தரைமட்டமாக்கப்படும் மாவீரர் துயிலகங்களும், புதிதாக முளைக்கும் அபிவிருத்தி மாயைகளும்....!


தமிழீழ விடுதலைப்போராட்டம் ஸ்ரீலங்கா இனவெறி அரசாலும் ,அதன் கூட்டு வல்லாதிக்கங்களாலும் சென்ற வருடம் சிதைக்கப்பட்ட பின்னர் மீண்டும் தமிழர்கள் உரிமை கேட்டு எழுந்துவிடக்கூடாது என்பதில் சிங்கள தலைமையும் பிராந்திய வல்லாதிக்கமும் பெரும் பிரயத்தனைங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதன் ஒரு அங்கமாக குமரன் பத்மநாதன் என்ற கே.பி யை வைத்து பலமுனைகளிலும் பலவிதமான உடைப்பு வேலைகளை செய்கிறார்கள். எல்லா முனைகளினதும் அதன் நோக்கம் ஒன்றாகவே இருக்கிறது. ஆனால் கே.பி ன் அனைத்து தமிழின எதிர்ப்பு சதிகளும் சந்திக்கு வந்துகொண்டிருக்கும் இந்த பொழுதில் கே.பி யை வைத்து சிங்களஅரசு தீட்டிசெயற்படுத்தும் புதிய சதி ஒன்று எமக்கு எல்வோருக்கும் தெரியாமலேயே எங்களுக்குள் புகுத்தப்பட்டுள்ளது.

புலம்பெயர் மக்கள் மத்தியில் பெரும் பிளவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துவதில் ஓரளவுக்கு வெற்றிகண்ட கே.பி -ஸ்ரீலங்கா அரசு கூட்டு இப்போது புலம்பெயர் தமிழ் சமூகத்தின் ஒருசிலரையும், அவர்களுக்கு ஊடாக அவர்களின் ஊர்ச்சங்கங்களையும் தமது நாசகாரவலைக்குள் உள்இழுத்து அவர்கள் மூலம் தமிழ் தேசியத்தை சிதைக்க செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளது.

இந்த செயற்திட்டத்துக்கு கடந்த இருபது வருடங்களாக தமிழ் சமூகத்தினுள் காணப்படாதவர்களையும், புலம்பெயர் தமிழ் மக்களால் இனங்காணப்பட்ட புல்லுருவிகளையும் கே.பி மூலம் சிங்கள இனவாதம் மீளப்புத்துயிர் கொடுத்து மீண்டும் ஊர் அபிவிருத்தி என்ற போர்வையை போர்த்தி எமக்குள் புகுத்தியுள்ளது.

இதை இனங்கண்டு இப்போதே ஓரம்கட்டாது விட்டால் எதிர்காலத்தில் தமிழர் என்ற இன அடையாளங்களை கருத்தியல் ரீதியாக மறையச்செய்து ஊர் மற்றும் தெரு அபிவிருத்தி என்பதுதற்காக எதுவும் செய்யலாம் என்ற கோட்பாட்டை பதிவுசெய்து விடுவார்கள்.




தேசிய இனத்துக்கான அடையாளங்களையும், இன ஒன்றுகூடலையும் இழந்துவிட்டு ஊரை மட்டும் தனித்து சீராக சிறப்பாக வைத்திருக்கலாம் என்று கனவு காணும் இவர்களின் கனவை சிங்கள இனவாத பூதம் வெகுவிரைவில் கலைத்தெறிந்துவிடும்.

ஏதோ மகிந்தவும் அவரின் கொலைவெறிப்படைகளும் தமிழர்களுக்கு மட்டும்தான் எதிரி. எங்கள் ஊருக்கு எதிரி இல்லை என்று கருத்து பரப்பும் சிந்தனை வேந்தர்களும், மெத்தப்படித்தவர்களும் இவர்களின் ஊர்களை சிங்கள படைகள் எரித்தழித்த நாட்கள் இவர்களுக்கு எப்படிச்சுலபமாக மறந்தார்களோ தெரியவில்லை. அல்லது மறந்தது போல நடிக்கிறார்களோ தெரியவில்லை.

மிகவும் நேர்த்தியான முறையில் இவர்களை ஊர் அபிவிருத்தி வேலைத் திட்டங்களுக்குள் சிங்களம் புகுத்திஉள்ளது.

1.) இயல்பாகவே தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இனம்புரியாத காழ்ப்புணர்வை கொண்டிருந்த கனவான்களை பேரினவாத அரசு புலத்திலும் ஊரிலும் இனங்கண்டு அவர்களை அந்த அந்த ஊர்களின் மீட்பர்களாக முதலில் ஊடகங்கள் (செய்திகள், இணையம்)மூலம் பிரபலப்படுத்தும்.

