தமிழ் அமைப்புகள் சட்டபூர்வமாக இணையும்

'எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே'

என்ற புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கனவு நனவாகும் நல்ல அறிகுறி மேல்திசையில் தோன்றத் தொடங்கிவிட்டது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல், போர்க்குற்றங்கள், இனஅழிப்பு ஆகியவற்றை ஐரோப்பிய வளையத்தில் உள்ள நீதிமன்றங்களிலும், சர்வதேச நீதி மன்றங்களிலும் குற்றவியல், சிவில் வழக்குகளை முன்னெடுப்பதற்கு, அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் TAG உடன் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பாவில் இயங்கும் 4 மக்களவைகளும் இணைவதாக உறுதி கொண்டுள்ளனர்.

ஐரோப்பாவில் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளர் கூறுகையில், கனடியத் தமிழ் மக்களின் தேசிய சபையும் இதில் கூட்டுச்சேரத் தீர்மானித்துள்ளது எனவும், மற்றைய நாடுகளும் சேர்வார்களனெத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளார். புலம்பெயர் தமிழ் மக்களின் இம்முயற்சியில், சுவிஸ் தமிழ் மக்களின் தலைவர் தர்சிகா பகீரதன், நோர்வேயின் கலாநிதி பஞ்சகுல சிங்கம் கந்தையா, பிரான்சின் T.திருஜோதி, இத்தாலியைச் சேர்ந்த செபஸ்டியாம் பிள்ளை டான்ஸ்டன் இராஜ்குமார், கனடாவிலிருந்து மோகன் இராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

மோகன் கூறுகையில், இத்தகைய நடவடிக்கை வரவேற்கத் தக்கதும் ஆர்வமூட்டக் கூடியதும் ஆவதுடன், இத்துடன் கனடிய மக்கள் சபை தமது பதிவுகள் உறுதிப்படுத்தப்பட்டபின் இணையும் எனவும் தமிழ் நெட் இணையதளத்திற்குக் கூறியுள்ளார். ஏற்கனவே சுவிஸிலும், நோர்வேயிலும் உள்ள மக்கள் சபைகள் வழக்குகளைத் தொடர்வதற்கான முக்கிய நடவடிக்கைகளை TAG உடன் சேர்ந்து எடுத்துள்ளனர்.

இனப்படுகொலையை எதிர்க்கும் தமிழரமைப்பு (TAG) அமெரிக்காவிலிருக்கும் நீதித் துறையுடன், அமெரிக்க கருவூலச்; செயலாளர், சர்வதேச நிதியத்தால் இலங்கைக்குக் கடனுதவி வழங்கியமைக்கு எதிராகக் கொலம்பியப் பிரதேச நீதிமன்றத்தில் (மார்ச், 2009) பதிந்த வழக்கின் சாயலைப் பின்பற்றியும், அதன்பின் டபிளினில் சனவரி 20010 இல் TAG வாக்குமூலமும் ஆவண மூலமும் சமர்ப்பித்த சாட்சியங்களையும் பாவித்து, அவற்றால் மக்கள் சபை நன்மையடையும் வாய்ப்பு உண்டு.

அதே சமயம், சட்டத் துறையில் உதவி புரியும் TAG ஆனது நேர்முகச் சாட்சிகளையும், படம் மூலம் கிடைத்த சாட்சிகளையும் ஐரோப்பிய மக்களவைகளின் உதவியுடன் பெற்றுத் தனது அமெரிக்க வழக்கிற்குப் பாவிக்கும் வாய்ப்பைப் பெறும். இருசாராரும் கையொப்பமிட்ட உடன்படிக்கையின்படி TAG மக்கள் சபைக்கு

1. சட்டமூலம் அணுகும் நுணுக்கங்கள்

2. சட்டங்களைப் பாவிப்பதில் கூடிய வெற்றி வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய அமைப்புகளைத் தெரிந்தெடுத்தல்

3. முறைப்பாடுகளை விரிவான வகையில் ஒழுங்குபடுத்துவதிலும், அதை ஆராய்ச்சிச் செய்வதிலும் உதவிகள் வழங்கும்.

மக்களவை

1. தனது அமைப்பில் சட்டப் பிரிவை ஏற்படுத்தி, வழக்கை நடத்த அதன் மூலம் நடவடிக்கை எடுக்கவும்

2. இலங்கை அரசுக்கு எதிராக மனித உரிமை மீறல், போர்க்குற்றம், இனஅழிப்பு ஆகியவற்றில் வழக்கை நடத்தவும், அதன் பிரகாரம் மற்றைய மக்கள் அவையினர், தமிழ் அமைப்புகள், TAG ஆகியவற்றுடன் இணைந்து இயங்குவதற்கும் பொறுப்பாக 4 அங்கத்தினரைக் கொண்ட வழக்குத் தொடரும் குழுவை அமைப்பதற்கும் சம்மதித்துள்ளது.

