தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி


இயக்குநர் சீமான் கைதுக்குக் கண்டனம் தமிழகக் காவல்துறையை சிங்களப் இராணுவத்தின் புறக்காவல் படையாக மாற்றுகிறார் கருணாநிதி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்!

நாம் தமிழர் இயக்கத் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமான் அவர்களைத் தமிழக அரசு சிறைப்படுத்திய செயல் கருத்துரிமையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாசிசச் செயல் மட்டுமில்லை, தமிழ் இன எதிர்ப்புச் செயலுமாகும். தமிழக அரசின் இந்த பாசிச - தமிழின எதிர்ப்புச் செயல்களைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

07.07.2010 அன்று கோடியக்கரைக்கும் தோப்புத்துறைக்கும் இடையே இரு படகுகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களைச் சிங்களக் கடற்படையினர் வழக்கம்போல் அடித்துத் துன்புறுத்தினர். செல்லப்பன் என்ற மீனவரை அடித்தே கொன்றனர். மீன்கள், மீன் வலைகள், உணவுப்பொருட்கள் முதலிய அனைத்தையும் கடலில் வீசினர்.

ஒரு படகில் இருந்த மீனவர்களின் உடைகளைக் களைந்து கடலில் வீசிவிட்டு அவர்களை அம்மணமாக அனுப்பினர். எல்லைதாண்டி வந்து சென்னைக்கு அருகே அடிக்கடி மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களைத் தமிழகக்காவல் துறை இப்படித் துன்புறுத்துவதில்லை. கண்ணியமாக கைது செய்து பின்னர் விடுதலை செய்கிறார்கள். தமிழக மீனவரை இனப்படுகொலை செய்வதையும், சிங்களரின் இதர அட்டூழியங்களையும் கண்டித்துப் பல அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தின. கண்டன அறிக்கைகள் வெளியிட்டன.

மேற்கண்ட சிங்கள இனவெறியாட்டத்தைக் கண்டித்து 10.07.2010 அன்று சென்னையில் நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான், தொடர்ந்து தமிழக மீனவர்களைக் கொன்று கொண்டிருந்தால் தமிழகத்தில் சிங்களர்கள் பாதுகாப்பாக இருக்கமாட்டார்கள் என்று கூறியதாகக் குற்றம்சாட்டி அவர் மீது தமிழக அரசு வழக்குப் போட்டு அவரைத் தளைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளது.

தமிழக அரசின் இச்செயல் கருத்துரிமையை மறுக்கும் பாசிசச் செயல்மட்டுமில்லை, தமிழர் எதிர்ப்புச் செயலுமாகும். 10.07.2010 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய சட்ட அமைச்சர் துரை முருகன் சில சிறு சிறு அமைப்பினர், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராகவும், சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையிலும் பேசி வருகிறார்கள். இவர்கள் பேச்சுரிமை என்பதன் கீழ் ஒளிந்து கொள்கிறார்கள். இனி இவர்களை விடமாட்டோம். தேவைப்பட்டால் புதிய சட்டம் இயற்றி ஒடுக்குவோம் என்று கூறினார்.

சீமான் அவர்களும் தமிழ் அமைப்புகளும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகவும் தமிழகத் தமிழர் உரிமைகளுக்காகவும் கொடுக்கும் குரல் எந்த சட்டம் ஒழுங்குச் சீர்குலைவையும் ஏற்படுத்தவில்லை. இலட்சக்கணக்கான மக்களைக் கூட்டி உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தித் தமிழ், தமிழர் பெருமைகளைப் பேசிய ஓசை காதில் ஒலித்துக் கொண்டிருக்கும்போதே தமிழர் கடல் பகுதியில் தமிழக மீனவரைச் சிங்களர் அடித்துக் கொல்வதும் அதைக் கண்டித்தோரை கருணாநிதி சிறையில் அடைப்பதும் இட்லரின் பாசிச நாடகத்தைத்தான் நினைவு+ட்டுகிறது.

1933- ஆம் ஆண்டு செர்மனியின் ஆட்சித்தலைவராக இருந்த இட்லர், அவ்வாண்டின் மே நாள் விழாவை இலட்சக்கணக்கான உழைக்கும் மக்களைக் திரட்டி நடத்திவிட்டு, விடிவதற்குள் தொழிற்சங்கங்களைத் தடைசெய்ய ஆணையிட்டு, தொழிற்சங்கத் தலைவர்களைப் பிடித்து சிறையில் அடைத்தார்.