2)வெறும் ஊர் உணர்ச்சிக் கெம்பல்களை அவர்களைக்கொண்டு இணையங்கள் மூலம் வெளியிடச்செய்து அந்த அந்த ஊர் மக்களை உசுப்பேத்துவார்கள்

3)அவர்களுக்கு உதவியாக அரசாங்க - கூட்டுத்தாபனங்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களை பிண்ணணியில் ஊர்க்கோசத்துடன் வலம்வர விடுவார்கள்

4)இவர்களின் ஒன்றியைந்த கூட்டுமுயற்சியாக சிங்களத்தின் ஆசியுடன் சில உள் ஊர் அபிவிருத்தி திட்டங்கள் பகட்டுடன் மக்களுக்கு அறிமுகம் செய்துவைப்பார்கள்

5)இப்படி மெதுமெதுவாக ஊர்ச்சங்கங்கள் மற்றும் அவற்றின் இணையங்கள் மூலம் உள்நுழையும் கையாட்கள் மெல்லிய ஊசிபோல ‘மகிந்தவுடன் கதைத்தல்' மகிந்தவுடன் சேர்ந்து ஊரையும் நாட்டையும் முன்னேற்றுதல்' போன்ற விசக்கருத்துகளை நோகாமல் ஊர் உணர்ச்சிக்குள் செலுத்துவார்கள்

6)இறுதியில், சிங்கள ஆளும் கட்சியின் ஒரு பெரிய அலுவலகம் போலவே ஊரை மாற்றிவிடுவார்கள்.

எனவே, இப்போது தமிழர்கள் என்றமுறையில் எமக்கு முன்பாக தேசிய கடமைகள்தான் உள்ளன. எமக்காக போராடி சிறையில் வாடுபவர்களை ஊர் பேதமில்லாமல் அனைவரையும் விடுவிக்க எல்லோரும் முனைய வேண்டிய நேரம் இது.

கிழக்கின் பெருநிலங்கள் சிங்கள மயமாகும்போது நாம் எல்லோரும் ஊர் எல்லைக் கோடுகளை விட்டு மறந்து சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டும். இப்போது கிழக்கின் ஊர்களை காப்பாற்ற மறுத்தால் குடியேற்றங்கள் நாளை எல்லோரது ஊரின் வாசல் கதவின் முன்னும் ‘ஜயவேவா' பாடும்.

இவை எல்லாவற்றிலும் முக்கியமானது. இப்போது எந்த ஊரும் இருபது வீதத்துக்கு மேலாக அந்த ஊரின் பரம்பரைக்குடியிருப்பாளர்களை கொண்டதாக இருக்கவில்லை. நடந்து முடிந்த யுத்தமும் நடந்து கொண்டிருக்கும் இனச்சுத்திகரிப்பும் தமிழ் மக்களை ஊர்பேதமின்றி, ஏதோ கிடைக்கும் ஊரில் குந்தியிருக்க வைத்துள்ளது.

புலத்தில் பெரிதாக எழுப்பப்படும் ஊர் அபிவிருத்தி என்ற சிங்களத்தின் கைப்பாவைகளின் திட்டங்களால் ஒவ்வொரு ஊர்களுக்குள்ளும் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவர்களுக்கும், குடியேறிய தமிழர்களுக்கும் பாரிய முரண்பாடும் மோதலும் வெடிக்கும் சாத்தியங்களும் உள்ளன்.

அது தமிழீழ தேசிய உணர்வையும் அதன் விழுமியங்களையும் சிதையச்செய்யும். எனவே, மக்களுக்கு முன்பாக வராத அபிவிருத்தி ஆலோசர்களையும், ஊர் அபிவிருத்தி அணிகளையும், தனிமனிதர்களையும் எந்தவிதத்திலும் இந்த இனச்சூழலுக்குள் அனுமதித்தால் இன்னும் இழப்புகளும் வெறுமையும்தான் மிஞ்சும்.

இப்போதே விழித்தால் கொஞ்சம் தப்பலாம். முதலில் ஒருவேளை சாப்பாடு இல்லாதவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும், கணவனை இழந்தவர்களுக்கும், பாடசாலை செல்லமுடியாத வறுமைக் குழந்தைகளுக்கும் அடிப்படையாக ஏதாவது செய்யவேண்டும். அதை விட்டுவிட்டு விண்வெளிக்கப்பல் விடுவோம் என்பதும் கட்டு மரமே ஓடமுடியாத கரைகளுக்குள் கப்பல் கொண்டு வருவோம் என்பதும் வடித்தெடுத்த சுத்தமான பம்மாத்துக்கள்தான்.

தேசியத்ததை மறுத்து ஊரை மட்டும் முன்னிலைப்படுத்தும் எல்லாவிதமான அபிவிருத்திகளும் எந்தவித பயனையும் தரப்போவது இல்லை. அவை சிங்களத்தின் இன அழிப்புக்கு மட்டுமே துணைசெய்யும். எனவே திடீரென தோன்றியுள்ள ஊர் அபிவிருத்தி என்ற குழுக்களையும் உசுப்பேத்தும் ஊர்வாத இணையங்களையும் நிராகரித்து இன எழுச்சிகொள்வோம்.

- சங்கதிக்காக ஜலதீபன்

Comments