அங்கவீனர்களும், விதவைகளுமே தமிழீழத்தின் பெரும்பான்மையினர்! இவர்களுக்கு எங்களால் என்ன செய்ய முடியும்?

கடந்த திங்கட்கிழமை ஆசிய செய்தி என்ற நிறுவனம் யாழ்ப்பாணத்தில் விதவைகளின் வாழ்வில் இன்னமும் விளக்கேறவேயில்லை. அவர்களின் வாழ்வு கண்ணீரின் மத்தியிலேயே கரைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை வெளியிட்டது. பட்டதாரிகள் கூட தினக்கூலி வேலைக்குச் செல்லும் நிலையைக் கூட விபரித்திருந்தது.

இதேபோல மூன்று வாரங்களிற்கு இன்னொரு சர்வதேசப் பத்திரிகை நிறுவனம் கிழக்கு மாகாணத்தில் போரினால் 42,000 விதவைகள் எனச் செய்தி வெளியிட்டதோடு இவர்களில் 14,000 பேருக்கு மூன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருப்பதாகவும், மற்றையவர்கள் கூட ஒன்று அல்லது இரண்டு பிள்ளைகளை உடையவர்களாக இருப்பதாகவும் தெரிவித்தது.

வன்னியைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஆகக் குறைந்தது 60,000 விதவைகள் பொதுமக்கள் மற்றும் வீரச்சாவடைந்த போராளிகளின் மனைவிமார் என உள்ளார்கள்.

இவையெல்லாவற்றையும் விட ஏறத்தாழ 20,000 பதின்ம வயதினர் உள்ளிட்ட ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டோர் தனித்து இயங்க முடியாதவர்களாகி இருக்கிறார்கள் என்றும் ஏப்ரல் மாதமளவில் ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இரண்டு கால்களையும் இழந்த பதின்ம வயது யுவதி, இரண்டு கைகளையும் இழந்த இன்னொரு யுவதி, அதனால் புத்திசுவாதீனமான அவரது தாய், இந்த அதிர்ச்சியிலே மரணமான அவரது தந்தை என ஒரு விவரணச் செவ்வியை அமெரிக்க ஊடகம் வழங்கியிருந்தது.

இது இலங்கையின் ஏற்பாட்டில் செய்யப்பட்ட விவரணச் செவ்வி என்று கூறப்பட்டாலும் அந்த இரு யுவதிகளும். அந்தப் புத்திசுவாதீனமான தந்தையும் வன்னியில் வதியும் போரின் பாதிப்புக்கள் என்பதில் எவருக்குமே சந்தேகமில்லை.

இவ்வாறாக சிதைவுற்று சில்லருற்றிக்கும் இவர்களின் வாழ்வின் இன்றைய தேவை எதுவென்றால் ஆகக்குறைந்த ஒரு சாதாரண வாழ்வு. சமபல நிலையில் இன்று தமிழர் தரப்பு அங்கேயில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் கூட பேச்சுக்குரிய பலம் பெறாத எதற்கும் அரசின் அனுமதியைப் பெற வேண்டிய கட்சியாகவே இருக்கிறது.

ஆனால் இந்த மக்களிற்காக முரண்டு பிடிக்கிற நிலையில் புலம்பெயர்ந்த மக்களின் ஒரு சில ஊடகங்கள் ஈடுபட்டிருக்கின்றன. அதாவது அரசியலும் புனர்வாழ்வும் ஒருமித்தே செய்யப்பட வேண்டும். புனர்வாழ்வு தனித்து செய்யப்படக்கூடாது என்பதே அவற்றின் வேண்டுகோள். நமது விருப்பும் அதே.

இலங்கை அரசு யுத்தக்குற்றவாளியாக்கப்பட வேண்டும். அதற்கான தண்டனையை அது பெறவேண்டும். நாம் இழந்த இழப்புக்களிற்கான பெறுமதியை அது உணர வேண்டும் என்பதில் யாருக்குமே இரண்டாம் கருத்து இருக்க முடியாது. அதை நாங்கள் நிறைவேற்றியாக வேண்டும். அது அங்குள்ளவர்களால் முடியாத ஒரு விடயம்.

