மருத்துவ மாது தர்ஷிகாவின் படுகொலையும் தோற்றுப்போன தமிழரும்

இன்று தமிழ் மக்களுக்கான இராணுவம் களத்தில் இல்லாத நிலையில், புலி எதிர்ப்பை மாத்திரமே காரணமாக வைத்து அரசியல் செய்து வந்த பல தலைமைகள் இன்று தமிழ் மக்களை நேரடியாக சிங்களத்திடம் பலி கொடுத்துள்ளனர்.

வெளிப்படையாக தமிழர்கள் பாலியல் வதைகளுக்கு, சித்திரவதைகளுக்கு உள்ளாவதை தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ நீதியின் முன் தண்டனை பெற்றுத்தரவோ முடியாதவர்களாக இந்த அரசியல் தலைமைகள் உள்ளன.

இதனால் இலங்கைத்தீவில் இரண்டாந்தரப்பு மக்களாக, தோற்கடிக்கப்பட்ட இனமாக தமிழர்களை இந்த அரசியல் தலைமைகள் ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்வதால் மிகப்பெரிய தண்டனை எதுவுமில்லை என்பது இனிவரும் காலங்களில் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் நடைபெறப்போகும் அடக்கு முறைகளை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.

கொலையாளி பிணையில் விடுதலை செய்யப்பட்டதும் வழக்கை இன்னொரு மாகாணத்துக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வதும் என்பது பெரும்பான்மை அரசியல் தலையீடுகளேயன்றி வேறெதுவுமாய் இருக்க முடியாது.

புலியெதிர்ப்பு பேசி 30 வருடங்கள் இலங்கையில் பிழைப்பரசியல் நடாத்திய தமிழ் அரசியல் வாதிகள் இன்று மக்களுக்கு என்னத்தை பெற்றுக்கொடுத்துள்ளனர்? சிங்கள பேரினவாதத்திற்கு நிலத்தையும்..கலாச்சாரத்தையும், மானத்தையும் தாரைவார்த்த இவர்கள் இன்று வெளிப்படையாக பாலியல் வன்முறைகளுக்கும் துணைபோவதென்பது எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறதென்பதற்கான சமிக்ஞையே.

இனிவரும் காலங்களில் வைத்தியர்கள், ஆசிரியர்கள், முகாமையாளர்கள், முதலாளிகள் என பெரும்பான்மையினரின் வருகை வடக்கு கிழக்கில் தவிர்க்கப்பட முடியாதவையே. இந்த நிலையில் சிங்களப் பேரினவாதிகள் உள்ள ஒவ்வொரு தொழில் பேட்டைகளிலும் தமிழ்பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் நடைபெறத்தான் போகின்றன என்பதும் அதை எதிர்த்து தமிழ் மக்களால் நீதி கேட்க முடியாத அளவுக்கு தமிழ்மக்கள் தோற்றுப்போயுள்ளனர் என்பதும் வெளிப்படை உண்மையாகியுள்ளது.

தர்ஷிகாவின் படுகொலை என்பதை நாம் வெறுமனே பாலியல் படுகொலை என பார்க்க முடியாது. தமிழ் மக்கள் அதிகமாக வாழும்,தமிழ் கலாச்சார விழுமியங்கள் பின்பற்றப்படும் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் அற்ற நிலையில் வெளிப்படையாக நடைபெற்ற இந்த வன்முறையானது தமிழ் மக்களின் உரிமை சம்மந்தப்பட்டது. இந்த வன்முறைக்கு தீர்வு தராதவிடத்து எதிர்காலத்தில் என்னென்ன நடைபெறப்போகிறது?

வீடுகளை விடுதிகளாக்கி சிங்களவருக்கு தங்க கொடுப்பதும். கோயில்களை சுற்றி கடைகள் போட சிங்களவரை அனுமதிப்பதும் எதிர்காலத்தில் சிங்களவர் தமது அடக்குமுறைகளை பிரயோகிக்க பெரிதும் உதவும். இன்று யாழ்ப்பாணத்தில் சிங்களவன் தமிழனை எதிர்த்து பேசக்கூடிய நிலைமை உருவானதற்கு பெரும் காரணம் இந்த வீதியோர கடைகளும் சிறு வியாபார அனுமதிகளுமே. ஆக இந்த பெரும்பான்மை ஆணவம் தொடர்ந்து அனுமதிக்கப்படுமிடத்து தமிழ் பெண்கள் மீதான பாலியல் சேட்டைகள் அதிகரிக்கும். அதை தட்டிக்கேக்க கூடிய நிலையில் இளைஞர்களும் இருக்கமாட்டார்கள்.

இதனால்.... தர்ஷிகாவின் கொலை வழக்கின் தீர்ப்பென்பது தமிழர் தேசத்தில் தமிழ்மக்களுடைய உரிமையின் இருப்புப் பற்றியது. இந்த சம்பவத்திற்கு பிறகாவது யாழ் மக்கள் சிங்களவருக்கு பெரும்பான்மையினர் என்ற ரீதியில், சகோதரர் என்ற பார்வையில் செய்யும் சலுகைகளை குறைக்க வேண்டும். தமிழர் பிரதேசத்தில் அவர்கள் இரண்டாம் தரப்பினர் என்பதை அவர்கள் உணரவேண்டும்.

சிங்கள அரசின் மிதமிஞ்சிய சர்வாதிகார தன்மையும்..தமிழர் உரிமைகளை அடகுவைக்கும் தமிழ் அரசியல் வாதிகளின் அரசில் கொள்கைகளும் தொடருமாக இருந்தால் இன்னொரு வன்முறை தவிர்க்கப்பட முடியாததே.

மா.குருபரன்
webkuru@gmail.com
19-07-10

Comments