1976இல் தந்தை செல்வா தலைமையில், தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் இனி, சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழவே இயலாது என்பதால், ஒரே தீர்வாகத் தனிதாயகத் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராட முடிவெடுத்தனர் என செந்தமிழ்சீமான் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உலகில் இன்றைக்கு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, மொரீசியஸ், பிஜி, கயானா, ஆஸ்திரேலியா எனச் சுமார் 200 நாடுகளில் 100 மிலியன் மக்களுக்கு மேல் வாழ்கின்ற பழமை வாய்ந்த ஒரே இனம் தமிழர்களாவர்.
சுமார் 7000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய வளமும், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கண வளமும் கொண்ட தமிழர்களின் முன்னோர்கள்தான் ஏறத்தாழ 60,000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்கக் கண்டத்திலிருந்து உலகின் பல பாகங்களுக்கும் பரவிச் சென்ற முதல் மாந்த இனம் என்பதை அண்மைக்கால அறிவியல் கண்டுபிடிப்பான மரபணு ஆராய்ச்சி (Geno Graphic) முடிவுகள் தெரிவிக்கின்றன.
இத்தகைய பெருமைக்குரிய தமிழர்கள் தமிழ்நாட்டையும், இலங்கைத் தீவையும் பூர்வீகமாகக் கொண்டு ஆண்ட இனம் என்பதை குமரிக்கண்ட (கோண்டுவானா நிலப்பகுதி) வரலாற்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
1833 இல் இலங்கை காலனி ஆதிக்கத்தின்கீழ் வரும்வரை யாழ் அரசு, கண்டி அரசு, கோட்டை அரசு என தமிழர்கள் தங்கள் பகுதிகளைத் தாங்களே ஆண்டு வந்துள்ளனர் என்பதும் மறைக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.
இலங்கைத் தீவில் தமிழர்கள் 1948இல் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாள் முதல் 30 ஆண்டுக்காலம் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் பறிக்கப்பட்ட தங்களின், மண்ணுரிமை, படிப்புரிமை, வாக்குரிமை போன்றவற்றுக்காக சனநாயக வழியில் அறவழிப் போராட்டங்கள் பல நடத்தினர்.
தமிழர்களை ஒரு தேசிய இனமாகக் கருதி சமத்துவமாக நடத்தத் தவறிய இலங்கையின் சிங்களப் பேரினவாத அரசு, தொடர்ந்து தமிழர்களை 1956, 1958, 1977, 1983 ஆகிய ஆண்டுகளில் இனப்படுகொலை செய்து வந்தது. 1956இல் சிங்கள மொழியை மட்டும் ஆட்சி மொழியாக்கி தமிழ் மொழியைப் புறக்கணித்தது.
இந்து, முஸ்லீம், கிருத்துவம், பௌத்தம் எனப் பல மதங்கள் உள்ள இலங்கைத் தீவில் பௌத்த மதத்தை மட்டும் அரச மதமாக்கிச் சட்டம் இயற்றினர். தமிழர்களின் தாயகம்தான் தமிழீழம் என்பதற்கான வரலாற்றுத் தடயங்களை அழிக்க மிகப்பெரியதும், இலட்சக்கணக்கான நூல்களைக் கொண்டதுமான யாழ்ப்பாண நூலகத்தைச் சிங்கள இனவெறி அரசு 1981இல் தீயிட்டுக் கொளுத்தியது.
தமிழ் பேசும் மக்களின் இந்துக் கோயில்கள், கிறித்துவ தேவாலயங்கள் என வழிப்பாட்டுத்தளங்கள் குண்டுவீசி தகர்க்கப்பட்டன. பள்ளிகள், குழந்தை இல்லங்கள், மருத்துவமனைகளும் சிங்கள இராணுவ குண்டு வீச்சிலிருந்து தப்பவில்லை. இவ்வாறு தமிழர்களைத் திட்டமிட்டு இனஅழிப்பு செய்துவந்த சிங்கள இனவெறி அரசின் இராணுவத்தை எதிர்க்கவே மாணவர்களும் இளைஞர்களும் வேறுவழியின்றி தமிழ்மக்களைக் காக்க ஆயதம் தாங்கிப் போராடினர்.
1976இல் தந்தை செல்வா தலைமையில், தமிழர்களின் அனைத்து அரசியல் கட்சிகளும் இலங்கையில் வட்டுக்கோட்டை என்னுமிடத்தில் இனி, சிங்கள இனவெறி அரசின் ஒற்றையாட்சியின்கீழ் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழவே இயலாது என்பதால், ஒரே தீர்வாகத் தனிதாயகத் தமிழீழத் தனியரசு அமைக்கப் போராட முடிவெடுத்தனர்.
