இராசதந்திர தொடர்புகளை தமிழ் மக்கள் சீனாவுடனும் ஏற்படுத்தவேண்டும்.

இந்திய மத்திய அரசை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு தமிழ் மக்கள் வந்துவிட்டார்கள் தமது உள்ளக் குமுறலை வெளிப்படையாகத் தெரிவிக்க தொடங்கி விட்டார்கள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துக் கணிப்பு எடுப்பீர்களானால் அவர்கள் மிக அதிகமாக வெறுக்கும் அரசு இந்திய மத்திய அரசாகத்தான் இருக்க முடியும்.

தமிழ் மக்களின் அழிவுக்குத் திட்டமிட்டு உதவிய நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது இந்தியாவின் கரங்கள் தமிழ் மக்களின் குருதியில் தோய்ந்திருக்கின்றன தமிழ் மக்களின் அவலக் குரலுக்கு செவிசாய்க்காமல் தமிழ் மக்களை அழிக்கும்படி சிறிலங்கா அரசுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த நாடு இந்தியா தான்.

சாணக்கியர் காலந்தொட்டு இந்தியா அடுத்துக் கெடுத்தல் தந்திரோபாயத்தைக் கடைபிடிக்கிறது நெருங்கிய நண்பனாக நடித்துக்கொண்டு அதே நண்பனை காலம் கனியும் போது அழிப்பதை அடுத்துக் கெடுத்தல் என்பார்கள் இதைச் சந்திவிக்கிரகம் என்றும் அழைப்பார்கள் பஞ்சதந்திரக் கதைகளில் முதன்மையான தந்திரமாக அது குறிப்பிடப்படுகிறது.

சிங்கள அரசைத் தன்வசமாக்கும் திட்டத்திற்கு இந்தியா தமிழ் மக்களை பலிக்கடாவாக பயன்படுத்தி வருகிறது சிங்கள மக்கள் ஒரு போதும் இந்தியா மீது மனமார்ந்த நட்போ விசுவாசமோ வைத்திருந்ததில்லை அவர்கள் இந்தியாவை நன்கு புரிந்து கொண்டவர்கள் தமிழ் மக்கள் மாத்திரம் நம்பி மோசம் போனவர்கள் எளிதில் ஏமாறும் இளிச்சவாயர்கள் என்று தமிழ் மக்களை இந்தியா கணிப்பீடு செய்து வைத்திருக்கிறது.

தமிழ் மக்களை நாடற்றவர்களாக்கியது போதா தென்று இந்தியா தனது உளவுத்துறை மூலம் புலம்பெயர் தமிழர்களின் கட்டமைப்புக்களை உடைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. றோ அமைப்பின் முகவர்கள் புலம்பெயர் தமிழர்களுடன் அணுகி உறவைப் பேணத் தொடங்கியுள்ளனர் உட்புகுந்து அழிப்பது தான் அவர்கள் திட்டம். விழிப்பாக இருக்க வேண்டியது அனைத்து தமிழுறவுகளின் பொறுப்பு சந்தேக நபர்களுடன் நெருக்கமாக இருக்காதீர்கள் துட்டர்களைக் கண்டால் தூர விலகிச் செல்லுங்கள்.

புதுடில்லி அழைத்தவுடன் ஓடிச்சென்று மண்டியிடும் கூட்டணித் தலைவர்களே இந்தியா தமிழ் மக்களுக்கு செய்த துரோகம் போதாதா? இனியும் செய்ய நீங்கள் துணைபோகப் போகிறீர்களா பழைய வரலாற்றை புரட்டிப் பாருங்கள் உங்களுக்கு தெளிவு ஏற்படலாம்.

தமிழ் இளைஞர்களை உசுப்பிவிட்டுப் பின்பு பலிக்கடாவாக்கி ஜெயவர்த்தனா அதிபருடன் ஒப்பந்தம் செய்த மத்திய அரசை நீங்கள் மறந்து விட்டீர்களா? அமைதிப்படை என்ற பெயரில் ஆக்கிரமிப்பு படையை அனுப்பி 6000 வரையிலான தமிழர்களைப் பலியெடுத்த இந்திய மத்திய அரசிடம் இருந்து என்னத்தை நீங்கள் தமிழர்களுக்குப் பெற்றுக் கொடுக்கப் போகிறீர்கள். தமிழனைப் பகடைக் காயாக்கித் தன்னலம் பெறுவது தான் இந்திய அரசுக்குத் தெரிந்த அற்பத்தனமான இராசதந்திரம் ஆனால் உண்மையான காத்திரமான இலாபத்தை இந்தியாவால் பெற முடியவில்லை

1962ம் ஆண்டின் இந்தியா சீனா போரின் போது பிரதமர் சிறிமாவோ சீனாவைக் கண்டிப்பார் அல்லது இந்தியாவுக்கு அனுதாபம் தெரிவிப்பார் என்று இந்திய பிரதமர் நேரு எதிர்பார்த்தார் சிறிமாவோ அப்படி ஒன்றும் செய்யவில்லை. தமிழர்களின் சமஸ்டிக் கட்சி மலையகத்தின் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன இந்தியச் சார்பு நிலை எடுத்ததோடு சீனாவை ஆக்கிரமிப்பாளனானகக் கண்டித்தன.

