனுமதிக்கப் போவதில்லை என்றும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இந் நிலையில் உயிரிழந்த போராளியின் சடலம் இன்று பளையில் உள்ள அவரது வீட்டிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பெருமளவான போராளிகள் இன்றும் காய்ச்சல் தாக்கத்தில் இருந்து மீளவில்லை என்று அங்கிருந்து கிடைத்த நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.

குறித்த ஊசி மருந்து நீண்ட காலத்தின் பின்னர் தாக்கத்தினை ஏற்படுத்த வல்லதாக இருக்கலாம் என்றும் இதனால் தமக்கு எதிர்காலத்தில் ஆபத்து ஏற்படலாம் என்று தாம் அஞ்சுவதாக வெலிக்கந்தையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகள் கவலை வெளியிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Comments