1977இல் நடைப்பெற்ற இலங்கைப் பொதுத்தேர்தலிலும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை முன்வைத்தே போட்டியிட்டு பெருவாரியாக வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் தகுதிபெற்றனர். உரிமைக்குப் போராடும் தமிழர்களை ஓடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் (P.T.A), 6வது திருத்தச்சட்டம், மீன்பிடித் தடைச்சட்டம் போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பிறப்பித்தது சிங்கள அரசு.
கடந்த 30 ஆண்டுக்காலமாகத் தமிழர்களின் பாதுகாப்பு அரணாக நின்று ஆயதப் போராட்டம் நடத்திவந்த போதிலும் விடுதலைப் புலிகள் 1985இல் திம்புவிலும், 2003இல் ஆஸ்லோ (நார்வே) விலும் சர்வதேச நாடுகளால் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு முன்வைத்த தமிழர்களுக்குச் சுயாட்சி உரிமைதரும் கோரிக்கையைக் கூட சிங்கள அரசு ஏற்காமல் நிராகரித்து விட்டது.
ஐ.நா.வின் தீர்மானம்கூட (1948 U.N Geneva Convention) ஒரு நாட்டில் வாழும் தேசிய இனம் தன்னுரிமையுடன் சமத்துவமாய் வாழ அனுமதிக்கிறது. இரஷ்யா பல தேசிய இனங்களின் தன்னுரிமைக்கு மதிப்பளித்து அவர்கள் தனிநாடுகளாக வாழ அனுமதித்துள்ளது. ஆனால் இலங்கை அரசு கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழர்களை இனப்பாகுபாடு காட்டி, தமிழின அழிப்புச் செய்வதைச் சர்வதேச பயங்கரவாதத்தைக் காரணம் காட்டி பயங்கரவாதத்திற்கு எதிரான போராகச் சித்தரித்து உலக நாடுகளை ஏமாற்றிவருகிறது.
மே, 2009இல் நடைபெற்ற இலங்கை இராணுவத்தின் தமிழர்களுக்கு எதிரான 4-வது கட்டப்போரில் பல்லாயிரம் விடுதலைப்புலிகளும், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களும் குண்டுவீசிக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தால் தாக்கமாட்டோம் எனத் தமிழர்களை அழைத்துவிட்டு சர்வதேசப் போர்விதிமுறைகளை மீறி, தடைசெய்யப்பட்ட கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி அப்பாவித் தமிழர்களைக் கொன்று அழித்துள்ளனர்.
இலண்டன் சேனல்4 வெளியிட்டிருக்கும் வீடியோ காட்சிகள் சிங்கள இராணுவம் தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகளைக் கட்டி தலைக்குப் பின்னால் சுட்டுக் கொல்வது போர்க்குற்ற விசாரணை நடத்த போதுமான ஆதாரமாகும் என்று ஐ.நா.வின் இனப்படுகொலை பற்றி விசாரிக்கும் சிறப்பு அதிகாரி பிலிப் ஆல்ஸ்டைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா-வின் செய்தியாளராக இலங்கையில் பணிபுரிந்த கார்டன் வீஸ் (Garden Weis) என்பவர் பல்லாயிரம் தமிழப் போராளிகளையும், 40,000க்கும் மேற்பட்ட தமிழ்ப் பொதுமக்களையும் சிங்கள இராணுவம் கொன்றதற்கான ஆதாரங்களைத் திரட்டி வைத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். போர் முடிந்த பிறகும்கூட சுமார் 20,000 தமிழ் இளைஞர்களை விசாரணை என்ற பெயரில் வதைமுகாம்களில் அடைத்துச் சித்திரவதை செய்து வருகின்றனர்.
3,00,000 தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்து அவர்களுக்கு உணவு, மருந்து, தண்ணீர், இருப்பிட வசதிகளின்றி வதைத்து வருகின்றனர். 6 மாதங்களில் வதை முகாம்களில் உள்ள தமிழர்கள் அவரவர்களின் பழைய இருப்பிடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்று ஐ.நா-வுக்குத் தந்த உறுதிமொழியைக்கூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை.
போர் முடிந்து ஓராண்டான பிறகும் ஒரு இலட்சம் தமிழர்களை முள்வேலி முகாம்களிலேயே இன்னும் அடைத்து வைத்துள்ளனர். முகாம்களில் உள்ள பெண்கள் சிங்கள இராணுவத்தாரால் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு மலக்குழிகளில் தூக்கி வீசப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கெதிரான மனித உரிமை மீறல்களும், போர்க்குற்ற தடயங்களும் வெளியுலகத்திற்குத் தெரிந்துவிடாமல் இருக்கவே இன்றைய வரையில் போர் நடந்த வன்னிப் பகுதியில் சர்வதேச ஊடகவியலாளர்களையோ, மனித உரிமை அமைப்பினர்களையோ, தொண்டு நிறுவனங்களையோ அனுமதிக்க இலங்கை அரசு மறுத்து வருகிறது.