ஆனால் அதேவேளை அங்கே வாழுபவர்கள் எங்களின் விருப்புக்கு உடன்பட்டு துண்பத்தையே தொடர்ந்து அனுபவிக்க வேண்டுமென நாங்கள் நினைத்தால் அதனைவிட மடமையானதொரு விடயம் உலகில் இருக்க முடியாது. ஒரு புலிக்கொடியையல்ல, ஒரு புலிப்பாட்டையல்ல, தனிநாடு என்ற சொல்லைக்கூட உச்சரிக்க முடியாத ஒரு நிலைக்கு அங்குள்ள மக்களோ அவர்களை வழிநடத்தும் கட்சிகளோ சென்றுள்ளன என்ற உண்மையை நாங்கள் ஏற்க வேண்டும்.

ஏனென்றால் இன்றைய களச்சூழல் மாறுபட்டது. இரண்டு லட்சம் இராணுவத்தில் பெரும்பான்மை வடகிழக்கிலே நிலைகொண்டுள்ளன. போரின் முடிந்த காரணத்தால் அவர்களது குடும்பங்களும் அங்கே சென்று குடியேறத் தொடங்கிவிட்டன. இராணுவத்தின் உணவுக்கடை, இராணுவத்தின் முடி திருத்தும் கடை என அனைத்து இராணுவக் கடைகளிலும் தமிழர்களின் கூட்டம் அலை மோதுகிறது. இதை வேண்டுமென்றால் நாங்கள் எழுதாமல் மறைக்கலாம் ஆனால் உண்மையில் இதுதான் நிலை என்பதை மறுக்க முடியாது.

சிங்களவர்கள் வடக்குக் கிழக்கை சுற்றுலாத் தளமாக அல்லாது தாங்கள் வாழும் தளமாகவே மாற்றி கண்ட இடமெங்கும் வாடகைக்கு வீடுகளை அமர்த்தி வாழ்வதுடன், அரசமரமிருக்கும் இடமெல்லாம் புத்தவிகாரை அமைத்துக் கொண்டாடுகிறார்கள். தமிழரின் இதயப் பகுதியான அம்பாறையில் பெரிய புத்த ஆலயம் அமைக்கப்படுகிறது.

முல்லைத்தீவு உல்லாச புரியாகி முள்ளிவாய்க்காலின் நந்திக்கடல் உல்லாசப் படகுகள் தரிக்கும் கரையாகிறது. ஏல்லாமே தலைகீழாக மாறினாலும் இன்னமும் தடுப்பு முகாம்களிற்குள் உள்ள 100,000த்துக்கும் மேற்பட்ட போராளிகள் மற்றும் அவர் சார்ந்த மக்களின் வாழ்வைப் பற்றிக் கதைப்பதற்கான நிலையில் எந்தவொரு அமைப்பும் இல்லை. ஏன் எந்தவொரு நாடுகளும் கூட இல்லை.

போராளிகள் புனர்வாழ்வு பெறுகிறார்கள். கற்கைநெறிப் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள், மணமுடிக்கிறார்கள், சுய தொழில் முயற்சிகளை மேற்கொள்கிறாhர்கள் என பல சோடனைகள் காட்டப்பட்டாலும் அவர்கள் புனர்வாழ்வு பெறுவது என்பது இலங்கை அரசின் கைகளிலே தங்கியுள்ளது என்பதே முடிந்த முடிவு.

எந்தவொரு அமைப்பை நாங்கள் ஏற்படுத்தி, எந்தவொரு இராஜதந்திர அழுத்தத்தைக் கொடுத்தாலும் இலங்கை அரசுடன் பேசித் தீர்க்க வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள்ளேயே தீர்வு இருக்க வேண்டும் என்ற இரண்டு விடயங்களையும் விட்டு ஒருபடி கூட யாருமே நகரப்போவதில்லை.

அதைவிட இந்தியாவிற்கு டக்ளசும், பிள்ளையானும் செல்லப்பிள்ளைகளாகவும், தமிழர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றான் தாய் பிள்ளையாகவும் இருக்கின்ற நிலையில் மேலுள்ள இரண்டு நிலையை இப்போது அடைவது கூட மேற்குநாடுகளால் முடியாத ஒரு விடயம்.

இந்த நிலையில் இந்த மக்களின் அரசியல் பற்றிக் கதைக்காமல் எமது மக்களின், போராளிகளின் புனர்வாழ்வு பற்றி யாராவது ஏதும் செய்தால் அதையும் நாங்கள் பல சாக்குப் போக்குக் கூறி தடைகளை ஏற்படுத்துவது உண்மையிலேயே மனச்சங்கடத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால் எங்களால் இயலாததை இன்னொருவர் செய்வதை நாங்கள் ஏன் தடுக்க வேண்டும்.