செம்மொழி மாநாடு நடத்தியவுடன் தமிழ் இனஉரிமை அமைப்புகள் மீது அடக்குமுறை ஏவப் புதிய சட்டம் கொண்டு வருவோம் என்று உறுமுவதும் சீமானைச் சிறையிலடைத்ததும் இட்லரைத்தான் நினைவூட்டுகின்றன. தமிழ்நாட்டுக் காவல்துறையை சிங்கள இராணுவத்தின் புறக்காவல்; படையாகக் (Out Post) கருணாநிதி மாற்றி வருவதையே அவரது அணுகுமுறைகளும் அடக்குமுறைகளும் காட்டுகின்றன.

இந்த முயற்சியில் அவர் தோல்வியைத்தான் தழுவுவார். மேலும் மேலும் அவர் தமிழ் மக்களிடம் தனிமைப்படுவார். வரலாற்றின் படிப்பிணைகளை ஏற்று, கலைஞர் கருணாநிதி அவர்கள், தமது தமிழின ஒடுக்குமுறைத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்றும், தோழர் சீமானையும், அவருடன் சிறைப்படுத்தப்பட்ட தோழர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

------------

சீமான் கைது செய்யப்பட்டமைக்கு வைகோ கண்டனம்

இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்தெழ வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் இயக்கம் சார்பில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு கடந்த சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறை மற்றும் பிரிவினையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக சீமான் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்து நேற்று அவரை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"இலங்கை அரசு, கடற்படையை ஏவி தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து, ‘நாம் தமிழர்' இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமான் பேசியதற்காக, காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, அவரைக் கைது செய்து உள்ளனர்.

தமிழக முதல்வர், ‘இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் ஒழுங்கு தன் கடமையைச் செய்யும்' என தன் அமைச்சரை விட்டுக் கூறுகிறார்.

தமிழ்நாட்டில், இலங்கை அரசைப் பற்றியே பேசக்கூடாதாம். அப்படிப் பேசுவோரை சிறையில் அடைக்க புதிய சட்டம் கொண்டுவரப்படுமாம். தங்கள் உயிர்களையே தீயில் கருக்கிக் கொள்ளும் முத்துக்குமார்களைத் தந்த தமிழ்நாட்டில், இத்தகைய மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்களை, தமிழர்கள் தூசாகவே கருதுவோம்.

இயக்குநர் சீமான், பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தன் கருத்தைக் கூறுவதற்கு அனுமதிக்காத காவல்துறை, பத்திரிகையாளர்களையும் தாக்கி உள்ளது.

இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்தெழ வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
------

டி.கே. ரங்கராசன், சீமான் கைது – பழ.நெடுமாறன் கடும் கண்டனம்
திகதி: 13.07.2010 // தமிழீழம்
மக்களின் பிரச்சினைக்காக போராடிய சீமானையும், டி.கே. ரங்கராசனையும் தமிழக காவல்துறை கைது செய்தமைக்கு பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக அரசு ஜனநாயக உரிமைகளை அப்பட்டமாக பறித்து அடக்குமுறைகளை ஏவும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காகப் போராடிய நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவும் முயற்சியும் நடைபெறுகிறது.

இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

உத்தபுரம் தீண்டாமைக் கொடுமையை இன்னும் நீடிப்பதைக் கண்டிக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்ற மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற மேலவை உறுப்பினருமான டி.கே. ரங்கராசன் மற்றும் தோழர்கள் காவல்துறையினரால் தாக்கப்பட்டுக் கைது செய்யப்பட்டிருப்பதையும் கடுமையாகக் கண்டனம் செய்கிறேன்.

தமிழக அரசின் சனநாயக விரோதப் போக்குகளுக்கு எதிராக அணி திரண்டு போராட முன்வருமாறு அனைத்துக் கட்சிகளையும் வேண்டிக்கொள்கிறேன்.

அன்புள்ள

( பழ. நெடுமாறன் )

ஒருங்கிணைப்பாளர்

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்

Comments