2008, சனவரியில் காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் செய்த போர்க் குற்றங்களை விசாரிக்க உடனே ஏப்ரல் மாதத்தில் அனுமதி வழங்கியது ஐ.நா மன்றம். ஆனால் இலங்கையில் போர் முடிந்து ஓராண்டு காலம் கடந்து போர்க்குற்றம் நடைப்பெற்றுள்ளதா என்பதை ஆராய இந்தோனேசிய முன்னாள் அட்வகேட் ஜெனரல் மர்சுகி தருஷ்மன் தலைமையில், யாஸ்மின் சூகி, ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் அடங்கிய குழுவை ஐ.நா. பொதுச் செயலாளர் பான்.கீ.மூன் நியமித்துள்ளார்.
2009 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் நகரில் நடைபெற்ற மக்கள் விசாரணை மன்றம் இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த ஆவணங்கள்மீது விசாரணை நடத்தி ஐ.நா.வின் மனித உரிமை ஆணையர் திருமதி நவநீதம் பிள்ளைக்குப் பரிந்துரை செய்துள்ளனர்.
ஜார்ஜியா நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஜார்ஜிய மக்களால் பூர்வீகக் குடிகளான ஒசேட்டியர்கள் பாதிக்கப்பட்டதாலும் தங்களின் ஒசேட்டிய மொழி புறக்கணிக்கப்பட்டு ஜார்ஜிய மொழி திணிக்கப்பட்டதாலும் 1991இல் சுயாட்சி கேட்டுப் போராடிய ஒசேட்டியர்களுக்கு 2008இல் ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பி, ஜார்ஜியாவில் இருந்து சுமார் 66,000 ஒசேட்டியர்களுக்கு தென் ஒசேட்டியா என்ற நாட்டை உருவாக்கிக் கொடுத்தது.
அதுபோலவே, அப்காஷியா பூர்வீக மக்களுக்கு அப்காஷியா என்ற நாட்டையும் ஜார்ஜியாவிடம் இருந்து பிரித்து கொடுத்தது. உலக அரங்கில் ரஷ்ய நாடானது ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பூர்வீகக் குடிகளுக்கும், தேசிய இனங்களுக்கும் இடையே பிரச்சினைகள் எழும் போதெல்லாம், பாதிக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக தோளோடு தோள் நின்று உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இனவிடுதலைப் பெற்றுத் தந்ததை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.
எனவே, இலங்கைத் தீவில் பூர்வீகக் குடிமக்களான தமிழர்கள், இலங்கை இராணுவத்தால் கடைசிகட்டப் போரில் 50,000 பேர் இனப்படுகொலை செய்யப்பட்டதை விசாரணை செய்ய ஐ.நா.வால் நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு ரஷ்யா ஆதரவளித்து பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க உதவிடுமாறு தமிழ் நாட்டுத் தமிழர்களின் சார்பாக நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இது தொடர்பாக, 9-07-2010 அன்று காலை 11 மணிக்கு சென்னை சாந்தோம் சாலையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ரஷ்ய அதிபர் திமித்ரி மெத்வதேவ் அவர்களுக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்.
இலங்கைத் தீவில் புனரமைப்புப் பணி எனும் பெயரில் தமிழர் பகுதியில் சுமார் 25,000 சீனக் கைதிகளையும் உளவாளிகளையும் இலங்கை அரசு அனுமதித்திருப்பது ஈழத்தமிழர்களின் கலாச்சாரச் சீரழிவிற்கும், பாதுகாப்பிற்கும் பெரும் ஆபத்தை விளைவிக்கின்ற ராஜபக்சே அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
மேலும் இது தென்னிந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை ஜப்பான் டைம்ஸ் நாளிதழில் வெளியானக் கட்டுரை எச்சரித்திருப்பதால் இந்திய அரசு பொறுப்புடன் நடந்து இப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஈழத்தமிழர்களின் நீண்டகால கோரிக்கையான தனித் தமிழீழத்தை அங்கிககரிப்பதன் மூலமே தென்னிந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த முடியும்.
இவ்விரு கோரிக்கைகளையும் வலியுறுத்தி 10-07-2010 அன்று காலை 11 மணிக்கு சென்னை மெமோரியல் அரங்கம் முன்னால் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு செந்தமிழ் சீமான் அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Comments