ஏனென்றால் கடந்த 13 மாதங்களாக முட்கம்பி வேலிகளிற்குப் பின்னாலிருக்கும் முன்னைநாள் போராளிகளை இனி இலங்கை சுதந்திரமாக நடமாட விட்டு அவர்கள் “சுதந்திரமாக செயற்படுவதற்கு” ஆகக் குறைந்தது பத்து ஆண்டுகளாவது எடுக்கும். அதுவரை அவர்களை கண்காணிப்பதையே இப்போது வடகிழக்கில் இருக்கும் இராணுவம் செய்து வரும்.

ஒன்றை நாங்கள் தெளிவாகக் கவணிக்க வேண்டும். மே 2009ற்கு பிறகு வட கிழக்கில் இராணுவத்திற்கெதிரான தாக்குதல் எங்குமே நடந்ததில்லை. இது எங்களிற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது. இதனால் தான் இராணுவமும் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதோடு தங்கள் குடும்பங்களையும் தாங்கள் பணியாற்றும் பகுதிகளிற்கு அழைத்து சென்று குடும்பவாழ்விலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே அரசியல் பேசுவோர் அரசியல் பேசட்டும். அதிகாரம் பற்றிப் பேசுவோர் அதிகாரம் பேசட்டும். தனிநாடு காண்போம் என்போர் தனிநாடு காணட்டும் (அவர்கள் கூட அதற்கான சாத்தியக்கூறு இப்போது இல்லை என்பதை ஏற்கிறார்கள்). புதிதாகத் தொடக்கப்பட்ட அமைப்புக்கள் கூட தாங்கள் போகும் பாதையை இனித் தான் தீர்மானிக்கப் போவதாக வெளிப்படையாகவே தெரிவிக்கின்றன. எனவே இனி ஒரு மூன்று நான்கு ஆண்டுகளிற்கு எந்த வித்தையும் எங்குமே நடக்கப் போவதில்லை.

ஆனால் இந்த விதவைகள், அநாதைகள், அங்கவீனமானவர்கள், முன்னiநாள் போராளிகள் அவ்வளவு காலமும் வதையை, வன்முறையை அனுபவித்து பசி, பட்டிணியுடன் வாழ வேண்டும் என்று நாங்கள் நினைப்போமாக இருந்தால் எங்களில் ஏதோ தவறு இருக்கிறது. அவர்கள் அடிநிலைச் சாதாரண மனிதர்களாக வாழத் தானும் வழி செய்ய வேண்டுமென்பதில் எந்த தவறுமேயில்லை.

புலம்பெயர்ந்த நாட்டிலுள்ள ஒரு புனர்வாழ்வுக்கழகப் பொறுப்பாளர் அங்கே யாராவது புனரமைப்பு அமைப்புத் தொடங்கினால் தங்களிடமுள்ள பணத்தை கொடுக்கத் தாங்கள் தயார் என்ற செய்தியை பார்த்த போது அவரது தயாளமனம் எப்படியாவது மக்கள் நன்மை பெறட்டும் என்பதைச் சிந்திப்பதை எடுத்துக் காட்டியது. அதாவது அடிநிலை வாழ்வை அவர்களிற்கு கொடுப்பதே அவர்களிற்கு இன்றுள்ள தேவை.

யாரும் பணம் சேர்க்கலாம். யாரும் பொருள் சேர்க்கலாம். ஆனால் அது பாதிக்கப்பட்ட மக்களையோ, முட்கம்பி வேலிகளின் பின்னாலுள்ளவர்களையோ போய்ச் சேர்வதிற்கு சிறீலங்காவின் அனுசரணைப் பெறமால் போவதென்பது கடிணத்திலும் கடிணம் என்பதை நாங்கள் ஒத்துக் கொள்கிறோம். எனவே பாதிப்பின் உச்சத்தில் இருப்பவர்களின் வாழ்வை தேவையற்ற விதத்தில் புன்படுத்தாமல் அவர்களின் வாழ்வு “அடிநிலைச்” வாழ்வாகத் தானும் திரும்புவதை தடுப்பதை புலம்பெயர்ந்த நாங்கள் இப்போதைக்குத் தவிர்ப்போம்.

இல்லையேல் யாழ்ப்பாணத்திலும் மட்டக்களப்பிலும், கிளிநொச்சியிலும், மன்னாரிலும், திருமலையிலும் தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக சிங்களவர்களின் ஆதிக்கத்தின், அதிகாரத்தின் கீழ் வாழும் நிலையை ஏற்படுத்திய பழியையும் புலம்பெயர்ந்த நாங்களே எற்க வேண்டி வரும்.

-ஜீவன்

Comments