தொடக்கத்தில் நாகரீகமான நாடுகளாலும் ஐரோப்பாவின் ஜனநாயக சமூகத்தாலும் ஏற்கப்பட்ட தனியாரான குற்றவியல் பொறுப்பு, சித்திரவதைச் சட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்தல், குடும்ப வாழ்க்கையை நடத்தும் அடிப்படை உரிமை, கூட்டம் அமைக்கும் உரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பற்றி விவாதிக்கப்படும்.தர்சிகா பகீரதன் கூறுகையில் 2009, முதல் 5 மாதங்கள் மாத்திரம் 100க்கும் மேலான வீடியோ படங்கள், அது எடுக்கப்பட்ட நேரம், இடம் ஆகிய விவரங்களுடன் ஒழுங்குபடுத்தப்பட்டதோடு, சாட்சிகளின் நேரடி வீடியோ பதிவுகளும் ஆதரவளிக்கும் எனவும், ஒரு ஐரோப்பிய நாட்டில் இருக்கும் அரசு சார்பற்ற நிறுவனத்தினர் சேர்த்து வைத்திருக்கும் முழுமையான சாட்சி கோர்வைகளும் உதவும் எனவும், செர்பியர்களின் இனப்படுகொலை போல ஆறாயிரம் மக்களுக்கு மேல் கொல்லப்பட்டதைக் காட்டும் வீடியோ பதிவுகளும் உள்ளன எனக் கூறுகிறார்.

TAG, சாட்சிகளற்றப் போர் போன்ற மற்றைய அமைப்புகளையும் தாம் சேகரித்த ஆவணங்களுடனும், தஸ்தாவேஜூகளுடனும் தம்முடன் இணைந்து உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகின்றனர். முள்ளிவாய்க்கால் போருக்குப் பின்னர் நெல்லிக்காய் மூட்டைகளைப்போல் சிதறுண்டு கிடந்த தமிழினம் வீறுகொண்டு எழுந்து விடியலைத் தேடி அணிவகுத்து நின்றது.

களவு நெஞ்சங்களும், உளவுத் துறைகளும் எம்தேசியத் தலைவரின் இருப்பினை வதந்திகளால் மூடி அழித்துவிட முயன்ற வேளையில், தனித்தாயகத் தமிழீழ தனியரசு அமைப்பதே எங்களின் ஒரே இலட்சியம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் பதின்மூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், சுமார் 2,45,000 புலம்பெயர்த் தமிழர்கள் கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி, ஒற்றுமையுடன் ஏற்றிய இலட்சிய தீபம் அணையாது காத்தனர்.

அதன்பிறகே அழிந்தனர் என்று ஆர்ப்பரித்தவர்கள் அடங்கிப் போயினர். இலங்கைத் தீவில்கூட நடைபெற்ற இரண்டு தேர்தல்களில் தமிழர் பகுதிகளில், இத்தனைத் தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இனியும் தோல்வி நம்மை தொடாமல் இருப்பதற்கான, வலிமையை எடுத்துக்காட்டும் வகையில் புலம்பெயர்ந்த நாடுகளில் குடிநாயக முறைப்படி தேசிய மக்களவை அமைத்துப் பேராளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.

சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்திட நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்து தமிழீழம் தவிர வேறொன்றும் தீர்வு கிடையாது என்பதை உறுதிப்படுத்தினர். இன்று, உப்பைத் தின்றவன் தண்ணீர் குடித்துத்தான் தீரவேண்டும் எனும் பழமொழிப்படி, இலங்கைத்தீவில் மனித உரிமைகளை மனிதாபிமானமின்றி அழித்த, சர்வதேச விதிமுறைகளைக் காலில் போட்டு மிதித்து போர்க்குற்றங்கள் புரிந்த இராஜபக்சே கூட்டத்தைக் கூண்டில் ஏற்றித் தண்டிக்கும் போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளனர்.

2008இல் மாவீரர் நாள் உரையில் தேசியத் தலைவர் விடுத்த வேண்டுகோளை ஏற்று TAG இல் உள்ள இளையோர்களும், மக்களவையில் அங்கம் வகிக்கும் இளையோர்களும் ஒன்றிணைந்து போர்க்குற்ற விசாரணை முறையாக நடைபெறவும் சர்வதேச சக்திகளுக்கு அடிபணியாமலும் தத்தமது நாடுகளில் விழிப்புடன் இருந்து செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியதாகும்.

புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ளும் இத்தகைய முயற்சிகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களும் அரசியல்கட்சிகளும் பெரும் வரவேற்பை அளிப்பதாக தமிழகத்தில் உள்ள நடுநிலையான அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

Comments