சிறிமாவோ தனது இரண்டாவது ஆட்சி காலத்தில் (1970-77) மீண்டும் இந்தியா பக்கம் சாராக் கொள்கையை வெளிப்படுத்தினார் வங்காள தேசத்தை உருவாக்கிய 1971ம் ஆண்டின் இந்திய -பாக்கிஸ்தான் போரில் பாக்கிஸ்தானின் இராணுவத்தினரை ஏற்றிச் செல்லும் விமானங்கள் கட்டு நாயக்கா விமான நிலையம் ஊடாகச் செல்ல சிறிமாவோ அனுமதித்தார்.

இந்தியா எரிச்சல் அடைந்தாலும் அதனால் சிறிலங்காவுக்கு எதிராக ஒன்றுமே செய்ய முடியவில்லை, பாகிஸ்தான் சிறிலங்கா உறவுகளைப் பலப்படுத்த சிறிமாவின் உதவி முக்கிய காரணமாக இன்று வரை இருந்து வருகிறது.

1974ல் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவுக்குச் சொந்தமான கச்சதீவை சிறிமாவுக்கு பிறந்த நாள் பரிசாக வழங்கினார் இந்தியாவுக்கு சொந்தமான ஒரு அங்குல நிலத்தைத் தன்னும் வெளிநாடுகளுக்கு வழங்க முடியாதென்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. இந்திரா காந்தி செய்த அன்பளிப்பின் தாக்கத்தால் இராமேஸ்வர மீனவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள்.

அப்போதைய முதல் அமைச்சரான கருணாநிதி நீதிமன்றம் சென்று இந்த வழங்கலை நிறுத்தியிருக்கலாம் ஆனால் மத்திய அரசின் தீவிர விசுவாசியான அவர் இது தொடர்பில் முயற்றி எடுக்கவில்லை. கச்சதீவு தணியாத பிரச்சனையாக இருக்கிறது சிங்களக் கடற்படையினரின் தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் இன்னும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்ற மாத இறுதியில் இந்திய பாராளுமன்றத்தில் உரையாற்றிய திமுக உறுப்பினர் வசந்தி ஸ்ரான்லி இந்திய குடிமக்களான இராமேஸ்வரம் மீனவர்கள் கொல்லப்பட்டால் அவர்களைத் தமிழர்கள் என்று ஒதுக்கிவிடுகிறீர்கள் எனக் குற்றஞ் சாட்டினார்.

சிறிலங்காவின் முக்கியத்துவம் உலக அரங்கிலும் சரி இந்து மாகடற் பிராந்தியத்திலும் சரி அதன் அமை விடம் மற்றும் கேந்திர நிலை காரணமாக ஏற்பட்டுள்ளது. இந்துமா கடலைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற இந்திய இலட்சியம் தோல்வி கண்டுள்ளது.

இந்திய மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் சிறிலங்கா உட்பட தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் சீனாவைத் தமது பாதுகாப்பு அரணாக வரித்துள்ளன. இராணுவ மற்றும் பொருளாதார ரீதியில் சிறிலங்கா நேபாளம் மியன்மார் வங்காளதேசம் மலேசியா போன்ற நாடுகள் சீனாவுடன் நெருக்கமாக வந்துள்ளன.

மியன்மாரின் கொக்கொஸ் தீவுகள், பாக்கிஸ்தானின் குவதார், வங்காள தேசத்தின் சித்தாக்கொங், சிறிலங்காவின் அம்பாந்தோட்டை ஆகியவற்றில் சீனா பிரமாண்டமான துறைமுகங்களை அமைத்துள்ளது. இவற்றில் எண்ணை சேமிப்பு நிலையங்கள் மற்றும் கடலில் பயணிக்கும் கப்பல்கள் பற்றிய வேவுத் தகவல்களைச் சேகரிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சீனாவின் நீர் மூழ்கிகளும் சரக்குக் கப்பல்களும் போர்க் கலங்களும் இந்து மாகடலில் சஞ்சரித்த வண்ணம் உள்ளன. உலகின் கூரை எனப்படும் பாமிர்ஸ் சிகரத்தின் மேலால் பாக்கிஸ்தானையும் சீனாவையும் தொடுக்கும் தரைப்பாதை அமைக்கப்பட்டுள்ளது தரை மார்க்கமாக இந்து மாகடலில் பிரவேசிக்கும் வசதியைச் சீனா பெற்றுள்ளது.

