ஸ்ரீலங்காவில் உள்ள ஐ.நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது!

விமல் வீரவன்சவின் தலைமையில் கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம் முற்றுகைக்குள்ளான சம்பவம் மற்றும் தொடர்ச்சியாக சில நாட்களாக இடம் பெற்று வரும் எதிர்ப் போராட்டங்களை அடுத்து நேற்று மாலை முதல் ஐ.நா அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அத்துடன், ஸ்ரீலங்காவுக்கான ஐ.நா அலுவலக பிரதி நிதியும் உடனடியாக நியூயோக்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார். இவ் உத்தரவுகளை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் பிறப்பித்துள்ளார்.


ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்னாள் அரசாங்க அமைச்சரும் தேசிய முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தலைமையில் எதிர்ப்பு போராட்டம், மற்றும் உண்ணா நிலைப் போராட்டங்கள் நடைபெறுவதை அடுத்தே இந்த அழைப்பு நேற்று மாலை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில், ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் தகவல் தருகையில், ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு அலுவலகத்தின் பணிகளை முன்கொண்டு செல்வதை தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் தோல்வி கண்டுள்ளமையை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நீல் பூஹ்னேயுடன் கலந்தாலோசனை நடத்துவதற்காக அவரை நியூயோர்க்கிற்கு வருமாறு அழைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் துணைப்பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

Comments