மாலைதீவு ஈரான் ஆகிய நாடுகளிலும் சீனா தனது கடற் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது சீனாவின் நட்புக்கரமாக ஈரான் சிறிலங்காவிக்கு நிதி உதவியும் இராணுவ உபகரண உதவியும் வழங்குகிறது. இந்தியா ஜப்பான் ஆகிய நாடுகள் சிறிலங்காவுக்கு வழங்கும் நிதி உதவியிலும் கூடுதலான தொகையை இலங்கைக்கு சீனா வழங்குகிறது.

சீனா பாக்கிஸ்தான் சிறிலங்கா ஆகிய நாடுகளால் சுற்றி வளைக்கப்பட்ட நாடாக இந்தியா இன்று இடம் பெறுகிறது தென்னிந்தியா இராணுவ பொருளாதார முக்கியத்துவம் பெறும் நிலையில் சீனாவில் வளர்ந்து வரும் சிறிலங்காப் பிரசன்னம் பெரும் ஆபத்தாக அதற்கு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தயவு இனித் தேவையில்லை என்று தூக்கி எறியும் நிலைக்குச் சிறிலங்கா தயாராகி வருகி றது அணுசக்தி நாடுகளான சீனாவும் பாக்கிஸ்தானும் இருக்கும் வரையில் இந்தியா பற்றி அச்சம் கொள்ளும் தேவை அதற்கு இல்லை.

இந்தியாவைத் தடவிக் கொடுத்தபடி பிற நாடுகளுடன் ஒட்டி உறவாடுவதற்கும் ஒப்பந்தங்கள் செய்வதற்கும் சிறிலங்கா தயங்கியதில்லை இதுவரை நடந்தவற்றைப் பார்க்கும் போது சிறிலங்காவின் கையோங்கியது போலவும் அதன் போக்கிற்கு இந்தியா எல்லா வகையிலும் அனுசரனையாக இருப்பது போலவும் தோன்றுகிறது.

தமிழர்களுக்குச் சீனா அந்நிய நாடல்ல. சிறிலங்காவின் சீனக் கொமியூனிஸ்ற் கட்சியை நிறுவியவர் நாகலிங்கம் சண்முகதாசன் ஆவார். இந்த தமிழன் நிறுவிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற இனவாத றோகண விஜேவீர ஜே.வி.பி கட்சியை உருவாக்கினார்.

தமிழர்கள் தமது அரசியல் பொருளாதார சமூக இலட்சியங்களை அடைவதற்கு சீன நட்பு மிகவும் அவசி யமாகத் தேவைப்படுகிறது இந்தியா தமிழர்களை ஏமாற்றிப் பலிக்கடாவாக்கும் நாடு என்பதால் விலகி நிற்பது நன்மையளிக்கும்.

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சீன அரச பிரதிநிதிகள் அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக வருகை தந்திருந்தனர் தமிழர்களோடு நெருங்கிய உறவு களைப் பேணுவது அவர்களுடைய நோக்கமாக இருந்தது.

சிறிலங்காவில் சினப் பிரசன்னம் யதார்த்த பூர்வமான உண்மையாகும் சீனா முல்லைத்தீவு வரை கால் பதித்துள்ளது தமிழர் தாயகம் உட்பட முழுத்தீவும் சீனாவின் செல்வாக்கு வலயத்திற்குள் வரும் நாள் வெகுதூரம் இல்லை.

தமிழீழ மக்கள், உலகத் தமிழர்கள் அனைவரும் தமது இராசதந்திரத்தை மறுசீரமைத்து சீனாவுடனும் இராசதந்திர, பொருளாதார தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். இதனால் இந்தியாவின் இராசதந்திர தொடர்புகளை விட சீனாவுடனான உறவில் தமிழர்களுக்கு எதிர்கால நன்மைகள் கிடைக்கும் வாய்ப்பு நிட்சயம் உண்டு என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.

நன்றி:ஈழமுரசு

Comments

pmk2k7 said…
ஏற்று கொள்ள வேண்டிய கருத்து.
இந்தியா தமிழனுக்கு துரோகம் செய்யும் போது தமிழன் சீனா பக்கம் நகர்வது தான் சரியான இராசாங்க தீர்வாக இருக்கும்.என்னுடைய கருத்துக்கு ஏற்ப இந்த கட்டுரை எழுதபட்டுள்ளது எனக்கு மகிழ்ச்சி.